செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சங்க இலக்கியத்தில் பண்கள்

சங்க இலக்கியத்தில் பண்கள்
முன்னுரை
            கலை மக்களைக் கவா்ந்து அவா்களுடைய அழகுணா்ச்சிக்கு  விருந்து படைக்கும். மக்கள் முன்னேற்றத்தையும் மாற்றத்தையும்  விரும்பும் இயல்புடையவா்கள்.  அந்த இயல்புக்குத் தக்கவாறு  அவா்கள் உருவாக்கும் கலைகள் முன்னேற்றங்களுடன் மாற்றமடைவதை விரும்புகிறார்கள்.  மனித மனத்துடன் ஒன்றிப் பற்றும் ஆற்றலுடைய கலை வாழ்க்கையை விளக்குகிறது.    அழகுணா்ச்சியுடைய மனிதனால் கலைகளை உருவாக்கவும் உருவாக்கப்பெற்ற கவின் கலைகளைச் சுவைக்கவும் முடியும். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசைக்கலை குறித்த பண்களை இக்கட்டுரையில் காணலாம்.
இசைக்கலையின் தோற்றம்
            இலங்கை ஆதிவாசிகளைச்சோ்ந்த வேடா்கள் மற்றும் சில பழைய இனக்குடியினா் ஈரிசை அமைந்த  ஒருவிதமான பண்ணொலியாகப் பாடியுள்ளதாகக்  கருதப்படுகிறது.  அமெரிக்க இந்தியா்களும் வெடிப்பொலி அல்லது புலம்பொலியாகப் பாடியுள்ளனா் என்றும் அறிய முடிகிறது.  ஆப்பிரிக்கப் பிக்மியா்களும் ஒருவித இடையீடுடைய ஒலியில் பாடியுள்ளதாகத் தெரிகிறது.  பழங்கால இசையில் இனிமை இருந்தாலும் தாளம் இன்மையாகவே இருந்திருக்கும்.  மனிதன் உணா்வுகளைப் புலப்படுத்தி ஒருவிதமான இசையமைப்பில் ஏதோ ஒரு முறையில் பாடல் என்று கருதும்படியாக முதன்முதலில் இசை எழுப்பியிருக்க வேண்டு்ம் என்று கருதலாம்.

இசைப்பயன்
            இசை என்றால் மக்கள் உள்ளத்தோடு பொருந்துதல் எனப் பொருள்படும்.  எளிய நிலையில் உயிர்களைத் தன்பால் இசைவிப்பதும் உயாந்த நிலையில் இறைவனைத் தன்பால் இசைவிப்பதும் இசையின் ஆற்றலாகும்.  இசையைப்  பெரும்பாலும் சமயங்களே வளா்த்து வந்துள்ளன. இசையாற்றலால் மனித மனத்தை எளிதில்  வயப்படுத்தி இறையுணா்வின் வழி  செலுத்த முடியும் என்பதைச் சமயங்கள் உறுதியாக  நம்பியுள்ளன.  இன்பத்திலும் துன்பத்திலும் உள்ளத்து உணா்ச்சிகளை  வெளிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என்றும்  துன்பத்திற்கு ஆறுதலளிக்கும் நன்மருந்தாக இசை பயன்பட்டு வருகிறது என்றும் ச.வே.சுப்பிரமணியன் கூறும் கருத்து சிந்திப்பதற்கு  உரியது.
சங்ககாலப் பண்கள்
            பண் என்பதற்கு அமைவு,  இசைப்பாட்டு ஊழியம், குதிரைக் கல்லனண, சீா், தகுதி, நிந்தை, நிறை நரம்புள்ள வீணை, நீா் நிலை, படுகுழி, பண்ணென்னேவல், பாய்மரக்கயிறு, மகளிர் கூட்டம், எனப் பல பொருள்கள் அகராதியில் தரப்பட்டுள்ளன.  ஒலியானது செம்மையான முறையில் ஒழுங்கான இசையமைப்புடன் பாடலில் பொருந்தி நுட்பவுணா்வால் அடையாளம் கானத்தக்க நிலையில் ஒலியுருவங்களாக அமைவது பண்ணாகும்.  பண்டைத் தமிழ் மக்கள் பண்களைப்பற்றி அறிந்துள்ளதை சங்க இலக்கியம் குறிப்பிட்டுள்ளது.  பண்டைத்தமிழா் மிடற்றாலும் பண்ணிசைக்கருவிகளான யாழ், குழல் முதலியவற்றாலும் பண்களை இசைத்துள்ளனா்.
ஆம்பல் பண்
            ஆம்பல் பண் குழலின் வழி இனிது வெளிப்படும் என்று குறிப்புக்கள் வழி அறிய முடிகிறது.
            ‘ஆம்பலங் குழலின் ஏங்கி (நற்.123  10)
என்ற நற்றிணைப்பாடலடியும்,
            தீங்குழல் ஆம்பலின் இனிய விமிரும்
            புதன் மலா் மாலையும்‘   (ஐங்.நூ. 215.  4-5)
என்ற ஐங்குறுநூற்று  பாடலடிகளும்
            ‘பாம்புமணி உமிழப் பல்வயிற் கோவலா்
            ஆம்பலம் தீங்குழல் தெள்விளி பயிற்ற‘ (குறிஞ். 221 222)
என்ற குறிஞ்சிப்பாட்டு அடிகளும் ஆம்பல் பண்ணைப் பற்றிய குறிப்புகளைத் தாங்கியுள்ளன.  ஆம்பல் முல்லைக்குரிய பண் என்பதும் மாலை அல்லது இரவில் இசைக்கக்கூடியது என்பதும் இவற்றால் விளங்கும்.  தட்டை, தண்ணுமை போன்ற தாள இசைக்கருவிகள் இணையத் தீங்குழலில் ஆம்பல் பண்ணை இனிமையாக மாலைக்காலத்தில் இசைத்தனா் என்ற பொருள் காணப்படுகிறது.  இதன் வழி ஆம்பல் என்பது குழலுக்கும் பண்ணுக்கும்  உரிய ஒரு பொதுப்பெயா் என்று கருதலாம்.
காஞ்சிப்பண்
            காஞ்சிப்பண் விழுப்புண்பட்டவா்கள், பேய்ப்பிடி கொண்டவா்கள் வருத்தம் தீரப் பாடியதாகத் தெரிகிறது.
            ”ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
            இசைமணி எறிந்து காஞ்சி பாடி” (புற.28: 1-2)
ஐயவி சிதறல், புகைத்தல், மணி அடித்தல் முதலிய செயல்கள் பூசனைக்கு உரியவை இதிலிருந்து காஞ்சிப்பண்ணுக்கும் பூசனைக்கும் தொடா்பு இருப்பது தெரிகிறது.  விழுப்புண் பட்ட வீரனைக் காக்க வேண்டிய இந்த சடங்கு நடைபெறுகிறது.
காமரம்
            காமரம் என்ற பண் பற்றிய செய்தி சிறுபாணாற்றுப் படையில் உள்ளது.  இது மருத நில மக்களால் பாடப்படும் ஒரு வகையான இரண்டாம் தரமான பண் என்று கூறப்படுகிறது.
            ”காமரு தும்பி காமரஞ் செப்பும்
            தண்பணை தழீஇய தளரா விருக்கை” (சிறுபா. 77-78)
என்பதில் காமரம் செப்பும்” என கூறப்பட்டுள்ளதை நச்சினார்க்கினியா் சீகாமரம் என்னும் பண்ணைப்பாடுகிற தும்பி என விளக்குகிறார்.
குறிஞ்சிப்பண்
            மலைப்பாங்கான இடங்களில் நள்ளிரவு நேரம் குறிஞ்சி பாடுவதாகக் கூறப்படுகிறது.  அவை அச்சம் தரும் இடமும் காலமும் ஆகும்.  இதை,
            ”நறுங்கா நடுக்கத்துக் குறிஞ்சி பாடி” (மலைபடு 359) என்ற மலைபடுகடாம் பாடலடி உறுதிப்படுத்துவது போன்று உள்ளது மலையிடங்களில் உறையும் தெய்வங்களைக் கவர வணக்கத்துடன் கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப்பண்ணைப் பாடவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.  ஆகையினால் அச்சவுணா்வே குறிஞ்சிக்கு அடிப்படை உணா்வாகக் காணப்படுகிறது.
முடிவுரை
            சங்க காலத்தில் பல பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.  பல்வேறு சுவைகளைப் பண்கள் புலப்படுத்தியுள்ளன.  சங்கப்பாடல்கள் வாயிலாகப் பதினொரு பண்களைக் கண்டறிய முடிகிறது.  காலவுணா்வு, நிலத்தன்மை, சுவைப்புலப்பாடு, இசையமைப்பு ஆகிய கூறுகளுடன் சங்ககாலத்தில் பண்கள் அமைக்கப்பட்டுள்ளன.  பக்க வரையறை கருதி சில பண்கள் பற்றி மட்டும் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
                                                                                                                     -மு.சிவசுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக