பழமொழியும் தமிழிலக்கியங்களும்
முன்னுரை
நாட்டுப்புறவியல் வகைமைகளுள் வாய்மொழி வழக்காற்றில் அதிகமான
செல்வாக்கினைப் பெற்றிருப்பது பழமொழிகளாகும். இப் பழமொழிகள் மக்கள் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையும், வாழ்க்கைச் சூழலையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும்
வெளிப்படுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன. ஒரு
குறிப்பிட்ட சமுதாயத்தின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளையும், மொழி வளத்தினையும் அளவிட்டு
நோக்குவதில் பெரும்பங்கினை ஏற்றுக் கொண்டிருப்பது பழமொழிகளாகும். இப்பழமொழி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு எல்லாம்
காணப்படுகின்றது என்பதை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழமொழி - சொல் பொருள் விளக்கம்
பழமொழி என்ற சொல்லிற்கு பழமையான மொழி என்பது பொருளாகும். பழமையான வாழ்வியல்
அறங்களையும் கோட்பாடுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் மொழிகின்ற இயல்பினைக் கொண்டது. பழமொழியை நம் தமிழா்கள் பல்வேறு பெயா்களால் வழங்கியிருக்கின்றனா்
முதுசொல், முதுமொழி, நெடுமொழி, பழஞ்சொல், மூதுரை,
பழவார்த்தை, பழமைச் சொல் முதலான சொற்கள் பழமொழியைக் குறிக்கின்றன. பழைய மொழியே பழமொழி. பழமொழி என்ற சொல்லுக்குச் சேந்தன் நிவாகரம், மூதுரை,
முதுமை மொழிமை முன்சொல் முதுசொல் பழஞ்சொல்
என்று ஆறு பொருளைத் தருகின்றது.
“மொழிமை, மூதுரை, முன்சொல் பழஞ்சொல்
முதுசொல் என்பா் பழமொழியும் ஆமே”
என்று கூறுகிறது பிங்கல நிகண்டு
தமிழில் பழமொழியைக்
குறிக்க முப்பத்து நான்கு சொற்கள் இருப்பதாக டாக்டா் வ.வெருமாள் குறிப்பிடுகின்றார்.
1. பழமொழி 2. கொன்னொறி மொழி 3. முதுமொழி 4. முதுசொல் 5. கொன்று படுகிளவி 6. தொன்படு பழமொழி 7. பழகு மொழி 8. வாய்மொழி 9. அறம் 10. நெடுமொழி
11. பல்லவையோர் சொல் 12. பண்டைப் பழமொழி
13. சொலவு 14. மூதுரை 15. பழஞ்சொல் 16. மூத்தோர் சொல் வார்த்தை 17. வழக்கு
18. உரை 19. பழைய நெறியினால் வரும் சொல் 20. பழவார்த்தை 21. உலகமொழி 22. உபகதை 23.
சுலோகம் 24. சொலவடை 25. வசனம் 26 எழுதா இலக்கியம் 27 வாய்மொழி இலக்கியம் 28. எழுதாக்
கிளவி 29. கேள்வி 30. சுருதி 31. நீதிமொழி 32. முதுமை 33. மொழிமை 34. முன் சொல் என்பனவாகும்.
பழமொழிகளின் தோற்றம்
பழமொழிகள் எப்பொழுது தோன்றின யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்பதைத்
திட்ட வட்டமாகச் சொல்லுதல் இயலாது. பழமொழிகள் ஏழை எளிய மக்களிடத்தும அவா்களின் அன்றாட
வாழ்க்கையின் இன்பம் முதலான பல்வேறு சமமூகச் சூழல்களிலும் தோற்றம் பெறுகின்றன எனலாம். காலந்தோறும் அவற்றிடையே மாற்றங்கள் சூழல்களுக்கேற்ப
ஏற்படுவதுடன் புதியனவும் தோன்றுகின்றன. “தமது
சந்ததியினரை வாழ்க்கையின் பன்முகத்தாலும் நல்லாற்றுப் படுத்துதல் வேண்டும் அதன் மூலம்
சிறந்த தொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே பழமொழிகளின் தோற்றத்திற்கு அடிப்படைக்
காரணம்” என்கிறார் ச.சிவகாமி
பழமொழியும் - தமிழிலக்கியங்களும்
பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியங்களில் பழமொழி பற்றிய செய்திகள்
மிகுதியாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியா் பழமொழியை “முதுசொல், முதுமொழி” என்று குறிப்பிடுகின்றார். “நுண்மையும், அருக்கமும் ஒளியும் உடைமையும் குறித்த
பொருளை முடித்தற்கு வருஉம் மென்மை என்றவை விளக்கத் தோன்ற ஏது முதலிய முதுமொழி” என்பதை
“எது முதலிய முதுமொழி என்று”
-----------------------------------------
அங்கதம் முதுசொலோடு அவ்வேழ் நிலத்தும்”
என்று குறிப்பிடும் இடத்திலும்
பழமொழியைக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் தான் முதன் முதலில்
பழமொழி என்ற சொல் கையாளப் பட்டிருக்கிறது.
“நன்றுசெய் மருங்கில் தீது இல் என்னும்
கொன்று படு பழமொழி”
“தொன்றுவடு பழமொழி” என்பதால்
சங்க காலத்திற்கும் முன்பாகவே பழமொழிகள் வழக்கில் இருந்தமை புலனாகிறது.
“பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே யாழுதல் வாய்த்தனம் தோழி”
என்ற அகநானூற்றுப் பாடல் பழமொழி
பொய்ப்பதில்லை என்ற உண்மையை உணா்த்தி நிற்கிறது.
“இரங்குங்கால் முகனும் தாம்
கொடுக்குங்கால் முகனும் வேறாதல்”
என்ற கலித்தொகை வரிகள் கடன் வாங்குதல்
திருப்பிக் கொடுத்தல் என்ற சூழலில் உண்டாகும் மனநிலையைப் பழமொழியாக்கிக் காட்டுகிறது. புறநானூறு, பரிபாடல், குறுந்தொகை, பொருநராற்றுப்
படை, பெரும்பணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி முதலான நூல்களில் உள்ள பழமொழிகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
சங்கம் மருவிய காலத்தில் பழமொழிகளின் செல்வாக்கு தமிழிலக்கியத்தை
மிகுதியாக ஆட்கொண்டிருந்தன. பதினெண்கீழ்கணக்கு
நூல்களாகிய அற நூல்கள் அனைத்திலுமே பழமொழிகள் செம்பாகமாக இடம் பெற்றுள்ளன எனலாம்.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்ற திருக்குறள் அடி இன்று நாட்டுப்புறங்களில் வழங்கப்படுகின்ற
“ஊா் ஓட ஒக்க ஓடு நாடு ஓட நடுவே ஓடு” என்ற பழமொழியின் பண்பட்ட வரிகளாகத் தோற்றமளிக்கின்றது.
மதுரைக் கூடலூா் கிழார் பாடிய முதுமொழிக் காஞ்சி பழமொழிகளின்
தொகுப்பு நூலாகவே காணப்படுகின்றது
இவா்
“ கால மறிந்து செய்”
என்கிற பழமொழியை “காலமறியாதோன்
கையுறல் பொய்” என்று கூறுகிறார்.
நாலடியாரில் “ஒருவா் பொறை இருவா் நட்பு” கைக்குமாம் தேவரே தின்னினும்
வேம்பு” என்ற பழமொழிகள் இடம் பெற்றுள்ளன நான்மணிக் கடிகை எழுதிய
விளம்பி நாகனார் நெருப்பில்லாமல் புகையுமா? என்ற பழமொழியினை “புகைவித்தாப் பொங்கழல்
தோன்றும்” என்று குறிப்பிடுகின்றார்.
கபிலரின் “இன்னா நாற்பது என்ற நூலில் பழமொழிகள் மிகுதியாக இடம்
பெற்றுள்ளன உண்ணாது வைக்கும் பெரும் பொருள்
வைப்பின்னா” என்ற பாடல் வரி “உண்ணாத பண்டம் பாழாகிப் போகும்” என்ற பழமொழியின் மாற்று
வடிவமாகத் திகழ்கிறது
முன்றுறை அரையனாரின் “பழமொழி நானூறு” என்ற நூலின் நானூறு பாடல்களின்
வாயிலாக வெளிப்படுத்துகின்றார் இந்த நூலே தமிழுக்குக்
கிடைத்த முதல் பழமொழித் தொகுப்பு நூலாகும்.
“நிறைகுடம் நீா் தளும்பல் இல்
நாய் பெற்ற தெங்கம் பழம்”
என்ற இது போன்ற பழமொழிகள் மக்கள்
வழக்காறுகளில் இருந்து சேகரிக்கப்பட்டு சமுதாயத்திற்கு நீதிகளைப் புகட்டும் போது அவற்றிடையே
பழமொழி களைக் கையாண்டுள்ளார்.
காப்பியகாலப் புலவா் பெருமக்களும் தாங்கள் இயற்றிய காப்பியங்களில்
பழமொழிகளை எடுத்தாண்டுள்ளனா்.
“அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்” என்றும் “பல்லவையோர் சொல்லும்
பழுதன்றோர்” (சிலம்பு 19 வெண்பா)
“நீ அறிந்திலையோ, நெடுமொழி அன்றோர்” என்ற வரிகளில் உள்ள பல்லவையோர் சொல், நெடுமொழி என்ற சொற்கள் பழமொழியைக்
குறிப்பதாகும்
மணிமேகலை “முதுமொழி கூற முதல்வன் கேட்டு” என்று பேசுகிறது. சீவக சிந்தாமணியில்
“புலிக்கு வால் உருவி விடலாமா” (2197பாடல்)
“உதிரம் உறவறியும்” (விமலையார் இலம்பகம்22)
போன்ற பழமொழிகளைத் திருத்தக்கதேவா்
நயம்பட உரைக்கிறார். குண்டலகேசியில்
“அகை அழல் அழுவந் தன்னை
நெய்யினால் அவிக்க லாமோ”?
என்ற வரியில் எரிகின்ற தீயில்
எண்ணெய் ஊற்றலாமா? என்ற பழமொழியின் மாற்று வடிவம் இடம் பெற்றுள்ளது.
திருநாவுக்கரசா் தேவாரத்தில்
பல்வேறு பழமொழிகளைத் தம் பாடல்களில் கையாண்டுள்ளார்.
“முயல்விட்டுக் காக்கையின் போனவாறே”
“கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்தவாரே”
“கனியிருக்கக் காய் கவா்ந்த கன்வன்”
போன்ற பழமொழிகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்
”உம்மையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கம் பழஞ்சொல் புதுக்கும்
எம் அச்சத்தால்”
என்பன போன்ற பழமொழிகளைக் கையாண்டுள்ளார். பழமொழியைப் பழஞ்சொல் என்று குறிப்பிடுகிறார்.
பெருங்கதைக் காப்பியத்தில் “வண்டு யனையா் மைந்தர என்பது பண்டே உரைத்த பழமொழி”
(பெருங்கதை 16:36) என்ற தொடரில் ‘பழமொழி’ என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது.
கம்பராமாயணத்தில் “புலிதானே புறத்ததாகக் குட்டி கோட்படா தென்னும்
ஒலியொழி உலகுரைக்கும் உரை பொய்யோ” (கங்கைப் படலம்) என்ற பாட்டில் ‘உலகுரைக்கும் உரை’
என்ற தொடரால் பழமொழிக்குரிய புதிய சொல்லான
திணை உருவாக்குகின்றார்.
வில்லிபுத்தூரார் தாம்
பாடிய பாரத்தில் ”தன்னிலத்தில் குறுமுயல் தந்தியின் வலிதென்று இந்நிலத்தினில்
பழமொழி அறிதி நீ இறைவ” (நீரைமீட்சி-50) என்ற இடத்தும் பழமொழி என்ற சொல்லாட்சியையும்
பயன் படுத்துகிறார்.
மேலும் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, மூதுரை, நல்வழி,
நன்னெறி போன்ற சதக நூல்கள் அனைத்திலும் ஏராளமான பழமொழிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முடிவுரை
மக்கள் சமுதாயத்தின் சிந்தனைக் கூறுகளையும் சிந்தனைப் போக்குகளையும்
பண்பாட்டுத் தன்மைகளையும் அறிவிக்கும் சாதனமாகப் பழமொழிகள் அமைந்துள்ளன. சங்க காலம்
முதல் இக்காலம் வரை மக்களின் வாழ்வியலோடு தொடா்புடைய பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள்,
வழிபாட்டு நிலைகள், முதலான அடிப்படைக் கூறுகளை அறிந்துணர முடிகிறது. பழமொழிகள் வளா்ந்து வரும் நாகரீக அறிவியல் வளா்ச்சிக்கு
ஏற்ப அவைகளின் கருத்தாக்கங்களை ஏற்றுள்ள பழமொழிகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு
மனித சமுதாயத்தையே பிறப்பிடமாகக் கொண்டு வளா்ந்து வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.
-கு.கங்கா தேவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக