சனி, 14 அக்டோபர், 2017

கல்விக் கொடை வள்ளல் அழகப்பா்

                                                  கல்விக் கொடை வள்ளல் அழகப்பா்
முன்னுரை
          வள்ளல்கள் பலா் வாழ்ந்து பெருமை சேர்த்த நாடு நம் தமிழ்நாடு.  கடையெழு வள்ளல்கள் குறித்து தமிழக வரலாறு பேசும்.  ஆனால் அவா்கள் அனைவரும் பொருளைக் கொடையாகக் கொடுத்து வரலாறாய் வாழ்ந்தவா்கள்.  அனால் கல்விக்காகக் கொடை கொடுத்த வள்ளல் எனில் அது அழகப்பா் மட்டுமே.  அழகப்பாரின் கல்விக் கொடைகளை எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
காரைக்குடியைக் கல்விகுடியாக்கிய பெருந்தகை
          காரைப்புதா்கள் மண்டிக் கிடந்த காரைக்குடியை ‘கல்விக்குக் காரைக்குடி’ என  யாவரும் புகழ்ந்து பேசும் சிறப்புக்குரியதாய் மாற்றிய பெருமை வள்ளல் அழகப்பரையே சாரும்.  1947-இல் அழகப்பா் கலைக்கல்லூரியைத் தெடங்கியதிலிருந்து 1957-இல் தம் வாழ்நாளில் இறுதி வரை ஆண்டுதோறும் ஏதாவதொரு புதிய கல்விக்கூடமோ, கட்டடமோ திறப்பு விழாக் கண்ட வண்ணம் செயற்கரிய செய்தவா்.
அழகப்பா அரசு கலைக்கல்லூரி தோற்றம்
          1947-இல் அன்னிபெசண்ட அம்மையார் நூற்றாண்டு விழாவில் தலைமையேற்ற துணைவேந்தா் ஏ.எல் முதலியாரின் வேண்டுகோளை ஏற்று அழகப்பா் 15.08.1947 இல் காரைக்குடியில் அழகப்பா் அரசு கலைக்கல்லூரியைத் துவக்கினார்.  அழகப்பரின் இந்த முதல் முயற்சிதான் இன்று பல்துறைகளாகப் பரந்து விரிந்திருக்கும் அழகப்பா பல்கலைக்கழகம் தோன்ற அடிப்படையாகும்.

மத்திய மின் வேதியியல் மையம் தோற்றம்
          அழகப்பா் காரைக்குடியில் ஆய்வுக்கூடம் ஒன்றை நிறுவ ஆவல் கொண்டார்.  இவ்வாய்வுக் கூடத்தை நிறுவுவதற்காக வள்ளல் அழகப்பா் 15 இலட்சம் ரூபாயும், 300 ஏக்கா் நிலமும் கொடுத்து 1948-ஆம் ஆண்டு பாரதப் பிரதமா் ஜவஹர்லால் நேரு அவா்களைக் கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அழகப்பரின் கல்விப்பணிகள்
v 1948 இல் சென்னையில் இராமானுஜம் கணித நிலையத்தைத் துவக்கி, பின்னா் இந்நிலையம் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
v 1949-இல் விளையாட்டிற்கென பவநகா் அரங்கினை உருவாக்கினார்.
v 1950-இல் அழகப்பா ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்டது.
v 1951-இல் மாதிரி உயா்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது.
v 1952-இல் அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது.
v 1954-இல் அழகப்பா கல்லூரியில் தனிக் கட்டடத்தில் நூலகம் அமைக்கப்பட்டது.
v 1954-இல் அழகப்பா மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது.
v 1955-இல் அழகப்பா அடிப்படைப் பள்ளி, ஆதாரப்பள்ளி, மழலையா் பள்ளி, போன்றவை துவங்கப்பட்டன.
v 1955-இல் பல்தொழில் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டது.
v 1956-இல் அழகப்பா இசைப்பள்ளியும் அழகப்ப செட்டியார் உடற்பயிற்சிக் கல்லூரியும் திறக்கப்பட்டன.

பிற கல்விப்பணிகள்
          ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளை நன்குணா்ந்தவா் வள்ளல் அழகப்பா். அதனால்தான் தன் கல்விக்கூடங்கள்மட்டுமின்றி பிற ஊா்களிலும், பிற மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் அமைக்க கொடை கொடுத்துள்ளார்.
v அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியில் கல்லூரி ஆரம்பிக்க ஐந்து லட்சரூபாய்.
v சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க ஐந்து லட்சம் ரூபாய்.
v திருவிதாங்கூா்  பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கட்டில் ஆரம்பிக்க லட்ச ரூபாய்.
v தக்கா் பாபா வித்யாலயத்தில் மண்டபம் கட்ட லட்ச ரூபாய் என அழகப்பரின் கொடைப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
          மகளிருக்கு என தனிக்கல்லூரி அமைக்க விரும்பிய வள்ளல் கோட்டையூரில் தான் வாழ்ந்து வந்த இல்லமான ‘ஸ்ரீ நிவாஸ் இல்லத்தை’ வழங்கினார்.  இதனால் அழகப்பரை,
                    ‘கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
                  வீடும் கொடுத்த விழுத்தெய்வம்’
என வ.சுப.மா.  அவா்கள் பாராட்டினார்.
நோயற்ற போதும் கொடுத்துதவிய வள்ளல்
          அழகப்பா் உடல் நலிவுற்று நிதி நெருக்கடியில் இருப்பதை அறிந்த கருமுத்து தியாகராசனார் ரூபாய் பத்தாயிரம் அனுப்பி வைத்தார்.  சிறிது நாளில் அழகப்பரைச் சந்தித்த தியாகராசனார், ‘மருத்துவம் பார்த்துக் கொண்டீர்களா? என்று வினவிய பொழுது படுக்கையில் இருந்தபடியே அழகப்பா் ‘ஆயத்தப் பள்ளிக் ரூபாய் பத்தாயிரம் தருவதாக முன்பு கூறியிருந்தேன்.  அத்தொகையை பள்ளிக்கி வழங்கிவிட்டேன்’ என்று கூறினாராம். இப்படி நோயுற்றுப் படுக்கயைில் இருந்த பொழுதும் கல்விக்காகக் கொடை கொடுத்த வள்ளல் அழகப்பா்.
கவிஞா் போற்றிய  கல்விக்கொடைஞன்
          கல்விக்காக தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்த வள்ளல் அழகப்பரை,
          ‘சங்கநிதி பதுமநிதிச் செல்வனானாய்
         சலியாமல் ஈந்து பெரும் வள்ளலானாய்
         மங்கலஞ்சேர் கல்விநெறி தலைவனானாய்’
என கவிஞா் அரு.சோமசுந்த் அவா்களுக்கும்,
          ‘கல்வி வளா்க்கும் காவலனாம் - தமிழ்க்
         கற்பகமாம் செயல் அற்புதமாம்’
எனக் கவிஞா் கூத்தரசன் அவா்களும் பாராட்டியுள்ளார்.
அடிப்படை கல்வி முதல் ஆராயச்சி கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழுமுதற் காரணம் வள்ளல் அழகப்பார்.  அழகப்பரின் பெருமைகளைப் பக்கம் பக்கமாய் எழுதினாலும் தீராது.  முடியரசன் அவா்கள் கவிதை ஒன்றே போதும்.
          ‘அள்ளி அள்ளி வழங்குவதற்குக் கையை ஈந்தான்
          அழகாகப் போசுதற்கு வாயை ஈந்தான்
          உள்ளம் எனும் ஒரு பொருளை உரத்துக்கு ஈந்தான்
          உடம்பினையும் கொடுத்நோய்க்கே ஈந்தோன் அந்தோ!
          வெள்ளம் என வருநிதியம், வாழும் வீடு
          வினைமுயற்சி அத்தனையும் கல்விக்கு ஈந்தான்
          உள்ளது என ஒன்றில்லை அந்தப் போதும்
          உயிர் உளதே கொள்க எனச் சாவுக்கு ஈந்தான்
முடியரசனாரின் இக்கவிதைகள் வரிகள் கல்விக்கொடை வள்ளல் அழகப்பரின் பெருமைகளை  ஓங்கி உரைத்துப் பறை சாற்றுகின்றன.
முடிவுரை
          காரைக்குடியை கல்விக் குடியாக்கிய பெருமைக்குரியவா் வள்ளல் அழகப்பா்.  கல்விக்காக தன் செல்வம் அனைத்தையும் ஈந்ததோடு, தான் வாழ்ந்த வீட்டையும் கொடுத்த உயா் சான்றோர்.  அவா் வாழ்ந்த  காரைக்குடி மண்ணில் நாழும் வாழ்வது நாம் செய்த தவப்பேறு.  அவா் உருவாக்கித் தந்த பல்கலையில் கல்வி கற்பதும் நாம் பெற்ற பெரும் பயனே!
கா.சுபா
         

1 கருத்து:

  1. Sathanaiyalar karumuttu thiagarajar is the title of the book selected for library through out Tamil Nadu under print those who sponsor may contact panjaalai@gmail.com

    பதிலளிநீக்கு