வியாழன், 16 பிப்ரவரி, 2017

யானை ஓா் அதிசய விலங்கு


யானை-கரியது
          யா-பெரிய, ஐ-வியப்புப்பொருள்,  யானையின் உருவத்தைக் கண்டு வியப்பும், அச்சமும் கொண்டதால் யானை என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  யானையின் சத்தத்தை பிளிரல் என்பதற்கேற்ப பிளிறு-பீள்-பீளி,  வீள் +  று என அதன் ஒலியின் அடிப்படையில் தோன்றியதாகக் குறிப்பிடுவர்.
            யானை பாலூட்டி வகையைச் சோ்ந்த தாவர உண்ணி விலங்காகும்.  இது நிலத்தில் வாழும் விலங்குகளுள் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் (70 ஆண்டுகள்) வாழக்கூடியது. சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட நெருங்க முடியாத வலிமை கொண்டது யானைகளில் மூன்று இனங்கள் மட்டும் இன்று எஞ்சியுள்ளன்; அவை,
            1.ஆப்பிரிக்கப் புதா்வெளி யானைகள்
          2. ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
          3. ஆசிய யானைகள்
ஆண் யானை “களிறு” என்றும், பெண் யானை “பிடி” என்றும், குட்டி “கன்று” மற்றும் “குட்டியானை” என்றும் அழைக்கப்படுகிறது.  ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டுக்கும் தந்தம் உண்டு. ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது.  யானைகள் 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன.  நன்கு வளா்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.  ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டா் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீது செங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது.
            யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை.  இது யானைகளில் மட்டும் சிறப்பாகக் காணப்படுகிறது.  தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. தும்பிக்கையால் சிறுகுச்சி முதல் பெரிய மரம் வரை தூக்கமுடியும் யானையின் பல்தான் தந்தம் ஆகும்.  இதைக் “கோடு” என்றும் “எயிறு” என்றும் கூறுவா்.  இது வளைந்து காணப்படுவதால் கோடு எனப்பட்டது. யானையின் சினைக் காலம் 22 மாதங்கள் ஆகும்.  இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலத்தைக் கொண்டது.  இவை ஒரே ஒரு கன்றையே ஈனுகின்றன.  இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது.  பிறந்த யானைக் கன்றானது  90-115 கிலோ கிராம் எடை கொண்டது.
            சங்க இலக்கியங்களில் யானைகள் சிறப்பிடம் பெற்றுள்ளதை சங்க இலக்கிய அடிகளின் வழி அறிய முடிகின்றது.  யானை, வேழம், களிறு, பிளிறு, கலபம், மாதங்கம், கைமா, உம்பல், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அததினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, கிரி, அஞ்சனம் போன்ற  சிறப்புப் பெயர்களால் யானை சுட்டப்பட்டுளது.

-ந.முத்துமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக