வியாழன், 16 பிப்ரவரி, 2017

பத்திரகிரியார் காட்டும் யோக முறைகள்


                                                                                                சித்தர்களில் ஒருவரும் பட்டினத்தாரின் சீடருமான பத்திரகிரியாரின் காலம் கி.பி.14ஆம் நூற்றாண்டின் இறுதியாகும். அனைத்துப் பாடல்களும் எக்காலம் என முடிவதால் இவரின் பாடல்கள் எக்காலக் கண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றது. இவர் தனது மெய்ஞானப் புலம்பலில் பல வகையான யோக முறைகளைப் பற்றிக் கூறுகிறார். அவ்யோக முறைகளை பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பத்திரகிரியார்
                                துளுவ நாட்டு உஞ்சேனை மாகாளம் என்னும் பகுதியை ஆண்ட மன்னன் பத்திரகிரி. ஒருசமயம் பட்டினத்தார் உஞ்சேனை மாகாளத்திற்கு வந்து மாகாளேஸ்வரரை வணங்கிவிட்டு, ஊருக்கு வெளியே காட்டில் உள்ள பிள்ளையார் கோவிலை அடைந்து அங்கு தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அந்நாட்டின் மன்னனான பத்திரகிரியாரின் அரண்மனையில் பெருஞ்செல்வங்களைக் கொள்ளையிட்டுத் திரும்பிய கள்வர்கள் விலைமதிக்கத் தக்க முத்து மாலை ஒன்றைப் பிள்ளையாருக்குக் காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர். அந்த முத்துமாலை பிள்ளையாருக்குக்குப் பின்னால் தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. இறையுணர்வில் ஒன்றியிருந்த பட்டினத்தடிகள் இதை உணரவில்லை. மறுநாள் கள்வரைத் தேடி வந்த அரண்மனைச் சேவகர்கள் கண்மூடி ஆழ்ந்த யோகத்தில் இருக்கும் பட்டினத்தாரின் கழுத்தில் அரசனுடைய முத்து மாலையைக் கண்டு, இவரை அரசன் முன் இழுத்துச் சென்றனர். அரசன் கோபமுற்று “கள்வனை உடனே கழுவேற்றுக என உத்தரவிட்டாள அதை அறிந்த பட்டினத்தார் என் செயலாவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப்பெற்றேன்” எனத் தொடங்கும் பாடலை பட்டினத்தார் பாட, உடனே கழுமரம் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து அரசன் ஓடி வந்து பற்றி எரியும் கழுமரத்தைக் கண்டு வியந்து தவத்தின் சக்தியை உணர்ந்து துறவு பூண்டு பட்டினத்தாரையே தன் ஞான குருவாகக் ஏற்றுக்கொண்டார்.
                                “பத்திரகிரியார் வரலாறும் நூல் இயல்பும் ஒட்டுடன்
                        பற்றின்றி உலகைத் துறந்த செல்வப்
                        பட்டினத்தார்; பத்திரகிரி பண்புணர்வ தெந்நாளோ”
என்று தாயுமானவ சுவாமிகளால் பாராட்டப் பெற்றவர் பத்திரகிரியார்
ஆறு ஆதாரங்கள்                      
                நமது உடலில் மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை என ஆறு ஆதாரங்கள் உள்ளன. இவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளைக் குறிப்பதாகும். இதனை,
                                “ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை
என்று பத்திரகிரியார் குறிப்பிடுகிறார்.
மூலாதாரம்
                                மூலாதாரம் என்பது குய்யத்திற்கும் குதத்திற்கும் நடுவில் உள்ள பகுதி. அதில் குண்டலி வட்டமாய் அந்த வட்டத்திற்கு நடுவே திரிகோணமாய் அதன் நடுவே நாலிதழுடைய ஒரு பூ வடிவமாய் கடப்பம் என்ற பூவைப் பூப்போன்றிருக்கும். அந்தப் பூவிற்கு நடுவில் ஓங்கார எழுத்தும் அதனுள்ளே விநாயகரும் வல்லபை சக்தியும் எழுந்தருளியிருப்பார்கள் என்றும் மாணிக்க நிறமுடையது என்பதை
                                “ஆதார மூலத் தடியில் கணபதியைப்
                        பாதார விந்தம் பணிந்துநிற்பது எக்காளம்”         (பத்திரகிரியார்  புலம்பல்.67)
என்ற பாடலடிகளில் கூறுகிறார். மேலும் ஆறு ஆதாரங்களில் முதல் ஆதாரமான மூலாதாரத்தின் இறைவன் கணபதி ஆவார். எனவே இறைவன் குடிகொண்டிருக்கும் கோவிலுக்குச் செல்லும் போது முதலில் கணபதியை தரிசித்து விட்டுச் செல்லும் வழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்திள்ளனர். எனலாம்
சுவாதிஸ்டானம்
                சுவாதிஸ்டானம் என்பது மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலிருக்கும் சக்கரம் ஆகும். இச்சக்கரமானது நாற்சதுரவடிவமும் அதனுள்ளே ஆறிதழ்களை உடைய ஒரு புட்பவட்டமும் அதன் மத்தியில் லிங்கபீடமும் அதனுள்ளே நகார எழுத்தும் இருக்கும். அவ்விடத்திலே பிரம்மாவும் சரஸ்வதியும் இருப்பதாகவும் பொன்னிறமுடையதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இச்சக்கரமானது பஞ்ச பூதங்களில் மண்ணின் கூறாகும் என்பதை,
                                “மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
                        கண்வளரத்துப் பாரத்துள்ளே கண்டிருப்பது எக்காலம்” (பத்திர.புலம்பல்.68)
என்ற அடிகளால் அறியலாம்.
மணிபூரகம்
                மணிபூரகம் என்பது சுவாதிஸ்டான்திற்கு எட்டு விரற்கடை மேலுள்ள சக்கரமாகும். இச்சக்கரமானது 1,008 நாடி நரம்புகளும் சூழ நாடிகளுக்கு எல்லாம் வேர் போன்று உள்ளது. இதனையே சித்தர்கள் ‘உந்திக் கமலம்’ எனக் குறிப்பிடுகின்றனர். இது கொப்புழுக்கு நேரே ஏழாம் பிறை போல் இருக்கும். இதன் நடுவே பத்து இதழ்களைக் கொண்ட ஒரு பூ வட்டம் காணப்படும். ‘மகார’ எழுத்து காணப்படும். அங்கே திருமாலும் திருமகளும் எழுந்தருளியிருப்பதாகவும் பச்சை நிறமுடையதாகவும் சுட்டுகின்றனர். மணிபூரகமானது பஞ்ச பூதங்களில் நீரின் கூறாகும். (பத்திர.புலம்பல்.69)
                மணிபூரகத்தில் 1,008 நாடி நரம்புகள் இருப்பதால் தான் மந்திரங்களை 1,008 தடவை உச்சரிப்பதன் காரணமாகும். மந்திரங்கள் நமது உடலில் மறைந்து கிடக்கும் ஆதாரங்களை வெளிக் கொண்டு வருவதற்கேயாகும். அதனால் தான் வேதங்களையும் மந்திரங்களையும் மறைபொருள் என்கிறார்கள் சித்தர்கள்.
அனாகதம்
                நெஞ்சம் இருக்குமிடம் அனாகதமாகும். மணிபூரகத்திற்குப் பத்து விரற்கடை மேலுள்ளது. இதனை “இதயக் கமலம்“ என்கின்றனர். இது முக்கோண வடிவத்தில் இருக்கும் அதன் நடுவே பன்னிரெண்டு இதழையுடைய பூ வடிவமும் அதனுள் ‘சிகார’ எழுத்தும் இருக்கும் என்பதை,
                                “மூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
                                தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்” (பத்திர.புலம்பல்.70)
என்ற பாடல் விளக்கும். சிகாரத்தின் நடுவே சிவனும் பார்வதியும் அமர்ந்திருப்பார்கள். அக்கினி நிறமுடைய பஞ்ச பூதங்களில் தேயு (தீ) அம்சம் பொருந்தியது அனாகதமாகும்.
விசுக்தி
                விசுக்தி என்பது தொண்டை பகுதியாகும். அனாகதத்திற்குப் பத்து விரற்கடை மேலுள்ள பகுதி விசுத்தியாகும். இச்சக்கரம் பஞ்ச பூதங்களில் வாயுவைச் சார்ந்தது. இது அறுங்கோண வடிவத்தில் இருக்கும். இதன் நடுவே பதினாறு இதழை உடைய ஒரு பூ வடிவத்தில் நடுவே மகேசுவரனும் மகேசுவரியும் எழுந்தருளியிருப்பார்கள் என்பதை
                                “வாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத்
                        தோயும் வகை கேட்கத் தொடங்குவது எக்காலம்” (பத்திர.புலம்பல்.71)
என்ற பாடலடிகள் விளக்கும். இச்சக்கரமானது கருமை நிறத்தையும் ‘வகார’ எழுத்தையும் உடையது.
ஆக்கினை
                புருவ மத்தியே ஆக்கினை எனப்படும். இது விசுக்தியிலிருந்து பன்னிரெண்டு விரற்கடை மேலுள்ளது. இதனை ‘சிற்சபை என்கிறார்கள் சித்தர்கள். இச்சக்கரமானது பஞ்ச பூதங்களில் ஆகாயத்துடன் தொடர்புடையது. புருவத்தின் நடுவே மூன்று இதழை உடைய பூவின் நடுவே யகார அமைப்பில் இருக்கும். இதனுள்ளே சதாசிவமும் மனோன்மணியமும் வீற்றிருப்பார்கள் என்பதை
                                “வட்டவழிக் குள்ளே மருவும் சதாசிவத்தைக்
                        கிட்டவழி தேடக் கிருபை செய்வது எக்காலம்” (பத்திர.புலம்பல்.71)
என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன. இதனைக் கொண்டு தான் ஆகாயத்திற்குரிய கோயிலான சிதம்பரத்தில் பொன்னாலான கூரையைக் கட்டியுள்ளனர்;.
வாசியோகம்
                வாசியோகம் என்பது ஆறு ஆதாரங்களிலும் மூச்சுக்காற்றை ஏற்றி தலை உச்சிக்கு கொண்டு வரும் மூச்சு பயிற்சியாகும். இதனை
                                 “காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
                        வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்” (பத்திர.புலம்பல்.71)
என்ற பாடலடிகளில் காசியாத்திரை சென்று மோட்சம் பெறுவதை விட வாசியோகம் செய்து வீடுபேற்றை அடைய வேண்டும் என்கிறார்.
அட்டாங்க யோகம்
                அட்டாங்கம் என்றால் எட்டு. எட்டு வகையான யோக முறைகளாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிராத்தி, யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு யோகங்கள் ஆகும். இவற்றை கடந்து அதீதமாகிய அறிவிற்குக் கிட்டாமல் விளங்கும் சிவத்தை அடைவது எப்போது (பத்திர.புலம்பல்.148) எனக் கேள்வி எழுப்புகின்றார்.
முடிவுரை
                சித்தர்களின் ஒருவராகிய பத்திரகிரியார் முதலில் அரசராக இருந்து பட்டினத்தாரின் மூலம் சுகவாழ்வைத் துறந்து சித்தராக மாறியவர். இவர் தனது மெய்ஞானப் புலம்பலில் பல வகையான யோக முறைகளைப் பற்றி கூறுகின்றார். ஏழு வகையான சக்கரங்களைப் பற்றியும் அதன் அமைப்பு மற்றும் அதற்குரிய தெய்வங்கள் ஆகிய பல செய்திகளை கூறுகின்றார். இதனைக் கற்று அதன் மூலமே இறைவனை அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைக்கின்றார்.

-வ.மீனாட்சி

1 கருத்து:

  1. சுருக்கமான கட்டுரை. இன்னும் சற்று விரிவாகவே எழுதியிருக்கலாமே! நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

    - இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சியில் இருந்து.

    முடிந்தால் எனது வலைத்தளத்தைப் பாருங்கள்:
    http://ChellappaTamilDiary.blogspot.com

    பதிலளிநீக்கு