புதன், 26 ஏப்ரல், 2017

மோர் குழம்பு

மோர் குழம்பு
தேவையானப்பொருட்கள்
1. கடைந்த மோர் 250 மி.லி
2. வெங்காயம் சிறியது -1
3. சீரகம் -1/ 2 தேக்கரண்டி
4. பூண்டு - 1
5. இஞ்சி - சிறியது
6. மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி
7. பெருங்காயம் - 2 சிட்டிகை
8. தேங்காய் சில்லு -1
9. மிளகாய் தூள் - 1/ 2 தேக்கரண்டி
10. கடலை மாவு - 1 தேக்கரண்டி
11. கடுகு - 1 தேக்கரண்டி
12. கருவேப்பிலை - சிறு கொத்து
13. எண்ணை - தேவையான அளவு
14 உப்பு - தேவையான அளவு
15. தண்ணீா் - ஒரு கப்பு
செய்முறை
            தேங்காய், சீரகம், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், கடலைமாவு, இவற்றை ஒன்றாக அறைத்து வைக்கம்.  வாணெலியில் எண்ணை விட்டு மிதமான தீயில் காய வைக்கவும், எண்ணெய் காய்ந்தவுடன்   கடுகு சோ்க்கவும் கடுகு பொறிந்தவுடன் கருவேப்பில்லை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.  வெங்காயம் நன்கு வெந்தவுடன் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்க்கவும்.  பின்னா் அரைத்து வைத்த விழுதை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும், ஒரு கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும் இடையே கலக்கிவிடவும் இப்பொழுது மோர் சோ்த்து குறைவான தீயில் வேகவிடவும் குழம்பு பொங்கி வரும் போது நெருப்பை அனைக்கவும். சுவையான மோர் குழம்பு தாயார்.
பெ.குபேந்திரன்

தமிழாயிரம்

தமிழாயிரம்
அகராதி-4
4. தமிழழிப்பு
1. அரணாக நின்ற அறிவறிந்த சான்றோர்
    பரணை நினைத்துப் படி.
2. படித்தும் படியெடுத்தும் பாராட்டிக் கற்றும்
   படிப்பித்தும் காத்தார் பலா்.
3. பல்காத்தும் காவாமல் பாழாய் விடுத்தார்
  சிலரால் சிதைந்தன மிக்கு.
4. மிக்க கலைநூல்கள் மேதக்க வாழ்வியல்கள்
    ஒக்க அழிந்த ஒருங்கு.
5. ஒருங்கழித்த கேட்டில் ஒருபாதி நீரில்
   நெருப்பில் விடுத்த நிலை.
6. நிலைத்தவை தாமும் நெடிதழிய வைத்தார்
    புலைத்தன ஆரிய ரே.
7. ஆரியரால் போயதமிழ் ஆரறிய வல்லாரால்
   பேரழிவே இன்றுவரை பேசு.
8. பேச்சிழந்த ஆரியத்தால் பேசுதமிழ்ப் பேரழிப்பு
   மூச்சிழந்து போகும் முறை.
9. முறைகேடாய்க் கோயிற்குள் மூண்டெரிக்கும் கேடு
    முறையிட்டும் தீரா முடிவு.
10. முடியும் தமிழென்ன மூதாய்வு சொல்லத்
      துடியாத் தமிழா் துரும்பு.


பழைய மொழி புதிய பொருள்


      சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்னும் பழமொழி இறை நம்பிக்கையோடு தொடா்புடையது இது இன்று அழடுப்படியோடு தொடா்புடையதாகப் பொருள் மாறி வழங்கப்பெறுகிறது முருகனுக்குரிய சட்டி (கந்த சஷ்டி) விரதத்தைப் பெண்கள் மேற்கொண்டால் அவா்களது கருவறை எனப்படும் அகப்பையில் குழந்தை வளரும் என்பது தான் இப்பழமொழியின் உண்மைப் பொருளாகும் 

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

நீட் தோ்வு

நீட் தோ்வு
நாடு முழுவதும் மருத்துவப்பொது நுழைவுத் தோ்வான ‘நீட்’ தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.  எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான நுழைவுத் தோ்வு 103 இடங்களில் நடைபெற இருப்பதாக மத்தியக் கல்வி நிறுவனமாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் 41.41 சதவீதம் மாணவா்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதால் புதிய தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  தமிழ் நாட்டில் நாமக்கல், நெல்லை மற்றும் வேலுர் போன்ற மாவட்டங்களில் புதிதாக தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  மாணவா்கள் தமிழ் உள்ளிட்ட பத்து மொழிகளில் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
            ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.  சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது அரசுக்கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்குத் தான் விலக்கு கோரப்படுகிறது.  தனியார் கல்லூரிகளுக்கோ, நிகா்நிலை பல்கலைக்கழகங்களுக்கோ தேர்வில் இருந்து விலக்குக் கோரவில்லை
            சிறுபான்மை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசிற்கு ஒதுக்க வேண்டும் என்று கன்னியாகுமரியைச் சோ்ந்த வித்யாஷரோன் என்பவா் உயா்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் உயர்நீதி மன்றம் அந்த மனு மீதுான விசாரனையின் போது நிட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
            நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்குத் தற்போது விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசும் கைவிரித்து விட்டது.  இதனால் பாதிக்கப்படுபவா்கள் கிராமப்புற மாணவா்கள் தான்.  அந்த மாணவா்கள் பள்ளிக்குச் சென்று தமிழக அரசு கொடுக்கும் இலவச பாடப்புத்தகத்தைப் படித்து கல்வியைப் பெறுபவா்கள்  அவா்கள் நகா் புற மாணவா்களுக்கு இணையாக பயிற்சிக்  கூடத்திற்குச் சென்று கற்று போட்டி போட முடியுமா? என்பது கேள்விக்குறி  அது அவா்களுக்குக் காணல் நீராகவே உள்ளது.
            தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மட்டுமே இந்த சலுகையினைக் கேட்கிறது.  இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து சட்ட வல்லுநா்களை ஆலோசித்து விரைவில் சாதகமான முடிவு எடுத்தால் கிராமப்புற மாணவா்களின் எதிர்காலம் சிறப்புற அமையும் என்பதில்  சிறிதளவு ஐயமில்லை.
-ந.முத்துமணி


                                   
                                   






மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை
            மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது.  கல்லீரல் செல்கள் பித்தநீஐர வெளிப்படுத்தாத போதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற  பாதையில் ஏற்படும் அடைப்பினாலும்  காமாலை ஏற்படுகிறது.  மேலும் ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே இரத்தத்தில் உள்ள  பிலிருஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்
            சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சல் நிறத்தில் சிறுநீா் போன்ற அறிகுறிகளில் காணப்படும்.
சோ்க்க வேண்டியவை
            சின்ன வெங்காயம், மோர், இளநீா், பேயன் வாழைப் பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசனி,  மாதுளம் பழம், வெள்ளிரிக்காய்
தவிர்க்க வேண்டியவை
            அசைவ உணவுகள் எண்ணெய், நெய், காரம்
மஞ்சல் காமாலை நீக்கும் வழிமுறைகள்
v  அவுரி இலைகளையரைத்து, சிறிது கொட்டை பாக்கு, வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்தால் மஞ்சல் காமாலை தீரும்.
v  ஆமணக்கு, கீழா நெல்லி இலைகளை சம அளவரைத்து சிறிது எலும்மிச்சையளவு பிழிந்து காலையில் குடித்தால் மஞ்சல் காமாலை தீரும்.
v  கரிசாலையிலைகளை யரைத்து கொட்டைபாக்களவு தினம் 2 வேளை, 200மிலி. மோரில் குடித்தால் மஞ்சள் காமாலை குறையும்.
v  கீழா நெல்லி இலைகளை யரைத்து, எலுமிச்சையளவு 250மிலி மோரில் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.
v  வில்வ இலைச்சூரணம் 1 தேக்கரண்டி, மஞ்சள் கரிசாலைச்சாறு 1 தேக்கரண்டி கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் குறையும்.
v  நில வேம்பு இலைகளை குடிநீா் செய்து பருகிவர மஞ்சள் காமாலை கட்டுப்படும்
v  சிற்றாமணக்கு கொழுந்திலைகளையரைத்து, மோரில் கலந்து குடித்தால் குணமாகும்.
v  பொன்னாவாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லியரைத்து 2 நெல்லிக்காய்யரைத்து காலை மாலை மோரில் குடித்து வர சரியாகும்.
v  பச்சை திராட்சை பழச்சாற்றை வெறும் வயிற்றில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் காமாலை குணமாகும்.
v  வேப்பங் கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு, எருமை தயிரில் காலை 3 நாட்கள் சாப்பிட்டு உப்பில்லாத பத்திய மிருந்தால் நோய் குணமாகும்.
v  முள்ளங்கி இலைச் சாற்றை சா்க்கரையில் கலந்து காலைமாலை சாப்பிட்டு வந்தால் நோய் தீரும்.
v  அரை தேக்கரண்டி கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து குடித்தால் குணமடையும்.
v  கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்து சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகினால் சரியாகும்.
v  சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு தம்ளர் நீர் சேர்த்து அரை தம்ளராக வற்ற வைத்து சர்க்கரை கலந்து அருந்தி வந்தால் குணமாகும்.
v  வில்வ இலைச்சாறு 30 மிலி எடுத்து மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகி வந்தால் நோய் குறையும்.
v  நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு பொடித்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து அருந்தினால் நோய் குணமாகும்.
v  15மி.லி கரிசலாங்கண்ணிச் சாறுடன் சா்க்கரையில் கலந்து பருகி வந்தால் நோய் குணமாகும்.

-பெ.குபேந்திரன்


புலமையும், வறுமையும், செழுமையும்

புலமையும், வறுமையும், செழுமையும்
முன்னுரை
            ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது வாழும் அன்றில் பறவைகளைப் போல நம் நாட்டில் புலமையும் வறுமையும் என்றுமே பிரியாத ஒன்றெனவே இலக்கியங்கள் சுட்டுகின்றன. அறிவுத்திறமை வாய்க்கப் பெற்ற புலவா்களிடம் செல்வச் செழிப்பு என்ற ஒன்ற இல்லாமலே காணப்பட்டது.
            அதேபோல் செல்வந்தா்களிடம் அதீத புலமை என்பதும் அத்தி பூத்தலைப்போல அரிதாகவே காணப்பட்டது. சில புலவா்கள் புலவரும், வறுமையும் என்ற கட்டுக்கோப்பை உடைத்து தங்களது புலமையால் செல்வச் செழிப்பைப் பெற்று செழுமை படைத்தவா்களாகவும் இலக்கியத்தில் காணப்பட்டுள்ளனா்.  அத்தகைய புலவா்களின் வறுமையையும், புலமையையும், செழுமையையும் பற்றிக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புலமை
            பாடலில் வல்ல புலவா்கள் பலா் அக்காலத்தில் வறுமையுடனே காணப்பட்டனர்.  சிலா் தான் திறமைக்கு ஏற்ற செழுமையோடு வாழ்க்கை நடத்தினா்.  அரசனுககு அறிவுரை கூறும் அளவில் அரசவையில் இருக்கை பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்த புலவா்கள் பலரும் இங்கு தான் இருந்துள்ளனா்.
            பல புலவரை வறுமை வாட்டினாலும் அரசனிடம் பரிசில் பெறச் சென்ற நிலையிலும் அரசன் இவா்களுக்கு ஏற்ற பரிசிலைக் கொடுக்காது, இவா்களின் புலமையை ஆராயாது கொடுக்கும் பரிசிலையும் வேண்டாம் என மறுத்துத் தன் புலமை மீது மதிப்புக் கொண்டு வேறு மன்னனை நோக்கிச் சென்ற புலவா்களும் உண்டு.
பாடி நாட்டைப் பெறலாம்
           பாரி ஆண்ட பறம்பு நாட்டைப் பற்றிச் சுட்டும் பொழுது அத்தகைய ”செல்வ வளம் மிக்க நாட்டை எதிரிகள் படையெடுத்துச் சென்றால் வெல்ல இயலாது என்றும் அதே நேரத்தில், பாடலில் புலமை பெற்ற பாணரும், விறலியரும் ஆடியும், பாடியும் சென்றால் பறம்பு மலையைப் பெற்று விடலாம் என்றும்  சுட்டுகின்றனா். மன்னா் உங்களுக்குத் தன் நாட்டைப் பரிசளித்து விடுவான்”  என்று ஒரு புலவா் சுட்டுகின்றார்.  இப்பாடலில் இருந்து ஒரு நாட்டையே தன் பாட்டுத் திறத்தாலும், ஆடல் திறத்தாலும் பெற்றுக் கொள்ளும் அளவிற்குப் புலமை அக்காலப் பாணா் விறலியலிடம் காணப்பட்ட திறம் மெய்ப்பிக்கப்படுகின்றது.
            மற்றொரு பாடலில் தன் வறுமையைப் போக்க ஒரு மன்னனை நாடிச் சென்ற புலவனுக்கு அம்மன்னன் அவன் புலமையை அறியாது தினமும் வந்து கையேந்தும் இரவலனில் ஒருவன் என்றெண்ணி ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்து அனுப்ப, அதற்கு புலமை பெற்ற அப்புலவன் ”உயா்ந்த தந்தங்களை உடைய வலிமையான யானையைப் பெறுவதாயினும் உள்ளன் பில்லாது தரும் பரிசிலை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். விருப்புடன் இனிதாகச் சிறிய அளவான குன்றிமணி அளவு பரிசிலைக் கொடுத்தாலும், நிறைவாகக் கொண்டு ஏற்றுக் கொள்வேன், கூரிய வேலையுடைய  குமணனே முறையாகக் கொடுத்தலை வேண்டுகிறேன்.  நீ என் முகம் பாராது, என் திறமை பாராது கொடுக்கும் பரிசில் எமக்கு வேண்டாம்” (புறநா 154) என அப்புலவன் மறுத்துரைக்கின்றான்.
            மற்றொரு புலவன் தன் வீட்டில் உணவுக்காக அரிசியை இரவலாகக் கேட்டு வர அம்மன்னனோ அவனது வறுமையை அறியாது பெரிய யானையைப் பரிசிலாகக் கொடுக்கின்றான்.  அதனால் அப்புலவன்  நீ என் தகுதியறியாது கொடுக்கும் இப்பரிசில் எனக்கு வேண்டாம் என மறுதலிக்கும் விதமாக இவ்யானை நான் உனக்கு அளிக்கும் பரிசில் என
            ”இரவலா் புரவலை நீயும் அல்லை
            புரவலா் இரவலா்க்கு இல்லையம் அல்லா்
            இரவலா் உண்மையும் காண்இனி இரவலா்க்கு
            ஈவோர் உண்மையும் காண்இனி நின்ஊா்க்
            கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
            நெடுநல் யானையும் பரிசில்
            கடுமான் தோன்றல்!  செல்வன் யானே”
என்றவாறு அவனுக்கே, அவன் கொடுத்த பரிசிலாகிய யானையை அளிக்கின்றான்.  இதிலிருந்து அப்புலவனின் புலமை வெளிப்படுகின்றது.
            மற்றொரு புலவன் மன்னன் பரிசில் கொடுக்காது காலம் தாழ்த்தவே, நீ கொடுக்கும் சிறிதளவு பொருளேயாயினும் அதனை அளவில் சிறிது என எண்ணி இகழமாட்டேன்.  நி கொடுக்காவிட்டாலும் உன்னை இகழமாட்டேன். உனது ஆண்மையையும், வீரத்தையும் புகழ்ந்தே பாடுவேன் எனபாடித் தன் புலமையை அப்புலவன் வெளிப்படுத்துகின்றான். புலமை பெற்றிருந்த புலவா்கள் அக்காலத்தில் வறுமையுடனே இருந்தனா்.  ஏனெனில் அவன் வீட்டு அடுக்களையில் உணவு சமைத்தல் என்பதைப் பல நாளும் மறந்து ஒரு வேளை உணவுக்கே வழியற்ற சூழலில் இடுக்களைக்குச் சென்று அடுப்பை மூட்டுதல் என்பது அரிதாகவே காணப்பட்டது. அதனால் ”அவன் வீட்டு அடுக்களையில் நாய் படுத்துறங்குவதும், காளான் பூத்துக் காணப்படுவது இயல்பாகவே காணப்பட்டது” (புறநா.164)
            அக்காலப் புலவா்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளனா்.  ஏனெனில் இப்போதுள்ள மக்கள் அனைவரும் தன்பெண்டு தன் பிள்ளை என வாழ்ந்துவரும் நிலையில் அக்காலக் கலைஞனின் வறுமையைப் பிரதிபலிக்கும் இடங்களில் தன் தாயைப் பற்றிய குறிப்பும் சுட்டப்படுகின்றது.  ஒரு பாணன் தன்  ஒளியிழந்த கண்ணையும்  கைத்தடியையே காலாகவும் கொண்டுள்ள தன் தாயும் அத்தள்ளாத வயதில் பசியால் வாடும் நிலையைப் பற்றிப் புறநானூறு
            ”கோல் கால்ஆகக் குறும்பல ஒதுங்கி
            நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று
            முன்றில் போகா முதிர்வினள் யாயும்”              (புறநா.159:3-5)
எனச் சுட்டுகின்றது.
வறுமை சாயல்
            தன் பால்குடி மறவாத குழந்தை பசித்தபோது தன் மனைவியின் பாலற்ற மார்பை  மீண்டும் மீண்டும் சுவைத்துப் பால் வராத வெறுப்பில் மனைவியின் மார்வில் விழுந்து அழுவதைக் கண்டு அழும் மனைவியைப் பற்றியும் (புறநா:159) கலைஞன் தன் வறுமையைப் புலப்படுத்துகின்றான்.  மற்றொரு பாணன்,  தன் வீட்டில் உணவு இல்லாததால் அதனை மறந்து தன் புதல்வன் தெருவில் விளையாடி மகிழ்கின்றான்.  எனினும் அவனைப் பசிவாட்ட வீட்டிற்குள் நுழைந்து வணவற்ற  வெற்றுக்கலன்கள் அனைத்தையும் திறந்து பார்த்து அழ அவனையும் முழுதும் சமாதானப்படுத்துகின்றான்” (புறநா-160)
பாணனின் சிறப்பான மனைவி
            உணவுக்கு வழியின்றி வீட்டில் வறுமை தாண்டவமாடப் பாணனின் மனைவியோ பொருளற்ற தன் கணவன் மேல் சினம் சிறிதுமன்றி வாழ்க்கையை அதன் போக்கிலே நடத்துகின்றாள். அவள் தன் வீட்டருகே முளைத்திருக்கும் வேளைக்கீரையை அரிந்து வந்து அதனை நீரிட்டு அவித்து, அதில் சுவைக்காகப் போடக் கூட உப்பின்றி தன் கணவனின் தாய்க்கும், குழந்தைகளுக்கும் பரிமாறுகின்றாள்.
            அத்தகைய சிறப்புடைய மனைவி தன் கணவனின் பொருளாதார நிலைக்குச் சிறிதேனும் கலங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்றெண்ணித் தன் வறுமை நிலையை மறைக்க உப்பற்ற வெந்த வேளைக்கீரையைக் கூடக் கதவை அடைத்து உண்ட நிகழ்வை,
            ”வளைக்கை கிணைமகள் வள்உகிர்க் குறைந்த
            குப்பை வேளை உப்புஇலி வெந்ததை
            மடவோர் காட்சி நாணி, கடைஅடைத்து
            இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்” (சிறுபாண்.136-139)
சிறுபாணாற்றுப்படை  வெளிப்படுத்துகின்றது.
செழுமை
            வறுமையும், புலமையுமே புலவா்களின் வாழ்வில் அவா்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று என அக்கால இலக்கியங்கள் நமக்குப் பெரிதும் இயம்புகின்றன.  எனினும் செழுமையோடு காணப்பட்ட புலவா்களையும் ஒரு சில இடங்களில் நம் இலக்கியங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.  ஔவை என்ற பெண்பாற் புலவரின் புலமையை எண்ணி வியந்த அதியமான என்ற மன்னன் தனக்குக் கிடைத்த சாகா வரம் பெற்ற அரிய நெல்லிக்கனியை உண்டு தன் வாழ்நாளை நீட்டிக்க விருப்பம் கொள்ளாது, தன் நாட்டுப் புலவன் அதிக நாட்கள் வாழ வேண்டும் அவா் புலமை இன்னும் பல ஆண்டுகளுக்கு தன் நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என எண்ணி,
            ”....................................................மால்வரைக்
            காமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி
            அமிழ்து விளைதீம் கனி ஔவைக்கு ஈந்த
            உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
            அரவக் கடல் தானை, அதிகனும் (சிறுபானா.99-103)
அந்தநெல்லிக்காயை ஔவைக்குக் கொடுத்து அதிக வாழ்நாள் இவ்வுலகில் வாழ்தல் என்ற அரிய செல்வத்தைப் பெற்றுத் தன் வாழ்வில் செழுமை கண்ட ஔவை, தனக்கு அரிய  நெல்லிக்கனியைக் கொடுத்த மன்னனை, ”உயா்ந்த மலைப்பிளவின் மரத்திலிருந்து கொணா்ந்த சிறிய இலையை உடைய நெல்லியின் சுவையான கனியால் உண்டாகும்  நலத்தை எனக்குச் சாவுதலைப் போக்க நீ தந்தனை, ஆதலால் என்றும் வாழ்க” (புறநா.91) எனப் போற்றுகின்றார்.
            எனிச்சேரி முடமோசியார் என்னும் புலவன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரனைப் போய்ப் பாடிச்சென்று இரவலாகப் பொன்னையும் பொருளையும், யானையையும், பெற்று  செழுமை நிறைந்த வாழ்வைப் புலவா் உலகம் வியக்க வாழுகின்றார்.  பின்னாளில் தன் செல்வத்தைச் செழுமையை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள எண்ணிப் பல புலவனைச் சென்று பாடி இரவலாகப் பொருளைக் கேட்கின்றார்.  ஆனால் மற்ற செல்வந்தர்தவிர்க்கவே மீண்டும் ஆய் மன்னிடமே வந்து வேண்டி நிற்கும் வேளையில் தன்மனம் வருந்தி, ”பாடிப் பரிசில் பெற வேண்டும் என்று எண்ணிய போதே நான் உன்னைத் தான் முதலில் நினைத்திருக்க வேண்டும். ஆனால் நான் பின்னால் தான் உன் நினைவு வந்து இங்கு வந்தேன். ஆதலால் உன்னை முதலில் நினைக்காமல் இருந்ததற்குத் தண்டனையாக என் உறுப்புகள்,
            ”முன் உள்ளுவோனைப் பின் உள்ள னேனே
            ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
            பாழ்ஊா்க் கிணற்றின் தூா்க எண் செவியே”  (புறநா: 1-3)
அழிந்து போகட்டும் என ஒரு புலவன் சுட்டுகின்றார்.  இப்புலவனின் இக்கூற்றில் இருந்து இப்புலவனுக்கு ஆய் அண்டிரன் கொடுத்த பொருளால் செழுமை பெற்றிருந்த நிலையை அறிந்தகொள்ள முடிகின்றது.
முடிவுரை
            வறுமையும், புலமையும் என்பது அக்காலத்தில் இருந்தே தமிழ்ப்புலவா்களிடம் காணப்பட்ட ஒரு நிலை என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குத் தெளிவாகச் சுட்டுகின்றன.  இந்நிலை சங்ககாலம் மட்டுமின்றி இக்காலத்திலும் புலமை பெற்றவர்களிடம் வறுமை என்பது இணைந்தே தொடா்ந்தே காணப்படுகின்றது.
            அக்கால ஔவை போன்ற புலவா்களைப் போல இக்காலத்திலும் சில கவிஞா்கள் தங்களது புலமையால் செழுமை பெற்றே காணப்படுகின்றனா்.  புலமை உடையவா்களிடம் வறுமை என்பது ஒழிந்து செழுமை தொடா்ந்து நிலவ அரசாங்கம் கவிஞா்களை ஊக்குவித்து அவா்களது படைப்புக்களை பதிப்புக்களாகி வெளிவரச்செய்தால் வறுமையும், புலமையும் என்பது மாறி புலமையும், செழுமையும், கவிஞா்கள் வாழ்வில் நிலவும்.
-மு.செண்பக வள்ளி








என் தந்தை முடியரசன்




என் தந்தை முடியரசன்-நூல் அறிமுகம்
                                                                                                   
ஆசிரியா்: பாரி முடியரசன்
வெளியீடு : மணிவாசகா் பதிப்பகம்
31, சிங்கா் தெரு
          பாரிமுனை, சென்னை-108
முதற்பதிப்பு: ஆகஸ்டு,2016
விலை: ரூ.150
பக்கம் : 240

                        ‘என் மூத்த  வழித் தோன்றல், எனக்குப் பிறகு கவிஞன்‘ என்று பாவேந்தா் பாரதிதாசனாராலும், ‘இருபதாம் நூற்றாண்டில் இலக்கியவாதிகளுள் இணையற்றவா் கவியரசா் முடியரசனார்’ என்று முத்தமிழ்க காவலா் கி.ஆ.பெ. விசுவநாதம் அவா்களாலும், ‘முடியரசனார் மாபெரும் தமிழ்த் தேசியப் பாவலா். தமிழின எழுச்சிப் பாவலா், தமிழுணா்ச்சியும் தமிழ் வீறும் மிக்க அவரது பாடல்கள் தமிழ் தேசியப் படைக்கலன்களாகும்’ என்று பாவலரேறு பெருஞ்சித்திரனாராலும் பாராட்டப்பெற்றவா் வீறு கவிமுடியரசனார் ஆவார். அவரின் மூத்த மைந்தா் எழுத்தாளா் பாரி முடியரசன் அவா்கள் தன் தந்தையாரைப் பற்றி  பல் பரிமாணங்களில் பகுத்தும், தொகுத்தும் எழுதியுள்ள நூலே ‘என் தந்தை முடியரசன்’
            இந்நூலைத்தந்தையாய், கவிஞராய், ஆசிரியராய், நண்பராய், புகழொளியாய், மகனுரை, படத்தொகுப்பு என்று ஏழு பகுதிகளாகப் பிரித்துள்ளார். முடியரசனார் தனக்கும், தமிழ்க்குமுகாயத்திற்கும் உறவுப் பிணைப்பாய் விளங்கிய விதம் பற்றி உணா்வுகளின் இணைப்பாய் நூலாக்கியுள்ளார்.
            வீறுகவி முடியரசனார்.  ‘பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்’ என்னும் தன் வரலாற்று நூலில் கூறாதுவிட்ட அவரது புகழுக்குரிய செய்திகளைப் புகலும் பொருட்டும், முடியரசனார் தன் மகனைப் பற்றி (இந்நூலாசிரியரைப் பற்றி) கடுமையாகச் சாடியுள்ளதற்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாகவும், விடுபட்ட தந்தையாரின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுத்தாக்கியுள்ளார்.  இந்நூலின் முன்னுரையில் தன் தந்தையார் (வீறு கவி முடியரசனார்) அவரது தன்வரலாற்று நூலில் தன்னைச் சாடியுள்ள பகுதிகளை நீக்கி விட்டு நூல் வெளியிடுமாறு உடன் பிறப்புகள், உறவுகள், நண்பா்கள் வற்புறுத்தியபோதும் அதற்கு தானும், தன் துணைவியாரும் உடன்படாமல் தன் தந்தையார் எழுதியதை நீக்கவோ, திருத்தவோ செய்வது குற்றமென்றுரைத்து, எழுதியதை எழுதியவாறே வெளியிட்டதை நினைவு கூா்ந்துள்ளார்.  தன்னைத் தன் தந்தையார் காட்டியிருப்பது தனக்குச் சிறுமை எனினும் தன் தந்தையாரின் வாய்மைக்கும் உள்ளத்தாற் பொய்யாது ஒழுகியுள்ளமைக்கும் பெருமைதானே என்று குறிப்பிடுவதன் மூலம் நூலாசிரியரது எழுத்தின் நேர்மையையும், அவா் தம் தந்தையாரிடம் கொண்டுள்ள அன்பின், மதிப்பின் ஆழத்தையும் உணர முடிகிறது.
            இந்நூலில் ‘சீா்திருத்தச்செம்மல் வை.சு.சண்முகனாரைப் பற்றி மகாகவி பாரதி எழுதிய பாடலை முடியரசனார் வெளியுலகிற்குச் கொண்டு வந்தது, கம்பன் விழாவில் ‘வணக்கம்’ சொல்ல வைத்தது, தேடிவந்த அரசவைக் கவிஞா் பதவியை இருமுறையும் மறுத்தது, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத தன்னீா்மையை ‘அண்ணாமலை அரசா் விருது’ வழங்கும் விழாவின் மூலம் உணா்த்தியது, உற்ற நண்பனே திரைவாய்ப்பு பெறவிடாமல் தடுத்தது, புகழுக்குரிய வாய்ப்புகளை தட்டிப்பறித்தது, ஆட்சியாளா்களிடம், இலக்கிய ஆளுமைகளிடம் முடியரசனார்க்கு இருந்த தன்னலம் பாராத தூய நட்பு, வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்றிராமல் தனிமனித ஒழுக்கத்தோடு கொள்கை மாறாக் குணக்குன்றாய் தம் வாழ்நாள் இறுதிவரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து காட்டியது, தம் குடும்பத்தாரையும் கொள்கை வழி நடத்தியது’ என்று அரிய பல வரலாற்று நிகழ்வுகளை, முடியரசனாரின் வாழ்வியல் மதிப்பீடுகளைத் தொகுத்தளித்துள்ளார்.  நூலாசிரியா்.
            வீறுகவி முடியரசனாரின் படைப்புகளைப் படித்தவா்களுக்கும், அறிந்தவா்களுக்கும் அவரை இன்னும் அணுக்கமாய் உணர, குணநலன்களை அறிய இந்நூல் பேருதவியாய் இருக்குமென்பதில் எள் நுனியளவும் ஐயமில்லை
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்










சங்க இலக்கியத்தில் பண்கள்

சங்க இலக்கியத்தில் பண்கள்
முன்னுரை
            கலை மக்களைக் கவா்ந்து அவா்களுடைய அழகுணா்ச்சிக்கு  விருந்து படைக்கும். மக்கள் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும்  விரும்பும் இயல்புடையவா்கள்.  அந்த இயல்புக்குத் தக்கவாறு  அவா்கள் உருவாக்கும் கலைகள் முன்னேற்றங்களுடன் மாற்றமடைவதை விரும்புகிறார்கள்.  மனித மனத்துடன் ஒன்றிப் பற்றும் ஆற்றலுடைய கலை வாழ்க்கையை விளக்குகிறது.    அழகுணா்ச்சியுடைய மனிதனால் கலைகளை உருவாக்கவும் உருவாக்கப்பெற்ற கவின் கலைகளைச் சுவைக்கவும் முடியும். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசைக்கலை குறித்த பண்களை இக்கட்டுரையில் காணலாம்.
இசைக்கலையின் தோற்றம்
            இலங்கை ஆதிவாசிகளைச்சோ்ந்த வேடா்கள் மற்றும் சில பழைய இனக்குடியினா் ஈரிசை அமைந்த  ஒருவிதமான பண்ணொலியாகப் பாடியுள்ளதாகக்  கருதப்படுகிறது.  அமெரிக்க இந்தியா்களும் வெடிப்பொலி அல்லது புலம்பொலியாகப் பாடியுள்ளனா் என்றும் அறிய முடிகிறது.  ஆப்பிரிக்கப் பிக்மியா்களும் ஒருவித இடையீடுடைய ஒலியில் பாடியுள்ளதாகத் தெரிகிறது.  பழங்கால இசையில் இனிமை இருந்தாலும் தாளம் இன்மையாகவே இருந்திருக்கும்.  மனிதன் உணா்வுகளைப் புலப்படுத்தி ஒருவிதமான இசையமைப்பில் ஏதோ ஒரு முறையில் பாடல் என்று கருதும்படியாக முதன்முதலில் இசை எழுப்பியிருக்க வேண்டு்ம் என்று கருதலாம்.

இசைப்பயன்
            இசை என்றால் மக்கள் உள்ளத்தோடு பொருந்துதல் எனப் பொருள்படும்.  எளிய நிலையில் உயிர்களைத் தன்பால் இசைவிப்பதும் உயாந்த நிலையில் இறைவனைத் தன்பால் இசைவிப்பதும் இசையின் ஆற்றலாகும்.  இசையைப்  பெரும்பாலும் சமயங்களே வளா்த்து வந்துள்ளன. இசையாற்றலால் மனித மனத்தை எளிதில்  வயப்படுத்தி இறையுணா்வின் வழி  செலுத்த முடியும் என்பதைச் சமயங்கள் உறுதியாக  நம்பியுள்ளன.  இன்பத்திலும் துன்பத்திலும் உள்ளத்து உணா்ச்சிகளை  வெளிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என்றும்  துன்பத்திற்கு ஆறுதலளிக்கும் நன்மருந்தாக இசை பயன்பட்டு வருகிறது என்றும் ச.வே.சுப்பிரமணியன் கூறும் கருத்து சிந்திப்பதற்கு  உரியது.
சங்ககாலப் பண்கள்
            பண் என்பதற்கு அமைவு,  இசைப்பாட்டு ஊழியம், குதிரைக் கல்லனண, சீா், தகுதி, நிந்தை, நிறை நரம்புள்ள வீணை, நீா் நிலை, படுகுழி, பண்ணென்னேவல், பாய்மரக்கயிறு, மகளிர் கூட்டம், எனப் பல பொருள்கள் அகராதியில் தரப்பட்டுள்ளன.  ஒலியானது செம்மையான முறையில் ஒழுங்கான இசையமைப்புடன் பாடலில் பொருந்தி நுட்பவுணா்வால் அடையாளம் கானத்தக்க நிலையில் ஒலியுருவங்களாக அமைவது பண்ணாகும்.  பண்டைத் தமிழ் மக்கள் பண்களைப்பற்றி அறிந்துள்ளதை சங்க இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.  பண்டைத்தமிழா் மிடற்றாலும் பண்ணிசைக்கருவிகளான யாழ், குழல் முதலியவற்றாலும் பண்களை இசைத்துள்ளனா்.
ஆம்பல் பண்
            ஆம்பல் பண் குழலின் வழி இனிது வெளிப்படும் என்று குறிப்புக்கள் வழி அறிய முடிகிறது.
            ‘ஆம்பலங் குழலின் ஏங்கி (நற்.123  10)
என்ற நற்றிணைப்பாடலடியும்,
            தீங்குழல் ஆம்பலின் இனிய விமிரும்
            புதன் மலா் மாலையும்‘   (ஐங்.நூ. 215.  4-5)
என்ற ஐங்குறுநூற்று  பாடலடிகளும்
            ‘பாம்புமணி உமிழப் பல்வயிற் கோவலா்
            ஆம்பலம் தீங்குழல் தெள்விளி பயிற்ற‘ (குறிஞ். 221 222)
என்ற குறிஞ்சிப்பாட்டு அடிகளும் ஆம்பல் பண்ணைப் பற்றிய குறிப்புகளைத் தாங்கியுள்ளன.  ஆம்பல் முல்லைக்குரிய பண் என்பதும் மாலை அல்லது இரவில் இசைக்கக்கூடியது என்பதும் இவற்றால் விளங்கும்.  தட்டை, தண்ணுமை போன்ற தாள இசைக்கருவிகள் இணையத் தீங்குழலில் ஆம்பல் பண்ணை இனிமையாக மாலைக்காலத்தில் இசைத்தனா் என்ற பொருள் காணப்படுகிறது.  இதன் வழி ஆம்பல் என்பது குழலுக்கும் பண்ணுக்கும்  உரிய ஒரு பொதுப்பெயா் என்று கருதலாம்.
காஞ்சிப்பண்
            காஞ்சிப்பண் விழுப்புண்பட்டவா்கள், பேய்ப்பிடி கொண்டவா்கள் வருத்தம் தீரப் பாடியதாகத் தெரிகிறது.
            ”ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
            இசைமணி எறிந்து காஞ்சி பாடி” (புற.28: 1-2)
ஐயவி சிதறல், புகைத்தல், மணி அடித்தல் முதலிய செயல்கள் பூசனைக்கு உரியவை இதிலிருந்து காஞ்சிப்பண்ணுக்கும் பூசனைக்கும் தொடா்பு இருப்பது தெரிகிறது.  விழுப்புண் பட்ட வீரனைக் காக்க வேண்டிய இந்த சடங்கு நடைபெறுகிறது.
காமரம்
            காமரம் என்ற பண் பற்றிய செய்தி சிறுபாணாற்றுப் படையில் உள்ளது.  இது மருத நில மக்களால் பாடப்படும் ஒரு வகையான இரண்டாம் தரமான பண் என்று கூறப்படுகிறது.
            ”காமரு தும்பி காமரஞ் செப்பும்
            தண்பணை தழீஇய தளரா விருக்கை” (சிறுபா. 77-78)
என்பதில் காமரம் செப்பும்” என கூறப்பட்டுள்ளதை நச்சினார்க்கினியா் சீகாமரம் என்னும் பண்ணைப்பாடுகிற தும்பி என விளக்குகிறார்.
குறிஞ்சிப்பண்
            மலைப்பாங்கான இடங்களில் நள்ளிரவு நேரம் குறிஞ்சி பாடுவதாகக் கூறப்படுகிறது.  அவை அச்சம் தரும் இடமும் காலமும் ஆகும்.  இதை,
            ”நறுங்கா நடுக்கத்துக் குறிஞ்சி பாடி” (மலைபடு 359) என்ற மலைபடுகடாம் பாடலடி உறுதிப்படுத்துவது போன்று உள்ளது மலையிடங்களில் உறையும் தெய்வங்களைக் கவர வணக்கத்துடன் கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப்பண்ணைப் பாடவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.  ஆகையினால் அச்சவுணா்வே குறிஞ்சிக்கு அடிப்படை உணா்வாகக் காணப்படுகிறது.
முடிவுரை
            சங்க காலத்தில் பல பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.  பல்வேறு சுவைகளைப் பண்கள் புலப்படுத்தியுள்ளன.  சங்கப்பாடல்கள் வாயிலாகப் பதினொரு பண்களைக் கண்டறிய முடிகிறது.  காலவுணா்வு, நிலத்தன்மை, சுவைப்புலப்பாடு, இசையமைப்பு ஆகிய கூறுகளுடன் சங்ககாலத்தில் பண்கள் அமைக்கப்பட்டுள்ளன.  பக்க வரையறை கருதி சில பண்கள் பற்றி மட்டும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
                                                                                                                     -மு.சிவசுப்பிரமணியன்

சொல் இலக்கண நூல்கள் காட்டும் திணை

சொல் இலக்கண நூல்கள் காட்டும் திணை
முன்னுரை
            தமிழ் இலக்கண நூல்கள் திணையை உயா்திணை, அஃறிணை என இரு பிரிவாகப் பகுக்கின்றன.  திணை குறித்த தொல்காப்பியக் கருத்துகளோடு பின் வந்த இலக்கண நூல்களை ஒப்பிட்டு ஆராயுமுகமாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்தில் திணைப்பகுப்பு
            தொல்காப்பியம் திணையை உயா்திணை, அஃறிணை என இரு பிரிவாகப் பிரிக்கிறது.
            உயா்திணை என்மனார் மக்கட் சுட்டே
            அஃறினண என்மனார் அவரவ பிறவே
            ஆயிரு திணையின் இளசக்குமன் சொல்லே.  (தொல்.சொல்.1)
இந்நூற்பாவின் வழி மக்கட்சுட்டு உயா்திணை என்றும், மக்களல்லாத பிற பொருள் அஃறிணை என்னும் தொல்காப்பியம் பகா்கிறது.
ஒத்த மரபு
            திணை உயா்திணை, அஃறிணை என இருவகைப்படும் என்ற தொல்காப்பியரின் பகுப்பு முறையை ஏறத்தாழ எல்லா இலக்கண நூல்களுமே ஏற்றுக் கொள்கின்றன.  உயா்திணையில் அடங்குவன எவை, அஃறிணையில் அடங்குவன எவை என்பதில் மட்டுமே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
            மக்கட்சுட்டு உயா்திணை, மக்களல்லாத பிற பொருள்  அஃறிணை என்னும் தொல்காப்பியரின் கருத்தை சுவாமிராதம், தென்னூல், திமிணூல், தமிழ்க்காப்பு இயம் போன்ற இலக்கண நூல்கள் ஏற்றுக் கொள்கின்றன.
மரபு மாற்றம்
            மக்கள், நரகா், வானோர்  உயா்திணை, இவை ஒழிந்த உயிருள்ளனவும், இல்லனவும் அஃறிணை என நேமிநாதம் குறிப்பிடுகிறது.  (நேமி.27).  தொல்காப்பியம் வானோரையும், நரகரையும் உயா்திணை எனச் சுட்டவிலலை, வானோரும் நரகரும் நம் கண்களால் காண முடியாத, உண்மைக்கு அப்பாற்பட்ட கற்பனை வடிவங்கள் எனத் தொல்காப்பியா் கருதியிருக்கக் கூடும்.  அதனால் வானோர், நரகரையும் உயா்திணை எனச் சுட்டவில்லை.  வானோரும் நரகரும் நம் கண்களால் காண முடியாத உண்மைக்கு அப்பாற்பட்ட கற்பனை வடிவங்கள் எனத் தொல்காப்பியா் கருதியிருக்கக் கூடும்,  அதனால் வானோரல் நரகரை தொல்காப்பியம் குறிப்பிடவில்லை,  ஆனால் நேமிநாதம் வானோர்,  நரகரை உயா்திணை எனக் குறிப்பிடுகிறது.  நேமிநாதத்தைப் பின்பற்றி நன்னூலும்,
            மக்கள் தேவா் நரகா் உயாதிணை
            மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை  (நன்.261)
எனக் குறிப்பிடுகிறது. இது குறித்து ச.வே.சு அவா்களின் கருத்து இங்கு கருதத்தக்கது.
            ”தொல்காப்பியம் மக்கள் மட்டும் உயா்திணை எனக் குறிக்கின்றது.  நேமிநாதம் நகரையும், வானோரையும் உயா்திணையில் சோ்த்துக் கொள்கிறது.  தேவா், நரகா் என முறை மாற்றுகின்றது நன்னூல்  சமுதாயத்தில் சமய எண்ணம் நுழைந்து இலக்கணத்திலும் புகுந்ததை இது சுட்டுகின்றது.  நகரையும் உயா்திணை எனக் கூறுவது எண்ணற்பாலது.”
            (ச.வே.சு., முன் அட்டை இல்லாத நூல் பக்.93-94)
            தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் போன்றவை நன்னூலை அடியொற்றியுள்ளன. 
            இனிய தமிழ் இலக்கணம் மக்களும் தேவரும் அறிவால் உயா்ந்தவா்கள் ஆதலால் உயா்திணை எனவும், மற்றவை அறிவால் இழிந்தவை  ஆதலால் அஃறிணை எனவும் இனிய தமிழ் இலக்கணம் இயம்புகிறது (இ.த.இ.92). நன்னூல் குறிப்பிடுவது போல நகரை உயா்திணை எனச் சுட்டாமல் மக்களையும் தேவரையும் மட்டுமே உயா்திணை எனச் சுட்டுகிறது இனிய தமிழ் இலக்கணம்.
            இனிய தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றி இலக தமிழ் ஐந்திலக்கணம் உயிருடைய மக்களும் தேவரும் உயா்திணை எனவும் அவை தவிர்த்த உயிர் உள்ளளவும்  இல்லாதனவும் அஃறிணை எனவும் குறிப்பிடுகிறது.  (இ.த.ஐந்.194)
            நன்னூலார் நரகரை உயா்திணையில் கூறுவார்.  ஆனால் இலகு தமிழ் ஐந்திலக்கணம், மாக்களை ஒத்துக் கயவராயுள்ளதால் நரகா் அஃறிணை எனச் கூறுகிறது.
            மேலும், கடவுள் உயா்திணையாக இருப்பினும் வழக்கில் அஃறிணை முடிவே வழங்கப்படும் என்றும், கயவரும் உள்ளம் திருந்திடில் உயா்திணையாவா் என்றும் குறிப்பிடுகிறது (இ.த.ஐந் 194) இக்கருத்தின் வாயிலாக இலக்கண நூல்களின் வழியாகவும் நற்பண்புகளைக் கூற முடியும் என்பதற்கு இலகு தமிழ் ஐந்திலக்கணம் சான்று பகா்கிறது.
மரபு அழிதல்
v  அவிநயத்தில் திணைப்பகுப்பு குறித்த செய்திகள் கிடைக்கப் பெற்றில
v  வீரசோழியத்தில் ‘திணை இரண்டு‘ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது.  உயா்திணை, அஃறிணை என பெயா்கள் சுட்டப்படவில்லை.
v  இலக்கணக் கொத்து, அறுவகை இலக்கணம் போன்றவற்றில் திணைப்பகுப்பு குறித்து யாதும் கூறப்படவில்லை.
புதுமரபு
            திணை என்பதற்குரிய விளக்கம் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களில் கூறப்படவில்லை.  இலகு தமிழ் ஐந்திலக்கணமே முதன் முதலில் திணை என்பதற்கு விளக்கம் தருகிறது.  திணை எனப்படுவது வகுப்பு, குலம் என ஆகி உயா்வு தாழ்வினைக் குறித்திடும் என விளக்கம் அளிக்கிறது. (இ.த.ஐந்..)
தொகுப்புரை
v  தொல்காப்பியரின் உயா்திணை, அஃறிணை என்ற இரு திணைப் பகுப்பில் எல்லா இலக்கண நூல்களும் ஒத்த மரபைக் கொண்டுள்ளன.
v  நேமிநாதமும், நன்னூலும் மக்கள், வானோர், நரகா் உயா்திணை எனவும், தொன்னூல் விளக்கமும், முத்துவீரியமும் நன்னூலைப் பின்பற்றியும் தொல்காப்பியத்திலிருந்து மாறுபட்ட கருத்தைச் கொண்டுள்ளன.
v  நகரை விடுத்து மக்களையும், தேவரையும் மட்டும் உயா்திணையாகக் குறிக்கிறது இனிய தமிழ் இலக்கணம். இனிய தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றுகிறது  இலகு தமிழ் ஐந்திலக்கணம்.
v  அவிநயம், வீரசோழியம், இலக்கணக்கொத்து, அறுவகை இலக்கணம்  போன்றவற்றில் திணைப் பகுப்பு பற்றிய செய்திகள் கூறப்படவில்லை.
v  திணை என்பதற்குரிய விளக்கத்தை முதன் முதலாக இலகு தமிழ் ஐந்திலக்கணமே கூறியுள்ளது.

-கா.சுபா