புதன், 4 ஏப்ரல், 2018

மங்கையராய்ப் பிறப்பதற்கே..


மங்கையராய்ப் பிறப்பதற்கே..
            கல்யாணம், காதுகுத்து, திருவிழா வென்றால் சிறுவயதில் ஆசையிலும், ஆா்வத்திலும் துள்ளிக்குதித்து கிளம்புகிற இராணி இப்போதெல்லாம் ஒலிபெருக்கி கட்டிய வீடுகளையும், தெருக்களையும் கடந்து செல்ல முடியாமல் சுற்றி வளைத்தே வீடு செல்கிறாள்.  தெரிந்தவா்கள் பார்த்தால் விசாரிப்புகள் என்ற பெயரில் வெந்த புண்ணில் வேலெடுத்துப் பாய்ச்சுவார்கள்.. ஊராரின்  கேள்விகளுக்கு உலா்ந்த  புன்னகையை உதிர்த்துவிட்டுக் கடப்பாள்.
            சிறுமியாயிருக்கும் போது சுற்றியிருக்கும் உறவும், ஊரும் உடையையும்  நகையையும் பார்த்தே மதிப்பு கொடுக்கும்.  குத்திக் காட்டவே கேள்விகள் கேட்கும் என்பதெல்லாம் தெரியாது.  மனசு முழுக்க மத்தாப்பு போல குதூகலமும், கொண்டாட்டமும் நிறைந்திருக்க பட்டாம்பூச்சிபோல சிறகடிப்பாள்.  ஆனால் இப்பொழுது அப்படியா?
            பெண்பிள்ளைகள் எப்பொழுதும் அப்பாக்களுக்கு இளவரசிகள்தான்.  இராணியின் அப்பா தன் மகளை இளவரசிக்கு மேலாய் நினைத்ததால் தான் ‘இராணி’ என்று பெயா் வைத்தார் போல.  வறுமையின் நிழல்படாமல் இராணிக்கு சேவகனாய் மாறி வளா்த்தார்.
            கெட்டவா்கள் நன்றாக வாழ்வதைக் கூட சகித்துக் கொள்ளலாம்.  ஆனால் நன்றாக வாழ்ந்தவா்கள் கெட்டுப்போவது தான் பெரிய வேதனை. ஏன் எப்படியென்றே தெரியாமல் அப்பா என்ற ஆலமரம் சாய்ந்தபோது முழுதாய் விழுதாய்க்கூட வளா்ந்திருக்கவில்லை இராணி.  அப்பா கட்டியெழுப்பிய இராணியின் சாம்ராஜ்யம், கனவுகள் இடிவிழுந்து, இடிந்து விழுந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பமாய் அன்றாடப் பிழைப்பிற்கே அல்லல்பட்டது இராணியின் குடும்பம். அப்பா மறைந்த போதே பாதி மரித்துப்போன அம்மா இப்போது உடல், மன நோயால் படுக்கையிலேயே முடங்கிப் போனாள்.
            தம்பி, தங்கையைப் படிக்க வைக்க, படுத்த படுக்கையாகப் போன அம்மாவைப் பிழைக்கவைக்க கிரீடத்தைக் கழற்றி வைத்து முள்முடி சூட்டிக்கொண்டாள் இராணி.
            இராணியை குழம்புச்சட்டி தூக்க வைத்ததற்காக அம்மாவிடம் சண்டைக்குப் போன அப்பா இன்று தன் மகள் கட்டிடவேலையில் சாந்து சட்டியைத் தூக்கிச் சுமப்பதைப் பார்த்தால் மறுபடியும் மரணித்திருப்பார்.
            முள்ளு தைத்ததற்கே மூன்று நாள்கள் முடங்கி முனங்கி அப்பாவைக் கதறவைத்த இராணியிடம் தான் இன்று உடல் வலிகளும், மன வேதனைகளும் ஒட்டுமொத்தமாய்க் குடியேறிக் கொண்டன.  செங்கல்லும், மணலும், சிமெண்டுக் கலவையும் தூக்கிச் சுமக்கும் போதும், வீடு வந்த பின்னும் உடம் முழுக்க பரவிநிற்கும் வலியைத் தாங்கிக் கொள்ளக் கூட பழகிக்கொண்டாள்.  ஆனால் தன் உடம்பை மேயும் சில ஆண்களின் கம்பளிப் பூச்சி பார்வைகளைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை..  தற்காத்துக் கொள்ள அவள் போட்டுக்கொண்ட அப்பாவின் சட்டைகள் தான் அவ்வப்போது கம்பளிப் பூச்சிகளை ஊரவிடாமல் தடுத்தது.
            சிலா் அவளது வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு வளமையை அனுபவிக்க ஆசை வார்த்தைக்காட்டிப் பேசினார்கள். அண்ணா, அப்பா வென்று அழைத்த பின்னும் அப்படிப் பேசும் சாக்கடைகளோடு வேலை பார்ப்பது நரகமாய்த்தான் இருந்தது.  முப்பது வயது கடந்தபின்னும் கணவன், குழந்தைகள் என்று கனவுகளைக் காண்பதற்குக் கூட அவள் தயாராயில்லை.  இரவுகளெல்லாம் கண்ணீரால்  பகல்களாய் மாறிப் போன பிறகு கனவுகள் எப்படி வரும்? அப்பாவைப்போல ஆண் மகனைப் பார்ப்பது மட்டுமில்லை.  கேட்பது கூட அரிதாகிப் போய் விட்டது.  பார்க்கும் இடங்களிலெல்லாம் ஆண் தோல் போர்த்திய அசுரா்கள் முளைத்து நின்றால் பாவையா் நிலை என்னவாகும்?
            பள்ளிக்கூடத்தில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த இராணியின் நினைவலைகளைக் கலைத்தது பள்ளிச் சிறுமியொத்தியின் ஒலிபெருக்கிக் குரல்.  ‘இன்று உலக மகளிர் தினம். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட  வேண்டுமம்மா என்றார் கவிமணி. இப்புவியில்  நாம் பெண்ணாய்ப் பிறக்க  நாம் பெரும் தவம் செய்திருக்க வேண்டும்’ என்று முழங்கிய முகம் தெரியாத அச்சிறுமியின் பேச்சு கேட்டதும் விரக்தியாய்ப் புன்னகைத்தாள் இராணி.  சாபத்தோடு வாழ்வதற்கா தவம் செய்தோம்? தலையில் சுமந்து சென்ற கல்லின் பாரம் இதயத்தை அழுத்தத் தொடங்கியது..
            நிமிர்ந்து பார்த்தாள்.. எதிரே பள்ளிச் சுவரில் கம்பீரமாய்க் கையை உயா்த்தி முழங்கிய முண்டாசுக் கவிஞன் முகம் கவிழ்த்துக் கொண்டது போல் தோணியது.  பக்கத்தில் இயேசுவின் சிலுவையில் குருதி சொட்டிக் கொண்டிருந்தது.
                                    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்         
                              யாதொன்றும் கண்பாடு அரிது. (குறள்.1049)
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக