வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தப்பிப் பிழைத்தவன்

தப்பிப் பிழைத்தவன்
          “வாங்க மைக்கேல்.. நல்லாயிருக்கீங்களா? வீட்டுல எல்லோரும் நலமா? ஆறு மாசமத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வர்றேன்னு சொன்னீங்க.. ரெண்டு கிலோ மீட்டா்  கடந்து வர ஆறுமாசம் ஆகும்னு நான் நினைக்கல..” கிண்டலாய்க் கேட்டார் பேராசிரியா் பழநீ இராகுலதாசன்.
          “அப்படிலாம் ஒன்னுமில்லங்கய்யா.. நேரமே கிடைக்கல, வாட்ஸ் அப், பேஸ்புக்னு நீங்க எதுலயாவது இருந்தாக்கூட அப்பப்போ பேசிக்கலாம். ஆனா நீங்க ஒரு செல்போன் இல்லாமக்கூட இருக்கீங்க.. ஏதாச்சிம் ஆத்திர அவசரத்துக்கு போன் வைச்சிக்க வேண்டாமா?”  செல்லமாய்க் கடிந்து கொண்டான் பேராசிரியரின் மாணவன் மைக்கேல்         “ஆத்திரமும் வேண்டாம்... அவசரமும் வேண்டாம்னு தான் நான் போன் வைச்சுக்கல..”  கண்சிமிட்டினார் பேராசிரியா்.
          “ஐயா.. உங்ககிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியுமா?”  சிரித்து சரண்டா் ஆனான் மைக்கேல்.
          ஒவ்வொருவரும் ஒரு செல் உயிரி, இரு செல் உயிரியாய் வலம் வரும்போது செல் வைத்துக் கொள்ளாமல் வாழ்வதே பெரிய அதிசயம் தான்.  அந்த அதிசயம் பேராசிரியருக்கு சாத்தியமாகியிருக்கிறது. வீட்டிலிருக்கும் தொலைபேசி இணைப்பில் அவசியம் இருந்தால் மட்டுமே பேசிக் கொள்வார்.  “புத்தகம் - தொட்டுப் பார்த்தால் காகிதம்.  படித்துப் பார்த்தால் ஆயுதம்” என்று அடிக்கடி அவா் மேடையில் சொல்வதைப் போல் புத்தகங்களோடு வாழும் புத்தா் அவா்.  நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம் என்பதால் காலையில் ஒரு செய்தித்தாளும், இரவில் அரைமணிநேரம் தொலைக்காட்சிக் செய்தியும் பார்ப்பார்
          ‘வாட்ஸ் அப், பேஸ்புக் இல்லாம எப்படித்தான் வாழ முடிகிறது?’ என்று கேட்டான்.  “சாப்பாடு இல்லாம, தண்ணி இல்லாம எப்படி வாழ  முடியுதுன்னு கேட்டாக்கா பரவாயில்லை.. இப்பலாம் பலபேருக்கு சாப்பாடு, தண்ணியில்லாம கூட வாழ்ந்துடுறாங்க.  ஒரு நிமிசம் கூட செல்லப் பிரிஞ்சு வாழ முடியுறதில்ல.. கூட்டத்துல ஒருத்தரோட அலைபேசி ஒலிச்சா இருக்குற எல்லாரும் தன்னோட அலைபேசியப் பாக்குறாங்க... பல்லு முளைக்குறதுக்கு முன்னாடியே பிள்ளைங்களுக்கு செல்லக் கொடுத்து வளக்குறாங்க.. எதிர்காலம் என்னவாகப் போகுதோன்று நினைச்சாலே பயமாயிருக்கு.  இப்பலாம் யார் வீட்டுக்கும்  போறதுக்கூட மனசு வரல,  வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட முகம் கொடுத்துப் போசாம ஒன்னு டி.வியப் பார்த்துப் பேசுறாங்க..   இல்லாட்டி போன நோண்டிக்கிட்டே பேசுறாங்க.. அவங்களுக்கெல்லாம் குடும்பம் எதுக்கு? உறவுகள் எதுக்கு? இன்னும் சில வீடுகள்ல  அம்ம ஒரு பக்கம்,  அப்பா ஒரு பக்கம், பிள்ளைங்கள்லாம் ஒவ்வொரு பக்கம்னு தனித்தனியா போனோட குடும்பம் நடத்துறாங்க.. வாட்ஸ் அப் வைச்சிருக்குறவங்களுக்கு வீட்டப் பெருக்கி சுத்தம் பண்றதவிட வாட்ஸ் அப்ல வர்ற குப்பைகள் வுட்டிப் பெருக்குறது தான் பெரிய வேலையாயிருக்கு தேவையில்லாத அழிக்குறதுக்கு போன்ல க்ளியா், டெலிட் , ரீஸ்டுார் வசதியிருக்கு, ஆனா மூளையில சோ்ந்து அடைச்சுக்கிட்டிருக்குற குப்பைகள் எப்படி சுத்தம் பண்ண முடியும்? பேஸ்புக்ல எக்கச்சக்கமா, கலர்கலரா கூழாங்கல்லுங்க தான் கிடைக்குது.  கூழாங்கற்களையே பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் எப்பயாவது வர்ற வைக்கல்லும் கூழாங்கல்லாத்தான் தெரியுது.  செல்போனால கிடைக்குறது கொஞ்சம்.  இழக்குறதுதான் நிறைய.. ஆதனால தான் இருக்குற கொஞ்சத்தையும் இழக்காமயிருக்க செல்போனுக்கு முழுக்கு போட்டுட்டேன்.  குப்பைத் தொட்டியா மனசு இல்லாம பூந்தொட்டியா இருக்குறது நாம் அமைச்சுக்குற வரம்.  ‘பேராசிரியா் விரிவுரையில் அப்படியே அசந்துபோய் நின்றான் மைக்கேல்.
          பேராசிரியா் சொன்னது அப்போது தான் புத்தியில் உறைத்தது.  ‘சமூக வலைத் தளங்கள்தான் உண்மையான பிக்பாஸ், நமக்கு என்ன பிடிக்கும்? நாம் எதைப் பார்ப்போம்? ஆன்லைனில் எதை ஆா்டா் செய்கிறோம்?  வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு வைத்திருக்கிறோம்?  நாம் யாருடன், என்ன, எப்படி பேசுகிறோம் என்பது வரைக்கும் 24 மணிநேரமும் நம்மைக் கண்காணிக்கும் பிக்பாஸிடம் நம் அந்தரங்கத்தையும் அடகு வைத்துவிட்டோம்’  என்று யாரே ஒருவா் சொன்னது மனிதில் எதிரொலித்தது.  தப்பாயப் பிழைத்த வாழ்க்கையிலிருந்து தப்பிப் பிழைக்க மனசு துடித்தது வலையை, வீசுபவனே வலையில் சிக்கிக்கொள்ளும் விநோதம் சமூக வலைத்தளங்களில் சாதாரணமாகிவிட்டது.   கூகுளில் தேடினாலும்  கிடைக்காத விபரங்களும் பேராசிரியரிடம் கேட்டால் உடனுக்குடன் கிடைக்கும். எந்த நூலில்  எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பது வரை துல்லியமாக சொல்லும் அவரது நினைவாற்றலையும் ஒரு சில நேரங்களில் தன் அம்மா, அப்பா, மனைவி அலைபேசி எண்களைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் செல்போனில் பார்த்துச் சொல்லும் தன்னுடைய மழுங்கிப் போன நினைவாற்றலையும் ஒப்பிட்டுப் பார்த்தேன், தன்னுடைய பெருமு்பான்மை நேரங்களை தின்று செறிந்து ஏப்பம்விடும் வலைத்தள அரக்கினின் உண்மை முகம் புரிந்தது.  மனைவி, மகளோடு கடைசியாய் சிரித்துப் பேசி மகிழ்ந்த நாள்கூட நினைவில் இல்லை.  பேராசிரியரிடம் பேசிய ஒரு மணி நேரத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவா் காட்டிய அக்கறையும், பேரணைக் கெஞ்சியதும் மைக்கேலின் சுய வாழ்ககையைத் தோலுரித்து விமா்சனம் செய்து பேராசிரியரிடம் தேடி வந்த பாடப்புத்தகம் என்னவோ வேறு ஆனால் கிடைத்தது மிகப்பெரிய வாழ்ககைப் பாடம்.  மனதார நன்றி சொல்லிப் புறப்பட்டான் மைக்கேல் அவன் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக சமூக வலைத்தளங்களிலிருந்து நிச்சயமாய் வெளியேறியிருப்பான்.

-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக