உத்திரகோசமங்கையில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் நடக்கும் ஆருத்திரா தரிசனம் மிகவும் சிறப்பானதாகும்.
உத்திரம் என்பது உபதேசம்.
கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம் என்பது பொருள். மங்கைக்கு வேத உட்பொருட்களை உபதேசித்ததால் உத்திரகோசமங்கை எனப்பட்டது.
முன்னொரு காலத்தில் திருவாலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரர் ஒரு சமயம் மீனாட்சியம்மையாருக்கு வேதத்தின் உட்பொருட்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். ஆனால் மீனாட்சியம்மை வேதப்பொருட்களை விருப்பம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த சோமசுந்தரர் சினம் கொண்டு “கடற்கரைச் சோலையில் வாழும் பரதவ மன்னனுக்கு மகளாய்ப் பிறப்பாய். அங்கு வளர்ந்து வரும் நாளிலே நாம் உன்னைத் திருமணம் புரிந்து கொள்வோம்” என திருவாய் மலர்ந்தார். இதனை அறிந்த முருகனும், விநாயகரும் இதனால் தான் தன்தாய் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது என்று வேதநூல்கள் அனைத்தையும் கடலில் எறிந்தனர். அதனை கடலில் சுறாவடிவம் எடுத்து நந்திதேவர் தாங்கிக் கொண்டார். அதன்படி மீனாட்சியம்மை குழந்தைவடிவம் பெற்று கடற்கரையில் ஒரு புன்னை மர நிழலிலே கிடந்தார். பலகாலமாக மகப்பேறு இன்றி வாடிய பரதவ மன்னன் அக்குழந்தையை எடுத்து மகளாக வளர்க்கலானார். அவள் வளர்ந்து பெரியவளானாள்.
கடலில் சுறாவடிவம் கொண்ட நந்தியின் தொல்லை அதிகமானது. “தோணிகளையும்> படகுகளையும் பிளவுபடுமாறு தாக்குகின்ற இந்த சுறாமீனை இங்கு வந்து பிடிப்பவன் எவனோ,அவனே எனது மகளுக்கு ஏற்ற கணவன்” என்று பரதவ மன்னன் அறிவித்தான். சோமசுந்தரர் வலைஞன் உருத்தாங்கி நாமே செல்வோம் என்று நினைத்து வலைஞன் வேடத்தில் வந்து சுறாமீனை வலையில் சிக்க வைத்தார்.
மனம் மகிழ்ந்த பரதவ மன்னன் வலைஞராக வந்த சிவபெருமானுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். பின்னர் சோமசுந்தரர் தன் சுயவடிவம் எடுத்து உமாதேவியருடனும்,தன் பழைய வடிவத்தைப் பெற்ற நந்தியுடனும், தன் அடியார் கூட்டத்தோடும் உத்திரகோசமங்கை என்னும் தலத்தை அடைந்து, அங்கு உமாதேவியருக்கு வேதத்தின் இரகசியப் பொருட்களையெல்லாம் உபதேசித்தருளினார்.
இதனை, பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணத்தின் ஐம்பத்து ஏழாவது படலமான வலைவீசன படலத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
“பெண்ணினை வதுவைக் கீந்த பெருந்துறைச் சேர்ப்பற்கன்று
தண்ணிளி சுரந்து நல்கித் தருமமால் விடைமேற்றோன்றி
விண்ணிடை நின்றான் சென்றான் வேத்திரப் படையா னோடும்
உண்ணிறை யன்ப ரோடு முத்திர கோச மங்கை” (திருவிளையாடற்புரா.57:61)
உத்திரகோசமங்கையில் உள்ள நடராஜர் கி.பி.2ம் நூற்றாண்டில் சண்முக வடிவேலர் என்பவரால் வடிவமைத்த உலகின் மிகபெரிய மரகதக்கல்லால் (எமரால்டு ஸ்டோன்) ஆனதாகும். ஐந்தரை அடி உயரம் கொண்டது. இந்த நடராஜர் தன் தூக்கிய திருவடியை, நுனிவாலால் நட்டமாக நிற்கும் பாம்பின் தலைப்படத்தில் வைத்திருப்பது போல் உள்ளது. உலகில் வேறு எங்கும் இந்த சிற்ப அமைப்பு இல்லை எனலாம். மார்கழி திருவாதிரை அன்றைக்கு முதல் நாள் மட்டுமே இதன்மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டு 32 வகை அபிசேடங்கள் நடத்தப்படுகிறது. மீண்டும் அன்றே புது சந்தனம் பூசப்பட்டு வருடம் முழுவதும் அக்கோலத்தில் தான் காட்சியளிக்கிறார். இதற்கு இரண்டு காரணம் உண்டு.
1. மத்தளம் கொட்டும் சத்தம் கேட்டால் கூட மரகதக்கல் உதிர்ந்து விடும் தன்மையது.
2. அக்காலத்தில் அன்னியர் படையெடுப்பில் இருந்து சிலையை பாதுகாப்பதற்காக சந்தனம் பூசப்படுகிறது
என்று சொல்லப்படுகிறது. உத்திரகோசமங்கை தலச்சிறப்பும்> மூர்த்தி சிறப்பும் பெற்ற தலமாகும்.
- ந.முத்துமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக