மார்கழி மாதம் முடிவடைந்து தை பிறக்கிற நாளில் தான் போகி கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை என்பது இந்திரன் முதலியோரைப் பூசித்து வரவேண்டிய நாளாகும். பழங்காலத்தில் போகிப்பண்டிகை ஒரு நம்பிக்கை அடிப்படையில் கொண்டாடப்பட்டது. அதாவது இந்திரனுக்கு போகி என்ற பெயருண்டு. மழைக்குரிய கடவுளான இந்திரனை வழிப்பட்டால் மழை பொழிந்து பயிர்கள் செழிக்கும் என மக்கள் நம்பினர். அதுமட்டுமின்றி போகி என்பதற்கு பல துயரங்களை அழித்துப் போக்குவதால் இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். நாளடைவில் இச்சொல் மருகி ‘போகி’ என்றாகிவிட்டது. இந்நாளில் காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது வழக்கமாகும்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நோக்கத்தில் பயன்படுத்தப்படாத பழைய பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படும். இதனால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி கழியும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விசக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத் தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன் குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச் செடிகளை எhpத்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.
இன்றைய இளைய தலைமுறையினர் போகிப்பண்டிகையை வேறுவிதமான புரிதலோடு அணுகுகின்றனர். தீபாவளி சமயத்தில் வெடிக்காது போன பட்டாசுகளையும், பழைய பொருட்களையும் வீட்டின் அருகிலேயே போட்டு எரிக்கின்றனர். இதிலிருந்து ‘ஜிங்க் ஆக்ஸைட்’ உட்பட பல்வேறு விதமான நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. அவை சுற்றுச் சூழலையும், காற்றையும், இயற்கையையும் மாசுபடுத்துகின்றன. குழந்தைகள், முதியோர்கள் கர்ப்பிணிகளுக்கு அதிக கெடுதல் நேரிடுகிறது. அதைச் சுவாசித்த தாய் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் நச்சு குழந்தையையும் சென்றடைகிறது. ஆஸ்துமா நோயாளிகளை மிகவும் பாதிக்கும் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் வெளியாகின்ற நச்சுக்காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் வியாதிகள் அதிகம் உண்டாகிறது. போகி தினத்தன்று முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாகவும், அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து பூசை செய்வதன் மூலம் தீய எண்ணங்கள் விலகி நல்லெண்ணம் பிறக்கும் என்பது போகிப்பண்டிகையின் சிறப்பியல்பாகும்.
- லெ.பொ.பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக