திங்கள், 5 மார்ச், 2018

பேனா முனை ‘வலி’யது..


தலையங்கம்
தி.பி. 2049 (கி.பி. 2018)       மாசித்திங்கள்

தேன் - 2                                                                                                                   துளி-14


பேனா முனை ‘வலி’யது..


          அன்பும், அறனும், சமூக அக்கறையும், சமத்துவப் போக்கும் பொங்கி வழிந்த ஊடகங்களின் வாய்களில் அண்மைக்காலங்களில் நாற்றமெடுத்த சாக்கடையும், பணத்தாசையில் ஒழுகும் எச்சிலும், சாமானியா்களை உறிஞ்சிக் குடித்த குருதியும் ஒழுகி ஓடி, ஏழை எளியோரின் நடுத்தரமக்களின் குடிசைகளை குடும்பங்களைச்   சுழற்றியடித்து சூறையாடுகின்றன.
     அறியாமை இருள் நீக்கி அறிவூட்டி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பைத் துறந்து, மறந்து அதிகாரவா்க்கத்தின் எடுபிடிகளாய் மாறிப் போயின ஊடக எழுத்துகள். “வாள்முனையை விட பேனா முனை வலியது“ என்பது வார்த்தையளவில் சரியாயிருக்கிறது..  பொருளளவில்தான் மாறிப்போய்விட்டது.பேனாவின்பிடி வலியவா்களின் கைகளில் இருக்க முனைமுகம் வறியவா்களைக் குத்திக்கிழித்து கூறுகளாக்கி வலியுண்டாக்கும் கூரியமுனை யாகத்தானிருக்கிறது. வன்முறையைத் தூண்டிவிடும் வல்லூறுகளின் வாய்ச்சவடால்களுக்கு கொடுக்கும் மதிப்பையும், கவனத்தையும் வாழ வழியிழந்து வலியோடு தவிக்கின்ற வலிமையற்றவர்களின் குரலுக்கு  கொடுப்பதுமில்லை.. செவிமடுப்பதுமில்லை..
          சட்டமன்றம், நீதிமன்றம், அரசாங்கம், பத்திரிகை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்பார்கள்.  ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க வேண்டிய, மக்களை வழிநடத்த வேண்டிய  பொறுப்பும், வாய்ப்பும் பிறவற்றை விட ஊடகங்களுக்குச் சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது.  முதல் மூன்று தூண்கள் மக்களைக் கைவிட்டுவிட்டாலும் நான்காவதான ஊடகத்தூண் முட்டுக்கொடுத்தாலே போதும் ஜனநாயகம் பிழைக்கும். ஆனால் ஊடகத்தூண் துருப்பிடித்து, சீழ்பிடித்து பலவீனமாக இருந்தால் ஜனங்களும், ஜனநாயகமும் எப்படிப் பிழைக்கும்?
          சிந்திக்கத் தெரிந்தவா்களையும் சிந்திக்கவே விடாமல் முட்டாள்களாவும், அடிமைகளாகவும், ஓட்டுப்போடும் எந்திரங்களாகவும், சினிமாவில் சிக்கிய எந்திரன்களாகவும் மக்களெல்லோரையும் மாற்றுகின்ற மாயவித்தையைத் துல்லியமாய்த தெரிந்துவைத்திருக்கின்றன ஊடகங்கள்.
          தமிழ்நாட்டு மக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தலையாய பிரச்சனைகளைத் தெரியவைக்க, சந்தேகங்களைத் தெளியவைக்க இன்றைய சூழலில் பல ஊடகங்கள் தயாராயில்லை.  அரசியலும், சினிமாவுமே இரு கண்களென்று மக்களைக் குருடா்களாக்கி, செவிடா்களாக்கி, ஊமையராக்கும் இலக்கை நோக்கிச் செல்லும் ஊடகங்களிடம் நாம் ஊடகதா்மத்தை எதிர்பார்ப்பது, கொட்டும் தேளிடம் சொட்டும்  தேனை எதிர்பார்க்கும் மூடத்தனம்தானே..
          Flash news, Breaking News என்று குப்பைகளையெல்லாம் வீட்டு மூலைகளிலும், மனித மூளைகளிலும் நிரப்பி எப்பொழுதுமே தமிழ்நாட்டை அவசரசிகிச்சைப் பிரிவைப் போல பதற்றத்திலேயே இருக்க வைத்து, அதர்மங்களை மறக்கடித்து அவசியத்தை மழுங்கடித்து விடுவதைக் காணும் போது “விதியே என்செய்வாய்  என் தமிழ்ச்சாதியை“ என்னும் பாரதியின் புலம்பல்தான் செவிகளைக் கிழிக்கிறது.
          ஈழத்தில் யுத்தக் காட்சிகள் அரங்கேறிய போது, இங்கு முத்தக்காட்சிகளை ஒளிபரப்பியவைதானே நம் ஊடகங்கள்.. 
சிரியாவின் இனப்படுகொலையைத் தின்று செரித்து, 24 மணி நேரமும் ஸ்ரீ தேவியின் மரணச் செய்தியை ஒளிபரப்பித் திணறடித்த தியாகிகள்தானே இவா்கள்..
 முல்லை பெரியாறு பிரச்சனையைப் புறம்தள்ளி ஜிமிக்கி கம்மலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவா்களை நினைத்து தலையிலடித்துக் கொள்வதைத்தவிர வேறென்ன செய்ய முடிகின்றது?
 ‘மாணவனிடம் குத்து வாங்கிிய தலைமையாசிரியா்’ என்று கொக்கரிக்கும் பத்திரிகைகள் தானே அதிகம் விற்பனையாகிறது இங்கு..
  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள், சிறுகுறு தொழில் முனைவோரின் கண்ணீரை, வியா்வையை, குருதியை முன்னிறுத்தாமல் சாதி, அரசியல், வணிக ஆதாயத்தைக் தூக்கிக் கொடிப்பிடிக்கும் பத்திரிகைகளை அன்றே நினைத்துத்தான் “நாட்டைப் பிடித்த நோய்களில் பத்திரிகையும் ஒன்று" என்றார் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.
 "போலிப் பத்திரிகையாளரின் எழுதுகோல் பண்பாட்டுப் பயிர்களை கழுத்தறுக்கும்  கருக்கரிவாள்“ என்றார் வீறுகவியரசா் முடியரசன்.
          இந்த மாசித் திங்களிலிருந்தாவது மாசில்லா உலகத்தைக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பை உணரவேண்டும் ஊடகங்கள்.
 இனியேனும் குழிதோண்டிப் புதைத்துவிட்ட ஊடகதா்மத்தையும், மனசாட்சியையும் தோண்டி எடுத்து வாழ்வு கொடுத்த மக்களுக்கு உண்மை, நோ்மையோடு நடந்து கொள்ளட்டும். தங்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள பணம், பதவி, புகழ் போன்றவற்றால் வயிற்றை நிரப்பிக்கொண்ட ஊடக வயிறுகள் அறவழியில் நன்‘மை’யை நிரப்பிக் கொள்ளட்டும்..
 இளைஞா்கள் இனி பாரதியும், பெரியாரும், முடியரசனும் வந்து தான் நம் மொழியையும் இனத்தையும் மீட்கவேண்டுமென்று காத்திருக்க மாட்டார்கள்..
  ஊடகங்களே! உறக்கத்திலிருக்கும் இளையவா்களின் பார்வைபடுவதற்குள் பாதைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்.. இல்லையேல் திருத்தப்படுவீா்கள்... பிறகு அதிகமாகவே வருத்தப்படுவீா்கள்.
          அரசிய(லி)ல் பிழைத்தோர்ககு அறம் கூற்றாகும் - நினைவில் நிறுத்துங்கள்.
                                                                                      தோழமையுடன்,
                                                                                  தேமதுரம் ஆசிரியா்குழு.


ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
தே.தீபா

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக