செவ்வாய், 14 மார்ச், 2017

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து


            பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என வழங்கப்பெறும் பழமொழிக்குத் திருமணம் போன்ற விசேடங்களில் கலந்து கொள்ளும் பொழுது முதல் இரண்டாவது பந்திகளில் உணவு உண்டு விட வேண்டும்.  இல்லையேல் தீர்ந்துவிடும்  கிடைக்காது, என்றும் படைக்குப் பிந்து என்பதற்குப் போர்க்களத்தில் முன்னிலையில்  செல்லக்கூடாது அப்படிச் சென்றால் உயிரிழக்க நேரிடும் எனவே பிந்தியே செல்லவேண்டும் எனவும் பொருள் கூறப்பெறுகிறது.  இப்பழமொழியில் “கை“ என்னும் சொல் ஈரிடங்களில் விடுபட்டுள
            பந்திக்கு முந்து கை படைக்குப்பிந்து கை உணவு உண்பதற்குப் பயன்படுவது வலக்கை நாம் எந்த ஒரு செயல் செய்தாலும் முந்திவரும் கை, வலக்கை அதனால் உணவு உண்ணும் பந்திக்கு முந்தி வரக்கூடிய கையைப் பயன் படுத்த வேண்டும் என்றும், பண்டைக் காலத்தில் வில், அம்பு வைத்துப் போரிடுவா் அப்படிப் போரிடும் போது பயன்படுத்தப்பெறும் அம்புகளை அம்பறாத்தூணி என்னும் ஒரு குடுவையில் இட்டு அதை முதுகுப்புறத்தின் இடப்பக்கத்தில் மாட்டியிருப்பா்.  போரிடும் போது அம்புகளை விரைந்து எடுத்துக் கொடுப்பதற்கு இடது கையான பிந்து கை பெரிதும் பயன்படும். எனவே இவ்விரு செயல்களை அடிப்படையாகக் கொண்டு மக்களின் அனுபவ அறிவின் அடிப்படையில் உருவானதே  பந்திக்கு முந்து கை படைக்குப் பிந்து கை என்னும் பழமொழியாகும்.

-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக