திங்கள், 15 மே, 2017

பண்டையத் தமிழர் உணவுகள்

பண்டையத் தமிழர் உணவுகள்

பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர். தம்மை நாடிவந்த விருந்தினருக்கு சுவையான உணவு வகைகளைச் செய்து விருந்தளித்து மகிழ்வித்தனர். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை மறைக்காது விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும்விருந்தோம்பும் பண்பாட்டையும் பத்துப்பாட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது.
மதுவும் புலாலும்
மதுவும்புலாலும் சங்க இலக்கிங்களில் மணம் வீசிக்கொண்டு கிடப்பதைக் காணலாம். பழந்தமிழர் மதுவையும் இறைச்சியையும் சிறந்த உணவாகக் கொண்டனர். வசதி படைத்தவர்கள் தம்மிடம் வந்த விருந்தினர்களுக்கு முதலில் மதுவைக் கொடுத்து மகிழச் செய்வர். மதுவுண்டு இளைப்பாறிய பின்னர் நல்ல மாமிசங்களோடு கூடிய விருந்தளிப்பர். இது பழந்தமிழர்தம் வழக்கமாக இருந்து வந்துள்ளது. “நகைகளை அணிந்த மகளிர் இனிமை தரும் புன்சிரிப்புடன் பொற்கிண்ணத்தில் பல தடவை மதுவை நிரம்ப ஊற்றித் தருவார்கள். அவர்கள் கொடுக்கக் கொடுக்க நாங்கள் அதனை வாங்கி உண்டு எங்களின் வழி நடந்துபோன வருத்தத்தைப் போக்கிக் கொள்வோம். மதுவருந்திய மயக்கத்துடனும் நின்றோம்“ என்று மதுவின் களிப்பைப் பற்றி பொருநராற்றுப்படையானது,
இழையணி வனப்பின் இன்னகை மகளிர்
---------------------------------------------------------
செருக்கொடு நின்ற காலை (85-89)
என்று குறிப்பிடுகின்றது. இப்பாடலில் செல்வர்களின் வாழ்க்கை குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.
புலால் உணவு (அசைவ உணவு)
புலாலை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர். வெந்தது வேவிறைச்சி என்றும்சுட்டது சூட்டிறைச்சி என்றும் வழங்கப்பட்டது. செம்மறியாட்டுக் கறியைச் சிறந்த்தாக எண்ணினர். செம்மறியாட்டுக் கறியிலும் அதன் தொடைக்கறியைச் சிறந்த சத்தும் கொழுப்புமுடையதாக்க் கருதினர். வந்த விருந்தினருக்குச் செம்மறியாட்டுக் கறி சமைத்துப் போடுவது பழந்தமிழரின் உணவு வழக்கமாக இருந்தது.
அருகம்புல்லை மேய்ந்து கொழுத்திருக்கின்ற செம்மறியாட்டின் மாமிசத்தை வேக வைப்பர். அதன் தொடையின் மேற்பாகத்துக் கறியினை எடுத்துக் கொடுத்து விருந்தினரை வற்புறுத்துவர். இரும்புச்சட்டத்தில் புலாலைக் கோர்த்துத் தீயிலே சுட்டெடுத்த நல்ல கொழுத்த ஊன். அதன் நல்ல துண்டை வாயிலே போட்டுக் கொள்வோம். சூடு பொறுக்காமல் அந்தத் துண்டத்தை இந்தக் கடைவாய்க்கும் அந்தக் கடைவாய்க்கும் தள்ளித் தள்ளித் தின்போம். ஊன்தின்றது போதும் என்று வெறுத்தால் வேறு வேறு வகையாகச் செய்யப்பட்ட பலகாரங்களைக் கொடுப்பர். எம்மை அங்கேயே தங்கும்படியும் செய்வர் என்பதை,
துராஅய் துற்றிய துருவை அம்புழுக்கின்
கராஅரை வேவைப் பருகு எனத் தண்டி
--------------------------------------------------------------------------
வேறுபல் உருவின் விரகுதந்து இரீஇ (103-108)
என பொருநர்கள் கூறுவதாகப் பொருநராற்றுப்படை மொழிகின்றது. இவ்வடிகளில் மாமிச உணவை இன்சுவை உணவாகத் தமிழர்கள் புகழ்ந்து உண்டது குறிப்பிடப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.
சிற்றூர்களில் பெரும்பாலும் புலால் உணவையே மக்கள் உண்டனர். தினையரிசியைச் சோறாக்கிநெய்யில் புலாலை வேகவைத்துப் பொரித்து தாமும் உண்டுதம்மை நாடிவந்தோருக்கும் இனியன கூறி உண்ணக் கொடுத்தனர். இத்தகைய அரிய செய்தியை,
மானவிறல்வேள் வயிரியர் எனினே
-----------------------------------------------------------
நெய்க்கண் வேவையோடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர் (164-169)
என மலைபடுகடாம் நவில்கின்றது. இவ்வடிகள் சிற்றூர் மக்களின் பண்பினை எடுத்துரைக்கின்றது.
காய்கறி உணவு (சைவ உணவு)
மாமிச உணவைத் தவிர நல் காய்கறிகளைச் சமைத்து உண்ணவும் தமிழர்கள் அறிந்திருந்தனர். நல்ல தானியங்களைச் சமைக்கவும் கற்றிருந்தனர். கடினமற்ற அரிசி முழு அரிசி இத்தகைய அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல்போல் நிமிர்ந்து தனித்தனியாகச் சேர்ந்திருக்கின்ற சோறு. அதைப் பால்விட்டுச் சமைத்த பொரிக்கறிகளோடும் புளிக்கறிகளோடும் மிகுதியாகத் தின்போம் என்று சைவ உணவு சமைத்த முறையையும் அவ்வுணவை உண்டதையும் பொருநராற்றுப்படையில் பொருநர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கருத்தை,
முரவை போகிய முரியா அரிசி
விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை (113-116)
எனப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் குறிப்பிடுகின்றார்.
வலைஞரின் உணவு
நெய்தல் நிலத்தில் வாழ்வோர் மீன் உணவை மிகுதியாக உண்பர். குழல் மீனைக் காயவைத்த உணவைக் குழல் மீன் கருவாடு என்பர். இந்த நெய்தல் நிலவழியாகச் சென்றால் இத்தகைய குழல் மீன் கருவாட்டை உணவாகப் பெறலாம் என்பதை, “வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர் (163)  என சிறுபாணாற்றுப்படை நெய்தல் நில மக்களின் உணவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
எயிற்றியர்களின் உணவு
வேடர்குலத்தைச் சார்ந்த பிரிவுகளுள் எயிற்றியர் என்பரும் ஒருவராவர். இவ் எயிற்றியர்கள் புளி
சேர்த்து செய்யப்பட்ட உணவை உண்டனர். வேடர்குலப் பெண்கள் புளிக்கறி செய்வார்கள். சோறும் சமைப்பார்கள். வேட்டையாடிக் கொண்டு வந்த ஆமான் முதலியவற்றையும் சமைப்பார்கள். இவற்றைத் தாமும் உண்டு தம்மை நாடி வந்த விருந்தினர்களுக்கும் கொடுத்து உபசரிப்பர். எயிற்றியர் உணவையும்அவர்கள் விருந்து உபசரித்த தன்மையையும் குறிப்பிடுகின்றது.
எயிற்றியர்கள் புல்லரிசி உணவையும் உண்டனர். வெண்மையான பற்களை உடைய வேடர் குலப் பெண்கள்எறும்புகள் சேர்த்து வைத்திருக்கின்ற புல்லரிசியைத் தேடிச் சேர்ப்பார்கள். மான்களைக் கட்டியிருக்கின்ற விளாமரத்தின் அடியிலே அகழ்ந்திருக்கின்ற உரலில் அந்த நெல்லைக் கொட்டி உலக்கையால் அதனைக் குற்றிக் கொழித்தெடுப்பர். பின்னர் கிணற்றில் சிறிதளவு ஊரியிருக்கின்ற உவர்நீரை முகந்து பானையில் ஊற்றி அடுப்பிலே வைத்து உலைவைப்பர். குற்றியெடுத்த புல்லரிசியை உலையிலிட்டுச் சமைத்துச் சோறாக்குவார்கள். அச்சோற்றை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்பர். இவ்வுணவை வந்த விருந்தினருக்கும் கொடுப்பர். இத்தகைய செய்தியினை,
நுண்புல்அடக்கிய வெண்பல் எயிற்றியர்
------------------------------------------------------------------------
முரவு வாய்க்குழிசி முரி அடுப்பேற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் (94-100)
எனப் பெரும்பாணாற்றுப்படை தெளிவுறுத்துகிறது. எயிற்றியர்களின் உணவான புல்லரிசியையும்உப்புக்கண்டத்தையும் குறிப்பிட்டுஅதனைச் சமைக்கும் முறையினையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது வியப்பிற்குரியது.
எயினர் உணவு
விற்பிடித்து வேட்டையாடி வாழும் வேடர்களின் உணவுஏழை எயிற்றியர்களின் உணவைக் காட்டிலும் மேம்பட்டதாக இருந்தது. அவர்கள் உண்ணும் சோறு மேட்டு நிலத்தில் விளைந்த செந்நெற்சோறாகும். அது களர் நிலத்தில் வளர்ந்திருக்கும் ஈச்சமரத்தின் விதையைப் போலக் காணப்பட்டது. அச்சோற்றை நாய்களால் பிடித்துக் கொண்டுவந்த உடும்புப் பொறியலுடன் ஒன்று சேர்த்து உண்பர். இதனை தம்மை நாடி வந்தோர்க்கும் கொடுப்பர். இத்தகைய எயினர்களின் உணவு பற்றி,
கொடுவில் எயினர் குறும்பில் சேப்பின்
-------------------------------------------------------------------
வறைகால் யாத்த்து வயின்தொறும் பெறுகுவீர்  (129-133)
-என பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
உழவர்களின் உணவு
உலகிற்கு உணவிடும் உழவர்கள் அரிசி உணவையே மிகுதியாகச் சமைத்து உண்டனர். எனினும் உழவர்கள் பலவிடங்களிலும் வாழ்ந்தனர். அவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் விளைந்த உணவுப் பொருள்களையே சமைத்து உண்டனர். என்பது நோக்கத்தக்கது. உழவர்குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள். வயல்களில் பிடித்த நண்டையும்,கொல்லையில் காய்த்த பீர்க்கங்காயையும் சேர்த்துச் சமைப்பார்கள். அதனையே தம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வர் என சிறுபாணாற்றுப்படை (193-195)  குறிப்பிடுகின்றது.
தொண்டை மண்டலத்தில் நெல் விளைவது குறைவு. புன்செய்ப் பயிர்கள்தாம் மிக அதிகமாக விளையும். அங்குள்ள உழவர்கள் பெரும்பாலும் வரகுசாமைஅவரை உள்ளிட்ட புன்செய் தானியங்களையே அதிகம் பயிரிடுவர். அவர்களது உணவு புன்செய் தானியங்களாகவே இருப்பது நோக்கத்தக்கது. வரகரிசிச் சோற்றைபுழுக்கிய அவரைப் பருப்புடன் கலந்து பெருகிய சோற்றை அவ்வுழவர்கள் உண்டு வந்தனர். அதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என பெரும்பாணாற்றுப்படை (192-126) எடுத்துரைக்கின்றது. ஏழை உழவர்களின் இயற்கையான உணவினை இப்பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
அவரை விதைமூங்கிலரிசிநெல்லரிசிஇவற்றைப் புளியுடன் சேர்த்து சமைத்த உணவினை நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவுத் தொழில் புரிந்த ஏழைகள் உண்டு வாழ்ந்ததை,
செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
-------------------------------------------------------------------------
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவீர் (434-443)
-என மலைபடுகடாம் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும் வயல்களில் வலைஞர்களால் பிடித்துக் கொண்டுவரப்பட்ட வாளைமீன்தூண்டிலின் மூலம் பிடித்த வரால் மீன்இறைச்சித் துண்டுகள் இவற்றால் செய்யப்பட்ட உணவினையும்அரிசிச் சோற்றையும்பானையில் ஊற்றி வைத்திருக்கும் மதுவையும் காலை நேர உணவாக உழவர்கள் உண்டனர். இதனை,
கண்பு மலி பழனம் கமழத்துழைஇ
----------------------------------------------------------------
துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும்
பெறுகுவீர் (454-464)
என மலைபடுகடாம் தெளிவுறுத்துகிறது. இவ்வரிகள் உழுதொழில் செய்து வாழும் தமிழகத்தின் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களின் விருந்தோம்பும் உயர்ந்த பண்பினையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஆயர் உணவு
முல்லை நிலத்தில் வாழ்பவர்கள் ஆயர் ஆவார். காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழும் ஆயராகிய இடையர்கள் ஆடுமாடுகளைச் செல்வமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய உணவு காடுகளாகிய புன்செய் நிலத்தில் விளையும் தானியங்களே ஆகும். நண்டுக்குஞ்சுகளைப் போலக் காணப்படும் தினைச்சோறும் காலும் அவர்கள் உண்ணும் உணவாகும். இவ்வுணவைத் தாமும் உண்டு தம் விருந்தினருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதை,
மடிவாய்க் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர் (166-168)
-என்ற பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. ஆடுகள் மேய்த்து வந்த ஆயர்கள் பாலுணவை அதிகம் உண்டனர். அவர்ளின் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு பசும்பாலை உண்பதற்காக்க் கொடுத்தனர். இதனை,
வேறுபுலம் படர்ந்த ஏறுடையினத்த
-----------------------------------------------------------------------
புலமபுசேண் அகலப் புதுவிர் ஆகுவிர் (408-412)
-மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. இவ்வரிகளில் ஆயர்பெருமக்களின் அன்புள்ளத்தைக் காணலாம். மேலும் அவர்கள் இரவில் பாலையும் பாற்சோற்றையுதம் உண்பார்கள். விருந்தினர்களுக்கும் கொடுப்பர் என்பதை மலைபடுகடாம் (415-417) மொழிகின்றது.
செல்வர்களின் உணவு
பிற நிலத்தில் வாழும் மக்களைக் காட்டிலும் வறுமையறியாது செல்வ்வளமுடன் வாழ்ந்தனர். ஏனெனில் மருதநிலப் பகுதியிலே பெரிய பெரிய ஊர்களும் உண்டு. இக்காலத்தில் கிராமப் புறப் பகுதிகளில் வாழும் மக்களைவி நகரப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் உயர்தரமான வாழ்க்கை நடத்துகின்றனர். இதுபோன்றே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களும் வளமுடன் வாழ்ந்தனர். செல்வர்கள் வெண்மையான நெற்சோறுடன் வீட்டில் வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலைச் சேர்த்து உண்டனர் என பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர்  (253-256) குறிப்பிடுகின்றார்.
பார்ப்பார் உணவு
பார்ப்பாரின் உணவு இனிமையான அறுசுவை உணவாக இருந்த்து. அவர்கள் புலால் புசிக்க மாட்டார்கள்காய்கறி உணவுகளையே உண்டனர். இப்பார்பார்கள் தமிழகத்தில் பிறந்தவர்கள். தமிழர் குடியில் தோன்றியவர்கள். தமிழர்களிலே கல்வியும அறிவும் தனக்கென வாழாத் தகைமையும் மக்களுக்கு நல்வழிகாட்டும் மாண்பும் பெற்றவர்களை அந்தணர்கள் என்றும் பார்ப்பார்கள் என்றும் பண்டைக் காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகைத் திணையில் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுவது இவர்களையே ஆகும். இத்தகைய பாரபனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன என்பர். இப்பார்பனர்கள் பாற்சோறும்பருப்புச் சோற்றையும் உண்பர். மேலும் அவர்கள் இராஜான்னம் என்று பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினையும் உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்துமிளகுப் பொடியும்கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும்,தயிர்ச்சாதம்மாங்காய்ச்சாதம்புளியஞ்சாதம்போன்ற சித்திரான்னங்களையும் உண்பர். தம்மை நாடிவந்தோர்க்கும் கொடுத்து உபசரிப்பர். இதனை,
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்
-------------------------------------------------------------------------
தகைமாண் காடியின் வகைப்படப் பெறுகுவீர் (301-310)
-பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். பார்ப்பார்கள் தமது இல்லத்திற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்று உணவளித்தனர் என்பதையும்அவர்கள் வேற்றுமை கருதாது அனைவருடனும் இனிதாகப் பழகினர் என்பதையும் இப்பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
வேளாளர் உணவு
சொந்த நிலமுள்ள உழவர்களை வேளாளர்கள் என்றனர். இவர்கள் உழுவித்து உண்ணும் வேளாளர்கள் ஆவர். அவர்கள் இனிய பலாப்பழத்தையும்இளநீர்வாழைக் கனிகள்பனைநுங்குஇன்னும் பல இனிய பண்டங்கள் ஆகியனவற்றையும் உண்பர். மேலும் சேப்பம் இலையுடன் முற்றிய நல்ல கிழங்குகளையும் அவர்கள் உண்டனர். வேளாளர்கள் சைவ உணவினையே உண்டனர். இத்தகைய கருத்தை பெரும்பாணாற்றுப்படை,
தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்
------------------------------------------------------------
தீம்பல்தாரம் முனையிற் சேம்பின்
முளைப்புறம் முதிர் கிழங்கு ஆர்குவிர் (355-362)
-எனக் காட்சிப்படுத்துகின்றது.
பண்டைத் தமிழகத்தில் நிலமற்ற உழவர்கள் இருந்தனர். நிலமுள்ள உழவர்களும் இருந்தனர். நிலமற்ற உழவர்கள் தாழ்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். நிலமுள்ள உழவர்கள் வேளாளர் என்னும் உயர்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். இவ்விரு வகுப்பினரும் ஒழுக்கத்திலும் நாகரிகத்திலும் பழக்க வழக்கங்களிலும் மாறுபட்டிருந்தனர். உழவரைப் பற்றியும்,வேளாளரைப் பற்றியும்அவர்கள் உண்ணும் உணவு குறித்தும் பத்துப்பாட்டு நூல்களுள் பெரும்பாணாற்றுப்படையே தெளிவுற எடுத்துரைக்கின்றது. இவ்வாறு பத்துப்பாட்டு பண்டைத் தமிழரின் உணவு வகைகளையும்அவர்தம் உணவுப் பழக்கங்களையும் கூறுவதுடன் அக்கால மக்களின் வாழ்க்கை முறையினையும்அவர்களது வாழிடங்களின் தன்மைகளையும் பண்பாட்டு ஓவியங்களாகப் படைத்துக் காட்டுகின்றது.
                                                                            வ.மீனாட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக