வெள்ளி, 27 ஜனவரி, 2017

செம்மொழிச் சிந்தனைகள்





                   நூல்மதிப்புரை




நூலாசிரியர்


முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை

வெளியீடு
 பல்லவி பதிப்பகம்
194, கண்ணா வணிக ளாகம்,
2-வது தளம்,
மேட்டூர் சாலை, ஈரோடு – 638011.
தொலைபேசி : 0424 – 2263197, 94422 51549
                                                                                         இணையதளம் : www.pallavinetworks.in
மின்னஞ்சல் : pavaisentamizh17@gmail.com
பக்கம் : 112 விலை : ரூ. 75



    

நூலாசிரியர் சங்க இலக்கியத்தின் பதினாறு முத்துக்களைக் கோர்த்து செம்மொழிச் சிந்தனைகள் என்ற மாலையைத் தந்திருக்கிறார். இவரது நோக்கம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதனால் மட்டும் உலகம் பயன் பெறாது அவர்களுடைய ஆய்வு மற்றவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் ஆய்வுச் சிந்தனையானது பரவும் என்பதாகும் எனவே தான் தனது பதினாறு ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.

     ஆநிரை மேய்க்கும் தன் தந்தையின் பசு ஒன்று பயிரை மேய்ந்ததால், அவரின் கண்ணைப் பிடுங்கித் தண்டனை கொடுத்த கோசரை, அன்னிமிஞிலி என்ற பெண் உணவு உண்ணாமல், தூய உடை உடுத்தாமல் மன்னனாக இருந்த போதிலும் வஞ்சினம் கூறி முடிக்கிறாள். பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும், பெண்கள் தன் உரிமைக்காக வெகுண்டெழுவார்கள் என்பதையும், சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள் என்ற கட்டுரை விளக்குகிறது. அன்னிமிஞிலியை திரௌபதியின் முன்னோடி என்று சொல்வதில் ஐயமில்லை.
     தன் மகள் சூடிக் கொள்வதற்காகப் பூத்தொடுத்துக் கொடுத்த தந்தை, தன் மகளைப் பெண் கேட்டு வந்தவன் மன்னனாக இருந்த போதும் நலம் குன்றியிருப்பதால் அவனுக்கு கொடுக்க மறுக்கும் தந்தை என தந்தை-மகள் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தமையை, சங்கப்பாடல்களில் செவிலியே தலைவியிடம் மிகவும் அன்பு கொண்டவள் என்ற நிலையையும் தாண்டி நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். தொல்காப்பியர் சுட்டாத விடுபேறு கோட்பாடு சுவர்க்கம் என்றும், “புத்தேள் நாடுஎன்றும் சங்க இலக்கியத்தில் தோற்றம் பெற்றுள்ளது.   வீடுபேற்றை உடம்போடு அடைவது ஒரு நிலை, உடம்பினை விடுத்து அடைவது மற்றொரு நிலை. தவம்செய்தால் உடம்போடு வீடுபேறு அடையலாம் போன்ற செய்திகளை புத்தேள் நாடு என்ற கட்டுரை விளக்குகிறது.
     சங்க அகப்பாடல்களில் காணப்படும் அரிய கூற்றான சேட்படை என்பது தலைவியை அடைவது எளிது என்று நினைத்து வந்த தலைவனது நினைவை அது அத்துனை எளிதன்று என்று தோன்றும்படி தோழி கூறுவது ஆகும். இது தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை. நற்றிணை, ஐங்குநுறூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளமையை சேட்படை கட்டுரை பதிவு செய்துள்ளது. தொல்காப்பியத்தினையும், சங்க இலக்கியத்தினையும் நன்கு உள்வாங்கியவர்கள் மட்டுமே இம்முடிவினைக் கொடுக்க முடியும்.
     பொதுவாக உயிரைவிட மானம் பெரியது என்பதற்கு உதாரணமாக ஒருமயிர் உதிர்ந்து போனாலும் உயிரைவிடும் உயிரினம் கவா்மான் என்று உதாரணம் கூறுவார்கள். இதனை ஆசிரியர் கவரி என்பது மானா? என்னும் கட்டுரையில் கவரி என்பது இமயமலையில் பனி சூழ்ந்த இடங்களில் வாழும் ஓர்விலங்கு, இது மானின் ஒரு வகை அல்ல. குளிர்பகுதியில் வாழும் அவ்விலங்குமயிர் நீப்பின் உயிர்வாழ இயலாது என்பது கருதியே திருவள்ளுவர் இவ்வாறுகூறுகிறார் என்று சான்றுடன் விளக்கியுள்ளார்.

     இந்நூலாசிரியர் சங்க இலக்கியத்தில் அரிய தகவல்கள் அடங்கியகட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் போன்றபடைப்புகள் இன்னும் வெளிவரவேண்டும்.இந்நூலின் சிறப்புக் கருதி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்நூலை ஒருபாடமாக வைத்துள்ளது பாராட்டுக்குரியது.



                                                                                                      - .முத்துமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக