புலமையும், வறுமையும், செழுமையும்
முன்னுரை
ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது வாழும் அன்றில்
பறவைகளைப் போல நம் நாட்டில் புலமையும் வறுமையும் என்றுமே பிரியாத ஒன்றெனவே இலக்கியங்கள்
சுட்டுகின்றன. அறிவுத்திறமை வாய்க்கப் பெற்ற புலவா்களிடம் செல்வச் செழிப்பு என்ற ஒன்ற
இல்லாமலே காணப்பட்டது.
அதேபோல் செல்வந்தா்களிடம் அதீத புலமை என்பதும்
அத்தி பூத்தலைப்போல அரிதாகவே காணப்பட்டது. சில புலவா்கள் புலவரும், வறுமையும் என்ற
கட்டுக்கோப்பை உடைத்து தங்களது புலமையால் செல்வச் செழிப்பைப் பெற்று செழுமை படைத்தவா்களாகவும்
இலக்கியத்தில் காணப்பட்டுள்ளனா். அத்தகைய புலவா்களின்
வறுமையையும், புலமையையும், செழுமையையும் பற்றிக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புலமை
பாடலில் வல்ல புலவா்கள் பலா் அக்காலத்தில்
வறுமையுடனே காணப்பட்டனர். சிலா் தான் திறமைக்கு
ஏற்ற செழுமையோடு வாழ்க்கை நடத்தினா். அரசனுககு
அறிவுரை கூறும் அளவில் அரசவையில் இருக்கை பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்த புலவா்கள்
பலரும் இங்கு தான் இருந்துள்ளனா்.
பல புலவரை வறுமை வாட்டினாலும் அரசனிடம்
பரிசில் பெறச் சென்ற நிலையிலும் அரசன் இவா்களுக்கு ஏற்ற பரிசிலைக் கொடுக்காது, இவா்களின்
புலமையை ஆராயாது கொடுக்கும் பரிசிலையும் வேண்டாம் என மறுத்துத் தன் புலமை மீது மதிப்புக்
கொண்டு வேறு மன்னனை நோக்கிச் சென்ற புலவா்களும் உண்டு.
பாடி நாட்டைப் பெறலாம்
பாரி ஆண்ட பறம்பு நாட்டைப் பற்றிச் சுட்டும் பொழுது
அத்தகைய ”செல்வ வளம் மிக்க நாட்டை எதிரிகள் படையெடுத்துச் சென்றால் வெல்ல இயலாது என்றும்
அதே நேரத்தில், பாடலில் புலமை பெற்ற பாணரும், விறலியரும் ஆடியும், பாடியும் சென்றால்
பறம்பு மலையைப் பெற்று விடலாம் என்றும் சுட்டுகின்றனா்.
மன்னா் உங்களுக்குத் தன் நாட்டைப் பரிசளித்து விடுவான்” என்று ஒரு புலவா் சுட்டுகின்றார். இப்பாடலில் இருந்து ஒரு நாட்டையே தன் பாட்டுத் திறத்தாலும்,
ஆடல் திறத்தாலும் பெற்றுக் கொள்ளும் அளவிற்குப் புலமை அக்காலப் பாணா் விறலியலிடம் காணப்பட்ட
திறம் மெய்ப்பிக்கப்படுகின்றது.
மற்றொரு பாடலில் தன் வறுமையைப் போக்க ஒரு
மன்னனை நாடிச் சென்ற புலவனுக்கு அம்மன்னன் அவன் புலமையை அறியாது தினமும் வந்து கையேந்தும்
இரவலனில் ஒருவன் என்றெண்ணி ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்து அனுப்ப, அதற்கு புலமை பெற்ற
அப்புலவன் ”உயா்ந்த தந்தங்களை உடைய வலிமையான யானையைப் பெறுவதாயினும் உள்ளன் பில்லாது
தரும் பரிசிலை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். விருப்புடன் இனிதாகச் சிறிய அளவான குன்றிமணி
அளவு பரிசிலைக் கொடுத்தாலும், நிறைவாகக் கொண்டு ஏற்றுக் கொள்வேன், கூரிய வேலையுடைய
குமணனே முறையாகக் கொடுத்தலை வேண்டுகிறேன். நீ என் முகம் பாராது, என் திறமை பாராது கொடுக்கும்
பரிசில் எமக்கு வேண்டாம்” (புறநா 154) என அப்புலவன் மறுத்துரைக்கின்றான்.
மற்றொரு புலவன் தன் வீட்டில் உணவுக்காக
அரிசியை இரவலாகக் கேட்டு வர அம்மன்னனோ அவனது வறுமையை அறியாது பெரிய யானையைப் பரிசிலாகக்
கொடுக்கின்றான். அதனால் அப்புலவன் நீ என் தகுதியறியாது கொடுக்கும் இப்பரிசில் எனக்கு
வேண்டாம் என மறுதலிக்கும் விதமாக இவ்யானை நான் உனக்கு அளிக்கும் பரிசில் என
”இரவலா் புரவலை நீயும் அல்லை
புரவலா் இரவலா்க்கு இல்லையம் அல்லா்
இரவலா் உண்மையும் காண்இனி இரவலா்க்கு
ஈவோர் உண்மையும் காண்இனி நின்ஊா்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையும் பரிசில்
கடுமான் தோன்றல்! செல்வன் யானே”
என்றவாறு
அவனுக்கே, அவன் கொடுத்த பரிசிலாகிய யானையை அளிக்கின்றான். இதிலிருந்து அப்புலவனின் புலமை வெளிப்படுகின்றது.
மற்றொரு புலவன் மன்னன் பரிசில் கொடுக்காது
காலம் தாழ்த்தவே, நீ கொடுக்கும் சிறிதளவு பொருளேயாயினும் அதனை அளவில் சிறிது என எண்ணி
இகழமாட்டேன். நி கொடுக்காவிட்டாலும் உன்னை
இகழமாட்டேன். உனது ஆண்மையையும், வீரத்தையும் புகழ்ந்தே பாடுவேன் எனபாடித் தன் புலமையை
அப்புலவன் வெளிப்படுத்துகின்றான். புலமை பெற்றிருந்த புலவா்கள் அக்காலத்தில் வறுமையுடனே
இருந்தனா். ஏனெனில் அவன் வீட்டு அடுக்களையில்
உணவு சமைத்தல் என்பதைப் பல நாளும் மறந்து ஒரு வேளை உணவுக்கே வழியற்ற சூழலில் இடுக்களைக்குச்
சென்று அடுப்பை மூட்டுதல் என்பது அரிதாகவே காணப்பட்டது. அதனால் ”அவன் வீட்டு அடுக்களையில்
நாய் படுத்துறங்குவதும், காளான் பூத்துக் காணப்படுவது இயல்பாகவே காணப்பட்டது” (புறநா.164)
அக்காலப் புலவா்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையையே
வாழ்ந்து வந்துள்ளனா். ஏனெனில் இப்போதுள்ள
மக்கள் அனைவரும் தன்பெண்டு தன் பிள்ளை என வாழ்ந்துவரும் நிலையில் அக்காலக் கலைஞனின்
வறுமையைப் பிரதிபலிக்கும் இடங்களில் தன் தாயைப் பற்றிய குறிப்பும் சுட்டப்படுகின்றது. ஒரு பாணன் தன் ஒளியிழந்த கண்ணையும் கைத்தடியையே காலாகவும் கொண்டுள்ள தன் தாயும் அத்தள்ளாத
வயதில் பசியால் வாடும் நிலையைப் பற்றிப் புறநானூறு
”கோல் கால்ஆகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று
முன்றில் போகா முதிர்வினள் யாயும்” (புறநா.159:3-5)
எனச்
சுட்டுகின்றது.
வறுமை
சாயல்
தன் பால்குடி மறவாத குழந்தை பசித்தபோது
தன் மனைவியின் பாலற்ற மார்பை மீண்டும் மீண்டும்
சுவைத்துப் பால் வராத வெறுப்பில் மனைவியின் மார்வில் விழுந்து அழுவதைக் கண்டு அழும்
மனைவியைப் பற்றியும் (புறநா:159) கலைஞன் தன் வறுமையைப் புலப்படுத்துகின்றான். மற்றொரு பாணன், தன் வீட்டில் உணவு இல்லாததால் அதனை மறந்து தன் புதல்வன்
தெருவில் விளையாடி மகிழ்கின்றான். எனினும்
அவனைப் பசிவாட்ட வீட்டிற்குள் நுழைந்து வணவற்ற
வெற்றுக்கலன்கள் அனைத்தையும் திறந்து பார்த்து அழ அவனையும் முழுதும் சமாதானப்படுத்துகின்றான்”
(புறநா-160)
பாணனின்
சிறப்பான மனைவி
உணவுக்கு வழியின்றி வீட்டில் வறுமை தாண்டவமாடப்
பாணனின் மனைவியோ பொருளற்ற தன் கணவன் மேல் சினம் சிறிதுமன்றி வாழ்க்கையை அதன் போக்கிலே
நடத்துகின்றாள். அவள் தன் வீட்டருகே முளைத்திருக்கும் வேளைக்கீரையை அரிந்து வந்து அதனை
நீரிட்டு அவித்து, அதில் சுவைக்காகப் போடக் கூட உப்பின்றி தன் கணவனின் தாய்க்கும்,
குழந்தைகளுக்கும் பரிமாறுகின்றாள்.
அத்தகைய சிறப்புடைய மனைவி தன் கணவனின்
பொருளாதார நிலைக்குச் சிறிதேனும் கலங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்றெண்ணித் தன் வறுமை
நிலையை மறைக்க உப்பற்ற வெந்த வேளைக்கீரையைக் கூடக் கதவை அடைத்து உண்ட நிகழ்வை,
”வளைக்கை கிணைமகள் வள்உகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்புஇலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி, கடைஅடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்” (சிறுபாண்.136-139)
சிறுபாணாற்றுப்படை வெளிப்படுத்துகின்றது.
செழுமை
வறுமையும், புலமையுமே புலவா்களின் வாழ்வில்
அவா்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று என அக்கால இலக்கியங்கள் நமக்குப் பெரிதும் இயம்புகின்றன. எனினும் செழுமையோடு காணப்பட்ட புலவா்களையும் ஒரு
சில இடங்களில் நம் இலக்கியங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. ஔவை என்ற பெண்பாற் புலவரின் புலமையை எண்ணி வியந்த
அதியமான என்ற மன்னன் தனக்குக் கிடைத்த சாகா வரம் பெற்ற அரிய நெல்லிக்கனியை உண்டு தன்
வாழ்நாளை நீட்டிக்க விருப்பம் கொள்ளாது, தன் நாட்டுப் புலவன் அதிக நாட்கள் வாழ வேண்டும்
அவா் புலமை இன்னும் பல ஆண்டுகளுக்கு தன் நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என எண்ணி,
”....................................................மால்வரைக்
காமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளைதீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை, அதிகனும் (சிறுபானா.99-103)
அந்தநெல்லிக்காயை
ஔவைக்குக் கொடுத்து அதிக வாழ்நாள் இவ்வுலகில் வாழ்தல் என்ற அரிய செல்வத்தைப் பெற்றுத்
தன் வாழ்வில் செழுமை கண்ட ஔவை, தனக்கு அரிய நெல்லிக்கனியைக் கொடுத்த மன்னனை, ”உயா்ந்த மலைப்பிளவின்
மரத்திலிருந்து கொணா்ந்த சிறிய இலையை உடைய நெல்லியின் சுவையான கனியால் உண்டாகும் நலத்தை எனக்குச் சாவுதலைப் போக்க நீ தந்தனை, ஆதலால்
என்றும் வாழ்க” (புறநா.91) எனப் போற்றுகின்றார்.
எனிச்சேரி முடமோசியார் என்னும் புலவன்
கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரனைப் போய்ப் பாடிச்சென்று இரவலாகப் பொன்னையும்
பொருளையும், யானையையும், பெற்று செழுமை நிறைந்த
வாழ்வைப் புலவா் உலகம் வியக்க வாழுகின்றார்.
பின்னாளில் தன் செல்வத்தைச் செழுமையை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள எண்ணிப்
பல புலவனைச் சென்று பாடி இரவலாகப் பொருளைக் கேட்கின்றார். ஆனால் மற்ற செல்வந்தர்தவிர்க்கவே மீண்டும் ஆய் மன்னிடமே
வந்து வேண்டி நிற்கும் வேளையில் தன்மனம் வருந்தி, ”பாடிப் பரிசில் பெற வேண்டும் என்று
எண்ணிய போதே நான் உன்னைத் தான் முதலில் நினைத்திருக்க வேண்டும். ஆனால் நான் பின்னால்
தான் உன் நினைவு வந்து இங்கு வந்தேன். ஆதலால் உன்னை முதலில் நினைக்காமல் இருந்ததற்குத்
தண்டனையாக என் உறுப்புகள்,
”முன் உள்ளுவோனைப் பின் உள்ள னேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ்ஊா்க் கிணற்றின் தூா்க எண் செவியே” (புறநா: 1-3)
அழிந்து
போகட்டும் என ஒரு புலவன் சுட்டுகின்றார். இப்புலவனின்
இக்கூற்றில் இருந்து இப்புலவனுக்கு ஆய் அண்டிரன் கொடுத்த பொருளால் செழுமை பெற்றிருந்த
நிலையை அறிந்தகொள்ள முடிகின்றது.
முடிவுரை
வறுமையும், புலமையும் என்பது அக்காலத்தில்
இருந்தே தமிழ்ப்புலவா்களிடம் காணப்பட்ட ஒரு நிலை என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குத்
தெளிவாகச் சுட்டுகின்றன. இந்நிலை சங்ககாலம்
மட்டுமின்றி இக்காலத்திலும் புலமை பெற்றவர்களிடம் வறுமை என்பது இணைந்தே தொடா்ந்தே காணப்படுகின்றது.
அக்கால ஔவை போன்ற புலவா்களைப் போல இக்காலத்திலும்
சில கவிஞா்கள் தங்களது புலமையால் செழுமை பெற்றே காணப்படுகின்றனா். புலமை உடையவா்களிடம் வறுமை என்பது ஒழிந்து செழுமை
தொடா்ந்து நிலவ அரசாங்கம் கவிஞா்களை ஊக்குவித்து அவா்களது படைப்புக்களை பதிப்புக்களாகி
வெளிவரச்செய்தால் வறுமையும், புலமையும் என்பது மாறி புலமையும், செழுமையும், கவிஞா்கள்
வாழ்வில் நிலவும்.
-மு.செண்பக
வள்ளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக