சனி, 16 டிசம்பர், 2017

வீட்டுக்கொரு தியாகி

வீட்டுக்கொரு தியாகி

          விமான நிலையத்திற்குள் நடந்து போய்க் கொண்டிருந்த சூசைக்கு கைகளில் பிடித்திருந்த பயணப்பையைவிட பல மடங்கு அதிகமாய் மனசு கனத்துப் போயிருந்தது.
          அம்மா, அப்பா, மனைவி-குழந்தையை, தம்பி- தங்கையை, உறவு-நட்புகளை விட்டுப்பிரிந்து நாடுவிட்டு நாடு கடந்து செல்லும் வழி பெரிதினும் பெரிது, கொடிதினும் கொடிது.
          சொந்தமாய் ஒரு வீடு, கடினில்லாத வாழ்வு, தம்பியின் படிப்பு, தங்கைக்குத் திருமணம், மனைவி, பிள்ளை கழுத்துக்கு நகை ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்துகொண்டி சுமக்கமுடியாமல்  சுமந்து சென்றது விமானம்.
          பொதுவாகவே மூத்த பிள்ளைகள் தியாகிகள்தான்.  தனக்ககடுத்து தம்பி, தங்கை பிறக்கும் வரை கிடைக்கும் அன்பு, அக்கறை, கவனிப்பைப் பறிகொடுத்து  ‘நீ பெரியவதானே.. தம்பி, தங்கச்சிதானே சின்னப் பிள்ளைங்க’  இந்த வசனத்தைக் காலம் முழுக்க கேட்டு வளா்ந்து சின்னச் சின்ன ஆசைகளையும் தன்னைவிடச் சிறியவா்களுக்காய் விட்டுக்கொடுத்து, விட்டுக்கொடுத்து வாழ்ந்து, தாய் தந்தை அருகில்லாதபோது தம்பி, தங்கைக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து கால் கழுவி, தலைசீவி, அடி வாங்கி சிரிக்க வைத்து, உணவூட்டி தாலாட்டி மூத்ததன் முன்பு  ஒரு சில பெற்றோரும் தோற்றுவிடுவா்.
          தான் விரும்பிய பிடிப்பைப் படிக்கமுடியாமல்  குடுமு்பச்சூழலுக்காய் எச்சிலை விழுங்குவதுபோல் கனவுகளையும், ஆசைகளையும் விழுங்கிக்கொண்டு, வாழ்நாள் தியாகியாய் மாறிப்போகும் மூத்தபிள்ளைகளில் ஒருவனாய் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறான் சூசை.
          மனைவி நகைகளை  அடகுவைத்து போதாமல் மூன்று ரூபாய் வட்டிக்கு, ஐந்துரூபாய் வட்டிக்கு வீட்டுப்பத்திரத்தையும் அடகு வைத்து ஐந்து இலட்சம் பணம் கட்டி குவைத் நாட்டிற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.
          குவைத் விமான நிலையம் வீட்டு வெளியில் வரும்போது வேற்றுகிரகத்தில் நுழைந்ததொரு உணா்வு.  மொழிபுரியாத, ஆள் தெரியாத நாட்டிற்கு குடும்பத்தை  விட்டுவரவைத்து பணம்தானே.  வந்து பத்து நாட்களாய் வேலையில்லாமல் கோழிக் கிடாப்பைப்போலிருந்த குடியிருப்பில் அடைந்து கிடந்தபோதுதான் முதன் முதலாய் பயம் தொற்றிக்கொண்டது.  தமிழ்நாட்டில் முகவா் சொன்ன வேலையும், சம்பளமும் இல்லாமல் ஏதேதோ  புரியாத காரணங்களைச் சொல்லி ‘இந்த வேலைதான்,  சம்பளம் குறைவுதான்’  கொஞ்ச நாளைக்குப் பிறகு ஒப்பந்தம் கிடைக்கும் போது வேறு வேலைக்கு இழுத்துக் கொள்வார்கள் என்று நீண்ட நேரம் பேசினார் அங்கிருந்த முகவா்.
          சுருக்கிச் சொல்வதைவிட இப்படி நீண்ட நேரம் விளக்குவதிலிருந்தே ஏதோ பிரச்சனை என்று தெரிந்துவிட்டது.  ‘எந்த வேலையாயிருந்தாலும் பரவாயில்லை, வட்டிக்குக் கடன் வாங்கி வந்திருக்கேன்,  ஊருக்கு என்னால் திரும்பிப் போக முடியாது எப்படியாவது உதவி பண்ணுங்க’  வெளிநாட்டுக்குப் போகும் பல தொழிலாளிகளின் இயலாமைக்குரலை சூசையும் எதிரொலித்தான்.
          இயந்திரங்களோடு ஒரு இயந்திராமாய் மாறிப்போனான்.  இரண்டு நாட்களிலேயே இரண்டு உள்ளங்கைகளிலும்  கொப்புளங்கள் வந்துவிட்டன.  அழகான முகம் அழுக்கும், புகையும் படிந்து எவ்வளவு கழுவினாலும் போகாத அளவிற்குப் படிந்துபோய்விட்டது.  சிரமப்பட்டு நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்துதான்.
          ஊரில் குடியிருக்கும் வீட்டில் அடுப்பங்கரை அளவுதான் தங்குமிடம்.  அதில் நான்குபோ் தங்கவேண்டியிருந்தது.  செலவுக்குக் கொண்டுவந்திருந்த கையிருப்புப் பணமெல்லாம்  கரைந்துபோனது.  வேலைசெய்யுமிடத்தில் வெப்ப மிகுதியாலும், தங்கியிருந்த இடத்தில் தண்ணீா் ஒத்துக்கொள்ளாமலும் முன்னந்தலையில் முடியும் கொட்டிப்போய் அடையாளமே மாறிவிட்டான்.
          வந்து ஒரு மாதத்தில் வீட்டிற்கு ஒரு முறை மட்டுமே பேசியிருந்கிறான் உணவகத்தில் வாங்கிச் சாப்பிடுவது கட்டுப்படியாகாமல் தானே சமைத்துச் சாப்பிடுவதென்று முடிவெடுத்து சமைக்கவும்  தொடங்கிவிட்டான்.  கொஞ்சம் கொஞ்சம் கிடைத்த ஓய்வு நேரமும் இல்லாமல் போனது.  மாதங்கள் ஏழு நாட்களாய் உருண்டோடின.
          வீட்டில் தன்னைப் போலவே எல்லோரும்  பார்க்கவேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தார்களென்பதால் உடன் தங்கியிருந்தவனிடம் கெஞ்சிக் கூத்தாடி திறன் பேசியில் பேசுவதற்குமுன் அரைமணி நேரமாய் முகப்பூச்சு பூசி, தலையில் தொப்பி மாட்டிக்கொண்டு வீட்டில் எல்லோரிடமும் பேசினான்.  ஒவ்வொருவரும் முகம் பார்த்த மகிழ்ச்சியல் நெடுநேரம் பேசினார்கள்  எல்லோரும் பேசிவிட்டு கடைசியாய் மனைவியிடம் பேசத் தொடங்கும் போது திறன் பேசியில் இருப்புதொகை முடிந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.  வழக்கம்போல எச்சிலையும், கனவையும் போல அழுகையையும் மென்று விழுங்க முயற்சித்தான் சூசை.
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக