வியாழன், 26 ஜூலை, 2018

வான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு'


வான்புகழ் கொண்ட 'தமிழ்நாடு'


தி.பி.2049.            ஆடித்திங்கள்
தேன்-2.             துளி-19






நம் மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி ஐம்பதாண்டுகள் ஆனதற்கு தமிழக அரசும், மக்களும் பொன்விழா கொண்டாடிமகிழும் இவ்வேளையில் தமிழ்நாடு பெயர் மாற்ற வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் மனதில் நிலைநிறுத்தி நினைவுகூர வேண்டும்.
        வெறுமனே ஒற்றைக் கையெழுத்தால் ஒருமித்த தீர்மானத்தால் இது நிகழ்ந்துவிடவில்லை. தமிழ்ச்சான்றோர் பலரின் தொடர் முயற்சியால், உயிர் ஈகத்தால் கிடைத்ததே நம் 'தமிழ்நாடு'.
        காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார்,   இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது அப்பெயரை மாற்றித் தமிழகம் என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். 10.10.1956 அன்று மதுரையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
       திருவாளர்கள். கு. காமராஜர், பி.கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் இவரை சந்தித்து உண்ணா விரதத்தை கைவிடும்படி கோரியுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்திய வழியில் அதிக நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் இவர் ஒருவரே ஆவார்.  உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு. 
   'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் அலறியபோது 'சென்னை நமதே' என்று சீறியவர் ம.பொ.சிவஞானம். 'தலை தந்தாவது தலைநகர் காப்பேன்' என்று மீசை முறுக்கினார். திருத்தணி மலையையே முழுங்கப் பார்த்தார்கள். திருப்பதியே நமக்குத்தான் சொந்தம் என்றவர் இவர். 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து' என்பது தொல்காப்பியம். பாட்டை ஆதாரமாகக் காட்டி வாதாடினார் புலவர். 'மாலவன் குன்றத்தை விட்டாலும் விடுவேன்; வேலவன் குன்றத்தை விடமாட்டேன்' என்று தமிழ்ச் சண்டை போட்டார்.
          இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக.
தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 42 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் 127. திமுகவின் முதல் தீர்மானம் முழுமையான தோல்வி. இருப்பினும், மேடைகளில் ‘தமிழ்நாடு’ பெயர் கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்தது திமுக. 1961 ஜனவரி 30 அன்று சோஷலிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை, ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் வகையில், ஆளுங்கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்ட மன்றத்துக்கு உள்ளும் புறமும் எழுந்தது. 
குறிப்பாக, தமிழரசு கழகத்தினர்  சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள் தலைமையில் சட்ட மன்றத்துக்கு வெளியே நின்று குரலெழுப்பினர்.
அது தொடர்பான விவாதத்தை ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்குமாறு கோரினார் முதலமைச்சர் காமராஜர். இது தாமதிக்கும் தந்திரம் என்று சொல்லி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மூன்று நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்கவே, காமராஜர் அரசு கொஞ்சம் இறங்கிவந்தது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, நிர்வாகரீதியிலான கடிதப் போக்குவரத்துகளில் ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடுவதற்குச் சம்மதித்தது. ஆனால், அந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான திருப்தியைத் தரவில்லை. அரை மனதுடன் ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர்.
இப்படி மாநில அளவில் ‘தமிழ்நாடு’ கோரிக்கை இருந்த நிலையில், அதனை இந்திய அளவுக்குக் கொண்டுசென்றவர்களுள் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா முக்கியமானவர். தமிழ்நாடு பெயர் சூட்டல் கோரி இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே செய்துவிட சட்டத்தில் இடமிருக்கிறது என்பதால், அந்த முயற்சியை முன்னெடுத்தார் பூபேஷ் குப்தா.
அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை வெகுவாக ஆதரித்துப் பேசினார். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “சுமார் ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததே இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. வரலாற்றுரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிய பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்விக்கு, பரிபாடல், பதிற்றுப்பத்து, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களில் இருந்தெல்லாம் சான்றுகளை எடுத்துச்சொல்லி பதிலளித்த அண்ணா, கம்பனும் சேக்கிழாரும் தமிழ்நாடு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அப்போதும் திருப்தியடையாத ஓர் உறுப்பினர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.
“பார்லிமெண்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடெண்ட்டை ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர், ‘‘தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாகவேண்டும். மாநிலத்தின் பெயருக்கும் அதன் தலைநகரத்தின் பெயருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்ற தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

பிறகு, மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகி, பக்தவத்சலம் முதல்வராகியிருந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது திமுக. 23 ஜூலை 1963 அன்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் இராம.அரங்கண்ணல் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய மாநில அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘தமிழ்நாடு என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்.. மெட்ராஸ் என்றால்தானே புரியும். அதுமட்டுமல்ல, மெட்ராஸ் என்று சொன்னால்தான், சர்வதேச அரங்கத்தில் கேட்கும் போது பெருமையாக இருக்கிறது” என்றார்.
அதுமட்டுமல்ல, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்றினால் பிற மாநிலத்துடனோ அல்லது வெளிநாட்டுடனோ போடப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்த வேண்டியிருக்கும். அது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்” என்றார். அதற்கு எதிர்வினை ஆற்றிய திமுக, “கோல்ட் கோஸ்ட் என்ற நாடு கானா என்று பெயர் மாற்றம் அடைந்தபோது, எந்தவிதப் பிரச்சினையும் எழவில்லை. ஒரு நாட்டுக்கே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், மாநிலத்துக்கு எப்படிப் பிரச்சினை எழும்?” என்று கேட்டது.
வாதங்கள் வலுவாக எடுத்துவைக்கப்பட்டபோதும் சட்ட மன்றத்தில் எண்ணிக்கை பலம் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்தது. ஆக, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்விகண்ட நிலையில்தான் 1967-ல் ஆட்சியைப் பிடித்தது திமுக. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது.
1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. விவாதத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி.கருத்திருமன், மெட்ராஸ் என்பது உலகறிந்த பெயர். தமிழ்நாடு என்பது அந்தப் புகழை இனிமேல்தான் எட்டவேண்டும். ஆகவே, ‘தமிழ்நாடு - மெட்ராஸ் ஸ்டேட்’ என்று பெயர் வைக்கலாமே என்று யோசனை சொன்னார். என்றாலும், இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவருமே ஒருமித்த எண்ணத்துக்கு வந்திருந்ததால், தமிழ்நாடு என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. பிறகு பேசிய முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை அண்ணா உச்சரிக்க, மூன்று முறையும் ‘வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பங்களிப்பையும் தமிழரசு கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானத்தின் தொடர் முயற்சிகளையும் பங்களிப்பையும் பதிவுசெய்து பேசினார் முதலமைச்சர் அண்ணா. அதோடு, ‘‘நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம்முடைய மாநிலம் இருக்கும்.'தமிழ்நாடு' தமிழர் அனைவருக்கும் பெயர்ச்சொல்லாக மட்டுமில்லாமல் வினைச்சொல்லாகவும் அமைய வேண்டும்” என்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் நீட்சியாக, ‘‘தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது.  அண்ணா. எந்த சங்கரலிங்கனாருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னால் பதவியில் இல்லாத அண்ணாவாக இருந்து சத்தியம் செய்து கொடுத்தாரோ - முதலமைச்சர் ஆனதும் அதை மறக்காமல் நிறைவேற்றினார். இதனைத் தனது வெற்றியாக அவர் சொல்லிக்கொள்ளவில்லை. ''இது தமிழுக்கு வெற்றி. தமிழருக்கு வெற்றி. தமிழ் வரலாற்றுக்கு வெற்றி. தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ள வேண்டும்" என்றார் அண்ணா.  ஆம்.இது நமது வெற்றி.நம் தாய்மொழியின் வெற்றி.தாய்நாட்டின் வெற்றி. தமிழர் உணர்வுள்ள அனைவரின் வெற்றி. 
இவ்வெற்றித் திருவிழாவான
'தமிழ்நாடு' பெயர்மாற்றப் பொன்விழா ஆண்டிலிருந்தாவது தமிழ்நாட்டு இளையோர் தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகத்தையும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஷ் குப்தா, ''ஐக்கிய தமிழகத்துக்காக போராடுவது தமிழ் மக்களின் தாய்க் கடமையாகும்" என்று தமிழ்த்தேசியம் முழங்கிய பொதுவுடைமை இயக்கத்  தோழர் ப.ஜீவானந்தம், ''மொழிவாரியாக நாம் பிரிந்து இன அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்" என்று குரலெழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, தெற்கெல்லைப் போராட்டப் போராளிகள் பி.எஸ்.மணி, நேசமணி  போன்றோரின் உரிமை முழக்கத்தையும், பெருமுயற்சியையும்,
 பேரறிஞர் அண்ணாவின் செயல்தீரத்தையும் போற்றிக்காக்க வேண்டும். மொழி- இனம் மீது பற்றுகொண்டு தமிழும், தமிழரும் உயர வழிவகுக்க வேண்டும். அதுவே மொழி-இனம் காத்த சான்றோர்க்கு நம் தமிழர் செலுத்துகின்ற கைம்மாறும், கடமையும் ஆகும். 
                                     தோழமையுடன்,
                           தேமதுரம் ஆசிரியர் குழு.


ஆசிரியர்
முனைவா். ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
ந.முத்துமணி


துணையாசிரியர்
சு.லாவண்யா


ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ.மீனாட்சி
பெ.குபேந்திரன் 
தே.தீபா
மு.சிவசுப்பிரமணியன்
ஜ.ரெஜினாபேகம்

கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3. 




தாயின் உறவு


தாயின் உறவு

கருவைபெற்று ஆசையால் பேசினாள்
          மனதில் சுமந்து மடியில் ஏந்தினாள்
வீட்டைச் சுற்றி உணவு ஊட்டினாள்
          வீட்டைக் கட்டி உனக்காய் ஆக்கினாள்
அவளை சுமக்க முடியாது - நீ
          முதியோர் இல்லத்தில் தள்ள
உன்னை மறக்க முடியாது - அவள்
          உள்ளமு அவளைக் கொல்ல
உன்னை மீண்டும்  மடியில் ஏந்த
          துடிக்கும் தாயை - உன்
மனதிலிருந்து எறிந்த நீயே
          உன்னை எரித்து - மீண்டும்
கருவாகி உன் பாவத்தைப் போக்கு
          அவள் வருத்தத்தை நீக்கு
ஜ.ரெஜினாபேகம்



கடவுள் தந்த பரிசு வாழ்க்கை


கடவுள் தந்த பரிசு வாழ்க்கை


பிறரிடம் ஒரு கடும் சொல்லைக் சொல்லும்முன் வாய் பேச முடியாதவா்களை நினைத்துப் பாருங்கள்.
          உங்கள் சாப்பாட்டைக் குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவா்களை நினைத்துப் பாருங்கள்.

          உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கைத் துணை வேண்டி வருந்துபவா்களை நினைத்து பாருங்கள்.

          உங்கள் குழந்தைகளைக் குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவா்களை நினைத்துப் பாருங்கள்.

          உங்கள் வீட்டைக் குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவா்களை எண்ணிப் பாருங்கள்

          உங்கள் வேலையைச்  குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவா்களை எண்ணிப் பாருங்கள்.

          சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி கூறி முகத்தில் புன்னை தவழ விடுங்கள்.
தே.தீபா


பழமொழிய உண்மை பொருள்


பழமொழிய உண்மை பொருள்

          பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்னும் பழமொழிக்கு களிமண்ணால் பிள்ளையால் உருவம் செய்யும்  பொழுது அது பிள்ளையார் வடிவமாய் வராமல் கோணலாகக் குரங்கு போன்று வடிவத்தில் வந்தது என்னும்  பொருள். கொள்ளப்பெறுகிறது.  ஆனால் ஆவணி மாதம் பிள்ளையாருக்கு கொண்டாடப்பெறும் பிள்ளையார் சதுா்த்தியில் தொடங்கி தொடா்ந்து ஒவ்வொரு மாதமும் பல்வேறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தி புரட்டாசியில் பெருமாள், ஐப்பசியில்  சிவன், கார்த்திகையில் முருகன், மார்கழியில் அனுமன் வழிபாட்டோடு நிறைவு பெறுகிறது. (அனுமன் - குரங்கு) இதனையே இப்பழமொழி குறிப்பிடுகிறது.

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

நெல்லுக்கு_வேலி_அமைத்த நெல்லையப்பர் சுவாமி திருக்கோவில் மகாகும்பாபிஷேக_பெருவிழா (27-04-2018) அன்று நடைபெற்றது.


நெல்லுக்கு_வேலி_அமைத்த நெல்லையப்பர் சுவாமி திருக்கோவில்
மகாகும்பாபிஷேக_பெருவிழா (27-04-2018) அன்று நடைபெற்றது.

          தென் தமிழகத்தில் தலை சிறந்த சிவ தலங்களில் பெருமை வாய்ந்தது, திருநெல்வேலியில் உள்ள காந்திமதிஅம்பாள்_சமேத ஸ்ரீநெல்லையப்பர் _கோவில்.    பொற்றாமரைக் குளத்துடன் கூடிய ஆலயம்
          தென் தமிழகத்தில் தலை சிறந்த சிவ தலங்களில் பெருமை வாய்ந்தது, திருநெல்வேலியில் உள்ள காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை யும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பின. அதற்காக நான்கு வேதங்களும் சிவபெருமானை வேண்டின. எனவே, வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க, இறைவன் லிங்கமாய் அமர்ந்தார் என்பது தலபுராணம் ஆகும்.

          ராமக்கோன் என்பவர் தினமும் தற்போது நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள பகுதியில் வளர்ந்திருந்த, மூங்கில் காடு வழியாக மணப்படைவீடு மன்னருக்கு பால் கொண்டு செல்வது வழக்கம். ஒரு முறை பால்குடம் சுமந்து சென்ற ராமக்கோன் காலில் மூங்கில் இடறியது. அதில் அவர் கொண்டு வந்த பால் ஓரிடத்தில் கொட்டியது. பால் முழுவதும் சிந்தும் முன்பாக அதைக் கொண்டுபோய் மன்னரிடம் சேர்த்தார். ஆனால் இந்த நிகழ்வு தொடர்கதையானது. தினமும் குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் இடறி பால் சிந்துவது வாடிக்கையானது.

          ஒருநாள் ராமக்கோனிடம் தினமும் பால் குறைவாக கொண்டுவருவது குறித்து மன்னர் கேட்டார். உடனே ராமக்கோன் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து ராமக்கோனுடன் மூங்கில் வனத்திற்குச் சென்ற மன்னர், குறிப்பிட்ட மூங்கிலை வெட்டச் சொன்னார். அப்போது மறைந்திருந்த சிறிய அளவிலான சுயம்பு மூர்த்தி வெளிப்பட்டது. மன்னருக்கு வேணுவனநாதராக காட்சி தந்த இறைவன், சிறிய உருவத்தில் இருந்து பலமுறை வளர்ந்து காட்சி தந்தார். உடனே மன்னர், அதே இடத்தில் ஆலயம் எழுப்புவதாக வேண்டினான். இதையடுத்து சுயம்பு மூர்த்தி மீண்டும் சிறியதாக மாறியது என்கிறது தல வரலாறு. நெல்லையப்பர் ஆலயத்தில் சுவாமி சன்னிதிக்கு பின்புறம் இன்றும் மூங்கில், தல விருட்சமாக நிற்பதைப் பார்க்கலாம்.

சரி.. வேணுவனநாதராக இருந்தவர், எப்படி நெல்லையப்பராக பெயர்மாற்றம் கண்டார் என்பதை அறிய வேண்டாமா? வாருங்கள் அந்தக் கதையைப் பார்க்கலாம்.

          இத்தல இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்காக, வேதபட்டர் என்ற அந்தணர், நெல்மணிகளை தர்மம் பெற்று வந்தார். தான் தர்மம் பெற்று வந்த நெல்மணிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது திடீரென பெரும் மழை பெய்யத் தொடங்கியது. நெல்மணி நினைவுக்கு வந்த வேதபட்டர், ‘ஐயகோ! இறைவனுக்காக நான் தர்மம் பெற்று சேகரித்து வைத்திருந்த நெல்மணிகள், மழை வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டால், எப்படி இறைவனுக்கு நிவேதனம் செய்வது?’ என்று நினைத்து வருந்தியபடி, இறைவனிடம் வேண்டினார். பின்னர் அங்கிருந்து அவசரம் அவசரமாக நெல்மணிகள் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு நெல்மணிகள் இருந்த இடத்தில் மட்டும் வெயில் அடித்தது. அதனை சுற்றியப் பகுதிகளில் மழை நீர் வேலி போல தேங்கி நின்றது. இதையடுத்து இத்தல இறைவன் ‘நெல்வேலி நாதர்’ ‘நெல்லையப்பர்’ என்றும், இத்தலம் ‘நெல்வேலி’ என்றும் அழைக்கப்படலானது.
          இந்த நெல்லையப்பர் ஆலயம் பல அற்புதங்கள் நிகழ்ந்த தலமாக விளங்குகிறது. சுவேத கேது என்ற அரசன் நெல்லையம்பதியை ஆண்டபடி, அனுதினமும் நெல்லையப்பரை பூஜித்து வந்தான். வாரிசு இல்லாத நிலையில் அவனது இறுதி காலம் நெருங்கியது. இதையடுத்து இறைவனின் ஆலயத்தில் அமர்ந்து சிவபூஜை செய்துகொண்டிருந்தான். அப்போது எமன் வந்து அரசனின் மீது பாசக்கயிற்றை வீச, அது அரசனோடு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் கோபம் கொண்ட இறைவன், எமனை காலால் எட்டி உதைத்தார். பின்னர் அரசனுக்கு, அவன் விருப்பப்படும்போது முக்தி அடைய அருள்பாலித்தார். நெல்லையம்பதியில் நடந்த இந்த நிகழ்வை, ‘கூற்றுதைத்த நெல்வேலி..’ என்கிற பெரிய புராண பாடல் வரிகளில் சேக்கிழார் பெருமான் பதிவு செய்துள்ளார்.

          இந்த ஆலயத்தின் முதலாம் திருச்சுற்றில், சுப்பிரமணியர் சன்னிதிக்கு அருகில் இந்த காலசம்ஹார மூர்த்தியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

          திருக்கடையூரில் இறைவன் நிகழ்த்தியது, பிறக்கும் போதே இறப்பின் நாளை தெரிந்து கொண்டு பிறந்த இளைஞனுக்காக எமனை எட்டி உதைத்த திருவிளையாடல். ஆனால் இந்த தலத்தில் இறைவன் நிகழ்த்தியது, முதுமை அடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்க இருந்த பக்தனை, மரண பயத்தில் இருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல். எனவே திருக்கடையூரை காட்டிலும், அன்னை அறம் வளர்த்தவளாகி, அரனை மணந்து, அகத்திய முனிவருக்கு திருக்கல்யாண கோலம் காட்டிய இந்த திருத்தலத்தில், திருமணம், சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் மிருத்யுஞ்சய மகா வேள்வி ஆகியவை செய்வது சாலச்சிறந்தது என்கிறார்கள்.

          மேலும் இந்த ஆலயத்தில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும், வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக, தினசரி நிகழ்வு ஒன்று நடக்கிறது. அதாவது இத்தல இறைவனான நெல்லையப்பர், தினமும் அப்பாளுக்கு 6 கால பூஜையின் போதும் பூ மற்றும் புடவைகளை கொடுப்பார். அதே போல காந்திமதி அம்பாள், சுவாமிக்கு நெய்வேத்தியம் (நிவேதனம்) வழங்குகிறார்.

          சுவாமி நெல்லையப்பர் சன்னிதியில் இரட்டை கருவறைகள் அமைந்துள்ளன. அதில் பிரதான கருவறையில் நெல்லையப்பரும், அருகில் உள்ள மற்றொரு கருவறையில் நெல்லை கோவிந்தனும் உள்ளனர். இதில் நெல்லை கோவிந்தன் மார்பில் சிவலிங்கம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

          தினமும் 6 கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் வசந்த மகோற்சவம் (16 நாட்கள்), வைகாசியில் விசாகத் திருநாள், ஆனியில் பெருந்தேர்த் திருவிழா (10 நாட்கள்), ஆடியில் பூரத்திருவிழா (10 நாட்கள்), ஆவணியில் மூலத் திருவிழா (11 நாட்கள்), புரட்டாசியில் நவராத்திரி விழா (15 நாட்கள்), ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம் (15 நாட்கள்), கார்த்திகையில் கார்த்திகை தீபம், சோமவார திருநாள், மார் கழியில் திருவாதிரை விழா (10 நாட்கள்), தை மாதத்தில் பூசத் திருவிழா (10 நாட்கள்), மாசியில் மகா சிவராத்திரி, பங்குனியில் உத்திரத் திருநாள் (10 நாட்கள்) வெகு விமரிசையாக நடைபெறும்.
தாமிரசபை
          நெல்லையப்பர் கோவில் வரலாற்றில், தாமிர சபை நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தர தாண்டவமும், குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான், நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சி சிறப்பானது. இந்த ஆலயத்தில் தை அமாவாசை அன்று, 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும், பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படும். 

ஆயிரங்கால்மண்டபம்:
          அம்பாள் சன்னிதி வளாகத்தில் 1,000 தூண்களை கொண்ட ‘ஆயிரங்கால் மண்டபம்’ அமைந்துள்ளது. இந்த மண்டபம் 520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்டது. இந்த மண்டபத்தில், ஐப்பசி திருக்கல் யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் பங்குனி உத்திர திருவிழாவில், பங்குனி உத்திரம் அன்று மன்னருக்கு, சுவாமி செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த மண்டபம் ஆமை ஒன்றால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். 

ஊஞ்சல்மண்டபம் :

          அம்பாள் சன்னிதி முன்பு 96 தத்துவங்களை தெரிவிக்கும் வகையில், 96 தூண்களைக் கொண்ட ‘ஊஞ்சல் மண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது. ஐப்பசி திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பிறகு சுவாமி, அம்பாள் ஊஞ்சலில் ஆடும் ஊஞ்சல் உற்சவமும், ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் இந்த மண்டபத்தில் நடத்தப்படும். இந்த மண்டபத்தை கி.பி. 1635-ம் ஆண்டு சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கட்டினார். 

சோமவாரமண்டபம்:

சுவாமி சன்னிதியின் வடக்கு பக்கம் ‘சோமவார மண்டபம்’ இருக்கிறது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், நவராத்திரி நாட்களில் நடைபெறும் பூஜைகளும் இந்த மண்டபத்தில் வைத்து செய்யப்படுகின்றன. 78 தூண்களை கொண்ட பெரிய மண்டபம் இது. 

மணிமண்டபம்:

இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங் குவதால் ‘மணி மண்டபம்’ என்று அழைக்கப்படலாயிற்று. நின்றசீர்நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இது. ஒரே கல்லில் சுற்றிச் சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. எந்த ஒரு சிறு தூணைத் தட்டிப்பார்த்தாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபடும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான ஸ்வரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. இவை அனைத்தும் ‘இசைத்தூண்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில்களில், காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும். 

சங்கிலிமண்டபம்:

சுவாமி கோவிலையும், அம்பாள் கோவிலையும் இணைப்பதாக அமைந்திருப்பதால், இதற்கு ‘சங்கிலி மண்டபம்’ என்று பெயர். 1647-ம் ஆண்டு கட்டப்பட்ட மண்டபம் இது. இந்த மண்டப தூண்களில் காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் ஆகிய சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. 

தாமிரசபை:

நெல்லையப்பர் கோவில் வரலாற்றில், தாமிர சபை நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தர தாண்டவமும், குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான், நெல்லையப்பர் கோவில் தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சி சிறப்பானது. இந்த ஆலயத்தில் தை அமாவாசை அன்று, 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும், பத்ர தீப திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று லட்ச தீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம், லட்ச தீப விழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றப்படும். 

 வசந்தமண்டபம்:

100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடை காலத்தில் வசந்த விழா நடத்தப்படும். இந்த மண்டபத்தை சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலை வனம் 1756-ம் ஆண்டு திருவேங்கட கிருஷ்ண முதலியாரால் அமைக்கப்பட்டது. 

அமைவிடம்

இந்த கோவில் நெல்லை மாநகரின் மையப்பகுதியில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
ந.முத்துமணி


மனக்கோயில் கட்டியவருக்கு அருளிய சிவபெருமான்


மனக்கோயில் கட்டியவருக்கு அருளிய சிவபெருமான்

          செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் செயலும் எப்போதும் சிவநினைப்பிலேயே இருந்தது. எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அந்த பக்தர்… பூசலார்!
          ஒருநாள் என் சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டினால் என்ன? என்று தோன்றியது. ஆனால் கையில் காசு இல்லை. செல்வந்தர்களிடம் சிவ பக்தர்களிடம் பொருளுதவி கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதில் நொந்துபோனார். அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை வந்தது. ஒரு பிரமாண்டமான சிவாலயத்தை, தன் மனதுக்குள்ளேயே கட்டத் துவங்கினார் பூசலார். ஆகம விதிப்படி ஒரு கோயில் எப்படி கட்டவேண்டுமோ அதன்படி, மனதுக்குள் கட்ட ஆரம்பித்தார்

          ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, கண்கள் மூடி, சிவனாரை வேண்டி, மளமளவென வேலைகளை மனதுக்குள்ளேயே வேலைகளை முடுக்கிவிட்டார். கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார்.

          அதே வேளையில்… காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவனாருக்கு அழகிய, கருங்கல்லால் ஆன ஆலயத்தைக் கட்டி முடித்திருந்தான். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறித்தான்.

          பூசலார் குறித்த நாளும் மன்னன் குறித்த நாளும் ஒரேநாளாக அமைந்தது. அங்கே… சிவனாரின் திருவிளையாடல் துவங்கியது! மன்னனின் கனவில் தோன்றிய சிவனார், ‘கும்பாபிஷேகத் தேதியை மாற்ற முடியுமா? என்று கேட்டார்.

          அதைக் கேட்டு அதிர்ந்தான் மன்னன். ராஜாவான நாம் கட்டிய ஆலயத்தை விட, அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் தருகிறாரே இறைவன் என சிந்தித்தவர், தன் படைகளுடன் திருநின்றவூருக்கு உடனே கிளம்பிச் சென்றான்.

          அங்கே, அந்த ஊரில் எந்தக் கோயிலும் புதிதாகக் கட்டப்படவில்லை. ஊர்மக்களும் ‘இங்கே யாரும் கோயிலும் கட்டலை’ என்று தெரிவித்தனர். அப்படியே விசாரித்தபடியே வந்தவர், பூசலாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்க, ‘ஆமாம், கோயில் கட்டி முடித்து, நாளைய தினம் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது’ என்றார்

          அதைக் கேட்டு குழம்பிய மன்னன், ‘அந்த ஆலயம் எங்கே’ என்று கேட்க, தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டு, ‘இங்கேதான் இருக்கிறது கோயில்’ என்று, கோயில் கட்டுமானத்தின் முழுப்பணிகளையும் எடுத்துரைக்க… அதிசயித்த மன்னர், பூசலாரின் காலில் விழுந்து வணங்கினார்.

          பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன், அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஆலயம் எழுப்பினான். பூசலாரும் நாயன்மார்களில் ஒருவரானார்! திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள அந்தக் கோயிலின் இறைவன் ஸ்ரீஇருதயாலீஸ்வரர்.
கு.கங்காதேவி




குட்டி கதை - அமைதி


குட்டி கதை - அமைதி

          நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.
          ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
          மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
          மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
          ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. *இந்த ஓவியத்தை வரைந்தது யார்?*
          சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?. மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!
          அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!

சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.
          அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித  பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, *நிச்சயம் ஒரு நாள் விடியும்,* என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.
          எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி. *சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.*
அ.ரா.பானுப்பிரியா





திருமுருக கிருபானந்த வாரியார்" சொன்ன குட்டிக்கதை.....!!


திருமுருக கிருபானந்த வாரியார்" சொன்ன குட்டிக்கதை.....!!

          கடவுளைக் கண்ணால் காண முடியுமா....?'' "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ...., ஒரு கேள்வி, தம்பீ......! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா...?'' எனக்கென்ன கண் இல்லையா.......? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.'' ...!! "தம்பீ......! கண் இருந்தால் மட்டும் போதாது......!! கண்ணில் ஒளியிருக்க வேண்டும்......!! காது இருந்தால் மட்டும் போதுமா.....? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்.....!! அறிவு இருந்தால் மட்டும் போதாது.......!! அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்...!! உடம்பை நீ பார்க்கின்றாய்....!! இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா....?'' "ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா...! அவசரப்படாதே.....!! எல்லாம் தெரிகின்றதா....?''
"என்ன ஐயா....! தெரிகின்றது..., தெரிகின்றது..., என்று எத்தனை முறை கூறுவது....?
எல்லாம்தான் தெரிகின்றது....?'' "அப்பா....!  எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா...?''
"ஆம்! தெரிகின்றன.''.....!! "முழுவதும் தெரிகின்றதா...?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில், "முழுவதும் தெரிகின்றது'' என்றான்....!! "தம்பீ...! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா....?'' மாணவன் விழித்தான். "ஐயா...! பின்புறம் தெரியவில்லை.'' "என்றான். தம்பீ...! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்....!! இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே....!! சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா...?'' "முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'...!!
நிதானித்துக் கூறு....!!.'' "எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்....!! எல்லாம் தெரிகின்றது.'...!!' "தம்பீ...! முன்புறத்தின் முக்கியமான, " முகம் தெரிகின்றதா".....? மாணவன் துணுக்குற்றான்.  பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே...! முகம் தெரியவில்லை....!'' என்றான். "குழந்தாய்...! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை.....!! முன்புறம் முகம் தெரியவில்லை......!! நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்.....!! இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்....!! அன்பனே...!  இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,
இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.'' ...!! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு, இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும். ''ஒரு கண்ணாடி.....திருவருள்....!!மற்றொன்று.... குருவருள்.......!! திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால், "ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்"....!! "தம்பீ.....!  "திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்"......, அதனைக் "குருவருள் மூலமே பெறமுடியும்".....!! " திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''.....!!! அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான். 
வ.மீனாட்சி





தமிழாயிரம்


தமிழாயிரம்
19. இனக்காப்பு

1.       திடமிக்க பல்லோர் திருமிக்க பல்லோர்
          கடமை புரிந்திலா் கண்டு.

2.       கண்டிருந்தால் பண்டைக்கும் பண்டைத் தமிழினம்
          கொண்டிருக்கும் சொந்தமாய் நாடு.

3.       நாடாண்ட முன்னோர் நயத்தக்கோர் என்றாலும்
          பீடாண்டார் அன்றே பிறா்.

4.       பிறா்வயப் பட்டார்;  பிறப்பினத் தாரைத்
          துறந்தார்; துடிக்கவும்செய் தார்.

5.       தார்கொண்டு போரால் தமரைத்தாம் கொன்றளித்தார்
          நேரினக் கேடராய் நின்று.

6.       நின்றார் பகைத்தார் நெருங்கும் இனத்தாரைக்
          கொன்றார் குடையும் பறித்து.

7.       பறித்தவெலாம், பொய்யும் புனைந்துரையும் கொண்டார்
          பறியாமல் கொண்டார் பரிசு.

8.       பரிசென்று மங்கலங்கள் தானங்கள் தந்தார்;
          வரிசை தவறினார் வாழ்வு.

9.       தவறினார் வாழ்வெலாம் தம்மநலத்தார் முற்றாய்
          அவா்க்காக்கிக் கொண்டார் அழித்து.

10.     அழித்தார்; இனப்பகை ஆக்கினார்;  மேலும்
          ஒழித்தார் ஒழிப்பவை ஒத்து.