திங்கள், 15 மே, 2017

சங்க இலக்கியத்தில் மழலை

சங்க இலக்கியத்தில் மழலை
முன்னுரை
            வாழ்வின் அனுபவங்களை எடுத்துரைப்பது சங்க  இலக்கியம் எத்தனை செல்வங்கள் பெற்றிருந்தாலும், மனிதனுக்குக் கிடைக்காத அரிய செல்வம் மக்கட் செல்வம், வாழ்வில் அனைத்துச் சொல்வங்களையும் பெற்றிருந்தாலும் குழந்தைபேறு இல்லையென்றால் வாழ்கையில் பயன் ஏதும் இல்லை.  மக்கட்  செல்வத்தின் சிறப்பினையும் சங்க இலக்கியத்தில் குழந்தைச் செல்வம் பெறும் இடத்தையும் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குழந்தையின் இன்றியமையாமை
            குழந்தை ஒரு குடும்பத்திற்கு மட்டும் சொந்தமன்று மனித சமூகப்பெருக்கத்திற்கும், வளா்ச்சிக்கும் குழந்தையே அடிப்படையானது இதனால் உலக மக்கள் அனைவருக்கும் மக்கட் பேற்றினை விட வேறு பெரும் பேறில்லை என்பதை
            “ஆா்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
            மக்கட் பேற்றின் பெரும் பேறில்லை”  (முதுமொழிகாஞ்சி - 51)
இப்பாடல் உணா்த்துகின்றது.
குழந்தைகளின் மழலைமொழி
            குழந்தைகளின் மழலை மொழி அமுதம் போல் மிகவும் இனிமையுடையது அம்மொழி கேட்பவா்களின் செவிக்கு இன்பம் அளிக்கின்றது.  குழந்தை தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த பேசத் தொடங்குகிறது.  அக்குழந்தையின் மழலைமொழி யாழ்குழலோசை போன்று இன்பம் தருவதாகவும் குழந்தையின் தந்தைக்கு அம்மழலைச் சொல் அருள்செய்யும் மனநிலை வந்ததென்பதை
            “யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
            பொருளறி வாரா ஆயினுந் தந்தையர்க்கு
            அருள் வந்தனவால் புதல்வா் தம் மழலை புறம் (92:1-3)
என்ற அடிகள் விளக்குகின்றது.
குழந்தை தொட்ட சோறு
            குழந்தைகள் உணவைக் கையால் தொட்டும் பிசைந்தும் தம்மேல் பூசிக்கொண்டும் மற்றவா்கள் மீது பூசியும் ஆகிய செயல்களால் பிறரை மயங்கித் தாமும் மகிழ்வா் இதனைக்
            “குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
            இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
            நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
            மயக்குறு  மக்கள் ............(புறம். 188 : 3-6)
என்று புறநானூறு குழந்தையின் சிறப்பினை எடுத்துரைக்கிறது
குழந்தைகளுக்கு புலிப்பல் தாலி
            சிறுகுழந்தைகளுக்கு  கழுத்தில் புலிப்பல்லை கோர்த்த அணிகலணை அணிவித்தனா்.  மழலைப் பருவத்திலேயே அச்சமின்மையை ஏற்படுத்த இவ்வணிகலன்களைப் பெற்றோர் அணிவித்தனர்  இச்செய்தியை அகநானூறு (7:18), புறநானூறு (374 : 9)ஆகிய பாடல் அடிகள் மூலம் அறியலாம்
குழந்தைவளா்ப்பு
            தம்முடைய குழந்தை வளா்த்த முறையைப் பற்றி பின்னாளில் பிறரிடமே அல்லது குழந்தையிடமோ பெருமையாகத் தாயார் பேசுகின்ற தன்மை எக்காலத்திலும் உண்டு தன்னுடைய மகளை அவருடைய குழந்தைப் பருவத்தில் பலநாள் கூந்தல் வாரி முடித்ததையம் இடையில் தூக்கிச்  சுமந்ததையும் பல நன்மைகளை அவருக்குச் செய்தமையும்
            “இன்னகை முறுவல் ஏழையைப் பலநாள்
            கூந்தல் வாரி நுசுப் பிவா்ந்து ஓம்பிய
            நலம்புனை உதவியும் உடையன் மன்ணே”      (அகநானூறு 195 : 8-10)
என்ற அடிகள் விளக்குகின்றது.
குழந்தை விளையாட்டு
            குழந்தை அழும்போது அதனை அமைதிப்படுத்த விளையாட்டுகள் காட்டுவா், உப்புவியாபாரியின் குழந்தை ஒன்று அழத்தொடங்கும்போது அவா்களால் வளா்க்கப்படுமு் குரங்கு கிலுகிலுப்பையை ஆட்டிக் காட்டுவதை
            “மகாஅா் அன்ன மந்தி மடவோர்
            நகாஅந் அன்ன நநிநீா் முத்தம்
            வாள்வாய் எருத்தின் வயிற்றகத்தடக்கி
            ---------------------------------------------------
            கிளம்பூண் புதல் வரொடு கிலுகிவியாடும்”  (சிறுபா. 56:61)
என்ற அடிகள் விளக்குகின்றது.
குழந்தைக்கு உணவூட்டுதல்
            குழந்தைக்கு உணவூட்டுதல் ஒரு கலையாகவே தென்படுகிறது.  பால் குடிக்க மறுக்கும் குழந்தையை நோக்கித் தாய், நீ இப்போது குடித்து என்னுடைய பங்கு  எஞ்சி இருப்பது தந்தையின் பங்கு அதனையும் குடிக்க வேண்டும்” என்று கூறிப்பாடுவதனை
            “பால்பெய் வள்ளம் தால்கை பற்றி
            என்பாடு உண்டனை ஆயின் ஒரு கால்
            நுந்தை பாடும் உண்ணென் நூட்டி       (அகம். 219  5-7)
என்ற அகநானூற்று அடிகள் விளக்குகின்றது.
முடிவுரை
            சிந்தனைக்கு விருந்து அளிக்கும் சங்க இலக்கியம் குழந்தையைத் தவமிருந்து பெற்றதை விளக்குகின்றது, குழந்தையைச் சீராட்டிப் பாராட்டும் பண்பும் பெற்ற குழந்தையைச் போணிப் பாதுகாக்கும் தன்மையும் நோய் நொடியின்றி நீண்டநாள் வாழ புலிப்பால் தாலி அனிந்து வீரனாகத் திகழ ஐம்படைத்தாலி புனைந்ததையும் இக்கட்டுரை வழி அறியலாகிறது.


இரா.கார்த்திக்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக