புதன், 17 ஜனவரி, 2018

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்!!
             
           அன்னதானத்திற்கே உரிய தனிச்சிறப்பு என்னவென்றால் யார் வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் செய்யலாம் என்பது தான். பூமி தானம், வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், கோ தானம் முதலிய ஏனைய தானங்கள் அனைத்தும் அதற்குரிய தகுதியுடையோர் தான் செய்ய இயலும். தகுதியுடையோர்க்கு தான் செய்ய வேண்டும். ஆனால், அன்னதானம் ஒன்று தான் பெறுவோர் தகுதி பார்க்காமல் செய்யக்கூடிய தானம்.

          அதிதி பூஜை மற்றும் அன்னதானம் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. அதிதி பூஜை என்னும் அன்னதானத்தை பொருத்தவரை மனமிருந்தால் மார்க்கமும் நிச்சயம் இருக்கும்.

          மழை பொழியும் காரிருள் சூழ்ந்த இரவில், தனக்கு உணவு இல்லை என்றாலும் விதைநெல்லை பொறுக்கி கொண்டு வந்து, கொல்லைப் புறத்தில் விளைந்த கீரைகளை பறித்து வந்து அதிதியாக வந்த சிவபெருமானுக்கு படைத்த இளையான்குடி மாறநாயனாரின் சரிதமும், தங்கள் குடும்பத்திற்கே உணவு இல்லாத சூழ்நிலையிலும் விருந்தினருக்கு அன்னமிட்டு தாங்கள் பட்டினியால் மடிந்த மகாபாரதத்தில் வரும் உஞ்சவிருத்தி அந்தணரின் கதையும்…. அவ்வளவு ஏன், பிக்ஷை கேட்டு வந்த ஆதி சங்கரருக்கு பிக்ஷையிட எதுவுமில்லாத காரணத்தால் வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் பிக்ஷையளித்ததால் ஆதி சங்கரர் ‘கனகதாரா சுலோகம்’ பாடி தங்கநெல்லி மழை பொழிய வைத்த சம்பவமும் உணர்த்துவது இதைத் தான்.

  சுந்தரரின் அதிதி பூஜை செய்த அற்புதம் – நெற்குவியலில் மூழ்கிய திருவாரூர்!!

          சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணம்புரிந்து இனிய இல்லறம் நடத்திவந்த காலகட்டங்களில், அதிதி பூஜை செய்து, அடியார்க்கு தினசரி அமுது படைத்து வந்தார். இதன் மூலம் சுந்தரரின் புகழ் திக்கெட்டும் பரவியது.

          திருவாரூருக்கு அருகில் திருக்குவளை என்னும் பதியை ஒட்டியுள்ள குண்டையூர் என்னும் சிற்றூரில் குண்டையூர் கிழார் என்னும் நிலச்சுவான்தார் ஒருவர் வசித்து வந்தார். சுந்தரர்பால் பேரன்பும் மரியாதையும் கொண்டிருந்த அவர் சுந்தரர் பரவையாருடன் சேர்ந்து தினமும் தனது இல்லத்தில் அடியார்க்கு அமுது செய்துவருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் – சுந்தரர்க்கு தான் ஏதேனும் செய்ய விரும்பி – சுந்தரரும் அமுது செய்ய வரும் அடியவர்களும் பயன்பெறும் விதமாக நெல், பருப்பு, வெல்லம், கரும்பு மற்றும் இதர மளிகை பொருட்களை சுந்தரரின் இல்லத்திற்கு அவ்வப்போது மாட்டு வண்டிகளில் அனுப்பி வந்தார்.

          ஒரு சமயம் மழை பொய்த்ததால் குண்டையூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டு விளைநிலங்கள் வறண்டன. இதனால் சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் பெரிதும் வருந்தினார். அடியாருக்கு அமுது செய்யும் அடியாரான சுந்தரருக்கு தான் நெல் அனுப்பமுடியவில்லையே என்கிற ஏக்கத்துடன் சிவபெருமானிடம் இது பற்றி முறையிட்டபடி தானும் உணவு உட்கொள்ளாது உறங்கச் சென்றார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “அன்பனே வருந்தற்க… நம்பியாரூரனுக்கு நெல் அளிக்க உமக்கு படியளக்கிறோம்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

          தொடர்ந்து குபேரனை அழைத்த சிவபெருமான், “குண்டையூரில் நெல்லை மலையென குவித்திடுக” என்று ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து குபேரன், ஒரே இரவில் குண்டையூர் முழுக்க மலையென நெல்லை குவித்துவிட்டான். இதனால் குண்டையூருக்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியும் அடைபட்டுவிட்டது.

          மறுநாள் காலை நெல் மலையை கண்டு பரவசமடைந்த குண்டையூர் கிழார், திருவாரூருக்கு ஓடோடிச் சென்று சுந்தரரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.

          சுந்தரரும் ஆர்வம் மேலிட உடனே குண்டையூருக்கு விரைந்து வந்து, இறைவன் ஆணையால் குபேரன் குவித்த நெல் மலைகளை கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார். ஆனால், அவருக்கு வேறு கவலை தோன்றியது. இத்தனை நெற்குவியல்களை திருவாரூருக்கு கொண்டு செல்வது எப்படி என்று சிந்திக்கலானார். ஏனெனில், அதற்குரிய ஆள்பலம் குண்டையூர் கிழாரிடம் இல்லை தன்னிடமும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

          உடனே சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்குவளையில் எழுந்தருளியிருக்கும் கோளிலிநாதரை சென்று தரிசித்து, திருவாரூருக்கு நெல்லை கொண்டு செல்ல பூதகணங்களை அனுப்புமாறு வேண்டி ஒரு பதிகத்தை பாடினார். கோளிலி இறைவனும் அசரீரி மார்க்கமாய் “இன்று இரவு பூத கணங்களைக் கொண்டு நெல்மலைகளை திருவாரூரில் சேர்ப்பிப்போம்” என்று அறிவித்து அருளினார்.

          இறைவனின் பெருங்கருணையை எண்ணி மீண்டும் வியந்த சுந்தரர் மகிழ்ச்சியோடு ஆரூர் திரும்பினார்.

          இறைவனின் ஆணைப்படி அன்றிரவு, குண்டையூரில் இருந்த நெற்குன்றுகள் முழுவதையும் பூதகணங்கள், திருவாரூரில் கொண்டு வந்து குவித்தன. இதனால் திருவாரூர் வீதிகள் அனைத்தும் நெல் மணிகளால் நிரம்பி வழிந்தன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூட இயலாத நிலையில் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் முன்பாக நெல்மணிகள் குன்றென காணப்பட்டன.

          ஏற்கனவே  சுந்தரர் மூலம் நடந்த அனைத்தையும் அறிந்திருந்த பரவையார், “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” (குறள் 215) என்ற வள்ளுவரின் வாக்கிற்க்கிணங்க, அவரவர் வீடுகளுக்கு முன்னே குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு மூலம் திருவாரூர் வீதிகளில் அறிவிக்கச் செய்தார். இதையடுத்து அவரவர் வீட்டு முன்பாக இருந்த நெல்மணிகளை அவரவர் எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டு நெற்குதிருக்குள் நிரப்பினர். அப்படியும் நெல்மணிகள் மிகுதியிருன்தன. அடுத்த பல தலைமுறைகளுக்கு உணவிற்கு பஞ்சமில்லை என்கிற இந்த அரிய நிகழ்வால் திருவாரூர் வாழ் மக்கள் பரவையாரையும் சுந்தரரையும் வாழ்த்தி வணங்கினர்.

          ஆக… சுந்தரர் ஒருவர் செய்த அதிதி பூஜையால் திருவாரூர் வாழ் மக்கள் அனைவரும் பயன்பெற்றனர். அதிதிபூஜைக்கு உதவிய காரணத்தால் சிவதரிசனம் கிடைக்கப்பெற்றார் குண்டையூர் கிழார். (இது அது  அனைத்தையும் விட பெரிய பாக்கியமல்லவா!!!)

          குண்டையூர் கிழார் வாழ்ந்த குண்டையூர் இன்றும் உள்ளது. திருக்குவளையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திருக்குவளை-சாட்டியக்குடி சாலையில் உள்ளது. அங்குள்ள இறைவனின் பெயர் சுந்தரேஸ்வரர். அம்பாள் பெயர் மீனாக்ஷி. இது தேவார வைப்பு தலங்களில் ஒன்று. சுந்தரர் நெல் பெற்ற விழா மாசி மக நாளில் இன்றும் இந்த கோவிலில் நடைபெறுகிறது. குண்டையூர் கிழாரின் திருவுருவச் சிலைகள் இக்கோவிலில் உள்ளன.

          பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லும் அதே நேரம் இதே போன்று சரித்திர சிறப்பு மிக்க தலங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சென்று வரவேண்டும்.

          சுந்தரர் கோளிலி நாதரிடம் முறையிட்டு பூதகணங்களை கொண்டு ஆரூருக்கு நெல்லை உதவிய பதிகம் ஏழாம் திருமுறை | சுந்தரர் | திருக்கோளிலி – கோளிலிநாதர். இதை தினசரி ஓதிவந்தால், உணவுக்கே என்றும் பஞ்சம்  வராது. நல்ல வேலையாட்களும் அமைவார்கள். (வேலையாட்கள் அமைகிறார்கள் என்றால், உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகத் தானே அர்த்தம்!). எனவே இகபர சுகங்களை தரவல்ல பதிகம் இது.

கடைசி பாடலில் சுந்தரர் பிரயோகப்படுத்தியுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்!

நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான்உலகு ஆள்பவரே

கு.கங்காதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக