வியாழன், 16 பிப்ரவரி, 2017

குலசாமி


       “வேலய்யா, வேலய்யா, என்ன.. ரொம்ப வேலையா?” கேட்டபடியே வீட்டின் உள்ளே நுழைந்தார் ரியல் எஸ்டேட் சுந்தரம்.
            மண்வெட்டிக்கு கணைதட்டிக் கொண்டிருந்த வேலய்யா குரல் கேட்டதும் பதறி, எழுந்து, நாற்காலியை இழுத்துப் போட்டார்.
            “ஐயா, என்னங்கையா விசேஷம்? நீங்கள் வந்துருக்கீங்க.. சொல்லிஅனுப்பியிருந்தா நீங்க சொன்ன இடத்துக்க நானே வந்துருப்பேனே..”
            “பரவாயில்ல..  நீ வந்தா என்ன? நா வந்தா என்ன? எல்லாம் விசேஷமான சேதிதான்.  நீயும் அப்படி உட்காரு, மழை தண்ணீ பெய்றதில்ல, வெவசாயத்த கட்டிக்கிட்டு அழுவுறியே.. வேறெதாச்சும் ஆகுற பொழப்ப பார்க்க வேண்டியதுதானே”
            “இருக்கட்டுங்கய்யா.. என்னிக்கும் வராதவுக வந்திருக்கீங்க.. என்ன விசேஷ  சேதி?  வீட்டுல ஏதாச்சும் விசேஷம் வைச்சிருக்கீங்களா?”
            ”அப்படிலாம் ஒன்னுமில்ல வேலய்யா.. நா நேரா விஷயத்துக்கு வாரேன். உன் வயக்காட்டுக்குப் பக்கத்துல நாலு வழிச்சாலை வரப்போறது உனக்குத் தெரியும்ல.  உன் வயலுக்குப் பக்கத்து வயக்காரங்களாம் அடிச்சயோகத்தப் பயன்படுத்திக்கிட்டாங்க, உன்னோட நிலம் மட்டும் தான் மிச்சம்.  உன்னோடத நீ நல்ல விலைக்கு எங்கிட்ட கொடுத்துட்டினா சட்டுபுட்டுனு மொத்தத்ததுக்கும் அப்ரூவல் வாங்கி பிளாட் பிரிச்சு பெரிய நகராக்கிடுவோம். அதுல உனக்கு வேணும்னா குறைச்ச விலைக்கு ஒரு பிளாட்  முடிச்சுத் தா்றேன்.  அதுக்கு கமிஷனா ஒத்த ரூபா எனக்குத் தரவேண்டாம். நம்ம பிளாட் பக்கத்துலேயே இஞ்சினியரிங் காலேஜ், தியேட்டா் இதுலாம் வரப்போகுது.  நாளுக்கு நாள் ரேட் வேற கூடிட்டேப் போகுது”
            ”ஐயா.. மன்னிக்கனும், நா என் நிலத்த விக்குறதா இல்லீங்க...”
            ”இன்னும் நா ரேட்டே சொல்லல.. அதான் மறுக்குற, அவசரப்படாத நீ எதிர்பார்க்குறதுக்கு மேலேயே நா கொடுக்குறேன்”  நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.
            ”கோடி ரூபா கொட்டிக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாங்கய்யா..”
            ”என்னது? கோடி ரூபா கொட்டிக் கொடுத்தாலும் நிலத்தக் கொடுக்க மாட்டியா? அப்படியென்ன இருக்கு உன் வயக்காட்டுல? தங்கமா? இல்ல வைரமா?”
            ”அதுக்குலாம் மேல.. எங்க பாட்டன் பூட்டனோட வோ்வை. எங்கப்பன் ஆத்தாளோட உசிரு. என்னோட உழைப்பு எல்லாமே அதுலதான்யா இருக்கு”
            ”நீ சொல்ற எதாலயும் உன் பையன படிக்க வைக்க முடியாது. உன் பொண்ண கல்யாணத்தப் பண்ணி கரையேத்த முடியாது”.
            ”ஐயா, மறுக்குறேன்னு தயவுசெஞ்சு தப்பா நினச்சுடாதீங்க. என் மனசுலயும் உடம்புலயும் தெம்பிருக்கு. எம் புள்ளைகள என்னால நிச்சயம் நல்ல நிலைக்கு கரைசோ்க்க முடியும். உங்களுக்கே தெரியும்..  நம்ம ஊரு 5 வருஷம் முன்ன எப்படியிருந்தது? இப்போ எப்படி இருக்குன்னு? நெல்லு முளச்ச இடமெல்லாம் இப்போ கல்லு முளச்சுக் கிடக்கு.  சோறு போட்ட நெலத்த கூறுபோட்டு வித்தா.. நம்ம சாமி நம்மள  மன்னிக்குமாயா? இத்தினி வருஷமா என் குடும்பம் கடையரிசிய நம்பி உலை பொங்குனதில்ல.  சுயமா உழைச்சு அதுல கிடச்ச கால் வயிறு கஞ்சியக் குடிச்சாலே போதும்யா.. உடம்புலயும் மனசுலயும் அப்படி ஒரு தெம்பும் சந்தோஷமும் கிடைக்கும். அத விக்கிறதுக்கு நா தயாரா இல்ல.  மறுக்குறதுக்கு மன்னிக்கணும். அது வெறும் பூமி மட்டுமில்லங்கய்யா. எங்க குலசாமிய்யா..” என்று சொல்லியபடி மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கிளம்பிய வேலய்யாவையே பிரமிப்பாய் பார்த்து நின்றார்.
            ”இவ்வளவு படிச்ச பணத்தாச பிடிச்சு சுயலமா அலையுற நாம எங்க? படிப்பறிவில்லாட்டியும் பூமி மேலயும், உழைப்பு மேலேயும் நம்பிக்கை வைச்சு பணத்த துச்சமா நினைக்குற வேலய்யா எங்க?”
            சுந்தரத்தின் கண்களில் வேலய்யாவின் உருவம் குறைய குறைய மனசுக்குள் பிரம்மாண்டமாய் விசுவரூபமெடுத்தான் வேலய்யா.

குறள்: இரவார்  இரப்பார்க்கென் றீவா் கரவாது
            கைசெய்தூண் மாலை யவா் (1035)

பொருள்:
            உழுது உண்பவா்கள் பிறரிடம் யாசிக்க மாட்டார்கள். மாறாக யாசிப்பவா்களுக்குக் கொடுப்பார்கள்.

ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

1 கருத்து:

  1. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே! கதையின் முடிவில் திருக்குறள் அவசியமில்லை. (2) இரண்டு பத்திகளுக்கு நடுவில் ஒரு வரி space கொடுத்து அச்சிட்டால் படிப்பவர்களுக்கு கண்கள் வலிக்காமல் இருக்கும். (3) வெவ்வேறு விதமான fontகள் உள்ளன. மாற்றி மாற்றிப் பயன்படுத்துங்கள். எந்த ஒன்று பலருக்கும் பிடிக்கிறது என்று கேட்டு அதையே தொடர்ந்து பயன்படுத்துங்கள். வாழ்த்துக்கள்!
    இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சியில் இருந்து.

    mudinthaal parkkavum: எனது வலைத்தளம்: http://ChellappaTamilDiary.blogspot.com

    பதிலளிநீக்கு