செவ்வாய், 14 மார்ச், 2017

புதியதோர் உலகு செய்வோம்


சாதி சமயச் சண்டைகள் மறந்து
சமத்துவம் பேனுகின்ற
புதியதோர் உலகம் செய்வோம்!


மதியினை மயங்கச் செய்யும்
மதுவினை ஒழித்தே நாளும்
புதியதோர் உலகம் செய்வோம்!


வரதட்சணைக் கொடுமை பெண்கள்
வாழ்வினில் இனி இல்லை என்னும்
புதியதோர் உலகம் செய்வோம்!


ஊருக்கே உணவளிக்கும்
உழவனின் நிலை உயா்ந்திடவே
புதியதோர் உலகம் செய்வோம்!


ஏழ்மையைப் போக்கி என்றும்
எல்லார்க்கும் எல்லாம் பொதுவாம் என்னும்
புதியதோர் உலகம் செய்வோம்!


ஊழலை வேரறுத்து
உலகில் நோ்மையின் ஆட்சி ஓங்க
புதியதோர் உலகம் செய்வோம்!



ஊடகத்தில் உலகை மறந்திடாமல்
உன்னதச் செயல்களாலே
புதியதோர் உலகு செய்வோம்!


இனவேறுபாடு நீங்கி என்றும்
மன ஒற்றுமையுடன் வாழும்
புதியதோர் உலகம் செய்வோம்!

எம்மதம்தான் சம்மதம் என்ற நிலைநீக்கி
எம்மதமும் சம்மதம் என வாழும்
புதியதோர் உலகம் செய்வோம்!


மனிதத்தைப் போற்றும் நல்ல
புனிதத்தை உடையவா்களாய்
புதியதோர் உலகம் செய்வோம்!


போரினை அறவே மறந்து
பாரினில் மகிழ்ச்சி பொங்கும்
புதியதோர் உலகம் செய்வோம்!


அறியாமை இருளகற்றி
அறிவென்னும் ஒளி விளக்கும்
புதியதோர் உலகம் செய்வோம்!


கல்லாமையை இல்லாமையாக்கி
கல்வியறிவால் கவின்பெற்றுத் திகழும்
புதியதோர் உலகம் செய்வோம்!

பண்பாட்டைக் காத்திட தோழா..
புதியதோர் உலகம் செய்ய
புறப்படு தோழா நீயும்!......
-கா.சுபா







விதியை மாற்ற முடியாது


            எமதர்மராஜன் ஒரு குருவியை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார். அடடா..  குருவிக்குக்  கேடு காலம் வந்துவிட்டதே என்று கருதிய  கருடன்  உடனே அந்தக் குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது. அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் குருவியை விழுங்கிவிட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று வருந்திய கருடன்.  குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதா்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது. கருடனே என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டாய், என்றார் எமதா்மராஜன் நான் அந்தக்குருவியை உற்று நோக்கக் காரணம், அந்தக்குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது அது எப்படி நிகழப்போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன் அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார். வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அதுதான் நடக்கும்.
-ஆ.சகுந்தலா


அமைதியின் பேரின்பம்


அமைதி
சராசரி மனிதனுக்கு
முன்னேற்றப் பாதை!
கொள்கை உடையவனுக்கு
இலட்சியப் பாதை!

அமைதி
சிறுசிறு குற்றங்கள்
பெரிதாய் வராமல் இருக்கும்
நீதியின் பாதை!

அமைதி
உறவுகளைப் பிரிக்காமல்
இருக்க உதவும் கருவி!

அமைதி
இளமைக்கும் முதுமைக்கும்
இனிமை தரும் மருந்து!

அமைதியே பேரின்பம்
அமைதியே அறிவின் இன்பம்

-பெ.குபேந்திரன்

இயற்கை மருத்துவம்


1. என்றும் இளமையாக இருக்க தினமும் ஓர் - நெல்லிக்கணி
2. இதயத்தை வலுப்படுத்த தினமும் ஒரு - செம்பருத்திப் பூ
3. மூட்டுவலியை போக்க - முடக்கத்தான் கீரை
4. இருமல் குணமாக  - ஓமவல்லி
5. நீரிழிவு குணமாக - அரைக்கீரை
6. வாய்ப்புண், குடல்புண் குணமாக -  மணத்தக்காளிக் கீரை
7. உடலைப் பொன்னிறமாக மாற்ற  - பொன்னாங்கன்னிக் கீரை
8. மாரடைப்பு நீங்க - மாதுளம் பழம்
9. ரத்தம் சுத்தமாக - அருகம்புல்சாறு
10. கேன்சா் நோயை குணமாக்க - சீதாப்பழம்
11. மூளை வலிமைக்கு - பப்பாளிப்பழம்
12. வாயுத் தொல்லையிலிருந்து விடுபட - வெந்தயக் கீரை
13. ரத்த அழுத்தத்தைக் குணமாக்க - துளசி
14. மார்பு சளி நீங்க- சுண்டைக்காய்
15. ஞாபசக்தியைக் கொடுக்கும் - வல்லாரைக்கீரை
16. இரத்த சோகையை நீக்கும் - பீட்ருட்
17. முடி நரைக்காமல் இருக்க - முள்முருங்கை
18. மார்புச்சளி இருமலைக் குணமாக்க- தூதுவளை
19. மஞ்சள்காமாலையைக்  குணமாக்க - கீழாநெல்லி
20. சீறுநீரகக்கல் பிரச்சனைக்கு - வாழைத்தண்டு
-இரா.கார்த்திக்


கவுனியரிசி




தேவையான பொருட்கள்:

1.         கவுனியரிசி - 2கப்
2.         தேங்காய்  - ஒருமூடி  (துருவிக்கொள்ளவும்)
3.         நெய்    - 3 டேபிள்  மேசைக் கரண்டி
4.         சா்க்கரை - அரை கப்

செய்முறை
            முதலில் கவுனியரிசியைச் சுத்தம் செய்து 5 டம்ளர்  நீரில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். காலையில் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி அடுப்பில் வைக்கவும். 2 விசில் வந்ததும் ‘சிம்’மில் 20 நிமிடம் வைத்து இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியவுடன் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய் கலந்து சூடாகப் பரிமாறவும்.

-வ.மீனாட்சி

சேக்கிழார் விழா


            அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்வியலைப் புராணமாக  இயற்றியவா்; சேக்கிழார். இச்சேக்கிழார் பெருமானுக்கு  தேவகோட்டையில் உள்ள நகரச்சிவன் கோவிலில், கருவறையுடன் கூடிய சன்னதி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  சிவன் கோவிலில் சேக்கிழாருக்கு எனத் தனிச் சன்னதி அமைந்திருப்பது தேவகோட்டையில் மட்டும்தான் இருக்கிறது. இக்கோவிலுக்கான மணி செய்கோனிலிருந்து வரவழைக்கப்பட்டது தேவகோட்டையச் சார்ந்த வன்றொண்டச் செட்டியாரின் வேண்டுகோளை ஏற்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தேவகோட்டைக்கு வந்து சேக்கிழார் சன்னிதியின் முன்பிருந்த பிள்ளைத்தமிழ் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சேக்கிழார் பெருமானின் சிலை அவரது அவதாரத் தலமாகிய குன்றத்தூர் மலையிலிருந்து கொண்டு வந்த கல்லினால் அமைக்கப்பெற்றது. இதைத் தமிழ்வள்ளல் சேவு.மெய்யப்பச்செட்டியார், பாலகவி இராமனாதன் செட்டியார், சோம.ராமனாதன் செட்டியார் போன்றோர் இணைந்து  இச்செயலைச் செய்தனா் சேக்கிழாருக்கு விழா எடுக்க அமைப்பு ஒன்றை ஏற்படுத்த விரும்பி சேக்கிழார் திருநாட்கழகம் 1947-ஆம் ஆண்டு தேவகோட்டையில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழுக்குச் தொண்டாற்றிச் சிறந்த சேக்கிழாரைத் தெய்வமாகப் போற்றிப் பரவி  சேக்கிழாருக்கென    விழா நடைபெறுவது  தேவகோட்டையில் நடைபெறுது குறிப்பிடத்தக்கது.
-சு.லாவண்யா



தமிழாயிரம் - அதிகாரம் -3


எழுத்து வரைவு
1. அறிந்தான் ஒலியால்: அதன் பெயா் சொன்னான்:
  அறியானும் கேட்டான் அதை.
2. அதையே பலரும் அறிந்து பலுக்க
  விதையாய் விளைந்த விரிந்து.
3. விரிந்து பரவி வினைபெயா் என்னத்
  தெரிந்து மொழிந்தான் தெரி.
4. தெரிந்தவன் சொன்னான்: தெரியானும் தோ்ந்தான்:
  வரிந்தான் வாரிகளாய் வாய்த்து!
5. வாய்த்த மலையே வனையோடே ஏடென்னக்
  காய்த்துக் கனிந்ததாம் காண்.
6. காணவும் காட்டவும் கற்கவும் காலமெலாம்
  பேணவும் செய்தான் பெரிது.
7. பெரிது சிறிதாய் வளைவொடு கீற்று
  வரைந்து படித்தான் வளா்ந்து.
8. வளா்ந்த நிலையில் வரைந்தவை கட்டக்
  கிளா்ந்த சுவடியாம் கீற்று.
9. கீற்றோலைக் கட்டால் கிடைத்த கொடையேதான்
  போற்றுதமிழ்ச் செம்மொழிப் பொற்பு.
10. பொற்புக் குறையாமல் போற்றி உரைகண்டார்
   அற்புத்தான் காவல் அரண்.