வியாழன், 16 பிப்ரவரி, 2017

”கணபதி பற்றிய பழமொழிகள்”
            கணபதி வழிபாடு பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வளா்ந்ததால் கணபதி பற்றிய பல பழமொழிகளைத் தமிழா் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனா் அவற்றைக் காண்போம்.
பிள்ளையார் சுழி போட்டாயிற்று
          ஒரு செயலைத் தொடங்கிவிட்டோம் என்பதைக் குறிக்க அச்செயலுக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்று என்பா் இதையே பிள்ளையார்குட்டுக் குட்டியாயிற்று என்றும் கூறுகின்றனா்.
ஒண்ட வந்த பிள்ளையார் ஊர்ப்பிள்ளையாரை விரட்டிவிட்டாராம்
          ஊர்ப்பிள்ளையார் என்பவர் ஏற்கனவே தமிழ் நாட்டில் தொல்காப்பியர் காலத்திலேயே வழிபடப்பெற்ற சேயோன் எனப்படும் முருகன் ஆவார். இவரது வழிபாட்டைக் குறைக்கச் செய்தவா். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ்நாட்டிற்கு வந்த பிள்ளையார் ஆவார். சங்க காலத் தெய்வங்களில் எத்தனையோ தெய்வம் தெரியாமல் மறைந்து போயின வேற்றூரிலிருந்து வந்த பிள்ளையார் தமிழ்ப் பிள்ளையாராக ஆகிவிட்டார் என்பது கருத்து
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது
          ஒரு செயலைத் தொடங்க அது வேறொரு செயலாக மாறிவிட்டது எனப் பொருள் தருகிறது.  இப்பழமொழி - பஜனைப்பாடல்களைத் தொடங்குவோர் முதலில் கணபதி துதியில் தொடங்கி இறுதியில் அனுமார் துதியில் முடிப்பர் இதுவே இப்பழமொழிப்பொருள்.
கணபதி பூசை கைமேற்பலன்
          கணபதியைப் பூசை செய்தால் உடனே பலன் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. ஆனால் இன்று கணபதி பூசை கைமேற்பணம் என்பா்.
பிள்ளையார் வேஷம் போட்டாயிற்றா
          கருவுற்ற பெண்களின் பெருவயிற்றைப் பார்த்து இவ்வாறு கூறுவார்கள்
பிள்ளையாருக்கு எப்போது திருமணம்
          நெடுநாள் திருமணமாகாமல் பிரம்மச்சாரியாக இருப்பவனை நோக்கி பிள்ளையாருக்குத் திருமணம் எப்போது? என்பது கூறுவது வழக்கம்.
அவன் என்ன பெரிய கொம்பனோ?
          அவன் கணபதி போல மிகவும் வலிமை வாய்ந்தவனோ? என வினவுவதும் வழக்கிலுள்ளது.
கம்மென்றிரு எல்லாம் நடைபெறும்
          கம் என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்தால் அனைத்தும் காரியங்களும் தடையின்றி நடைபெறும் என்பா்
பிடித்து வைத்த பிள்ளையார் போல
          ஒருவன் செயலாற்றாமல் அசையாமல் சும்மா இருப்பதை இப்பழமொழி குறிக்கின்றது.

-கு.கங்காதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக