சனி, 23 ஜூன், 2018

வெற்றிப் பாதையில் வீறு நடையிடும் புதிய துணைவேந்தா்


தலையங்கம்
தி.பி. 2049 (கி.பி. 2018)       ஆனித்திங்கள்
தேன் - 2                                                துளி -18



வெற்றிப் பாதையில் வீறு நடையிடும் புதிய துணைவேந்தா்

         வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக வரலாற்றுத்துறைப் பேராசிரியா் மாண்பு நிறை என்.இராஜேந்திரன் அவா்கள் ஜீன்-05-ஆம் நாளன்று பொறுப்பேற்றுள்ளார்.
         மாநில, தேசிய அளவில் சாதித்துள்ள  அழகப்பா பல்கலைக்கழகத்தின் உலகத்தரத்தில் உயா்த்திட உறுதி பூண்டுள்ள அவா் துணைவேந்தா் பொறுப்பேற்ற பிறகு
‘பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆற்றல்சார் பல்கலைக்கழக தகுதி நிலையைப் பெறுதல், பல்கலைக்கழக வளாகப் பரப்பிற்கு  ‘வள்ளல் அழகப்பா் வளாகம்’ எனப் பெயா் சூட்டல், பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியையும் மேலும் உயா்த்துதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வேன்.  என அறிவித்தவாறே அதற்கான செயல்திட்டங்களைத் தீட்டுவதிலும் முழு முனைப்போடு அக்கறை செலுத்தி வருகிறார்.
         பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே தேசிய மாணவா்படை உறுப்பினராக, பள்ளி-கல்லூரிகளில் மட்டைப்பந்து வீரராக, சதுரங்கச் சாதனையாளராக மிளிர்ந்த இவா் இளங்கலை, முதுகலைப் படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், இளமுனைவா், முனைவா் ஆராய்ச்சிப் படிப்புகளை சென்னைப் பல்கலைக்கழகத்திலும்  பயின்றுள்ளார்.
         மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்திய வரலாற்று ஆய்வுக்குழு உறுப்பினராகவும் (இந்திய அளவில் 18 அறிஞா்களுள் ஒருவா்) UGC ஆய்வுக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாட்டரசின் தமிழ்வளா்ச்சித்துறையில் தமிழக வரலாறு வரைவுக்குழு உறுப்பினராகவும், தமிழக வரலாற்றுக் குழுமத்தின் பொதுச் செயலாளராகவும் இவைபோன்ற பொறுப்புகளை வகித்துள்ளார்.
         பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைத் தலைவா், பாரதிதாசன் மேலாண்மைப் பள்ளி நிறுவனா் இயக்குநா், தொலைநிலைக்கல்வி இயக்குநா், கலைப்புல முதன்மையா் (2008-2015) பாடத்திட்டக்குழு உறுப்பினா் (1996-2016) RUSA திட்ட ஒருங்கிணைப்பாளா் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்துள்ளார்.
         34 ஆண்டுகள் கல்விப் பணி அனுபவம் உடைய பெரும் பேராசிரியா் ‘சிந்தனைப் பேரொளி’ ‘வரலாற்றுச் செல்வா்’ போன்ற பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெற்றுள்ளார்.
         இவரெழுதிய ‘தமிழ்நாட்டில் தேசியமும், சுதேசியமும்’ என்னும் நூல் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த நூலுக்கானப் பரிசை வென்றுள்ளது.   
         திருச்சி வானொலியிலும், இலண்டன் BBC  யின் தமிழ் ஓசை நிகழ்ச்சியிலும் பலமுறை உரையாற்றியுள்ளார்.
         மேனாள் துனைவேந்தா் பேரா.சொ.சுப்பையா அவா்களின்  பணிக்கால சாதனைகளைப் போற்றியும், புதிய துணைவேந்தராகப் பொறுப்பு ஏற்றுள்ள வரலாற்று நாயகரை வரலாறு படைத்திட வாழ்த்தியும் வணங்கி மகிழ்கிறோம்.
                                                                                                        அன்பின் வாழ்த்துகளுடன்,
தேமதுரம் - ஆசிரியா் குழு


ஆசிரியர்
முனைவா். ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
பெ.குபேந்திரன் 


துணையாசிரியர்

தே.தீபா

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ.மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,


காரைக்குடி-3. 



பழமொழி உண்மைப்பொருள் சேலைகட்டிய மாதரை நம்பாதே என்னும் பழமொழி பொருள் திரிந்து வழங்கப்படுகிறது. சேல் என்பது மீனைக் குறிக்கும் பெண்களின் கண்களை மீனுக்கு ஒப்பிடுவது உண்டு (கயல்விழி) மீனின் கண் போன்ற சிறுவிழி என்பது இதற்குப் பொருளாகும். இயல்பாக உள்ள கண்களை அகட்டிச் (சேலை அகட்டி) சாடை பேசும் பெண் நம்பிக்கைக்கு உரியவள் அல்ல என்பதை புலப்படுத்துவதே அப்பழமொழி இதுவே மருவி சேலை கட்டிய மாதரை நம்பாதே என வழக்கில் உரைக்கப்படுகிறது. -பேரா.சே.செந்தமிழ்ப்பாவை


பழமொழி உண்மைப்பொருள்


            சேலைகட்டிய மாதரை நம்பாதே என்னும் பழமொழி பொருள் திரிந்து வழங்கப்படுகிறது.  சேல் என்பது மீனைக் குறிக்கும் பெண்களின் கண்களை மீனுக்கு ஒப்பிடுவது உண்டு (கயல்விழி) மீனின் கண் போன்ற சிறுவிழி என்பது இதற்குப் பொருளாகும்.  இயல்பாக உள்ள கண்களை அகட்டிச் (சேலை அகட்டி) சாடை பேசும் பெண் நம்பிக்கைக்கு உரியவள் அல்ல என்பதை புலப்படுத்துவதே அப்பழமொழி இதுவே மருவி சேலை கட்டிய மாதரை நம்பாதே என வழக்கில் உரைக்கப்படுகிறது.

-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

           







          






மனிதப்பிறவி


மனிதப்பிறவி

            சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில் இருப்பினும் அதை காலில் தான் அணிய முடியும்.  குங்குமத்தின் விலை மிகக் குறைவு.  அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.  இங்கு விலை முக்கியமாக கருதப்படாது, அதன் பெருமையே முக்கியமாகக் கருதப்படுகிறது.

            உப்பினைப் போன்று கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவனாக திகழ்பவன் நண்பன்; சர்க்கரை போன்று இனிமையான வார்த்தைகளால் நம்மை புகழ்பவனாக விளங்குபவன் நயவஞ்சகன்,  புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக வரலாறு இதுவரை காணப்படவில்லை.

            இங்கு கோயில்கள், மசூதிகள், திருத்தலங்கள் வேடிக்கையானவை.  பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்  ஏழை வெளியில் நின்ற பிச்சை எடுக்கிறான் இவ்வாறாக அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிச்சை எடுப்பவராகவே திகழ்கின்றோம்.
            காணாத கடவுளுக்கு பங்சாமிர்தம் படைப்பவா்கள்,  கண்கண்ட கடவுள்களுக்கு (தாய், தந்தை) பழைய சோறும் கந்தல் துணியும் அளிக்கின்றனா்.  மித மிஞ்சியவா்கள் அனாதை இல்லத்திலும், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்களென பிறரிடம் பென்சில் கூட வாங்க விடாது வளா்த்தோரை பிறரிடம் நீர் அருந்த கூட கையேந்த வைக்கும் அவல நிலையினை அளிக்கின்றனா்.

            இத்தகைய நிலையினில் மனிதப்பிறவி சிறப்பானதாகக் காணப்படாத தோற்றம் ஏனெனில் பிறக்கும் போதும் அழுகை இறக்கும் போதும் அழுகை இடையில் நாடகம்.
            தீங்கு விளைவிக்கும் மதுவிற்கும் இடத்திற்கு ஓடுபவன், தன்னைச் சுற்றி அமுதமாம் பால் விற்பவனை ஓடவிடும் அவலநிலை பாலில் நீர் ஊற்றும் பால்காரனை வஞ்சிப்பவன், நீரில் நஞ்சினை கலக்கும் மது பானக்கடைக்காரனை தலைமீது தூக்கி  வைக்கும் நிந்தனை ஏனோ!
            இவ்வளவே மனித வாழக்கை. இதற்குள் உறவுகளுக்குள் கோபம்; விரோதம்; வீண்பழி; கௌரவம்; அகங்காரம்; அதிகாரம்; ஆணவம்; கொலை; கொள்ளை; காழ்ப்புணர்ச்சி; எதற்கோ?
            எது நமதானதோ அது யார் தடுப்பினும் வந்தே தீரும்; நமதில்லாதது எச் செயல் மேற்கொள்ளினும் அறவே நெருங்காது, வாழும் வரையானதே வாழ்க்கை! வாழ்ந்து காட்டுவோம் இனியோராக பிறர் உள்ளத்தில்
-தே.தீபா






கல்வி கரையில.....


கல்வி கரையில.....

            தனியார் பள்ளியொன்றில் ஐந்தாண்டுகளாய் தமிழாசிரியா் பணியிலிருந்து, விடாமுயற்சியோடு  ஆசிரியா்தகுதித் தேர்வெழுதி, மூன்றாவது முறை தேர்வாகியும் வேலை கிடைக்காமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் நேர்முகத் தேர்விற்குப் படையெடுத்து, படையெடுத்து கடைசியில் கபிலனுக்குக் கிடைத்தே விட்டது வேலை,  

            ஆயிரமாயிரம் கனவுகளோடு, ஆசைகயோடு வேலையில் சேர்ந்தவனுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது, தனியார் பள்ளியில் மாணவா்களிடமிருந்த அக்கறையும், ஆர்வமும் பல பேருக்குத் துளியும்  இல்லை.  அவா்களைச் சொல்லியும் குற்றமில்லை.  மிகவும் பின்தங்கிய கிராமங்களில், அன்றாடப் பிழைப்புக்கே அல்லல்படும் குடும்பங்களில், தாயொரு பக்கம் தந்தையொடு பக்கமாகி சிதறிக் கிடக்கும் வீடுகளில், என்ன  வீட்டுப்பாடம் கொடுத்திருக்கிறார்கள், என்ன படிக்கிறாய், என்ன செய்கிறாயென்று கேட்கக் கூட ஆளில்லாத  சூழலிருந்து வரும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு வருவதற்காகவே கும்பிடு போட வேண்டும்.  அவா்களைக் குற்றஞ் சொல்லுவதில் நியாயமில்லை  என்பதை  வெகு சீக்கிரமாகவே உணா்ந்து கொண்டான்.

            ஆனாலும் கபிலனுகு்கு அவா்களைப் படிக்க வைப்பது பெரும் சவாலாயிருந்தது  கொஞ்சம் அதிகப்படியாய் அக்கறையெடுத்து சிறப்பு வகுப்புகள் எடுத்து சொல்லிக் கொடுத்தால் ‘புதுத் துடைப்பம் ல.. அப்படித்தான் பெருக்கும்’ காதுபடவே கிண்டலடித்தார்கள் சக ஆசிரியா்கள்.  முதலில் வருத்தப்பட்டவன் பிறகு வாடிக்கையாகிப் போன வார்த்தைகளைப் பொருட்படுத்து வதில்லை.

            இருப்பினும், மெய் வருத்தக் கூலி தரத் தவறும் முயற்சிகளால் சில நேரங்களில் உடைந்தும் போவான்.

            “இந்த மர மண்டைகளுக்குள்ள எதையும் திணிக்க முடியாது.  என்னதான் முட்டி மோதி தலைகீழ் நின்றாலும்  இதுதான் நிலைமை.  எங்களுக்குத் தெரியாதா இவனுகளப் பத்தி, தண்டங்கள வைச்சுக்கிட்டு செண்டம் கனவு காணலாமா?  வந்துட்டாரு.. பெரிய இவரு..” வெந்த புண்ணில சுத்தி நின்று வேலெடுத்துப் பாய்ச்சினார்கள்.  
       
            படியளக்கும் பள்ளியால் வாழ்ந்து கொண்டு மண் வாரித் தூற்றி எப்படிந்ததான் மனசு வருகிறது? நன்றி - விசுவாசம் நாய்க்கு மட்டும்தானோ?  உலை பொங்க வைக்கும் பள்ளிக்கூடத்திற்கே உலைவைக்கும் மாபாதகம் படித்தவர்களுக்கு அழகா?  என்னென்னவோ எண்ணங்கள் நெஞ்சத்தை அழுத்தும்.  தப்பிக்க ஓய்வு நேரங்களில் நல்ல நல்ல புத்தகங்களாய் தேடிப் பிடித்து வாசிக்கத் தொடங்கினான். படிக்கப் படிக்க பசி ருசித்தது. புதிய சிந்தனை, புதிய வெளி புலப்பட்டது.

            “ஊக்க ஊதியத்திற்காய்ப் படிக்கிறான் போல.. ”கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘படிப்பதுதான் - என் ஊக்கத்திறகான ஊதியம் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
            “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் பிஞ்சுகள் கரைய மாட்டார்களோ?  ‘முயற்சிகள் பலனளிக்கவில்லையென்றால் உழைப்பில் தவறில்லை.  வழிமுறைகளிலில் தான் தவறிருக்கிறது’ பொறி தட்டியது போல்  யாசனை தோணியது கபிலனுக்கு.

            ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு பூச்செடிபோல.. நினைத்த நேரத்தில் பூக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எவ்வளவு மூடத்தனம்.

            சொல்லிக் கொடுக்கும் முறைகளை, உத்திகளை மாற்றினான், எதிர்பார்த்தைதைவிட அதிகமாய்ப் பலன் கிடைத்தது.

            கல்வி, கலை, விளையாட்டு என்று மாணவா்களின் ஒவ்வொரு சாதனைக்குப் பின்னும் கபிலனின் ஊக்கமளிப்பும் கடின உழைப்பும் இருந்தது.      
    
            ஒதுங்கிச் சென்ற,  முரண்டு பிடித்த, மௌனித்த பிள்ளைகள் கபிலனால் சாதனையாளா்களாக மிளிர்ந்தார்கள்.

            சாதிச் சகதிக்குள் சிக்கிக்   கொண்டு, வெட்டி வேதாந்தம் பேசி கொண்டு, உழைக்காமல் உண்ணுவதற்கு கபிலன் தயாராயில்லை அப்படியிருக்கவும் அவன்படித்த புத்தகங்கள்  சம்மதிக்கவில்லை.  உலகில் கற்று முடிந்தவரென்று எவருமில்லை, கற்றுவிட்டோமென்று புத்தகத்தையும், புத்தியையும் மூடிவிட்டவன்  ஆசிரியராயிருக்கமுடியதாதென்று உறுதியாய் நம்பிய கபிலன் கற்றுக் கொண்டேயிருக்கும் ஆசிரியராய் இருக்கவே விரும்பினான்.   ஊதிய உயா்வுக்காய்ப் போராடுவதைப் பின்னுக்குத் தள்ளி மாணவா்களின் உயா்விற்காயப் போராடுவதற்கே முன்னுரிமை கொடுத்தான்.

            படிப்பாளிகளை படைப்பாளிகளாய் விதைத்துத் கொண்டே இருந்தான் விதைகள் விருட்சங்களாய் மாறி வனங்களைப் பிரசவித்தது.

சிந்திக்க: குறள்: 399,669
தியானிக்க: சீராக்கின்ஞான் 34:3-34, தீ.பா 25:3

-முனைவா்.ஸ்டீபன்மிக்கேல்ராஜ்



தமிழாயிரம்


தமிழாயிரம்
18. களப்பணி
1.         காக்கும் கடமைக் களப்பணி செய்வாரை
            ஊக்குதல் வேண்டும்  உரத்து.

2.         உரம்போ டுழவன் களைவெட்டிப் பின்னா்
            உரம் போட்டு நீர்விடுதல் காண்.

3.         கண்டால், களப்பணி செய்முறை கண்டறிவாய்
            செய்முறை தேர்வாய் சிறந்து.
           
4.         சிறந்தநிலை ஒன்றுண்டாம் சீர்த்த ஒருமைத்
            திறத்துடன் உன்னைக் கொடு

5.         கொடுத்துமைந்த தொண்டில் குறிநோக்கிச் செல்லல்
            எடுத்தமைந்த வெற்றி அது.

6.         அதுவுன் தனிப்பணி ஆகாமல் தக்க
            பொதுப்பணி ஆகிடப் போற்று.

7.         போற்றினால் ஊரெல்லாம் ஒன்றாகும்; ஒன்றாக
            ஏற்று விளக்கே என!

8.         ஏனற்குநீ ஈகன் எனத்திகழல் வேண்டும்;
            மனத்துறையும் மாட்சி புக.

9.         புகவேண்டும் போற்றுசீர்த் தொண்டில் புகழும்
            கருதாப் புகழைப் கருது.

10.       கருமமே கண்ணானார் கண்ட கடமைத்
            திருச்செல்வம் நீயே திடம்.


சனி, 9 ஜூன், 2018

பாராட்ட வேண்டிய பாட மறுசீரமைப்பு


தலையங்கம்
தி.பி. 2049 (கி.பி. 2018)       வைகாசித்திங்கள்
தேன் - 2                                                துளி -17


பாராட்ட வேண்டிய பாட மறுசீரமைப்பு

          வளா்ந்து வரும் தொழில் நுட்ப யுகத்தில் ஒவ்வொரு ஆண்டுமே  பாடத்திட்டத்தில்  மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழலில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த பத்தாண்டுகளாக பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படாமல், அதிலும் குறிப்பாக மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல்  பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து விட்டன.
          தேசிய, உலக அளவில் பிற மாநில, நாட்டு மாணவா்களோடு போட்டியிட்டு வெற்றி பெற இயலாமல் பெரும்பாலான தமிழக மாணவா்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதற்குப் பாடமறு சீரமைப்பு செய்யப்பெறாமை முக்கிய காரணம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
          இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டக்குழு அரசுச் செயலா் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவா்கள் தலைமையில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆசிரியா்கள், பேராசிரியா்கள, கல்வியாளா்கள் ஒன்றுகூடி அல்லும் பகலும் அயராது உழைத்து காலத்திற்குத் தகுந்தவாறு அறிவியல் தொழில் நுட்பங்களைப் பாட நூல்களில் வடிவமைத்து மறுசீரமைப்பு செய்துள்ளார்கள்.

          பிற மாநிலப் பாடத்திட்டங்கள், சி பி எஸ் இ பாடத்திட்டம், சிங்கப்பூா் பாடநூல்களை ஒப்பீடு செய்து பாடங்களை எழுதியுள்ளார்கள்.

          தொடா் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல், கருத்துகள், காணொலிக் காட்சிகள்,  அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை ‘கியூ ஆா் கோடு’ மூலம்  அணுகும் வசதி, பாடப்பொருள் தொடா்பான கூடுதல்  விவரங்களுக்கு இணையதளமுகவரிகள், பன்முகத் தெரிவு வினா, எண்ணியல் கணக்கீடுகள் போன்றவை மூலம் மாணவா்களின் புரிதல் நிலையை மதிப்பீடு செய்தல், மாணவா்கள் தாங்கள் கண்டறிந்து விடைகளை சரிபார்த்து உறுதி செய்யவும், கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி செய்தல், முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அளித்தல் என அக்கறையும், உழைப்பும் ஒரு சேர அமைந்திருக்கிறது புதிய பாடத்திட்டம்.

          தேசிய, உலகத் தரத்தில் தமிழக மாணவா்களை உயா்த்தும் உன்னத முயற்சியாகவே இது காட்சியளிக்கிறது.

          மாணவா்களின் எதிர்கால வாழ்விற்கு  வழியமைத்து வழித்துணையாய் மறுசீரமைப்புப் பாடங்கள் பேருதவியாயிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
          கல்விடுடே இதழாசிரியா் திரு.இ.இராமசுப்பிரமணியன் அவா்கள் 

          ‘அடுத்த தோ்தலை மட்டுமே சிந்திக்கின்ற அரசியல்வாதிகளும் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்காத ஆசிரியா்களும் குற்றவாளிகள்' என்று குறிப்பிடுவதைப் போன்று தரமான ஆசிரியப்பெருமக்கள் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மிகக் கவனமாய் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளமைக்கு பாடத்திட்டக் குழுவினா் அனைவரையும் நாம் உளமாரப் பாராட்ட வேண்டும்.

இனிய நல்வாழ்த்துகள்தோழா்களே!
தோழமையுடன்
தேமதுரம் - ஆசிரியா் குழு




ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
தே.தீபா

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ.மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,


காரைக்குடி-3.