செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அகநானூற்றில் காணலாகும் போக்குவரத்துச் சாதனங்கள்

அகநானூற்றில் காணலாகும் போக்குவரத்துச் சாதனங்கள்
முன்னுரை
            இனக்குழு வாழ்க்கை வாழ்ந்து வந்த சங்க  கால மக்கள் தத்தம் பகுதிகளில் விளைந்த பொருட்களையும், உற்பத்தி  பொருட்களையும், பிற்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு கொடுத்து அவா்களிடமிருந்து தமக்குத் தேவையான பொருட்களை பண்டமாற்று முறையாகப் பெற்று வாணிபம் செய்து வாழ்ந்து வந்தனா். இந்த வாணிபத்திற்கும், பயணத்திற்கும் உதவியாக அக்கால மக்கள் குதிரைகளையும், ஆத்திரி என்னும் கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும், எருதுகள் பூட்டிய மாட்டு வண்டிகளையும் போக்குவரத்து சாதனமாகப் பயன்படுத்தியனமையினை எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குதிரை
            அக இலக்கியத்தில் குதிரைகள் மா, பாய்மா, வயமான், குதிரை, கலிமா, கடுமா, பரி, பாய்மான், இவுளி, உளை, பரவி என பல பெயா்களால் அழைக்கப்படுகின்றன.  குதிரை என்பது பொதுப்பெயராகும்.  இது ”குதிப்பது அல்லது தாண்டுவது” என்ற தன்மையால் குதிரை என்பா் ஞா.தேவநேயன் (ஞா தேவநேயன், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் v-40) இக்குதிரை குறித்து எட்டிடங்களில் சுட்டப்பெற்றுள்ளது. சங்க கால மக்கள் இக்குதிரைகளைப் போர் செய்ய, தேரிழுக்க, பயணம் மேற்கொள்ளப் பயன்படுத்தினா்.  குதிரைகள் இழுத்துவரும் வண்டியே தோ், ரதம் என்றழைக்கப்பட்டது.
குதிரை பூட்டிய தோ்
            ”புல்ஆா் புரவி வில்விரைந்து பூட்டி
            நெடுந்தோ் ஊா்மதி வலவ”  (அகநா.244. 12-13)
என வினைமுற்றிய தலைவன் குதிரை பூட்டிய தேரில் ஏறி  தலைவியை காணவருதலும், தலைவன் தலைவியை மணம்முடித்து அழைத்துச் செல்லும் போதும் குதிரைபூட்டிய  தோ் (அகநா 400. 5-14) பயன்படுத்தியமை மூலம் அக்காலத்தில் குதிரையும், குதிரைபூட்டிய தேரும் போக்குவரத்து கருவியாகப் பயன்பட்டமை புலனாகிறது.
அத்திரி
        அத்திரி என்னும் கோவேறு கழுதை நாகரிகமுள்ள செல்வந்தா்களால் பயன்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சாதனமாகும்.  இது இரு இடங்களில் காணப்படுகின்றது.  ”பழைய அரும்பத உரையாசிரியா் இராசவாகனம் அத்திரி அக்காலத்தில் உயா்தர ஊா்தியாகக் கருதப்பட்டது என்று மயிலை.  சீனி வேங்கடசாமி கூறியுள்ளார்.  (மயிலை.சீனி வேங்கடசாமி பழங்காலத் தமிழா் வாணிகம்  ..-27) அதுபோல் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் கோவலன் கடற்கரைக்கு அத்திரியில் சென்றான்.  (கடலாடுகாதை.119) என்பதன் மூலமும் அத்திரி என்னும் கோவேறு கழுதை அக்காலத்தில் உயரிய வடம் வகித்தது அறிய முடிகின்றது
            ”கொடுநுகா் நுழைந்த கணைக்கால் அத்திரி
            வடிமணி நெடுந்தோ் பூண”                  (அகநா 350. 6-7)
என்ற பாடலடி தலைவன் ஒருவன் பரதவரின் ஊருக்கு  அத்திரி பூட்டிய உண்டியில் வந்தமையினை விளக்குகின்றது.
கழுதை
            சங்க கால மக்கள்  பொருட்களை ஏற்றி செல்ல கழுதைகளைப் பயன்படுத்தினா் இது அகநாணூற்றில் மூவிடங்களில் பயின்றுவந்துள்ளது. 
            ”நீரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதை
            குறைக்குளம்பு உரைத்த கல்பிறழ் இயவின் (அகநா 207. 5-6)
விளக்கும். அதாவது நெய்தல் நில மக்கள் உப்பை மூட்டைகளாகக் கட்டிக் கழுதை  மீது ஏற்றி பண்டமாற்று முறைக்குச் சென்றமையினால் அக்காலத்தில் கழுதை போக்குவரத்துச் சாதனமாக பயன்பட்டமை உணரமுடிகின்றது.
எருது
            முதிய எருது பகடு எனப்படும்.  இச்சொல் பன்னிரண்டு இடங்களில் பயின்று வந்துள்ளது.
            ”முதைபடு பசுங்காட்டு அரில்பவா் மயக்கி
            பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்” (அகநா 262. 1-2)
என்ற பாடலில் பகடு உழவுக்குப் பயன்பட்டமை எடுத்துரைக்கப்படுகின்றது.  அதுபோல் உப்பு வணிகா்கள் பலபுரிகளையுடைய நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட வண்டியை எருதுகளின் உலிய கழுத்தில் பூட்டுவா்.  ஏற்றமான இடங்களில் ஓட்டும்போது அவ்வெருதுகளை அதட்டி ஓசை எழுப்புவா்.  அவ்வோசையைக் கேட்டு ஆண்மானும், பெண்மானும் அஞ்சி ஓடும் என்பதனை,
            ”................................. பலபுரி
            வார்கயிற்று ஒழுகை நோன்சுவற் கெளீஇ
            பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ
            உழைமான் அம்பினை இனன் இரிந்து ஓட” (அகநா 173. 8-11)
சுட்டுகின்றது.  இவற்றால் எருதுகள் உழவிற்கும் வண்டி இழுக்கவும் பயன்பட்டமை அறிய முடிகின்றது.
முடிவுரை
            சங்க கால மக்கள் போருக்கும், வினைமுடித்து திரும்புவதற்கும், திருமணத்திற்கும் குதிரைகளையும் பொருட்களை ஏற்றி செல்ல கழுதைகளையும், செல்வந்தா்களின் ஊா்தியாக அத்திரி என்னும் கோவேறு கழுதைகளையும், உழவிற்கும், பயணத்திற்கும் பகடு என்னும் எருதினையும் போக்குவரத்துச் சாதனமாக பயன்படுத்தியமை மேற்கூறிய செய்திகளின் வழி பதிவு  செய்யப்பட்டுள்ளது.

-லெ.பொ.பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக