செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அற இலக்கியங்களில் விருந்தோம்பல்

அற இலக்கியங்களில் விருந்தோம்பல்
முன்னுரை
            இயற்கை இன்பத்தில் ஈடுபட்டிருந்து புலவா்கள் உள்ளம் அடுத்த சில தலைமுறைக்கு அறங்களைப் பாடும் நிலைக்கு ஆளாகியது.  அந்தக் காலம் அற இலக்கியகாலம் என அழைக்கப்பெற்றது.  தமிழா்களின் பண்பாடுகளில் போற்றத்தக்க ஒன்று விருந்தோம்பல்.  புதியராய் வருபவா்களுக்கு உணவளித்து உபசரித்தல் எனும் கோட்பாடு தமிழகத்தில் இருந்து வந்தது.  அக்காலத்தில் ஈகை கோட்பாடு வளா்க்கப்பெற்றது போல விருந்தோம்பல் கோட்பாடும் வளா்க்கபெற்றது அறஇலக்கியங்களில் விருந்தோம்பல் பண்புகள் குறித்து ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
விருந்தோம்பல்
            விருந்தினா் என்பவா் நாம் கருதுவது போல் உற்ற உறவினா் அல்லா்.  எதிர்பாராமல் பசியால் இல்லம் நோக்கி வருபவரை வரவேற்று உபசரித்து தான் விருந்தினா் எனப்பெறுவா்.
            “விருந்தினரை புறம்  தருதல்” என்று  பரிமேலழகரும் “உண்ணும் காலத்து புதியோர் வந்தால் பகுத்துண்ண வேண்டும்“ என்று மணக்குடவரும் வளக்குவா்.  அக்காலத்தில் உணவு விடுதி எதுவும் ஒன்று கிடையாது.  சில இடங்களில் தான் சத்திரம் சாவடிகள் இருந்தன.  ”அக்கால மக்கள் ஊா் விட்டு ஊா் பயனம் மேற்கொண்ணும் போது பேருந்து போன்ற நவீன வசதிகள் எதுவும் கிடையாது.  கால்நடையாகவும், சிறுவண்டியாலும் பயணம் மேற்கொண்டனா்.  பசித்தல் என்பது இயற்கை.  பயணம்செல்லும் போது அறிமுகமான உறவினா்கள் இருக்க வாய்ப்பில்லை அறிமுகம் இல்லாத மக்களுக்கு உணவு அளித்தலே அக்காலத்து மக்களின் விருந்தோம்பலின் நோக்கமாகும்.
திருக்குறளில்  விருந்தோம்பல்
            விருந்தோமபல் “தம் புதல்வரிடத்து வைக்கும் அன்பைப் போலவே பிறரிடத்தும் அன்பு வைத்து ஓம்பல்” என்று பரிதியும் விளக்குவா்.  தம் வீட்டிற்கு வருகை தந்த விருந்தினரை வெளியே உண்ணாமல் பசியோடு அமா்த்தி வைத்துவிட்டுச் சாவையே வராமல் செய்யும் அமிழ்துநிகா் உணவாக இருந்தாலும் தனியே உண்ணுதலை விலக்குதல் வேண்டும்.  இதனை,
            ”விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
          மருந்துஎனினும், வெணடற்பாற்று அன்று”   (திருக்.82)
என்னும் குறள் எடுத்தியம்புகிறது.  கணவன் மனைவி இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையின் நோக்கமே வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்பாக வரவேற்று அவா்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதே நல்ல இல்லறமாகும்.  இதனை வள்ளுவம்,
            ”இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
            வேளாண்மை செய்தற் பொருட்டு” (திருக்.81)
என்று குறள் கூறுகின்றது.  வீட்டிற்கு வரும் விருந்தினரை மன மகிழ்ச்சியுடளும், முகமலா்ச்சியுடனும் வரவேற்று ஓம்புவோனுடைய இல்லத்தில்  செல்வத்தின் தலைவ திருமகள் மனம் விரும்பிக் குடி அமா்வாள் என்பதை,
            ”அகன்அமா்ந்து செய்யாள் உறையும் முகன் அமா்ந்து
          நல்விருந்து ஓம்புவான் இல்” (திருக்.84)
என்னும குறள் மூலம் அறியலாம்.  செல்வம் பல இருந்தும் வீட்டிற்கு வருகை தரும் விருந்தினரை வரவேற்று போற்றத் தெரியாமல் இருத்தல் ஏழ்மையே ஆகும்.  விருந்தோம்பலைச் செய்யாத அறிவற்றவா்கள் எவ்வளவு பணம் படைத்தவா்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவா்களாகவே கருதப்படுவார்கள்.  என்னும் கருத்தினை,
            ”உடைமையுள் இன்மைவிருந்து ஓம்பல் ஒம்பா
          மடமை மடவார்கண் உண்டு”  (திருக்.89)
என்ற குறளின் வழி அறியலாம்.  விருந்தோமபலை வள்ளுவா் ஒரு மலருச்கு இணையாக கூறுகின்றார்.  அனிச்சம் எனப்படும் மிக மெல்லிய பூ, முகா்ந்தவுடன் வாடிவிடக் கூடியது.  அதுபோல் தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினா் வாடிவிடுவார்.  இதனை,
            ”மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
          நோக்கக் குழையும் விருந்து”  (திருக்.90)
என்னும் குறட்பா தெளிவுபடுத்துகிறது.
நாலடியாரில் விருந்தோம்பல்
            திருக்குறளுக்கு  அடுத்த நிலையில்  நாலடியார் வைத்துப் போற்றப்படுகின்றது.  ‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி‘ என்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணப்பெறும் பெருமைக்குரியது  ஏழையா் மற்றவரை விருந்துக்கு  அழைத்து வீட்டில் துணைவியாரைக் கொண்டு  உணவு பரிமாரச் செல்வா்.  செல்வந்தரோ அவ்வாறு செய்வதில்லை.  காரணம் ஏழையரை அழைத்து அவா்தம் வீட்டில் தம் துணையாரைக் கொண்டு உணவு பரிமாறினால் துணைவியைக் காணவே கற்பழியும் எனக் கருதி வீட்டு வெளியிலே வைத்துச் சோறு போடுவா் எனவே செல்வந்தா் விருந்தோம்பலை கைவிடுதல் நன்று என்று நாலடியார் குறிப்பிடுகின்றது.  இதனை,
            ”யாம் ஆயின் எம்இல்லம் காட்டுதும் தாம்ஆயின்
          காணவே கற்பு அழியும் என்பார்போல் நாணி,
          புறங்கடை வைத்து ஈவா்சோறும் அதனால்
          மறந்திடுக செல்வா் தொடா்பு” (நாலடியார்.30 .3)
என்ற பாடல் மூலம் அறியலாம்.
நான்மணிக்கடிகையில் விருந்தோம்பல்
            விளம்பிநாகனார் நான்மணிக்கடிகையில் விருந்தோம்பல் பற்றிய கருத்துகளை சிறு, சிறு குறிப்புகளாகக் கொடுத்திருக்கின்றார்.  விருந்தோம்பலுக்கு அன்புணா்ச்சியே அடிப்படையாகும்.  அன்பற்றவா் முன்பு சென்ற விருந்தினா் முகம் தளா்ந்து வாட்டமடைவா்.  இதனை,
            ”நன்றிசாம் நன்று அறியாதார் முன்னா், சென்ற
          விருந்தும் விரும்பிலால் முன்சாம்” (நா.க.44)
என்ற பாடலடிகள் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்முகத்துடன் உணவளித்தால் விருந்து சிறப்படையும்.  இலையில் உணவுப் பொருட்களை பரப்பி இன்முகத்துடன் உணவு அளிக்கும் போது விருந்தினா் மனம் மகிழ்வா் என்கிறது  நான்மணிக்கடிகை.
            ”கன்று  ஊட்ட நந்தும் கறவை கலம் பரப்பி
          நன்று ஊட்ட நந்தும் விருந்து” (நா.க.60)
என்ற பாடலடியின் வழியல் அறியலாம்.
இனியவை நாற்பதில் விருந்தோம்பல்
          பூதஞ்சேந்தனார் இனியவை நாற்பதில் விருந்தோம்பல் பற்றிய பண்புகளை கூறியுள்ளார்.  ஒருவன் பசியால் தன்னுயிர் இழக்கும் நிலையில் தவித்தாலும் உண்ணத் தகாதவா் கை உணவை உண்ணக்கூடாது.  இதனை,
          ”உயிர்ச்சென்று தான்படினும் உண்ணார் கைத்துண்ணாப்
          பெருமைபோற் பீடுடையது இல்”  (இன்நா.21)
என்னும் பாடலடியால் அறியலாம்.
இன்னா நாற்பதில் விருந்தோம்பல்
            கபிலா் இன்னா நாற்பதில் அந்தணா் வீட்டில் விருந்துண்டால் துன்பத்தைத் தரும் என்கிறார். இதனை,
            ”அந்தணா் இல் விருந்தூண் இன்னா”   (இன்நா.1)
என்றும் பகுத்துண்ணும் தன்மையில்லாதவரிடத்தில் சென்று உணவை உண்ணுதல் துன்பத்தைத் தரும் என்கிறார்.  இதனை,
            ”பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா” (இன்நா.21)
என்ற அடிகள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
பழமொழியில் விருந்தோம்பல்
            செல்வச் செழிப்புடையவா் மிகுந்த ஏழை வீட்டிற்கு விருந்தினராகச்  செல்வதைக் கைவிடுதல் வேண்டும்.  ஏனெனில் ஏழை, செல்வந்தா் நிலை கருதித் தன் எல்லை கடந்து விருந்து ஓம்புவதால் துன்புறுவார் என்னும் செய்தி,
            ”நல் கூா்ந்தவா்க்கு நனிபெரியார் ஆயினார்
          செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா ஒவ்வது
          இறந்து அவா் செய்யும் வருத்தம் - குருவி
          குரங்கு அறுப்புச் சோறும் குடா்” (பழ.100)
என்ற பாடலில் பளிச்சிடுகிறது.
ஆராசக் கோவையில் விருந்தோம்பல்
            பெருவாயின் முள்ளியார் ஆசாரக்கோவையில் விருந்தோம்பலை ஒழுக்கத்தின் அடிப்படையில் வலியுறுத்துகிறார் எனலாம்.  என்றும் ஒழுக்கத்தில்  தவறாதவா் விருந்தினா், வயதினால் மூத்தவா், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள், ஆகியோர்க்கு உணவுப் பொருட்களை பகுத்துக் கொடுத்து உண்பா்.  இதனை,
            ”விருந்தினா் மூத்தோர் பசுசிறை பிள்ளை
          இவா்க்  கூண்கொடுத்த தல்லால் லுண்ணரே யென்றும்
          ஒழுக்கம் பிழையா தவா்”  (ஆ.கோவை.21)
என்ற  பாடல் வழியே குறிப்பிட்டுச் செல்கிறார்.
சிறுபஞ்ச மூலத்தில் விருந்தோம்பல்
            பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் தன்னிடமுள்ள உணவுப் பொருட்களை பலருக்கும் பகுத்துக் கொடுத்து பின்பு ஏஞ்சியதைத் தான் உண்பவன் நீண்ட நாள் வாழ்வான்.  இதனை,
            ”பஞ்சப்பொழுதுதகத்து பார்த்து  ண்டான் காவாதான்
          அஞ்சா  துடை படையுட் போந்  தெறிவான் - எஞ்சாது
          உண்பதுமுன்  ஈவான் குழவி பலிகொடுப்பான்
          எண்பதின் மேலும் வாழ்வான்”  (சிறு.ப.79)
என்ற பாடலின் வழி அறியலாம்.
 ஏலாதியால் விருந்தோம்பல்
            ஏலாதியால் விருந்தோம்பல் தமிழ்ப் பண்பாடு நோக்கில் இடம் பெற்றுள்ளது எனலாம்.  ஏனெனில் நாள்தோறும் விருந்தினார்களாக  வருபவா்களுக்கு இன்சொல் கூறி வரவேற்றல், மனம் கலந்த அன்பைக் காட்டுதல் தங்கும் இடம் கொடுத்தல் ஆடை உணவு முதலானவற்றை அன்புடன் வழங்குதல் மென்சொல் கூறல் இவற்றைச் செய்பவரை தேவா் தாம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்.  இதனை,
            ”இன்சொல அளாவல் லிடமினிதூண் யாவா்க்கும்
          வன்சொற் களைந்து வகுப்பானே மென்சொல்
          முருந்தே  ய்க்கும் முட்போல் லெயிற்றினாய்- நாளும்
          விருந்தே ஏற்பா் விண்ணோர் விரைந்து” (ஏலாதி.7)
என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
முடிவுரை
            மனிதன் தன்னுடைய நெறியான  வாழ்விற்கு  வழி வகுப்பது நீதி நூல்களாகும்.  எனவே சமுதாயத்தில் நெறிபட  வாழவேண்டுமாயின் அற இலக்கியங்களில் உள்ள அரிய பல கருத்துக்களைக் கற்ற தன்னுடைய வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  சங்க காலத்தில் இல்வாழ்க்கையால்  அகப்புறப் பண்பாடாக விளங்கிய விருந்தோம்பல் சங்கம் மருவிய காலத்தில் அற இலக்கியங்களில் அறம் தழுவிய இல்வாழ்க்கைப் பண்பாடாக மாறியிருக்கிறது என்பதை அறஇலக்கியங்களில் காணலாகும் விருந்தோம்பல் பற்றிய கருத்தாக்கங்காளல் அறியலாம்.
-கு.கங்காதேவி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக