வியாழன், 15 ஜூன், 2017

இயற்கையின் சிரிப்பில் இறைவன்

இயற்கையின் சிரிப்பில் இறைவன்  

            “இந்த வாரம் கட்டாயம் பூங்காவிற்கு அழைச்சிட்டுப் போறேன்” இப்படியே நான்கு வாரங்கள் சொல்லி நாள்களைக் கடத்தியாயிற்று.. இனியும் அப்படிச் சொன்னால் என் மகள் என்னை அரசியல்வாதிகள் பட்டியலில் இணைத்து விடுவாளோ என்ற அச்சத்தில் வாக்குறுதி கொடுக்காமலேயே இன்று மாலை அழைத்துச் சென்றேன்.
            ஊருணி பூங்கா வாசல் இருசக்கர வாகனங்களால் நிரம்பி வழிந்தது கட்டணம் செலுத்தி உள்ள போன பிறகுதான் தெரிந்தது பூவும் காவும் (சோலை) பலகையில் மட்டும் தான் என்பது.
            ‘பூ எங்கே? பட்டாம் பூச்சி எங்கே?’ என்று பாப்பா கேட்டால் என்ன பதிலைச் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும்போது  “ஐ.. அப்பா.. ஊஞ்சல்” என்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டுத் துள்ளிக் குதித்தாள் யாழினி.
            ‘நல்லவேளை.. ஊஞ்சல் காப்பாற்றி விட்டது’ நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி ஊஞ்சலை நோக்கி நகா்ந்து, நடந்து, ஓடினேன்.  என் சுட்டுவிரலைப் பிடித்திழுத்த படி முன்னே ஓடிக்கொண்டிருந்தவளை மூச்சிறைக்க நான் பின் தொடர, நடைப்பயிற்சிக்கு வந்த நாயொன்று எனனை முறைத்துப் பார்த்தது.
            பூக்களும், பட்டாம் பூச்சிகளும் இல்லாத குறையை அங்கே ஆடி, ஓடி, விளையாடிக்கொண்டிருந்த சின்னஞ்சிறு குழந்தைகள் தீா்த்துவைத்துக் கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொரு ஊஞ்சலிலும் இரண்டு மூன்று சிறுவா்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொரு ஊஞ்சலைச் சுற்றி அப்பாக்களின் கழுத்தில் தொங்கியபடி ‘எப்பொழுதுதான் ஊஞ்சலிலிருந்து இறங்குவார்களோ?’ என்ற ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள்.
            ஒரு வழியாய் கால் கடுக்க வரிசையில் நின்று மகளை ஊஞ்சலாட்டி, அருகேயிருந்த கல் இருக்கைகளில் வந்து அமா்ந்தோம்.  அருகே தன் பிள்ளையைக் கூட்டி வந்திருந்த ஒரு அம்மா ”ஓடாத பாப்பா” கீழ் விழுந்துருவ.. இந்த இதுல பொம்மை, வீடுனு ஏதாவது படம் வரைஞ்சுிட்டு இரு” என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள்.
            ‘இங்க வந்துமா பேப்பா், பேனா’ அந்தக் குழந்தை ஒரு நிமிடம் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அந்தக் குழந்தை ஒரு நிமிடம் ஓடியாடி விளையாட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி  “நான் வீடே வரையுறேன்மா” என்று சொல்லிவிட்டு வரையத் துவங்கியது எட்டிப் பார்த்தேன் முதலில் தென்னைமரம் வரைந்து பிறகு வீடு வரைந்தது குழந்தை குழந்தைகளின் உலகமும், உளவியலும் ஆச்சரியமாக இருந்தது.  எந்தக் குழந்தையும் மரம் இல்லாத வீட்டை வரைவதேயில்லை அவா்களைப் பொறுத்தவரையில் மரமிருந்தால் தான் அது வீடு.
            பூங்காவினுள் பரவலாக நெகிழிக் குப்பைகள் சிதறிக் கிடந்தன.  குப்பைத் தொட்டி மட்டுமு் சுத்தமாக இருந்தது.
            “நேத்து யூ டியூப்புல காரைக்குடி ராஜ் டிவி அகடவிகடம்  பார்ட் -2னு  இருந்த ஒரு வீடியோ பார்த்தேன்.  அதுல நம்ம ஊா் பள்ளிக்கூடத்துப் பையன் மணிகண்டன்னு ஒருத்தன் ‘இயற்கை நேசிக்கனும்னு எவ்வளவு அருமையாப் பேசியிருந்தான் தெரியுமா?”
            “எங்க.. காட்டு” என்றார் இன்னொருவா்  மணிகண்டன பெயரைக் கேட்டதும் அனிச்சையால் குரல் வந்த திசைநோக்கி தலைநிமிர்த்திப் பார்த்தேன் எதிர் வரிசையில் மூன்று  முதியவா்கள் குழந்தைகளுக்கிருந்த அதே உற்சாகத்தோடு மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.  வீட்டில் நான் முழுக்க தனிமையில் துவண்டு கிடப்பவா்களுக்கு மனம் விட்டு பேசி மகிழ பூங்காவும், நண்பா்களும் தானே புகலிடம்.  இயற்கையைப் போல புறக்கணிக்கப்பட்ட முதியவா்களின் நிலையும் கவலைக்கிடம்தான், யோசித்துக் கொண்டிருக்கும் போதே மணிகண்டனின் குரல் காற்றிலே கலந்து காதுகளைத் தீண்டியது.
            “காடு கரையெல்லாம் கட்டிடங்களா மொளச்சுப் போச்சு, நாடு நகரமெல்லாம் நச்சுவாயு நெறஞ்சு போச்சு.. இன்னிக்கு நம்ம நாட்டு நெலம இப்படித்தான்யா ஆகிப் போச்சு.. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்னு பெரியவங்க சொல்வாங்க ஆனா இப்பலாம் கொடிக் கம்பத்துல கட்டுன கொடி கூட பறக்க மாட்டேங்குது  வைக்கையில வெந்து சாகுறோம்”  “மணிகண்டன் பேசப் பேச முதியவா்கள் மூவரும் சத்தம் போட்டுச் சிரித்தார்கள்.
            அதற்குள் யாழினி ஈரட்டி (பிஸ்கட்)  கேட்க ஈரட்டியைக்  கொடுத்துவிட்டு மேலுறையைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டேன்.  அது உள்ளே விழாமல் விளிம்பில் பட்டு தவறி கீழே விழுந்தது எடுக்கலாமென்று எத்தனிப்பதற்குள் காற்றிலே பறந்து சற்றுத் தூரமாய்ப் போய் விழுந்தது துரத்திப் போய் எடுக் மனமில்லாமல் விட்டுவிட்டேன்.  இதனைக் கவனித்த யாழினி ஓடிப்போய் அதை எடுத்து வந்து, குப்பைத் தொட்டிக்குள் போட்டு வந்து “குப்பைய குப்பைத்தொட்டியிலதான் போடனும்.. இல்லாட்டி கடவுள் கோவிச்சுக்குவாரு சரியா?” சுட்டுவிரல் நிமிர்த்தி மிரட்டியவனிடம் “சரிம்மா.. மன்னிச்சுக்கோ.. என்றான்.
            “சரிப்பா.. இனி தப்பு செய்யாதே.  ” என்று புன்னகையை வீசினாள் ‘இயற்கையைப் புறந்தள்ளுகிறவா்களின் அகத்தினுள் இறைவன் வரமாட்டார் என்பதை எவ்வளவு அழகாய் ஓவியத்திலும், பேச்சிலும் சொல்லிவிட்டார்கள் பிள்ளைகள்.. பல நேரங்களில் சிறியவா்கள் பெரியவா்களாய்க் கற்றுத்தருகிறார்கள், பெரியவா்களோ சிறியவா்களாய் நடந்து கொள்கிறார்கள்.
            இருட்டி விட்டதென்று எழுந்து நடக்கத் துவங்க “நம்ம வருங்கால சந்ததி நம்மள வாயார வாழ்த்தனுமா? வயிறெரியத் தூற்றனுமா? இந்த பூமி நல்லாயிருக்கனும்னா இல்லையில்ல.. நாம நல்லாயிருக்கணும்னா இயற்கைய நாம் காதலிச்சேயாகனும்” மணிகண்டன் குரல் துரத்தி வந்தது.  எங்கிருந்தோ தூரத்திலிருந்து வந்த மண்வாசனை மனதை நிரப்பியது.
குறள்:
            அறிவினான் ஆகுவ துண்டே   பிறிதின்நோய்
            தந்நோய்போல் போற்றாக் கடை (315)
விளக்கம்:
        பிறிதோர் உயிர்க்கு வந்த துன்பத்தை, தமக்கு வந்த துன்பம்போலக் கருதி அவ்வுயிர்களைக் காப்பாற்றாவிட்டால் தான் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக