வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

நிலைக்கட்டும் நிலத்தடிநீர்



நிலைக்கட்டும் நிலத்தடிநீர்


முகவுரை:
          “நீரின்றி அமையாது உலகம்” என்கிறது வள்ளுவம். உலக உயிர்களின் அடிப்படை ஆதாரம் நீர் ஆகும். உலகு உய்வதற்கான நீரை நிறைவாகப் பெறுவதன் வாயிலாக நாடு நலம் பெற முடியும். இன்றியமையாமையின் இருத்தலின் விளைவான நீர் பெறும் வழிமுறைகள் இரண்டு. ஒன்று வான்வழி வரும் மழை. மற்றொன்று நிலமகள் தரும் ஊற்று. வான்மங்கை பொய்த்தாலும் நிலமகள் வளத்தைத் தந்தருள்வாள் என்ற எண்ணம் மக்களிடம் என்றும் உண்டு. இத்தகைய நிலத்தடி நீரின் மாண்பு, காப்பதன் நோக்கம் மற்றும் வழிமுறை ஆகியவற்றைத் தெளிவுறக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
பண்டைத்தமிழகத்தில் நீர் மேலாண்மை:
         பண்டைத் தமிழர்கள் பல துறையில் சிறந்து விளங்கியது போலவே நீர் வளத்துறையிலும் சிறந்து விளங்கி வந்துள்ளமைக்கு எண்ணற்ற சான்றுகள் காணக் கிடைக்கின்றன. சங்க இலக்கிய காலம் நீர் வளத்தை மதித்த  வளமிக்க காலம். வான் மழையைப் பெற்று நிலத்தில் சேகரித்து வேளாண்மையைப் பெருக்கி வளம் சேர்த்த  காலம். பண்டை மக்கள் மழையைச் சேமிக்க ஏரி குளங்களை அமைத்த செய்தியை புறநானூறு,
           “நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
            தட்டோரம்ம இவன் தட்டோரே
            தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”
என்கிறது. இந்த சங்கச்  சான்று பழந்தமிழக நீர் மேலாண்மையைப் பறை சாற்றும் ஆதாரமாய் நிற்கிறது.


மெல்ல மரணிக்கும் நிலத்தடி நீர்:
             சங்க காலத்தில் பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர் வளர்ந்து வரும் சமுதாயச் சூழலில் சீர் கேடடைந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள், செயற்கை வேளாண் இரசாயனங்கள், கடின உலோகங்கள்,தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள் , அளவிற்கு அதிகமான அங்கக பொருட்கள், படிமானங்கள், தொற்று ஏற்படுத்தும் கிருமிகள், காற்று வெப்ப மண் மாசுபாடுகள் ஆகியவை நிலத்தடி நீரை மரணிக்கச் செய்கின்றன.இதன் காரணமாய் மண்ணும், மரமும், மனித சமுதாயமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
நிலத்தடி நீரைக் காப்பதற்கான வழிமுறைகள்:
             ஊட்டப் பொருள் மற்றும் உயிர்கொல்லி மருந்துகளைக் குறைத்தல், கழிவு நீரின் அளவைக் குறைத்தல், எண்ணைத் திரவியங்கள் நீரில் கலப்பதனைத் தடுத்தல், வேதிப் பொருள்களை நீரில் கலவாமல் காத்தல், புவி வெப்பமாயதலுக்கு எதிராகப் போராடுதல் போன்றவற்றின் வாயிலாக நிலத்தடி நீரைக் காக்க இயலும். கிணற்றால் அன்று ஊற்றெடுத்த வளம் இன்று பாதுகாப்பில்லாமல் பாழுங்கிணறாய்  மாறிவிட்டது. பெருகிவிட்ட சீமைக்கருவேலங்களால் அருகிவிட்ட நிலத்தடி நீரை அம்மரங்களை வேரறுப்பதன் வாயிலாகக் காக்க முடியும்.
அமுதமாகிய நீர்:
             இயற்கை கொடையாம் நீரை காசுக்கு விற்பனையாக்கும் நிலை இன்று வந்துவிட்டது. இந்நிலை தொடர்ந்தால்,
                   “ஆலை பூதகிகள்
                    பாலை பீச்சுவதால்
                    நாறும் ஆறுகளில்
                  ஜீவன் ஏதுமில்லை
                  தேசம் தாண்டுகின்ற
                  சாயத்துணிக் கழிவால்
                  நதியில் மீன்களில்லை
                  நாளை…..,…..
                  நதிகளுமில்லை..”
என்னும் கவிதை நனவாகக் கூடும். எனவே நிலத்தடி நீரை அமுதமாக எண்ணிக் காக்க வேண்டும்.
நிறைவுரை:
           ”திரவத் தங்கம்” என்றழைக்கப்படும் தண்ணீரால் தான் உலகம் திடமடையும். நிலத்தடி நீரை காக்காவிட்டால் உலகத்தின் மூன்றாம் போர் நீரால் அடைவது திண்ணம்.எனவே இனி வரும் காலங்களில் நீரை முனைந்து காப்போம்.வழிந்தோடும் ஒவ்வொரு துளி நீரும் நமது அடுத்த தலைமுறைக்கான சொத்து என்பதை மறவாமல் மனதில் பதிவோம்.

              “ நீரைப் போற்றுவோம்
                நீடூழி வாழ்வோம்”
                                              -நெ.கிருஷ்ணவேணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக