புதன், 20 பிப்ரவரி, 2019

தைத்திருநாள்:


                                தைத்திருநாள்
   தி.பி.2049.             தைத் திங்கள்

                                                 தேன்-2.                        துளி-25

                தமிழ்மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த மாதமாக தை மாதம் விளங்குகின்றது. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது.  தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டு விழாக்களில் தைத்திருநாள் என்பது முக்கியமான ஒரு விழாவாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனி பெருவிழா.
                ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தைமாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரைஇ பால்இ நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் வைத்துச் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். நமக்குக் காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை சூரியன் விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
                பொங்கல் பண்டிகை மொத்தம் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல்நாள் போகிப்பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல். நான்காவது நாள் உழவர் திருநாள்.
                மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகிப்பண்டிகையன்று அதிகாலையில் பழைய பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டுக் கொளுத்துவார்கள். வீடு சுத்தமாக்கப்படும் வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
                உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் தை மாதம் முதல் தினத்தில் பொங்கலிட்டு இயற்கையை வழிபடுவார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டுவந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.
                மூன்றாவது நாள் விழா மாட்டுப்பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப்பொங்கல் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.
                நான்காம் நாள் காணும் பொங்கல் விழா ஆகும். இந்நாளில் மக்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் பகிர்ந்து கொள்ளும் நாளாக விளங்குகிறது. தைத்திருநாள் நமது பண்பாட்டை வளர்க்கும் விதமாகவும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அமைகின்றது.
                                                                                                                             தோழமையுடன்,
தேமதுரம் - ஆசிரியா்குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக