வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மழையே_வாவா...


மழையே_வாவா...

வாடிய உழவர் நெஞ்சம்
பாடியே மகிழ்ந்தே ஆட
தேடியே வாடு மெங்கள்
 ஏக்கமும் தீர்ந்தே போக 
கடுகியே மழையே வாராய்
களிப்பினை விரைந்தே தாராய்
வாடிய பயிரைக் கண்டு
வாடுதுப் பொற்கை நெஞ்சம்,

செந்தணல் கோபங் கொண்டு
 செவ்விழி சிவனாய் மாறி
நெற்றிக்கண் சுடரால் உன்னை
வேள்வியாய்த் தகிக்கும் முன்னே
இறங்கியே ஓடிவாராய் மழையே
இதம்தரத் தேடி வாராய்
வெண்முகில் கருமை தீட்டி
விரைந்துமே அதனைக் கூட்டி

தென்றலில் தேரைப் பூட்டி
வெந்நிறப் புரவி மாட்டி
மின்னலில் சாட்டை வீசி
மெல்லிய ஜதியுங் கூட்டி
இடியெனு முரசம் கொட்டி
இதமொடும் தாளம் போட்டு
இறங்கியே மழையே வாராய்
இதயமே குளிர வாராய்!

கொதித்திடும் மண்ணின் நெஞ்சும்
குவலயம் கண்டே அஞ்சும்
வசித்திடும் உயிர்கள் வாட
பசிப்பிணி தீர்ந்தே ஆட
உழவதும் செழித்தே இந்த
உலகமே மகிழ்ந்தே வாழ
இறையெனும் மழையே வாவா,
இக்கணமே இறங்கிநீ ஓடிவாவா,
-வ.மீனாட்சி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக