செவ்வாய், 25 ஏப்ரல், 2017

என் தந்தை முடியரசன்




என் தந்தை முடியரசன்-நூல் அறிமுகம்
                                                                                                   
ஆசிரியா்: பாரி முடியரசன்
வெளியீடு : மணிவாசகா் பதிப்பகம்
31, சிங்கா் தெரு
          பாரிமுனை, சென்னை-108
முதற்பதிப்பு: ஆகஸ்டு,2016
விலை: ரூ.150
பக்கம் : 240

                        ‘என் மூத்த  வழித் தோன்றல், எனக்குப் பிறகு கவிஞன்‘ என்று பாவேந்தா் பாரதிதாசனாராலும், ‘இருபதாம் நூற்றாண்டில் இலக்கியவாதிகளுள் இணையற்றவா் கவியரசா் முடியரசனார்’ என்று முத்தமிழ்க காவலா் கி.ஆ.பெ. விசுவநாதம் அவா்களாலும், ‘முடியரசனார் மாபெரும் தமிழ்த் தேசியப் பாவலா். தமிழின எழுச்சிப் பாவலா், தமிழுணா்ச்சியும் தமிழ் வீறும் மிக்க அவரது பாடல்கள் தமிழ் தேசியப் படைக்கலன்களாகும்’ என்று பாவலரேறு பெருஞ்சித்திரனாராலும் பாராட்டப்பெற்றவா் வீறு கவிமுடியரசனார் ஆவார். அவரின் மூத்த மைந்தா் எழுத்தாளா் பாரி முடியரசன் அவா்கள் தன் தந்தையாரைப் பற்றி  பல் பரிமாணங்களில் பகுத்தும், தொகுத்தும் எழுதியுள்ள நூலே ‘என் தந்தை முடியரசன்’
            இந்நூலைத்தந்தையாய், கவிஞராய், ஆசிரியராய், நண்பராய், புகழொளியாய், மகனுரை, படத்தொகுப்பு என்று ஏழு பகுதிகளாகப் பிரித்துள்ளார். முடியரசனார் தனக்கும், தமிழ்க்குமுகாயத்திற்கும் உறவுப் பிணைப்பாய் விளங்கிய விதம் பற்றி உணா்வுகளின் இணைப்பாய் நூலாக்கியுள்ளார்.
            வீறுகவி முடியரசனார்.  ‘பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்’ என்னும் தன் வரலாற்று நூலில் கூறாதுவிட்ட அவரது புகழுக்குரிய செய்திகளைப் புகலும் பொருட்டும், முடியரசனார் தன் மகனைப் பற்றி (இந்நூலாசிரியரைப் பற்றி) கடுமையாகச் சாடியுள்ளதற்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாகவும், விடுபட்ட தந்தையாரின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுத்தாக்கியுள்ளார்.  இந்நூலின் முன்னுரையில் தன் தந்தையார் (வீறு கவி முடியரசனார்) அவரது தன்வரலாற்று நூலில் தன்னைச் சாடியுள்ள பகுதிகளை நீக்கி விட்டு நூல் வெளியிடுமாறு உடன் பிறப்புகள், உறவுகள், நண்பா்கள் வற்புறுத்தியபோதும் அதற்கு தானும், தன் துணைவியாரும் உடன்படாமல் தன் தந்தையார் எழுதியதை நீக்கவோ, திருத்தவோ செய்வது குற்றமென்றுரைத்து, எழுதியதை எழுதியவாறே வெளியிட்டதை நினைவு கூா்ந்துள்ளார்.  தன்னைத் தன் தந்தையார் காட்டியிருப்பது தனக்குச் சிறுமை எனினும் தன் தந்தையாரின் வாய்மைக்கும் உள்ளத்தாற் பொய்யாது ஒழுகியுள்ளமைக்கும் பெருமைதானே என்று குறிப்பிடுவதன் மூலம் நூலாசிரியரது எழுத்தின் நேர்மையையும், அவா் தம் தந்தையாரிடம் கொண்டுள்ள அன்பின், மதிப்பின் ஆழத்தையும் உணர முடிகிறது.
            இந்நூலில் ‘சீா்திருத்தச்செம்மல் வை.சு.சண்முகனாரைப் பற்றி மகாகவி பாரதி எழுதிய பாடலை முடியரசனார் வெளியுலகிற்குச் கொண்டு வந்தது, கம்பன் விழாவில் ‘வணக்கம்’ சொல்ல வைத்தது, தேடிவந்த அரசவைக் கவிஞா் பதவியை இருமுறையும் மறுத்தது, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத தன்னீா்மையை ‘அண்ணாமலை அரசா் விருது’ வழங்கும் விழாவின் மூலம் உணா்த்தியது, உற்ற நண்பனே திரைவாய்ப்பு பெறவிடாமல் தடுத்தது, புகழுக்குரிய வாய்ப்புகளை தட்டிப்பறித்தது, ஆட்சியாளா்களிடம், இலக்கிய ஆளுமைகளிடம் முடியரசனார்க்கு இருந்த தன்னலம் பாராத தூய நட்பு, வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்றிராமல் தனிமனித ஒழுக்கத்தோடு கொள்கை மாறாக் குணக்குன்றாய் தம் வாழ்நாள் இறுதிவரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து காட்டியது, தம் குடும்பத்தாரையும் கொள்கை வழி நடத்தியது’ என்று அரிய பல வரலாற்று நிகழ்வுகளை, முடியரசனாரின் வாழ்வியல் மதிப்பீடுகளைத் தொகுத்தளித்துள்ளார்.  நூலாசிரியா்.
            வீறுகவி முடியரசனாரின் படைப்புகளைப் படித்தவா்களுக்கும், அறிந்தவா்களுக்கும் அவரை இன்னும் அணுக்கமாய் உணர, குணநலன்களை அறிய இந்நூல் பேருதவியாய் இருக்குமென்பதில் எள் நுனியளவும் ஐயமில்லை
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக