உழுவோர் உலகத்தார்க்கு ஆணி
‘டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடா் போராட்டம், கண்டு கொள்ளாத
பிரதமரும், அமைச்சர்களும்’ தொலைக்காட்சியில் பத்தோடு பதினொன்றாக செய்தி வாசித்துக்
கொண்டிருந்தார்கள். வீட்டில் வழக்கம்போல சீரியல்களுக்கிடையில் செய்தி இடைவேளைக்காய்
கிடைத்த அரைமணி நேரத்தில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தான் ஆரோக்கியம்.
‘சல்லிக்கட்டுப் போராட்டத்தை முதல் நாளிலிருந்து இடைவிடாமல்
பரப்பிக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு, உயிருக்குப் போராடும் உழவா்களின் பேராட்டம் காலம்
கடந்துதான் கண்ணில் பட்டிருக்கிறது போல.. அவா்களைச் சொல்லியும் குற்றமில்லை, அரசியல்வாதிகளின்
மாளிகைகளுக்கும், நடிகா்களின் பங்களாக்களுக்கும்
அலைந்து திரியும் அவா்களுக்கு ஏதுமில்லாத விவசாயிகளைக் கண்டுகொள்ள நேரமேது? பத்திரிகைகளின்
நிலையைச் சொல்ல வேண்டியதேயில்லை.. ஆர்,கே.நகா், அறுபதுகோடி பதவி ராஜினாமா, நீதி விசாரணை
என்று புதுப்புது செய்திகளை, நாட்டுமக்களுக்கு ரொம்ப அவசியமான பிரச்சனைகளை (!) பக்கம்
பக்கமாய் ‘கவா் ஸ்டோரி’ எழுதி மக்களை எப்பொழுதும் பதற்ற நிலையிலேயே வைத்திருக்கும்
பக்குவம் தெரிந்தவா்கள்.. கண்டெய்னா் பணம்,
கடலில் கொட்டிய கச்சா எண்ணெய், மீனவா் சுட்டுக் கொலை, நெடுவாசல் போராட்டம், இந்தித்
திணிப்பு, ஐரோம் சா்மிளா எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்த மாயாவிகள்.. தை போய் சித்திரை
வந்த பின்னும் ஊருக்கு ஊா் போட்டி போட்டுக் கொண்டு மஞ்சுவிரட்டிற்கும், மாட்டு வண்டிப்
பந்தயத்திற்கும் வேடிக்கை பார்க்கக் கூடுகிற கூட்டத்திற்கு, தலைநகரில் போராடும் விவசாயிகளின் பிரச்சனை தங்களுடைய
சாப்பாட்டிற்கான பிரச்சனை என்பது ஏனோ கொஞ்சமும் தெரியவேயில்லை.. மாடுகளை சித்திரவதைப்படுத்தும்
வண்டிப் பந்தயத்திற்கு பதாகை வைத்து தமிழ் உணா்வாளா்களாய் தங்களை விளம்பரப்படுத்திக்
கொள்ளும் அதிமேதாவிகள் ஒருபுறம். அப்பப்பா.. வயிற்று அஜீரணக் கோளாறுக்கு மருந்து இருப்பதுபோல
மூளை அஜீரணத்திற்கும் மருந்து இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்?’ பாரதி தலையிலடித்துக் கொண்டது போல ‘விதியே! என்
செய்வாய் என் தமிழ்ச் சாதியை?’ என்று தான் இப்பொழுது ஆரோக்கியத்திற்கும் கேட்கத் தோணுகிறது.
‘அதுசரி. . யாரிந்த ஆரோக்கியம்?’ ஊரில் ஆரோக்கியத்தின் படிப்பு,
வேலை, குணம் இவற்றையெல்லாம் சொல்லி அறிமுகப்படுத்துவதை விட ‘பெயிண்டா் ராசு’ மகன் என்று
சொன்னால் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள்.. பிள்ளையின் படிப்பைவிட தந்தையின் உழைப்புதான்
ஒருவரை அடையாளம் காட்டும் என்பதற்கான ஆகச் சிறந்த உதாரணம் தான் ‘பெயிண்டர் ராசு’.
‘பெட்டிக்கடை, பஞ்சுமில்
வேலை, வாணம் தோண்டுவது, விறகு வெட்டுவது, இளநீா் விற்பது, கூரை வேய்வது, கொத்தனார்
வேலை, சித்தாளு வேலை, விவசாயம், விசேஷங்களுக்கு பீடா-பிளேட் சப்ளை, கேணி வெட்டுவது,
கூடை முடைவது, பெயிண்ட் அடிப்பது என அரை நூற்றாண்டாய் உழைப்பில் சளைக்காதவா். ராசுவின் மனைவி ஜெயமேரியும் அவருக்கு சற்றும் சளைத்தவரல்ல.. மூட்டுவலி, முதுகுவலியால் அவதிப்பட்டாலும்
வயக்காட்டில் இறங்கிவிட்டால் எங்கிருந்துதான் வருமோ அந்த அசுர வேகமும், இலாவகமும். கூலிக்கு வந்த இளந்தாரிப் பொண்ணுங்களெல்லோரும் வாய்
பிளப்பாளர்கள்.. இருவருமே தாங்கள் படும் கஷ்டங்களை தங்கள் பிள்ளைகள் துளியும் பட்டுவிடக்கூடா
தென்பதில் கவனமாயிருந்தார்கள், உலுக்கியெடுக்கும் உடம்பு வலியைக் கூட உதட்டுச்சிரிப்பில்
மறைத்துவிடுவார்கள்.. அவர்களின் உழைப்பில் சேர்த்த சொத்து ‘நல்ல குடும்பம்’ என்ற பெயரும்,
தங்கள் பிள்ளைகளுடைய படிப்பும் மட்டும்தான்.
செல்வச் செருக்கால் சுற்றமும், உறவும் குடியிருந்த வீட்டு உரிமையாளரும்
அலட்சியப்படுத்தும்போதெல்லாம் நினைத்து நினைத்துப் புலம்புவாள் ஜெயமேரி, சுயமரியாதையில்
ஆண்களை விட சமூகத்தால் அதிகம் காயப்படுத்தப்படுபவா்கள் பெண்கள் தானே.. ஆனால் ராசுவோ
அலட்சியப்படுத்தியவா்களிடமும் அக்கறையோடு பேசுவார். கள்ளங்கபடமில்லா வெள்ளை மணம், பிள்ளை குணம் யாரிடமும்
எதையும் ஒளித்து மறைத்துப் பேசத் தெரியாத வெள்ளந்தி.
‘வானம் பார்த்த பூமியில் விவசாயத்தப் பார்த்து என்னத்தக் கண்டீங்க?
வருஷா வருஷம் முதலுக்கு நட்டம்னுதான் தெரியுதே.. அந்த சனியன தொலைச்சு தலை முழுகிட்டு
சும்மாதான் வீட்டுல ஒக்காந்திருந்தா என்ன ? இப்படி உடம்ப வருத்திக்கிட்டு வெள்ளாமை
பார்க்கணும்னு யாரு அழுதா? கடையில வாங்கி பொங்கி சாப்பிடக் கூடாதா?” விவசாயம் பார்த்துவிட்டு
உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கும் பெற்றோரைப் பார்க்கும் போதெல்லாம் ஆற்றாமை ஆத்திரமாய்
வெடித்துக் கிளம்பும் ஆரோக்கியத்திற்கு, இன்று
அப்பா வயலுக்குக் கிளம்புவதைப் பார்த்து
பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டான்..
”ஏம்பா.... நம்ம நிலத்துல விளைஞ்சத சாப்பிடுறதும், கடையில காசுக்கு
வாங்கி பொங்கிச் சாப்பிடுறதும் ஒன்னா? வானம்
ஏமாத்துதுன்னு நிலத்தக் காயப்போடுறதும், கவா்மெண்ட ஏமாத்துதுன்னு
வயித்தக் காயப்போடுறதும் ஒன்னுதான், ஒங்களுக்கு எப்படியோ? நாங்க இருக்குற வரைக்கும்
எங்களுக்கு விவசாயம் தான் உசுரு, ”துண்டை உதறி
தோளில் போட்டுக் கிளம்பியவரை வாயடைத்துப்
பார்த்து நின்றான் ஆரோக்கியம்.
தாய்ப்பாலைப் போல உழைப்பாளிகளின் வியா்வைத்துளியும் புனிதமானதென்பதை உணா்ந்து கொண்டான் அந்த உழைப்பாளியின் மகன்.
திருக்குறள்
இரவார் இரப்பார்க்கொன் நீவா்கரவாது
கைசெய்தூண் மாலை யார் (1035)
பொருள்
தம் கையால் உழுதுண்டலை இயல்பாக உடைய உழவா் பிறரிடம் தாம் எதையும்
இரக்கமாட்டார். தம்மை இரக்க மாட்டார். தம்மை இரப்பவா்க்கெல்லாம் அவா் வேண்டியதொன்றை இல்லை
என்னாது ஈவா்.
-ம.ஸ்டீபன்
மிக்கேல் ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக