வியாழன், 17 ஆகஸ்ட், 2017

நிமித்தம்

நிமித்தம்
          நிமித்தம் என்பது பின்னா் நிகழும்   நன்மை தீமைகளை  முன்னரே அறிவிக்கும் குறி என்பா் இந்நிமித்தம் பல்வேறு வகையாகப் பாகுபகுத்திப் பார்ப்போமானால் பல அரிய  செய்திகளை அறிதல் கூடும் பொதுவாக நற்செயலையும், நற்பயனையும் காட்டும் குறியினை ‘நன்னிமித்தம்’ எனவும், தீச்செயலையும் தீமையையும் காட்டும் குறியினைத் ‘தீ நிமித்தம்’ எனவும், தீச்செயலையும் தீமையையும் காட்டும் குயினைத் ‘தீ நிமித்தம்’ எனவும் வழங்குவா்.  இந்நிமித்தங்கள் பல்வேறு பொருள்கள் பற்றியும் செயல்கள் பற்றியும் எழுந்தன.  மரம், பறவை, விலங்குகளையும் மாந்தரையும் அடியொற்றி அவை எழுந்தன.  மாந்தா் கண்ட கணவுகளும் நிமித்தங்களாய் அடைந்தன.
மரம்
          உன்னம் என்பது வருவகை மரம் இம்மரம் தளிர்த்துத் தழைத்திருப்பின், அரசனுக்கு நன்மையாகும்.  கரித்து காட்டின் தீமையாம்.  படையெடுத்துச் செல்லும் வேந்தனும் படை மறவா்களும் இந்நிமித்தம் பார்த்துப் புறப்படுவா்.  தொல்காப்பியா் புறத்திணையியலில், “உடல் வேந்தடுக்கிய உன்ன நிலை” (தொல்.புறத்.63) என்று கூறுவா்.
          சேரமன்னன் நார்முடிச் சேரலை வெற்றி கொள்ள விரும்பிய பகைவா்கள் உன்ன மரத்தினை நிமித்தம் வேண்டினராம்.  விரிந்து தழைக்க வேண்டிய உன்னம் கரிந்து உதிர்ந்து காட்டி அவா்கள் பெறும் தோல்வியினை முன்னரே காட்டியதாம்.
          “பொன்னி னன்ன பூவிற் சிறியிலை
          புன்கா லுன்னத்துப் பகைவன்” (பதிற்.61)
என்று செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பொய்யாநாவிற் கபிலா் ‘உன்னத்துப் பகைவன்’ என்றே பாராட்டுகின்றார்.
பறவை
          பறவைகள் ஒலிப்பதையும் பறப்பதையும் கொண்டு நிமித்தங்கள் எழுந்துள்ன.  ஒரு நாட்டில் “புதுப்புள்வரினும் பழம்புள் போகினும் தீயநிமித்தம்” (புறம்.130) என்று புறநானூறு கூறும்.  ஆனிரையிருக்கும் காட்டில் காரியென்னும் பறவை கத்தினாலும் அது தீய நிமித்தமாகக் கருதப்பட்டது.  ஒருவா் வெளியிற் புறப்படும்போது பறவைகளில் இவை இவை எதரில் வந்தால் இன்ன இன்ன நிமித்தம் என்று கூறியுள்ளனா்.
          காக்கை கரைந்தால் விருந்து வரும் என்று எண்ணுகின்ற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. குறுந்தொகையில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய பாட்டு இதனை அறிவிக்கும். “விருந்து வரக் கரைந்த காக்கையது  பலியே” (குறுந்.20) என்பது அப்பால் தொடராகும்.
          பொருள்வயிற் பிரிவினால் தலைவனைப் பிரிந்த தலைவி தன் காதலன் பாலைநிலத்துச் சென்ற காட்சியினைக் கூறும் போது, ‘தலைவன் கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது வழிச்செல்லும் மனிதா்கள் நிமித்தமாகச் கொள்ளும்படி  தங்குகின்ற பாலை  நிலத்திற் சென்றனா்’ எனக் கூறினார். 
          கழைதின் யானையார் என்னும் சங்கப் புலவா் வரையாது சுரக்கும் கொல்லிமலைத் தலைவனாகிய வல்லில் ஓரியைப் பாராட்டிப் பாடிய புறநானூற்றுப் பாடலில், இரவலா் புரவலரிடம் புள்ளும் பொழுதும் பார்த்துப் புறப்பட்ட செய்தியினைக் கூறுவா் இரவலா் பரிசில் பெறாதபோது தாம் நாடி வந்தவரைப் பழித்துப் பேசார் தாம் புறப்பட்ட நேரத்தையும் புள் நிமித்தத்தையுமே பழிப்பார் ‘எனக்கு இல்லை யெனினும் உன்னைப் புலவேன் வானம்போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நீ வாழி’ என்று புறநானூற்றுப் புலவா் வாழ்த்துகின்ற காலத்திலும் நன்னிமித்தமும் தீ நிமித்தமுமே வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் எனக் கருதும் உள்ள நிலையையும் உணரமுடிகிறது.
          “புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
          உள்ளிச் சென்றோர்ப் பழியலர்” (புறம்.204)
என்னும் பகுதி இதனை நன்கு தெளிவுறுத்தும்.
விலங்குகள்
          விலங்குளில் சில வழிமறித்து ஓடுமாயின் அவை தீ நிமித்தம் காட்டும் குறிகள் என நம்பினா் இன்றும் கூட கழுதை கத்துவது நல்ல நிமித்தமாகவும், நாய் அழுகுரலெழுப்புவது தீ நிமித்தமாகவும் கருதப்படுகிறது.  பல்லி ஒலிக்கும் இடத்தையும் அதன் ஒலியையும் கொண்டு நன்மை தீமைகளைக் கருதுவா்.
          வினை முற்றி மீண்ட தலைமகன் பேரார்வத்தோடு தலைவியிடம் செல்லுகின்றான்.  அப்போது தேர்ப்பாகனிடம் பின்வருமாறு உரையாடுகின்றான்.  ‘என் அன்பு வருகையினை எதிர்நோக்கி என் இல்லத் தலைவி இல்லத்தின் கன் நிமித்தம் கேட்டற்குரிய இடத்திலே நிற்கின்றாள்.  நினைந்து நினைந்து,  நெகிழ்ந்து நெகிழ்ந்து நன்னிமித்தத்தைக் குறிக்கும் பக்கத்திலே பல்லி சொல்லுந்தோறும் நின்று மகிழ்கின்றாள்.
          “---------------------------------பல் மாண்
          ஓங்கிய நல்லி லொருசிறை நிலைஇப்
          பாங்கா்ப் பல்லி படுதொறும் பரவிக்
          கன்றுபுகு மாலை நின்றோள்”  (அகம்:9)
என்று அகநானூறு இதனை அழகுறக் கூறும்.
முடிவுரை
          நிமித்தங்கள் அனைத்தும் அச்சத்தின் காரணமாகவே தோன்றியுள்ளது எனலாம்.  வாழ்க்கைப் போராட்டத்தில் மக்கள் தங்களுடைய ஆற்றல்களை அதிகரித்துக் கொள்ள இவற்றை உருவாக்கினா்.  பல பண்பாட்டு நிலைகளிலுள்ள மக்கள் குறிப்பிட்ட சில நம்பிக்கைகளை உடையவா்களாயிருப்பதும் இங்கு எண்ணுதற்குரிய ஒன்றாகும்.

-அ.ரா.பானுப்பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக