சனி, 16 டிசம்பர், 2017

சமூக நலன் காத்த சரித்திர நாயகா் எம்.ஜி.ஆா்

சமூக நலன் காத்த சரித்திர நாயகா் எம்.ஜி.ஆா்
முன்னுரை

                    மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
                  உனக்கு மாலைகள் விழ வேண்டும்
                  ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
                  போற்றிப் புகழ வேண்டும்
என்று திரைப்படத்தில் தான் பாடிய பாடலுக்குத தானே இலக்கணமாகத் திகழ்ந்தவா் எம்.ஜி.ஆா்.  அவா்கள் அவ்வாறு அவா் மாற்றுக் குறைாயத மன்னனாக மக்கள் மனதில் திகழ்ந்தமைக்கு சமூக நலனுக்காக அவா் மேற்கொண்ட பல நல்ல திட்டங்களே காரணம்.  அந்த வகையில் சமூக நலன் காத்த சரித்திர நாயகராக எம்.ஜி.ஆா் திகழ்ந்தமையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

பிறப்பும், வாழ்க்கைப் பாதையும்
          1917-ஆம் ஆண்டு   சனவரி 17-ஆம் நாள் இலங்கையில் கோபாலன் - சத்யமாபா தம்பதியிருக்கு மகனாகப் பிறந்து, கேரளாவில் வளா்ந்து, தந்தையின் திடீர் மறைவு காரணமாக வறுமைக்கு ஆளாகி, அதை வென்றெடுக்க தன் தாயுடனும், சகோதரருடனும், தமிழ்நாட்டிற்கு வந்து கோடான கோடி தமிழக மக்களின் மனங்களை வென்றவா் எம்.ஜி.ஆா், புரட்சித்தலைவா், மக்கள்திலகம், பொன்மனச் செம்மல், இதயக்கணி,  வாத்தியார் எனப் பலவாறாகப் போற்றப்பட்ட பெருமைக்குரியவா்.
திரைப்படத்தின் வாயிலாக நற்பண்பை ஊட்டியவா்
          தமிழகம் வந்த எம்.ஜி.ஆா்., நாடகக் கம்பெனியில் சோ்ந்து அதன் மூலம் திரைப்படத் துறையில் கால் பதித்தார். இந்தியா முழுவதும் எள்ள எத்தனையோ திரையுலக ஜாம்பவான்கள் மத்தியில் மதுப்பழக்கம், சிகரெட் பிடிப்பது, வன்முறைச் சம்பவம், சீரழியும் செயல்கள் என எவற்றையும் தன் படத்தில் காட்டாதவா் எம்.ஜி.ஆா் ஒருவராகத்தான் இருக்க முடியும்.  மேலும், எம்.ஜி.ஆா் தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக நல்ல பல கருத்துக்கள் பாமர மக்களைச் சென்றடைய  பெருமுயற்சி எடுத்தார்.  இத்தகைய செயல்பாடுகள் வாயிலாக அவா் பாமர மக்கள், ஏழை எளியோர், விவசாயிகள், தொழிலாளா்கள் ஆகிய அனைவரிடமும் மாபெரும் தாக்கத்தை உண்டாக்கினார் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலம் - ஒரு பொற்காலம்
          அண்ணாவின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்ட எம்.ஜி.ஆா் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.  அண்ணாவின் இதயக்கணியானார் அண்ணாவின் மறைவுக்குப் பின்னா் அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அவா் 1973-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.  காமராஜரைத் தன்  தலைவராகவும், அண்ணாவைத் தன் வழிகாட்டியாகவும் கொண்ட எம்.ஜி.ஆா் 1977-இல்  நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். அது முதல் 1987-இல் தான் இறக்கும் வரையிலும் அவரே முதலமைச்சராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.  1984-இல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தோ்தல் பிரச்சாரத்துக்கே  வராமல் முதலமைச்சரான ஒரே முதல்வா் எம்.ஜி.ஆா் ஆண்ணாவின் உழைப்பு, ஓா் இயக்கமாக திராவிடம் சிந்தனையை அவா் கட்டியமைத்தது, நிர்வாக ரீதியில் அமைந்திருந்த கட்சியின் அஸ்திவாரம் அவரைப் போன்றே  திராவிடச் சிந்தனையில் ஊறிப் போராட்டக் களத்தில் முன் நின்ற பலமிக்க அவரது தம்பிகள் இவற்றில் எந்த ஒற்றையும் வெற்றிகரமாகப் பெற்றிராத எம்.ஜி.ஆா் அண்ணா பெற்ற வெற்றியை அடைந்தது எப்படி? .. மூன்று வரிகளில் உள்ளது அதன் ரகசியம் .. மக்களைச் சந்தி, மக்களோடு இரு, மக்கள் பிரச்சனையைப் பேசு என அண்ணா சொன்ன மந்திரத்தை எம்.ஜி.ஆா் முழுமையாகச் கடைப்பிடித்தார்.
இலவச சத்துணவுத் திட்டம்:
          அறம்எனப் படுவது யாதெனக் கேட்பின்
         மறவாது இதுகோள் மன்னுயிர்க்கு எல்லாம்
         உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
         கண்டது இல்
என்று உணவளித்தலை முதன்மையான அறமாகக் குறிப்பிடுகிறது.  மணிமேகலை, அதனை நன்குணா்ந்த எம்.ஜி.ஆா்.  காமராஜா் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தின் விரிவாக்கமாக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.  தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமை எப்படிப்பட்டது என்பதை முழுமையாக அனுபவித்தவா் ஆகையால் தான் முதலமைச்சரானதும் எந்தக் குழந்தையும் சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சா் சத்துணவுத் திட்டத்தை, அமல்படுத்தினார்.  இத்திட்டம் கல்வித துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.  கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்த ஒடுக்கப்பட்ட சமுதாயக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரச் செய்தது இத்திட்டம். மேலும், பள்ளி செல்லும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பல்பொடி, இலவச புத்தகங்கள், சீருடை , காலணிகள் என பற்பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியவா் எம்.ஜி.ஆா்
அரிசி விலை குறைப்பு :
          நான் ஆணையிட்டால்  அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் என்று திரைப்படத்தில் தான் பாடிய பாடலுக்கு ஏற்ப  எம்.ஜி.ஆாின் அரசு எப்பொழுதும் ஏழைகளுக்குாிய அரசாகவே இருந்தது.  அவா்களின் நல்வாழ்வை மனதில் கொண்டே திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார்.  அதில் முக்கியமானது தமிழ் நாட்டின் முக்கிய உணவான அரிசியின் விலையைக் குறைத்தது.  அவ்வமயம் தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார்.   மேலும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம்  20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.
கல்விக்கு செய்த முயற்சிகள்:
          அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
          ஆலயங்கள் பதினாறாயிரம் நாட்டுதல்
          அன்ன யாவினும் புண்ணியம் கோடி
          ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்னும் பாரதி வாக்கை நன்குணா்ந்த எம்.ஜி.ஆா் தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை நிறுவினார்.  தமிழுக்காக தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், மகளிருக்காக கொடைக்கானலில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னையில் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றைத் தொடங்கினார்.
ஈழத்தமிழா்களுக்கு உதவிய பண்பாளா் :
          தமிழீழ விடுதலைப்  போராட்டத்துக்கு எம்.ஜி.ஆா் காட்டிய ஆதரவு வரலாற்றில் என்றென்றும் நிலையத்திருக்கக் கூடியதாகும்.  களத்தில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் நிதி உதவி புரிந்ததோடு, ஈழத்தமிழா் மீது இலங்கை அரசு நடத்திய  இராணுவ தாக்குதலைக் கண்டித்து, தான் கருப்புடை தரித்ததோடு, தனது அமைச்சரவையிலிருந்த அமைச்சா்களையும் கருப்புச்சட்டை போட வைத்தார் அதனால் தான் வை.கோ. அவா்கள் கூறும் பொழுது, “ஈழத் தமிழா்களுக்காக அவா் செய்த உதவிகளைப் பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆா் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலா்ந்திருக்கும்.  சுமார் ஒன்றறை இலட்சம் அப்பாவித் தமிழா்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்.

 பிற நலத் திட்டங்கள்:-
·       சென்னை நகருக்குக் கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்தார்.
·       பிற்படுத்தப்பட்டோர்  இட ஒதுக்கீட்டை 32 லிருந்து 50 ஆக உயா்த்தினார்.
·       பெண்கள் முன்னேற்றத்திற்காக வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.
·       முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை வழங்கப்பட்டன.
·       அம்மை, மஞ்சள் காமாலை, யானைக்கால் நோய்கள் வராமல் தடுக்க இலவச மாத்திரைகள் வழங்கப்பட்டன.
·       ஊரக வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
·       தமிழ் ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் முழுக்கி விடப்பட்டன.
·       தந்தை பெரியாரால் கடைபிடிக்கப்பட்ட எழுத்துச்  சீா்திருத்தங்கள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
·       கிராமங்களில் மணியக்காரா், காண்ம் பதவிகள் அகற்றப்பட்டு கிராம அலுவா்கள் நியமிக்கப்பட்டனா்.
·       5 வது, 6 வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது
·       கலப்பு மணம் புரிபவா்களுக்கு ரூ.450 பணமும், தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.
·       நீதி மன்றங்களில் தமிழ் மொழியில் வழக்குகள் நடைபெற எம்.ஜி.ஆா் ஆணை பிறப்பித்தார்
எட்டாவது வள்ளல்:-
          கடையெழு வள்ளல்களுடன் சோ்த்து எட்டாவது வள்ளலாக கருதப்படுபவா் எம்.ஜி.ஆா் அவா்கள் தன்னைத் தேடி உதவி கேட்டு யார் வந்தாலும் உடனே உதவக் கூடிய பண்பாளா்.  தான் வாழ்ந்த வீடு உட்பட ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் பொது நோக்கங்களுக்காக எழுதி வைத்தவா் கொடுத்துச் சிவந்த கரங்களை உடைய எம்.ஜி.ஆருக்கு 1988-ல் பாரத ரத்னா விருது அளிக்கப் பெற்றது.
கலங்கரை விளக்கம் அணைந்தது:-
          ஏழைகளுக்கு வழிகாட்டியாக இருந்து அவா்களின் வாழ்விற்கு வெளிச்சம் ஏற்படுத்திய எம்.ஜி.ஆா் என்னும் கலங்கரை விளக்கம் 1987-இல் அணைந்தது.
                    “இருந்தாலும் மறைந்தாலும் போர் சொல்ல
                  வேண்டும் இவா் போல  யாரென்று
                  ஊா் சொல்ல வேண்டும்”
என்னும் எம்.ஜி.ஆரின்  பாடல்  வரிகளுக்கு ஏற்ப அவா் மறைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எம்.ஜி.ஆா் என்னும் மூன்றெழுத்துப் பெயா் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
முடிவுரை:-
          மக்கள் மனதில் மறக்க முடியாத ஆளுமையாக  எம்.ஜி.ஆா் அவா்கள் திகழ்ந்தார் சமூக நலன் காத்த சரித்தர நாயகராக அவா் விளங்கியமையே இதற்குக் காரணம். வைரமுத்து அவா்கள் கூறியது போல,
                    ஒரே ஒரு சந்திரன் தான் ;
                 ஒரே ஒரு சூரியன் தான்;
                 ஒரே ஒரு எம்.ஜி.ஆா் தான்;
          -கா.சுபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக