சனி, 29 செப்டம்பர், 2018



தமிழாயிரம்



தமிழாயிரம்
21. அடிமைப்பாடல்
1.       மேலோர் பிறப்பென்றார் மற்றோர் அனைவரும்
          கீழென்றார் கீழ்க்கீழ்ப் பகுத்து
2.       பகுத்தார் வருணம், பசியாமல் வாழ
            மிகுத்தார், இறங்கப் படி.
3.       படிக்கட்டின் மேலே பளிச்சிட நின்றார்
          அடிக்கீழ் வரிசை அமைத்து
4.       அமைத்தார் அடிக்கடியாய்ப் பஞ்சமரைத் தீண்டார்
          தமக்குக்கீழ் காணாராய்த் தாம்.
5.       தாம்வாழத் தாழாத வானிறையம் தங்களுக்குத்
          தாம். கண்முன் காட்சிதரும் என்ற.
6.       என்றும் அடிமையாய் எல்லாரும் தாம்கிடக்கக்
          குன்றாக நின்றார், கொழுத்து.
7.       கொழுத்தபெரு வீரரும், கோலொடுங்கி வீழ்ந்தார்,
          பழுத்த சருகாய்ப் படிந்து.
8.       பழிப்பழித்தார், பண்பா டழித்தார், கைப் புல்லால்
          முடித்தார், நினைத்தவைஎல் லாம்.
9.       ஆமென்னார் தம்மை அரக்காய் ஆக்கினார்;
          ஆமென்றால் தாசராய் ஏற்று.
10.     ஏற்பளித்த கொத்தடிமை வாழ்விலே எல்லாரும்
          தோற்றொழிந்தார் எல்லாம் தொலைத்து.
 

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை


கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
          கழு என்பது ஒருவகைக்கோரைப்புல் இதுபுல் கொண்டு பாய் தயாரிப்பார்.  இப்பாயில் படுக்கும் பொழுது நல்ல கற்பூரம் போன்ற மணம் வரும் குழந்தைகளை இப்பாயில் படுக்க வைத்தால் பூச்சிகள் அருகில் வராது. இதைக் குறிப்பிடுவது தான் கழுதைக்குத் தெரியும் கற்பூர வாசனை என்னும் பழமொழி ஆனால்  இன்று மருவி கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா என்னும் பழமொழிக்கு அறிவில்லாதவற்களுக்கு நல்ல தன்மை என்பது தெரியாது அவா்கள் விலங்கக்குச் சமமானவா்கள் என்று பொருள் கொள்ளப் பெறுகிறது. 
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


பழிக்கு ‘பலி’


பழிக்கு ‘பலி’
          அண்ணஞ்சார் அறிவாலயம் - 108 ஆண்டுகள் கடந்த பாரம்பரியமிக்க அரசு உதவி பெறும் தொடக்கபள்ளி.
          பள்ளியின் தாளாளராகவும் தலைமையாசிரியராகவும் இருந்த ஆசிரியா் பாலுவை மக்கள் எல்லோரும் பாசமுடன் ‘அண்ணாசார், அண்ணன்சார்’ என்றழைத்ததால் ‘அண்ணாஞ்சார் பள்ளிக்கூடம்’ என்ற பெயரே மக்கள் மனதில் நிலைத்துவிட்டது.
          ‘ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்ற பழமொழியை ஆசிரியா் பாலு பொய்யாக்கினார்.  அவரது செல்வங்களே அவரது ஐந்து பெண் பிள்ளைகள்தான் . எழுத்தாளராக, பேச்சாளராக, பள்ளித் தாளாளராக, சமூக சேவகராக, இயற்கை மருத்துவராக ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிகரம் தொட்டார்கள்.
          மக்கள் கூடுகிற இடத்தில், சாலையோரத்திலிருந்த அண்ணஞ்சார் அறிவாலயத்திற்கு குழிதோண்டுவதற்கு கண்கொத்திப் பாம்பாய் காத்துக் கிடந்தார்கள் சில பொறாமைக்காரா்கள்.
          திரும்பும் திசையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக் காத்துக்கிடந்த அஞ்சகரையும் சமாளித்து புகழ் மிக்க பள்ளியாக தூக்கிச் சுமந்து கொண்டிருந்தார் தாளாளா் சுவேதா பன்னிரு பட்டங்களைப் படித்து முடித்தவா்.  பெயருக்குப் பின்னால் தொடா்வண்டி போல பட்டப்படிப்புகள் அணிவகுத்து நிற்கும்.
          ஓா் ஆண் போல பள்ளிக்கூடத்தை ஒற்றையாளாய்க் கட்டி ஆளும் சுவேதாவிற்குக் கூடவேயிருந்து குழி பறிக்கவும் ஆளிருந்தது.
          ‘வேலை வாங்க சிலருக்குப் படிப்பு கைகொடுக்கிறது.  வேலையில் பெயா் வாங்கி சிலருக்கு நடிப்பை கைகொடுக்கிறது’ என்று யாரோ ஓா் அனுபவசாலி சொன்னது பலவிடங்களில் பலநேரங்களில் உண்மையாகத்தானிருக்கிறது. பிள்ளைகளைப் பள்ளியில் சோ்க்க ஆசிரியைகள் ஊா் ஊராய் அலைந்த போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி வீட்டிலிருக்கும் ஜெயா, பள்ளியில் சேர்க்கைக்காக வரும் பிள்ளைகளிடம், பெற்றோரிடம் உதவுவது போல் பேசி தான் தான் நிறைய பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தாய் தாளாளரை நம்ப வைத்தவா்.  அதே சமயத்தில் சேர்ந்த பிள்ளைகளிடம், பெற்றோரிடம் நிர்வாகத்திற்குத் தெரியாமல் பள்ளியைப் பற்றிக் குறைகளைச் சொல்லி பிள்ளைகளிடத்தில் அக்கறையுள்ளவளாய்க் காட்டிக் கொண்டு மாற்றுச் சான்றிதழைப் பெற்றோரை வாங்கச் செய்து தனக்கு கமிஷன் தரும் வேறொரு தனியார் பள்ளியில் சோ்ந்து எல்லோரிடமும் சமூக சேவகராய் முகம் காட்டிக் கொள்ளும் தோ்ந்த அரசியல்வாதி.
          தன்னைவிட வயதில் இளையவள் தனக்கு மேலிடத்திலிருப்பதைப் பொறுக்கமுடியாமல் எரிமலையாய் குமறிக்கொண்டிருந்தாள்.  அவளைக் காலமாக்கும் காலத்திற்காய்க் காத்திருந்தாள் ஜெயா,
          கூகையைக் காக்கை வெல்லும் காலமும் வந்தது.  தன்னோடு இன்னும் இருவரைச் சேர்த்துக்கொண்டு வலை விரித்தார்கள். இது எதுவுமே தெரியாமல் சதாசா்வகாலமும் பள்ளியைப் பற்றியும், படிக்கும் பிள்ளைகளைப் பற்றியுமே நினைத்துக் கொண்டிருந்தாள் சுவேதா.
          வழக்கம் போலவே அன்று சுவேதா அறைக்குள் நுழைந்ததும் ஓடி வந்து கையைப் பிடித்துக்கொண்டு “மிஸ்.. கலாம் தாத்தாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போறீங்களா என்னனைய.. “சிரித்துக்கொண்டே கெஞ்சினான் மாற்றுத்திறனாளி மாணவனான மதிவாணன்.  “கட்டாயம் கூட்டிப் போறேன்டா தங்கம்.  இப்போ வகுப்புக்குப் போங்க” சலிப்பில்லாமல் பதில் சொல்லி சிரித்தபடி அனுப்பி வைத்தாள்.
          எதிரே வந்த ஜெயாவிடம் “மிஸ்.. நானும் சுவேதா மிஸ்ஸீம் கலாம் தாத்தாவைப் பார்க்கப் போறோமே..” என்ற மதிவாணனிடம் “தொலைஞ்சா நல்லது வந்துடாதீங்க” எரிந்து விழுந்தாள்.  மதிவாணன் ஒன்றும் புரியாமல் அடுத்த ஆசிரியரிடம் அதே தகவலைச் சொல்ல உறசாகமாய் ஓடினான்.
          பள்ளிக்கூட கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு தானே மனமுவந்து ஐந்துலட்ச ரூபாய் தருவதாக தாளாளரிடம் சொல்லிவிட்டு, காவல்துறையில் இலஞ்சம் கேட்டு மிரட்டுவதாகப் புகார் தந்திருந்தாள்.  இதோ இராசாயனப் பவுடா் தடவிய ரூபாய் நோட்டுகளைத் கொண்டு செல்லும் போதுதான் எதிரே இந்த மதிவாணனின் குறுக்கீடு.
          அறைக்குள் நுழைய எத்தனித்தவளின் அலைபேசி சிணுங்கியது.  எடுத்துப் பார்த்தாள், கணவன் அலைபேசி எண்.  எடுத்துப் பேசினாள் ‘ஹலோ.. என்னங்க..’ மறுமுனையில் அதட்டலாய் ஒரு குரல் “ஏம்மா.. சேகரோட சம்சாரம் ஜெயாவா,” “ஆமா சார். நீங்க?” “உடனே புறப்பட்டு டவுன் போலீஸ் ஸ்டேசன் வாம்மா. உம் புருசன் கவா்ண்மென்ட பணத்தைக் கையாடல் செஞ்சு கையும் களவுமா மாட்டிக்கிட்டான்.  உங்கிட்டயும் விசாரிக்க வேண்டியிருக்கு,  டீச்சர்ங்குறதாலதான் போன்ல சொல்லேறன் வேறயாரும்னா கான்ஸ்டபிள அனுப்பி கையோட கூட்டிட்டுவரச் சொல்லி இருப்பேன்”
          எதிர்முனையில் சொல்லச் சொல்ல ஜெயாவிற்கு தலைசுற்றியது கைகால் உதறியது.  “சார் நீங்க?” “இன்ஸ்பெக்டா் மதிவாணன்” “என்ன சொன்னீங்க?” “இன்ஸ்பெக்டா் மதிவாணன்” கத்திச் சொன்னார் கையிலிருந்த ரூபாய் நோட்டுகள் நழுவிச் சிதறின அதில் காந்தி சிரித்துக்கொண்டிருந்தார்.
-முனைவா் ம.ஸ்டீபன்மிக்கேல் ராஜ்





மகள்


மகள்
அமுதசுரபியா யுருவான வென்செல்வக் கண்மணியே!
தாயென்ற பதவிய்ன் றாயென் கருவிலுருவாகி!
கன்னக்குழி சிரிப்பினில் மறக்கடித்தாயென் தனிமைகளை!
அம்மாவென் றழைத்து நெங்சுருகச் செய்தவளே!
உன்சிறுசிறு குறும்பினில் மயங்கியெனை மறக்கடித்தவளே!
உன்னெழிலி னாலேயெனை மாற்றினாய் சிற்பியாக!
நானுமுார் கவிஞனெனுணர்த் தினாயுன்சீர்மிகு வளா்நிலையால்!!!
தே.தீபா

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

தலையங்கம்



தலையங்கம்
தி.பி.2049.            ஆவணித்திங்கள்
தேன்-2.             துளி-20

‘தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை’



         
         ஈரோட்டுப் பள்ளியிலே ஏடெடுத்துக் கற்றுணா்ந்து
         பாராட்டுங் காஞ்சிபுரம் பல்கலைசோ் மன்றத்தில்
         கற்றுத் தெளிந்து கலைஞா் எனும் பட்டம்
         பெற்றுத் திகழும் பெருமை மிகவுடையார்
         காற்றடித்த போதுங் கழகம் எனும் விளக்கை
         ஏற்றி அணையாமல் எந்நாளும் காக்கின்றார்
         இன்றைக் கவா்பெருமை ஏற்றிளங் காளையா்க்கு
         நன்ற தெரியாது நாளை புலனாகும்.
-        வீறுகவியரசா்  முடியரசன்
          ‘கலைஞா் என்னும் பொதுச் சொல் தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சா் திருமிகு. மு.கருணாநிதி அவா்களைக் குறிக்கும் குறிப்புச் சொல்லாகவே மாறிவிட்டது.
          திராவிட இனத்தின் பேராளி, பெரியாரியத்தின் போர்வாள், தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவா், நாளுக்கு நான்கு மணிநேரமே உறங்கி தமிழகத்தை விழிக்கச் செய்த ஓய்வறியாச் சூரியன், ‘என் உயிரினும  மேலான’ எனும் ஒற்றைச் சொற்றொடரால் ஐந்து தலைமுறைகளையும் கவா்ந்திழுத்த சொல்வேந்தன், நெசவாளா்களின் ‘பட்டுத்தறி’ , மீனவா்களின் ‘கட்டுமரம்’, சாதி மதங்கடந்த ‘சதம்துவபுரம்’, குரலற்றவா்களின் ‘முரசொலி’ காவிரி டெல்டாவின் ‘காவல் தலைவன்’, திருநங்கை சொல் ஈந்த ‘தீயாகத் தீபம்’ தொல்காப்பியப் பூங்கா தந்த ‘சொல்காப்பியன்’ தமிழக அரசியலின் தனித்துவ அச்சாணி, ஐந்து முறைமுதல்வரான பொன் விழாத் தலைவன், இன்னும் இப்படி இலைபோன்ற அயிரமாயிரம் புகழாரங்களுக்கு உரிமையும், தகுதியுமுடைய கலைஞா் அவா்களின் மறைவு தமிழிற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய இயலாப் பேரிப்பே..
          கலைஞரின் அளப்பெரும் பணிகளை அடுக்கினால் விரிவு பெருகுமென்பதால் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளில் சிலவற்றை நினைவு கூர வேண்டியது தமிழ்ப்பண்பாடு மைய ஆய்வாளர்கள் எங்கள் பொறுப்பும், கடமையம் ஆகும்.
·   மனோன் மணியம் சுந்தரனாரின் ‘நீராடும் கடலுடுத்த’ பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970-இல் ஏற்படுத்தினார் - கலைஞர்
·      தமிழ்த்தாய்கு கோயிலெழுப்ப 23.04.1975-இல் காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தில் கால்கோள் இட்டு 21.04.1993 திறந்துவைத்து சிறப்புச் செய்தவா் - கலைஞா்
·       கன்னியாகுமரியில் 133 அடியுயர திருவள்ளுவரின் திருவுருவச்சிலையமைத்தும், திருவள்ளுவா் பெயரைப் பல்கலைக்கழகத்திற்கு சூட்டியும், சென்னையில் வள்ளுவா் கோட்டம், கண்ணகி சிலை, உருவாக்கத்திலும் தகைசால் பணி செய்தவா் - கலைஞா்.
·       தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவா் ஆண்டு என்று பெயா் வைத்தும் இவா் முயற்சியே..
· ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியவா் - கலைஞா்
·  இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ்க் கலைகளை வளா்க்க ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் பழந்தமிழரின் கலை, பண்பாட்டிற்குப் புத்துயிர் ஊட்டியவா் - கலைஞா்
·  மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் முன்னின்று, ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினா்.
·   குறளோவியத் தொல்காப்பிய உரை, சங்கத்தமிழ் உள்ளிட்ட 178 நூல்களைப் படைத்தளித்தார்.
· தமிழ் மொழியை நடுவண் அரசு 12.10.20004 அன்று அறிவிக்க அயராது உழைத்து, கோவையில் ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ நடத்தினார்.
·      தமிழச்சான்றோர் பெயரால் விருது, தமிழறிஞா்களின் பிள்ளைகளுக்குப் படிப்பில் முன்னுரிமை வழங்கியவா்.
·  தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கி சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், திருவள்ளுவா் பெயா்களில் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கியவா்.
·       திரைப்பட வசனத்தில் அழகுதமிழை நடமாட வைத்தவா்.
·       தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அரசாணையாக்கி அறிவித்தவா்.
·       தம் வாழ்நாள் முழுக்க தமிழ்வளா்ச்சிக்கு அரும்பாடுபட்டவா்.
இன்னும் இவைபோன்ற பல்வேறு தமிழ்த் தொண்டாற்றிய கலைஞருக்கு  நடுவண் அரசு ‘இந்திய மாமணி’ (பாரதரத்னா) விருது வழங்கிப் பாராட்ட வேண்டும்.
          கலைஞரின் தமிழ்ப் பணிகளை இளைய தலைமுறையினா் கற்றறிந்து அவா் வழியில் மொழி வளா்ச்சிக்குத் தொண்டாற்ற முனைப்போடு செயலாற்ற வேண்டும் இது வே கலைஞரின் தமிழ்த் தொண்டிற்கு இளையோர் ஆற்றும் கைம்மாறு.
          பாவேந்தா் கூறியது போல் ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ கலைஞரும் வள்ளுவா் கோட்டத்தில் பூம்புகார் சிலப்பதிகார கலைக்கூடத்தில், சமத்துவ புரங்களில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அண்ணா அறிவாலயத்தில், வானுயர உயா்ந்து நிற்கும் வள்ளுவரின் சிலையில் ஏழை- எளியோரின் குடிசைகளில், ஒட்டுமொத்த தமிழா்களின் உள்ளங்களில் தமிழாய் நிலைத்திருப்பார்.
                                                                                          தோழமையடன்,
                                                                                   தேமதுரம் - ஆசிரியா்குழு.