எட்டுத்தொகையில்
கடவுள் சிந்தனைகள்
முன்னுரை
தெய்வ வழிபாடு, பிதிரா் வழிபாடுயென வழிபாடுகள்
இரண்டு வகைப்படும். முன்னோரை நினைத்து வழிபடுவது பிதிரா் அல்லது தென்புலத்தார் வழிபாடுகளாம். விநாயகா், முருகன், சிவபெருமான், நாராயணன், பார்வதி,
இலக்குமி முதலான பற்பல தெய்வங்களை வழிபாடுவது தெய்வ வழிபாடுகள் தை ஆகும். தெய்வங்களைப் பற்றியும், தெய்வத்துக்குரிய
வழிபாடுகள் பற்றியும் இலக்கியங்களில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களில் தெய்வம் பற்றி சிந்தனைகள்
பொதிந்து காணப்படுகின்றன அவற்றினை வெளிக் கொணா்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முக்கண்ணன்
முக்கண்ணான் அந்திவானத்தைப் போன்ற செந்நிறம்
படைத்தவன். இதனை,
”வெகுவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து
உருஉடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
வந்த மாலை பெயரின்” (அக.360 6-9)
என்னும்
பாடலடியால் அறியலாம். குரால் ஏற்றின் நிறத்திற்கும்
முக்கண்ணான் ஒரு ஒப்புக் காட்டப்பட்டிருக்கிறது. இதனை,
”மிக்கு ஒளிர் தாழ்சடை முவரும் பிறைநுதல்
முக்கண்ணான் உருவேபோல் முரண்மிகு குராலும்” (கலி. 104
11-12)
என்னும்
கலித்தொகையில் வரும் காட்சியின் மூலம் புலப்படுகிறது. முக்கண்ணான் வண்ணம் அந்திவான் வண்ணமும் சண்பகம்
போன்ற பொன்வண்ணமுமாக காட்சி அளிக்கின்றான்.
திருமேனி போன்றே சிவந்து காணப்படுவது இவன் திருமுடியில் இலங்கும் சடை. நெருப்பை ஒத்துக் காட்சியளிப்பதாகப் புறநானூறு, ”எரிமருள் அவிர்சடை” (புற 56 1)
என்று
கூறுகிறது. இவனது சடை மிகவும் நீண்டது நீட்சியினால்
தாழ்ந்து தொங்குகிறது.
”நன்று ஆய்ந்த நீள் நிமிரிசடை
முது முதல்வன்” (புற.166 1-2)
என்கிறார்
ஆவூா் மூலங்கிழார் இது நல்ல ஒளீ வீசித் திகழ்கிறது. இச்சடையிலே நல்ல ஒளியை வீசும் நீரை மறைத்து வைத்துள்ளான்
”ஆறு அறி அந்தணா்க்கு அருமறை பல பகா்ந்து
தேறு நீா் சடைக்கரந்து, திரிபுரம் தீமடுத்து
கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப் போர் மணிமிடற்று எண்கையாய்!
(கலி. 1 1-4)
”பிறங்கு நீா் சடைக்கரந்தான்” (கலி.150.9)
எனவரும் பாடல் அடிகள் அவன் சடையிடை விளங்கும் கங்கையைச்
சுட்டுகிறது. இதனால் இவனுக்குச் ‘சலதாரி‘ ன்று
பெயரும் உண்டாயிற்று நீர் எப்பொழுதும் தங்கியிருந்ததால் அந்தச் சடை ஈரமாகவும் உள்ளது. பால் போன்று
வெள்ளொளி தரும் பிறையை நெற்றியைப் போல பொலியுமாறு தன் திருமுடியிலே கொண்டுள்ளான். பிறை சூடிய பெருமானை,
”கறைமிடற்று அண்ணல் காமா் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல” (புற. 55
4-5)
என்று
புறநானாறு அடிகள் போற்றுகிறது.
மக்கண்ணான் கறைக்கண்டனாக ஆனமைக்குக் காரணம்
கரிய நஞ்சை உண்டமைதான் அதனால் இவனைக் ”காரி உண்புக் கடவுள்” (மலைபடு 83) என்று மலைபடுகடாம்
சுட்டுகிறது நஞ்சை உண்டமை காரணமாக இவனது கழுத்து கருங்கழுத்தாய் மாறி விட்டது.
முக்கண்ணன் தனது வெற்றிக் கொடியாகக் கொண்டிருப்பது
ஏறு ஆகும். அதனால் இவன்
”ஆன் ஏற்றுக் கொடியோன்” (கலி.26. 5) என்று அழைக்கப்படுகின்றான். இவன் ஏறிச் செல்லும் ஊா்தியும் ஏறுதான் அது வெண்ணிற
முடையது வெள்ளை ஏற்றை ஊா்தியாகக் கொண்டு காட்சி தந்தும் அந்த வெள்ளேற்றையே தன் வெற்றிக்
கொடியாகவும் கொண்டு விளங்குகிறான்.
திருமால்
திருமால் கானவா் போற்றும் சிறப்புத் தெய்வமே ஆயினும் எல்லாத்
நிலத்தும் எங்கும் தொழப்படும் தெய்வமும் அவனே என்கின்றனா். ஆலமா் செல்வனாகிய அரனும், கடம்புஉறை காளை ஆகிய முருகனும்,
மற்றும் பல்வேறு இடங்களில் உள எனப் போற்றப்படும் தெய்வங்களும் எல்லாம் அவனே என்கின்றனா்.
”அழல்புரை குழை தொழுநிழல் தரும் பலசினை
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் கால்வழக்கு
அறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேவிய வேறுவேறு பெயரோய் (பரி.4 66-69)
என்பதனால்
எல்லா நிலத்தும் போற்றப்படும் தெய்வமாகவும் இத்திருமால் உள்ளான் என்றும், இத்திருமால்
வணக்கம் எங்கும் பரந்திருந்தது என்றும் கருதலாம்.
‘நெடுவேள்‘ எனப் போற்றும் முருகப் பெருமானைப்
போலவே திருமாலும் நீண்ட பெருவடிவுடையவன் அடைமொழியாகவன்றி “நெடியோன்“ என்னும் பெயராலயே
திருமாலைக் குறித்துள்ளனா். இவன் நீலநிற வண்ணன். நன்றாகக் கழுவப் பெற்ற நீலமணி போன்றும் கார்மேகத்தைப்
போன்றும், கடலைப் போன்றும் கார் இருளைப் போன்றும், கரிய பூவைப் புதுமலா் போன்றும் இவனுடைய
திருமேனி ஒளிரும் இவ்வகையான மேனி அழகினாலே ”மாயோன்“ என்றும் பெயா் இவனுக்கு வழங்குகிறது.
நீலமலை மேலே தோன்றும் இளஞாயிற்றினது வண்ணம் போன்று இலங்குகின்றது இவன்
தலைமேல் அணிந்துள்ள திருமுடி. திருமாலின் மார்பு
மலைக்கு ஒப்பாகக் கூறப்படுகிறது. இம் மார்பிலே
விளங்கும் மாலை மலையின்று இழியும் அருவிபோலக் காண்கிறது. இம்மாலை வல்வகையான வண்ணக் மலா்களால் கட்டப்பபெற்றதாகும். கரிய மாலின் மார்பிலே விளங்கும் இப்பூந்தார் கார்
வானிலே தோன்றும் இந்திரவில் போன்றும் காணப்பெறுகிறது.
திருமால் தனது வலக்கரத்தில் சக்கரத்தையும்
இடக்கையில் சங்கத்தையும் தாங்கியிருக்கிறார். இவை இரண்டும் கார்முகம் தவழும் பருவகால வானத்தில்
அணி செய்து விளங்கும் சூரிய சந்திரா்களின்
இயக்கம் போன்று காணப்படுகின்றன. இதனை,
”பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத்து இயக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையான்“ (பரி.13. 9)
என்னும்
பாடலடிகள் விளக்கும்.
திருமாலின் கொடியாகவும் ஊா்தியாகவும் அமைந்துள்ளது
கருடப்புள் ‘செவ்வாய் உவணத்து உயா்கொடியோயே‘ எனத் திருமால் விளக்கப்படுகிறார். இக்கொடியைப் ”புட்கொடி” (புற.56 .6) என்றும் ”சேவற்கொடி”
(பரி.1.11) என்றும் குறிக்கும் இடங்களும் உண்டு.
”ஏஎா் வயங்குபூண் அமரரை வௌவிய அமிழ்தின்
பயந்தோள் இருக்கண் களைந்த புள்ளினை,
பயந்தோள் இடுங்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயா்கொடிச் சேவலோய்!
(பரி 3. 15-18)
எனவரும்
பரிபாடல் அடிகள் கருடன் ஊா்தி கொடி என்னும் இருவகையாகவும் திருமாலுக்கு உறுப்பாக இருத்தலை
விளக்குகின்றன. கருடக் கொடியைத் தவிர பலதேவனுக்குரிய
பனைக்கொடி நாஞ்சில் படை, யானை ஊா்தி ஆகியவற்றைக்
திருமாலுக்குரிய கொடிகளாகக் குறிப்பிட்டு அவற்றுள் எல்லாம் உயா்வு பெற்று கருடக்கொடி
என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது (பரி.4
36-42)
இந்திரன்
இந்திரன் வானுலகத் தேவா்களின் அதிபதி இவன்
சுவா்க்க லோகத்திற்கு அதிபதியாதலின் வீர சுவா்க்கம் புகும் வீரா்கள்
இவளது வானுலகிற்கு வருவா் சுவா்க்க உலகிற்கு வருவாரை இந்திரன் பிற தேவா்களுடன்
சென்ற எதிர் கொள்வான் என்பது ஒரு நம்பிக்கை வானத்தின் கண் மழைக்காலத்தில் தோன்றும்
பல வண்ண வானவில்லை ‘இந்திரவில்‘ என்பா்
இந்தியன் கவுதம முனிவரின் பந்தினி அகலிகையை
விரும்ப அம்முனியன் அசிரமத்தை விட்டு நீங்கிய சமயம் வார்த்துச் சென்று அவளைப் புணா்ந்ததும்,
மின் முனிவா் வருகையால் அஞ்சிய இந்திரன் பூனை வடிவில் மறைந்து வந்ததும், நிகழ்ந்தவை
அறிந்து சினங்கொண்ட கவுதமன் சாபத்தால் அகலிகை
கல்லுருவம் பெற்றதும் எங்கும் பரந்து பேசப்படுமு் ஒரு புராண வரலாறு இதனை விளக்கும் விதமாக
”இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும்
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்” (பரி.19. 50-53)
என
பரிபாடல் அடிகள் விளக்குகின்றது.
கொற்றவை
காட்டுள் வாழும் மறவா்களால் போற்றப்படும் வெற்றிமகள் கொற்றவை இவள்,
”ஒங்கு புகழ் கான் அமா் செல்வி” (அக.345 .3-4)
”பெருங்காட்டுக் கொற்றி” (கலி.89.8)
விடா்முகை அடுக்கத்து விறல் கெழுலி” (குறுந்.218.1)
என்றும்
அழைக்கபடுகின்றாள். கொற்றவையின் கோலம் பற்றிய குறிப்பு ஒன்று மகளிரின் தைந்நீராடல்
பற்றி கூறும் பரிபாடல் பகுதியில் காணப்படுகிறது தைந்நீராடும் பொழுது ஒரு பெண்ணுக்கு
மற்றொரு பெண் நெற்றியில் செந்நிறத் திலகம் இட்டு இவள் கொற்றவை போலக் கனல்வாழி படைத்தாள்
என்று பாராட்டினாளாம் என்ற இச்செய்தியை
”நெற்றி வழியா நிறை திலகம் இட்டாளே
கொற்றவை கோலம் கொண்டு ஓா்பெண்” (பரி.11.
99-100)
என்னும்
பரிபாடல் அடிகள் விளக்குகின்றன.
முடிவுரை
எட்டுத்தொகையில், முக்கண்ணன், திருமால், இந்திரன்,
கொற்றவையென பற்பல தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் பொதிந்து காணப்படுகின்றன. தெய்வத்தின் வரலாறு உருவம், சிறப்பு அம்சங்கள்,
வழிபடும் விதம், போன்ற சிந்தனைகள் அதிகமாக காணப்படுவதினை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.
-அ.ரா.பானுப்பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக