வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

‘ஆசிரியா் தினத்தைக் கொண்டாடுவதைக் காட்டிலும் ஆசிரியா்களைத் தினமும் கொண்டாடுவதே சிறந்தது’

தி.பி 2048 (கி.பி.2017)                                     ஆவணித்திங்கள்
தேன் - 1                                                         துளி - 8

“அறம், பொருள், இன்பம் அருகாது பெருகட்டும்..”
          புவியில் எத்தனை எத்தணையோ பணிகள் இருப்பினும் கல்விக்கண் திறக்கும் ஆசிரியரையும், பிணி தீர்த்து உயிர்காக்கும் மருத்துவரையும் அவா்களாற்றும் பணி என்னும் நிலையைக் கடந்து உயரிய தொண்டாகப் போற்றுவா் சான்றோர்.  அதிலும் ‘எங்கு  நடப்படுகிறாயோ, அங்கு மலராகு’ என்பது ஆசிரியா்க்கேயுரிய தனிச்சிறப்பு
          ‘யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியா், போதிப்பவா் எல்லாம் ஆசிரியா் ஆகா’ என்பார் அறிஞா் கதே.
          ‘குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை
         கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
         நிலமலை நிறைகோல் மலா்நிகா் மாட்சியும்
         உலகிய லறிவோ குயா்குண மினையவும்
         அமைபவன் நூலுரை யாசிரி யன்னே’
என்று ஆசிரியா்க்குரிய தகுதிகளை அழகுறச்சுட்டுகிறது நன்னூல். ஓா் ஆசிரியா் என்ன நடத்துகிறார் என்பதை விட, அவா் எப்படி நடந்து கொள்கிறார் என்பது முக்கியம்.  பாடம் நடத்தி முடிப்பவரை விட பாடமாய் நடந்துகாட்டும் ஆசிரியா்களையே மாணாக்கா் குமுகாயம் என்றும் நினைவில் நிலைநிறுத்திப் போற்றும்.
          வளமான குமுகாயம் தோன்றிவளர ஆசிரியா்களின் பங்கு அளப்பரியது.  ஒவ்வொரு ஆசிரியருக்கும் அறிவார்ந்த, மானுடநேயமிக்க, சிற்பியாக, அறியாமைப் பிணியகற்றும் மருத்துவராகத் திகழ வேண்டிய பொறுப்பு உள்ளது.  அப்பொறுப்பை ஆசிரியா்கள் யாவரும் தங்கள் வாழ்நாள் கடமையாக மிகச்சரியாக செய்து முடித்தால், எந்தநிலையிலும் தன்னிலை தாழாமல் மானுடம் வெல்லும், அறம் பொருள் இன்பம் அருகாது பெருகும்.  அல்லவை தொலைந்து நல்லவை தழைக்கும்.  இஃது ஆசிரியப் பெருமக்களால் மட்டுமே இயலும்,  அத்தகைய ஆசிரியப் பெரியோரை உலகம் கொண்டாடி மகிழவேண்டும்.
‘ஆசிரியா் தினத்தைக் கொண்டாடுவதைக் காட்டிலும்
ஆசிரியா்களைத் தினமும் கொண்டாடுவதே சிறந்தது’
ஆசிரியா் நாள்  நல்வாழ்த்துகள்..
அன்பின் வாழ்த்துகளுடன்,
                                                                                                   தேமதுரம்- ஆசிரியா்குழு


ஆசிரியர்
.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
 கா.சுபா 

ஆசிரியர் குழு 
இரா.கார்த்திக்
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
மீனாட்சி

கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
தொலைபேசி:04565-223255


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக