வியாழன், 19 ஏப்ரல், 2018

தமிழாயிரம்


தமிழாயிரம்

16. எழுச்சியுறல்

1.       கணித்தான் மொழிக்கடன் காத்தான் தமிழால்
          பிணைத்தான் நிலஎல்லைப் பேறு.
2.       பேறெல்லாம் வாய்த்திருந்தும் பேணாமல் விட்டதால்
          கூறெல்லைக் கூறு முறை.
3.       முறையை விலக்கும் குறிக்கோள் இலாமல்
          நிறைய இழந்தோம் இழப்பு.
4.       இழந்ததை மீட்கும் திறமோ இருப்ப
          திழவாமல் காத்தலோ இல்.
5.       இல்லா ஒருமை இழப்பதற் கல்லாமல்
            காக்க உதவுமோ காண்
6.       கண்டாலும் காணாமல் போகும் கயமையை
           விண்டாலும் ஆகா விடிவு.
7.       விடிநாள் வருமென்ன வீழ்வின்றிக் காத்தால்
          முடியாமல் போகாது முன்
8.       முன்னிற்கும் நோ்பகை மூண்டெரிக்கும் ஆாியம்
           பின்னிற்கும் ஆங்கிலமும் ஆம்.
9.       ஆமாம் திருவிடமோ தீரா விடமாகும்
          போமா றறிந்து புதை.
10.     புதைக்குள் விழுந்தோம் புதைமூடி மேலே
           உதைத்தெழுந் தோங்குவோம் ஓா்ந்து



புதன், 4 ஏப்ரல், 2018

மங்கையராய்ப் பிறப்பதற்கே..


மங்கையராய்ப் பிறப்பதற்கே..
            கல்யாணம், காதுகுத்து, திருவிழா வென்றால் சிறுவயதில் ஆசையிலும், ஆா்வத்திலும் துள்ளிக்குதித்து கிளம்புகிற இராணி இப்போதெல்லாம் ஒலிபெருக்கி கட்டிய வீடுகளையும், தெருக்களையும் கடந்து செல்ல முடியாமல் சுற்றி வளைத்தே வீடு செல்கிறாள்.  தெரிந்தவா்கள் பார்த்தால் விசாரிப்புகள் என்ற பெயரில் வெந்த புண்ணில் வேலெடுத்துப் பாய்ச்சுவார்கள்.. ஊராரின்  கேள்விகளுக்கு உலா்ந்த  புன்னகையை உதிர்த்துவிட்டுக் கடப்பாள்.
            சிறுமியாயிருக்கும் போது சுற்றியிருக்கும் உறவும், ஊரும் உடையையும்  நகையையும் பார்த்தே மதிப்பு கொடுக்கும்.  குத்திக் காட்டவே கேள்விகள் கேட்கும் என்பதெல்லாம் தெரியாது.  மனசு முழுக்க மத்தாப்பு போல குதூகலமும், கொண்டாட்டமும் நிறைந்திருக்க பட்டாம்பூச்சிபோல சிறகடிப்பாள்.  ஆனால் இப்பொழுது அப்படியா?
            பெண்பிள்ளைகள் எப்பொழுதும் அப்பாக்களுக்கு இளவரசிகள்தான்.  இராணியின் அப்பா தன் மகளை இளவரசிக்கு மேலாய் நினைத்ததால் தான் ‘இராணி’ என்று பெயா் வைத்தார் போல.  வறுமையின் நிழல்படாமல் இராணிக்கு சேவகனாய் மாறி வளா்த்தார்.
            கெட்டவா்கள் நன்றாக வாழ்வதைக் கூட சகித்துக் கொள்ளலாம்.  ஆனால் நன்றாக வாழ்ந்தவா்கள் கெட்டுப்போவது தான் பெரிய வேதனை. ஏன் எப்படியென்றே தெரியாமல் அப்பா என்ற ஆலமரம் சாய்ந்தபோது முழுதாய் விழுதாய்க்கூட வளா்ந்திருக்கவில்லை இராணி.  அப்பா கட்டியெழுப்பிய இராணியின் சாம்ராஜ்யம், கனவுகள் இடிவிழுந்து, இடிந்து விழுந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பமாய் அன்றாடப் பிழைப்பிற்கே அல்லல்பட்டது இராணியின் குடும்பம். அப்பா மறைந்த போதே பாதி மரித்துப்போன அம்மா இப்போது உடல், மன நோயால் படுக்கையிலேயே முடங்கிப் போனாள்.
            தம்பி, தங்கையைப் படிக்க வைக்க, படுத்த படுக்கையாகப் போன அம்மாவைப் பிழைக்கவைக்க கிரீடத்தைக் கழற்றி வைத்து முள்முடி சூட்டிக்கொண்டாள் இராணி.
            இராணியை குழம்புச்சட்டி தூக்க வைத்ததற்காக அம்மாவிடம் சண்டைக்குப் போன அப்பா இன்று தன் மகள் கட்டிடவேலையில் சாந்து சட்டியைத் தூக்கிச் சுமப்பதைப் பார்த்தால் மறுபடியும் மரணித்திருப்பார்.
            முள்ளு தைத்ததற்கே மூன்று நாள்கள் முடங்கி முனங்கி அப்பாவைக் கதறவைத்த இராணியிடம் தான் இன்று உடல் வலிகளும், மன வேதனைகளும் ஒட்டுமொத்தமாய்க் குடியேறிக் கொண்டன.  செங்கல்லும், மணலும், சிமெண்டுக் கலவையும் தூக்கிச் சுமக்கும் போதும், வீடு வந்த பின்னும் உடம் முழுக்க பரவிநிற்கும் வலியைத் தாங்கிக் கொள்ளக் கூட பழகிக்கொண்டாள்.  ஆனால் தன் உடம்பை மேயும் சில ஆண்களின் கம்பளிப் பூச்சி பார்வைகளைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை..  தற்காத்துக் கொள்ள அவள் போட்டுக்கொண்ட அப்பாவின் சட்டைகள் தான் அவ்வப்போது கம்பளிப் பூச்சிகளை ஊரவிடாமல் தடுத்தது.
            சிலா் அவளது வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு வளமையை அனுபவிக்க ஆசை வார்த்தைக்காட்டிப் பேசினார்கள். அண்ணா, அப்பா வென்று அழைத்த பின்னும் அப்படிப் பேசும் சாக்கடைகளோடு வேலை பார்ப்பது நரகமாய்த்தான் இருந்தது.  முப்பது வயது கடந்தபின்னும் கணவன், குழந்தைகள் என்று கனவுகளைக் காண்பதற்குக் கூட அவள் தயாராயில்லை.  இரவுகளெல்லாம் கண்ணீரால்  பகல்களாய் மாறிப் போன பிறகு கனவுகள் எப்படி வரும்? அப்பாவைப்போல ஆண் மகனைப் பார்ப்பது மட்டுமில்லை.  கேட்பது கூட அரிதாகிப் போய் விட்டது.  பார்க்கும் இடங்களிலெல்லாம் ஆண் தோல் போர்த்திய அசுரா்கள் முளைத்து நின்றால் பாவையா் நிலை என்னவாகும்?
            பள்ளிக்கூடத்தில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த இராணியின் நினைவலைகளைக் கலைத்தது பள்ளிச் சிறுமியொத்தியின் ஒலிபெருக்கிக் குரல்.  ‘இன்று உலக மகளிர் தினம். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட  வேண்டுமம்மா என்றார் கவிமணி. இப்புவியில்  நாம் பெண்ணாய்ப் பிறக்க  நாம் பெரும் தவம் செய்திருக்க வேண்டும்’ என்று முழங்கிய முகம் தெரியாத அச்சிறுமியின் பேச்சு கேட்டதும் விரக்தியாய்ப் புன்னகைத்தாள் இராணி.  சாபத்தோடு வாழ்வதற்கா தவம் செய்தோம்? தலையில் சுமந்து சென்ற கல்லின் பாரம் இதயத்தை அழுத்தத் தொடங்கியது..
            நிமிர்ந்து பார்த்தாள்.. எதிரே பள்ளிச் சுவரில் கம்பீரமாய்க் கையை உயா்த்தி முழங்கிய முண்டாசுக் கவிஞன் முகம் கவிழ்த்துக் கொண்டது போல் தோணியது.  பக்கத்தில் இயேசுவின் சிலுவையில் குருதி சொட்டிக் கொண்டிருந்தது.
                                    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்         
                              யாதொன்றும் கண்பாடு அரிது. (குறள்.1049)
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

சனி, 24 மார்ச், 2018

நீரின்றி அமையாது உலகு




தலையங்கம்

தி.பி. 2049 (கி.பி. 2018)       மாசித்திங்கள்
தேன் - 2                                                துளி -15

நீரின்றி அமையாது உலகு
(உலக தண்ணீர் தினம் - மார்ச் - 22)



            இன்று வளா்ந்து வரும் வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருக்கிறது.  விண்ணைத் தாண்டும்  ஏவுகணைகள், வியக்கத்தக்க அறிவியல்  கண்டிபிடிப்புகள் என இந்தியாவின் வளா்ச்சி உலக நாடுகளில் கவனத்தை ஈா்த்துள்ளது.  எல்லாம் சரிதான்.  ஆனால்... மக்கள் வாழ்வதற்கான தகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு இழந்து வருகிறது என்பதுதான் வேதனையான  உண்மை.  குறிப்பாகத் தண்ணீா் பிரச்சனை நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது.  பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை போதிய நீா் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனா்.  சில கிராமங்களில் தண்ணீா்  தேடி பெண்கள் பல காத தூரம் அலைந்து திரியும் அவலநிலை நிலவுகிறது  கோடையில் இந்நிலைமை மிக மோசமாக  உள்ளது. நீரின்றிப் பறவைகள் இறக்கின்றன.  விலங்குகள் தண்ணீர் தேடி காட்டை விட்டு ஊருக்குள் வருகின்றன.  இந்நிலைக்குக் காரணம் என்ன?
            காலநிலை மாற்றம் முக்கியக் காரணம்.  ஒரு வருடம் மழையே  இல்லாமல் பொய்த்துப் போகிறது.  மறுவருடம் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் அளவிற்குக் கொட்டித் தீா்க்கிறது.
            இக்காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொண்டு மழை வரும் காலங்களில் நீரைச் சேமிக்க இன்றைய ஆடசியாளா்களும், அதிகாரிகளும் போதிய அக்கறை காட்டுவதில்லை.  இருக்கும் நீா் நிலைகளைப் பராமரிக்கவும், புதிதாக நீா்நிலைகளை உருவாக்கவும்  எந்த வித முயற்சிகளும் முறையாக மேற்கொள்ளப் படுவதில்லை.  அதனால் தான் பெருமழை பெய்த அடுத்த மாதத்திலேயே மீண்டும் தண்ணீா்ப் பஞ்சம் ஏற்படுகிறது.  நிலைமை இவ்வாறிருக்க, மக்களோ ஆழித்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை எடுது்து தேவைக் கதிகமாக நிரைச் செலவு செய்கின்றனா்.  இதனால்  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டு போகிறது.  இப்படியே போகுமானால் நம் வருங்காலச் சந்ததியினா் நீரில்லாமல் அழியும் நிலை உருவாகிவிடும்.  இதைத் தவிர்க்க மக்களும் கொஞ்சம் மாற வேண்டும்.  தேவைக் கேற்ப நீரைச்  சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் நிலத்தடி நீர் மட்டத்தைப் பாழாக்கும் காரணியான நெகிழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  தங்களால் இயன்ற அளவு மரங்களை நட்டு வளா்க்க வேண்டும்.  வீடுகளில் மழைநீா் சேகரிப்பை நிச்சயப்படுத்த வேண்டும்.
            மேலும், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு சண்டையிடும் அவல நிலையும் காலம் காலமாகத் தொடா்ந்து கொண்டே இருக்கிறது.  நதிகள் பொதுவுடைமையாக்கப்பட்டால் ஒழிய இந்நிலை தொடா்ந்து கொண்டே தான் இருக்கும் எனவே நதிநீா் இணைப்பிற்காக மக்கள் ஒரு மித்த குரல் எழுப்ப வேண்டும்.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ஆம் நாள் உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு விட்டு விடாமல் தண்ணீர்ப் பெருக்கத்திற்காக வழி வகைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.  நீா் ஆதாரங்களைப் பெருக்கி பெருங்காலச் சந்ததியினா் வளமுடன் வாழ இந்த உலக தண்ணீா் தினத்தில் உறுதியேற்போம்.
தோழமையுடன்
தேமதுர ஆசிரியா் குழு
ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர் 
தே.தீபா

துணையாசிரியர்
பெ.குபேந்திரன் 

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
ந.முத்துமணி
மு.சிவசுப்பிரமணியன்
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.




கொள்ளு - பருப்பு பொடி


கொள்ளு - பருப்பு பொடி
தேவையான பொருட்கள்
1. துவரம் பருப்பு - 4 கப்
2. கொள்ளு - 1/2 கப்
3. மிளகு - 20
4. மிளகாய் வற்றல் - 10
5. பெருங்காயம் - 1 சிட்டிகை
6. உப்பு - 2 டீஸ்பூன்
செய்முறை
o   வெறும் வாணலியில் கொள்ளுவைப் போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
o   துவரம் பருப்பு மிளகு, மிளகாய் வற்றல் பெருங்காயம் ஆகியவறறை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
o   வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துச் கொள்ளவும்.
o   வறுத்த அனைத்தையும் மிக்சியில் போட்டு  பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
o                பயன்கள்
o                       புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும்.  கொள்ளு ஆங்கிலத்தில் ‘ஹார்ஸ் கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. நம் இரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க உதவுகிறது.  அதுமட்டுமல்லாது சிறு நீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.  ஜலதோஷம், இருமல், உடல்வலி, சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும்.  கடுமையான உழைப்பவா்களுக்கு கொள்ளு உடல் சேர்வை நீக்கும்.
-க.கலைச்செல்வி









வள்ளல் அழகப்பா்


வள்ளல் அழகப்பா்
காரைக்குடியில் ஒருத்தராம் - நமக்கு
கோடி கொடுத்த கொடைஞன்
கோடியில ஒருத்தராம் - நம்ம
கோட்டையூரில் பிறந்த அரசன்
களஞ்சியம் தேடி கப்பலில்
கடல் கடந்த அழகப்பா்
கடல் கடந்து பெற்ற செல்வமழை
கல்விக்குத் தந்து உயா்ந்தார்
வீடில்லா ஏழைகளுகு்கு
வாழ்வு தந்த வள்ளல் அவா்
அழகப்பா பெருமை போற்றிடுவோம்
அவா்வழி நடந்து வாழ்ந்திடுவோம்
-மு.சிவசுப்பிரமணியன்


வெள்ளி, 23 மார்ச், 2018

தமிழாயிரம்


தமிழாயிரம்
1.  கணித்தான் மொழிக்கடன் காத்தான் தமிழால்
     பிணைத்தான் நிலஎல்லைப் பேறு.
2.  பேறெல்லாம் வாய்த்திருத்தும் பேணாமல் விட்டதனால்
     கூறெல்லைக் கூறு முறை.
3.  முறையை விலக்கும் குறிக்கோள் இலாமல்
    நிறைய இழந்தோம் இழப்பு.
4. இழந்ததை மீட்குட் திறமோ இருப்ப
   திழவாமல் காத்தலோ இல்.
5. இல்லா ஒருமை இழப்புதற் கல்லாமல்
  காக்க உதவுமோ காண்.
6. கண்டாலும் காணாமல் போகும் கயமையை
   விண்டாலும் ஆகா விடிவு.
7. விடிநாள் வருமென்ன வீழ்வின்றிக் காத்ததால்
   முடியாமல் போகாது முன்.
8. முன்னிற்கும் நோ்பகை மூண்டெரிக்கும் ஆரியம்
  பின்னிற்கும் ஆங்கிலமும் ஆம்.
9. ஆமாம் திருவிடமோ தீருா விடமாகும்.
    போமா றறிந்து புதை.
10. புதைக்குள் விழுந்தோம் புதைமூடி மேலே
    உதைத்தெழுந் தோங்குவோம் ஓா்ந்து.

  



நட்பு!


நட்பு!
அன்பெனும் கவசக் குழுமத்தில் பிறந்து
நன்பெனும் பாசப் பிணைப்பைப் பெற
நட்புக் குழுமத்தில்  இணையும் மனம்
கட்டுப்பாடு ஜனத்தில் லிருந்து பிரிந்து
பாசப் பிணைப்பில் இணைந்து வாழும்
பட்டாம்பூச்சிப் பறைவைகள் நாம்!
-தே.தீபா