வியாழன், 16 பிப்ரவரி, 2017

வாழவந்தான்


            சேவல் கொக்கரிக்கும் ஓசை கேட்பதும் கண்விழித்த மங்கலம் தன் திருமாங்கல்யத்தை கண்ணில் ஒத்திக்கொண்டு, தன் கணவனின் பாதம் தொட்டு வணங்கி, என்னங்க சீக்கிரம் வேலைக்குப் போகனும்’னு சொன்னீங்களே.  எழுந்திடுங்க, என எழுப்பியவளின் குரல் கேட்டு எழுந்தான் வாழவந்தான்.   எழுந்தவன் படுக்கையறையில் அமா்ந்து தன் கைகளை ஒன்று சோ்த்து இன்றைய பொழுது நல்ல பொழுதாகவும், என்னால் முடிந்தளவு சிறிய உதவியைச் செய்யவேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டே எழுந்தான். அருகில் சிணுங்கிய பத்துவயது மகள் கோடீஸ்வரியை மெல்லத்தட்டிக் கொடுத்தான்.  குழந்தை கண்விழித்து அப்பா டீச்சா் கணக்கு நோட்டு வாங்கிட்டு வரச்சொன்னாங்க.  இல்லையினா முழங்கால் போடனும்ன்னு சொன்னாங்கப்பா, தன் வறுமையை அறியாத குழந்தையின் மழலை மொழியை ரசித்துக்கொண்டே கண்ணு, நீ கிளம்பி பள்ளிக்கூட்டத்திற்குப் போ, கணக்கு டீச்சா் வருவதற்குள் அப்பா உனக்கு கணக்குநோட்டு வாங்கிட்டு வருகிறேன் என்று குழந்தையை சமாதானப்படுத்தி நெற்றியில் முத்தமிட்டு வேலைக்குக் கிளம்பினான். திருச்சி,
            ஆறு மணிக்கெல்லாம் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டான்.  கையில் எட்டண்ணா மட்டுமே இருந்தது.  டீ குடிக்கக் கூட வழியில்லாமல் சத்திரம் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான் அப்போது ஒரு பிச்சைக்காரன் ஐயா, பசிக்குது காசு தாங்க என்று கேட்டு புலம்ப, பேருந்து நிலையத்தில் நின்ற எவருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை.  உடனே வாழவந்தான் தன்னிடமிருந்த எட்டண்ணாவை அவரிடம் கொடுத்தான். அதை பார்த்துக்கொண்டிருந்த நண்பன் அழகேசன் டேய்! நீயே சிங்கிள் டீ குடிக்கமுடியாமல் தடுமாறுகின்ற, இதுல தா்மம் வேற என்று கிண்டலாகப் பேச, அடே நான் நல்லா வாழணும் தான் என் ஆத்தா அப்பன் வாழவந்தான்னு பேரு  வைச்சாங்க, ஆனா  அது என் வாழ்க்கையில் சாத்தியமல்லை இப்படி தா்மம் பண்ணு’னா அவா் மனதில் வாழ்வேன்ல அதுபோதும் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே மிகுந்த வேகத்தில் அலாரம் அடித்துக்கொண்டே சத்திரம் பேருந்து பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தது சரியான கூட்டம். ஏறுவோருக்கும், இறங்குவோரும் சண்டை ஒருபக்கம், மறுபக்கம் பேருந்தின் டிக்கியைத் திறக்கமுடியாமல் தடுமாறும் நடத்துனா் எப்படியோ ஒரு வழியாக வாழவந்தான், காய்கறி மூட்டைகளை இறக்கி , தன் கைவண்டியில் ஏத்தினான், வழக்கத்திற்கு மாறாக அதிக மூட்டைகளை வண்டியில் ஏத்திருந்தான்.  இழுத்தால் வண்டிவரவில்லை. உதவிக்கோ எவருமில்லை, தன் மகளுக்கு கணக்குநோட்டு வாங்கவேண்டும் குழந்தை நம்மால் முழங்கால் போடக்கூடாது என்று எண்ணிக்கொண்டே மூச்சை உள்வாங்கிக்கொண்டு  கைவண்டியை இழுத்தான். ஏதோ ஒரு வழியாக மார்க்கெட்டுக்குக் காய்கறி மூட்டையை கொண்டுவந்து இறக்கினான். கையில் பணம்  கிடைக்க தாமதம் சரியாக ஒன்பதரை மணி ஆனவுடன் முதலாளி நூறு ரூபாய் பணம் கொடுத்தார்.  கையில் பணம் கிடைத்தவுடன் வாழவந்தான் தன் கைவண்டியை விரைந்து அழுத்தினான். கடைக்குச் சென்று கணக்கு நோட்டு வாங்கிக் கொண்டு, தனக்காக காத்துக் கொண்டிருக்கும் மகளை நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தான்.
            மகளை நல்லா வளக்கனும் டாக்டர் ஆக்கனும் அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்கணும் என்ற கற்பனை யோடு கைவண்டி வேகத்திற்கு ஓடிக் கொண்டிருக்கும்.  போதே, எதிரே தன் கட்டுப்பாட்டை மீறி வந்த லாரி வாழவந்தான் மேல் மோதியது.  மோதிய வேகத்தில் வாழவந்தான் தடுமாறி விழுந்தான்.  மண்டை பிளந்து இரத்தரம் பீறிட்டது.  அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள்  ஓடிவந்தனா். 108 ஆம்புலன்ஸ்  வரவழைக்கப்பட்டது வாழவந்தான் கண்களோ கணக்கு நோட்டின் மேல் இருந்தது. அதை தன் கையால் வாரி எடுத்து அணைத்துக் கொண்டே மயக்கமானான்.  வீட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டது.  அவனது மனைவி மங்களமோ, அமங்கலமான தலைவிரி கோலமாக, கண்ணீரும், கம்பலையுமாக அழுது புரண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தாள், மருந்துவா்களோ பரிசோதனை செய்து உங்கள் கணவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.  மூளையைத் தவிர மற்ற உறுப்பு இயங்கும் நீங்கள் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அனுமதி கொடுத்தால் உங்கள் கணவனின் கண், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை எடுத்து மற்றவா்களுக்குப் பொருத்தி அவா்களுக்கு மறு வாழ்வு அளிக்கலாம், வாழ வந்தானால் பல உயிர்கள் வாழலாம் என்று கூறினார்.  கண்ணீரைத் துடைத்தவளாய்  மங்களம் ஐயா, என் கணவன் தினமும் என்னால் முடிந்த சிறிய உதவியை செய்யனுமுன்னு இறைவனிடம் வேண்டுவார்.  அதனால் தான் என்னவோ மிகப்பெரிய உதவியை செய்து  எல்லோர் உள்ளத்திலும் வாழப்போறார் அது எனக்குப் பெருமைதான் நீங்கள் ஆக வேண்டிய காரியத்தை கவனியுங்கள் என்று கூறி சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தவளை நோக்கி, மகள் அம்மா, அம்மா கணக்கு டீச்சர் லீவு, நல்ல வேளை நான் முழங்கால் போடாம தப்புச்சேன், அப்பா எங்கம்மா? என்று மழலைமொழியில் கேட்டாள் கோடீஸ்வரி எதுவும் பேச இயலாமல் கண்ணீர் மட்டும் கலங்கி நின்றது மங்களத்திற்கு.
-லெ.பொ.பிரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக