செவ்வாய், 14 மார்ச், 2017

மகளிரைக் கொண்டாடுவோம்..


           
தி.பி-2048 (கி.பி.2017)                   பங்குனித்திங்கள்(மாா்ச்சு)


தேன்:1  துளி:3                                                                                                            

 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். இந்நாளைக் கொண்டாடுவதில் எங்கள் “தேமதுரமும்” கைகோர்க்கின்றது.  இன்று ஒரு நாள் மட்டும் மகளிரைக் கொண்டாடுகிறோம். ஆனால் மற்றைய நாட்களில் மகளிரின் நிலை? கள்ளிப்பாலையும் தாண்டி, பிறப்பெடுத்து வந்தால் வளர்கையில் துன்பமே  மிஞ்சுகின்றது..
            இன்று மூன்று மாதக் குழந்தையையோ, மூன்று வயது மழலையோ,  மூவிருபது வயது மூதாட்டியையோ யாரையும் விட்டு வைப்பதில்லை வக்கிரம் பிடித்த சில ஆண்கள்.
            ”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற கவிமணியின் குரலை இன்று நாம் படித்து பெருமிதம் கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாட்டின் நிலை அப்படி இல்லை.  இன்று கவிமணி இருந்திருந்தால் கூட ”மங்கையராகப் பிறந்தாலே மாபயம் தான் வருகிறதம்மா” என்று பாடியிருப்பார்.
            நினைத்துப் பார்த்தால் வெட்கக்கேடாக இருக்கின்றது.  நமது நாடு எதனை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது? இந்த நிலைக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல.. பெண்களும் தான் . எளிதாக இருக்கின்றது என லெக்கீன்ஸ், டாப், ஜீன்ஸ், டீசா்ட் என மாராப்பு மேலாடை இல்லாமல் பெண்களுக்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு அணிந்து கொள்கின்றனா்.  பிரச்சனைகளையும் எளிதாகவே பெற்றுக் கொள்கின்றனா்.
            இலைமறை காயாக இருக்க வேண்டியதை இன்றைக்குச் சில கேடு கெட்ட இணையதளங்கள் வெட்ட வெளிச்சம் போட்டுக்  காட்டுவதால், எழுச்சி கொண்டு  வாழ்வில் எழ வேண்டிய இவா்கள் இச்சை கொண்டு இதனைக் காண்கின்றனா்.  எனவே இக்கேடு கெட்ட இணையதளங்களைக் காணாமல் இருக்க இளைஞா்கள் முயற்சிக்க வேண்டும்.
            பள்ளி மாணவ, மாணவியரை வைத்து இவா்கள் காதலெனப் படம் எடுப்பதால் நன்றாகப் பள்ளிக்கு சென்று படித்து நல்ல மதிப்பெண் பெறும் பிள்ளைகளும் கல்விப் பாடத்தைத் தவிர்த்து காதல் பாடத்தைக் கற்றுக் கொள்கின்றனா்.  பள்ளி இறுதி ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் எதிர்காலத்தில் நல்ல வேலைக்கான படிப்பில் சேரமுடியும்.  நல்ல வேலையையும் பெற முடியும்.  ஆனால் சில இயக்குநா்கள் தாறுமாறாகப் படம் எடுத்து தரங்கெட்ட மாணவா்களாகவே அவா்களை உருமாற்றி விடுகின்றனா்.
            பெண்கள் பற்றிய ஒரு புள்ளி விவரத்தை அறிந்து கொள்ள நேர்ந்தபோது அதிர்ந்தேன்.  ஏனெனில் ஆபாச தளங்களை இணையத்தில் காண்பதில் ஆண்களை விடப் பெண்களின் விகிதம் அதிகமாம்.  ஓ! பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவா்களோ? புதுமைத் தனமும் இதுவோ?
            பிள்ளைகளை வளா்க்கும் பெற்றோர், ஆரம்ப நிலையிலேயே அவா்களுக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுத்து வளா்க்க வேண்டும்.  ஏனெனில் அவா்கள் வாழ்வின் இறுதிவரை நல்ல மனிதனாகச் செயல்படுவதற்கு ஆரம்ப நிலையில் நாம் அவா்கள் மனதில் இடும் வித்துக்களே காரணமாகும்.  பள்ளிப்படிப்போடு இளம் பாலகா்களுக்கு கணினி, பிற மொழி திறன், நடனம், இசை எனப் பலப் பயிற்சிகளை அவா்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட ஒழுக்கம் சார்ந்த கல்வியை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
            அறிவியலின்  ஆதிக்கம் நம்மைச் சிலதுறைகளில் முன்னுக்குக் கொண்டு சென்றாலும், சில துறைகளில் எழவே முடியாத பாதாளத்தில் தள்ளி விடுகின்றது.  பெண்களே சிந்தியுங்கள்.. கருணைக்குப் பெயா்போன அன்னை தெரசாவும், விஞ்ஞானத்தில் சாதித்த கல்பனாசாவ்லாவும், ஆட்சியை ஆளுமையுடன் நடத்திய அன்னை இந்திராவும் விளையாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய சானியா, சாய்னா, சிந்து என சாதனை மகளிரின்  காலத்தில் வாழ்ந்து கொண்டு நாம் சாதாரண பிரச்சனைகளுக்குக் கூட வாழ எண்ணமின்றி சாகத் துடிக்கின்றோம்..  செத்தும் போகின்றோம். வரலாற்றில் நாமும் ஒரு கல்பனாசாவ்லாவாக, அன்னை தெரசாவாக உருவாக நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் போராடுவோம்! வெல்வோம்! எதிர்கால வெற்றியாளர்கள் பட்டியலில் நாமும் இடம்பெறுவோம்! பின் மகளிர் தினத்தை மகத்தான தினமாகக் கொண்டாடுவோம், வாருங்கள்!
-தோழமையுடன்,
ஆசிரியா் குழு



ஆசிரியா்
மு.செண்பகவள்ளி
இணையாசிரியா்

ஆ.அருள்சாமி 

துணையாசிரியா்

கா.சுபா 

ஆசிரியா்குழு

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

 நெ.கிருஷ்ணவேணி

பெ.குபேந்திரன் 

.சகுந்தலா 

மீனாட்சி



கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடா்புமுகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக