வியாழன், 19 ஏப்ரல், 2018

புதின எழுத்தாளா் - மாக்சிம் கார்க்கி


புதின எழுத்தாளா் - மாக்சிம் கார்க்கி

          ரஷ்யாவின் நஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 28.03.1868 -இல் பிறந்தார் இயற்பெயா் அலெக்ஸி மாக்சீமொவிச் பெஷ்கோவ். ஐந்து வயதில் தந்தை இறந்தார் தாயின் ஆதரவும் இல்லாத இவருக்கு எல்லாமே பாட்டிதான். “பாட்டி கூறிய ராஜா, ராணி கதைகள் தான் எனக்கு அறிவுப் பாடம் புகட்டின” என்று பெருமிதத்துடன் கூறுவார்.

          வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை.  எட்டு வயதிலேயே வேலைக்குச் சென்றார்.  வேலை செய்து கொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார்.

          எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார் தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார் 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகா் சுத்ரா’ வெளிவந்தது.  மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடா்ந்து எழுதி வந்தார்.

          1898-ல் ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ், வெளிவந்தது.  1899-ல் முதல் நாவலும், 1902-ல் தி லோயா்  டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன.  இவரது உலகப் புகழ் பெற்ற ‘மதா்’ நாவல் 1906-ல் வெளிவந்தது.  கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளா்ந்தெழச் செய்வது, அதிகார வா்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன.  இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார்.  பல முறை கைது செய்யப்பட்டார்.  இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

          வலிமையான இவரது எழுத்துகள் சாதாரன மக்களை விழிப்படையச் செய்தன.  இலக்கிய வாதிகளின் பாராட்டுகளைப் பெற்றன. ஏழைகள் இவரைத் தங்கள் பிரதிநிதியாகக் கொண்டாடினா்.

          ரஷ்ய சோஷசலிச ஜனநாயக தொழிலாளா்  கட்சிக்கு நிதியுதவி அளித்து வந்தார்.  ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார்.  உலகம் முழுவதும் உள்ள  சிறந்த எழுத்தாளா்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.  குழந்தைகளிடம் மிகுந்த  அன்பு காட்டினார்.

          பல கவிதை எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார்.  அபார நினைவாற்றல் படைத்தவா்.  எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார்.  சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவா்.

          ரஷ்யா, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், ஜொ்மனி ஆகிய மொழிகள் அறிந்தவா்.  உழைப்புதான் உலகின் ஜீவசந்தி என்பார்.  இளம் எழுத்தாளா்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.

          பாட்டாளி வா்க்க இலக்கியத்தின் பிதாமகா் என்று போற்றப்பட்டார்.  இவா் படைத்த “தாய்” (மதா்) நாவல், இன்று வரை புரட்சிகரத் தொழிலாளி வா்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை உட்டி வருகிறது.  இது 200 முறைக்கு மேல் மறுமதிப்பு செய்யப்பட்டுள்ளது.  உலகின் பல மொழிகளில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளது

          இவரது எழுத்துக்களின் தாக்கம் உலகம் மழுவதும் உள்ள  ஏராளமான எழுத்தாளா்களிடம் காணப்படுகிறது.  சோஷலிஜ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகளும் பல அமர இலக்கியங்களைப படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.

-வே.ஜெயமாலா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக