முன்னுரை
மனிதர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை, உறையுள் என்பனவற்றுள்
அடிப்படைத் தேவையாக உணவு என்பது இடம்பெறுகின்றது. ஏனெனில் உடையும், உறையுளும் இல்லாமல் கூட மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால் உணவு என்ற ஒன்று இல்லையேல் மனிதன் இவ்வுலகில்
உயிர் வாழ்வது என்பது இயலாது. அத்தகைய உணவைப் பற்றி ஔவையார் சுட்டும் கருத்துக்களை ஆராய்வது இக்கட்டுரையின்
நோக்கமாகும்.
ஔவையின் நீதிநூல்கள்
சங்க இலக்கியங்கள்,
நீதி நூல்கள், தனிப்பாடல்கள் என ஔவையார் பாடிய பாடல்கள் நமக்குக் மிகுதியாகக் கிடைக்கின்றன. எனினும் அவற்றையெல்லாம்
பாடிய ஔவையார் ஒருவரே என்றும், அப்பெயரை உடைய பலா் என்றும் பல கருத்துக்கள் இலக்கிய உலகிலே
நிலவி வருகின்றன. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,
மூதுரை, நல்வழி என்ற நான்கு நூல்களில் ஔவையார் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் உணவைப்
பற்றிப் பேசியுள்ளார். உணவுகளில் திட உணவுகள், நீர்ம உணவுகள் என இருவகை உணவுகள் உள்ளன. ஔவை தன் நீதிநூல்களில் இவ்விருவகை உணவு முறைகளைப்
பற்றிய செய்திகளை பதிவு செய்துள்ளார்.
உணவுப் பொருட்கள்
ஔவை நீர்ம உணவுகளாகிய பால் (கொன்-60, மூது-5), தாய்ப்பால் (கொன்-62), தண்ணீர் (நல்-32) போன்றவற்றைப் பல இடங்களில் சுட்டுகின்றார். திரவ உணவைச் சுட்டிய
இவா் திட உணவுகளைச் சுட்டாது, திட உணவுகளுக்குத் தேவையான தானியங்களான நெல் (ஆத்-71),
அரிசி (மூது-12), தானியங்கள் (ஆத்-13), காய்கறிகளான வாழைக்காய் (மூது-28), மாங்காய்
(நல்-4), ஊண் உணவான மீன் (மூது-17) சிறந்த உணவாகிய அமுதம் (அமிர்தம்) (கொன்-70,75), நெய் சேர்த்த உணவு (நல்-24)
முதலிய பலவற்றைக்குறிப்பிடுகிறார். அமுதம், நெய் சேர்த்த உணவு இவை இரண்டையுமே உணவுப்
பொருட்களாகச் சுட்டுகின்றார். மற்றவை உவமையாக
உள்ளன.
மனிதனும் உணவும்
ஒரு மனிதன் கல்வி பெறுதல் முதல், நல்ல வருவாயில் வேலை செய்தல், சொத்து சேர்த்துத் திருமணம், குழந்தைகள் என சமூகத்தில்
நல்ல நிலைமையை அடைதல் வரை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அதற்கெல்லாம் அடிப்படை
மனிதனின் உழைப்பே. மனிதனின் இத்தகைய செய்கைகள் யாவும் அவனது “ஒரு சான் வயிற்றுக்கே”
ஆகும். ஆரம்ப நிலையில் தன் வயிற்றுக்கு உணவு
தேடுதலில் தொடங்கி, கல்வி, வேலை, சொத்து என அவனது தேவைகள் ஆசையின் காரணமாக முடிவில்லாமல்
நீண்டு கொண்டே செல்கின்றது. இதனைத்தான் ஒளவையும்,
”பாழி னுடம்பை வயிற்றை
கொடுமையால்
நாழி யரிசிக்கே நாம்” (நல்-19(3-4))
என்கிறார்
என்கிறார்
பெறுதற்கரிய இத்தகைய உடலை வைத்துக்கொண்டு
நாம் பேரின்பம் அடைய வேண்டுமே தவிர, பேராசை கொள்ளக்கூடாது என்று நம்மை அறிவுறுத்துகின்றார்.
உணவின் இன்றியமையாமை
பசியின் கொடுமையை உணா்ந்த ஔவை பசி வந்திடப் பறக்கும் குணங்களாக,
உணவின் இன்றியமையாமை
பசியின் கொடுமையை உணா்ந்த ஔவை பசி வந்திடப் பறக்கும் குணங்களாக,
”மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவமுயற்சி தாளாண்மை-தேனி்
கசிவந்த சொல்லயர்மேற் தாமுறுதல் பத்தும்
பசிவத் திடப்பறந்து போம்” (நல்-26)
என்றவற்றைப் பட்டியலிடுகின்றார்.
வயிற்றிடம் ஔவை
பேசல்
தமிழர்களின் இயல்பே, இல்லையென உணவையும் பொருளையும் தேடி வருவோர்க்கு,
இயன்றதைக் கொடுத்தும், தம்மாலும் இயலாத சூழலில் மற்ற செல்வா்களிடமோ, அரசர்களிடமோ சென்று
பொருள் பெற ஆற்றுப்படுத்துதலுமே ஆகும். அவ்வகையில் ஔவையும் அதியனிடம் நெல்லிக்கனி பெற்றதும், தனக்குப் பரிசில்
தராமல் காலம் தாழ்த்திய மன்னனை “எத்திசைச்
செல்லினும் அத்திசைச் சோறே” எனக் கடிந்துரைத்த நிலையை நோக்கும் பொழுது ஔவையும் வறுமையில் வாடிய நிலை புலனாகின்றது. ”வயிறே உணவு கிடைக்காதபோது ஒரு நாள் உணவு உண்ணுதலை
விட்டுவிடு என்று கூறினால் கேட்கவும் செய்யாய்
உணவு மிகுதியாகக் கிடைக்கும்பொழுது இரண்டு நாளைக்குத் தேவையானதைச் சேர்த்து உண் என்றாலும்
மறுதலிக்கின்றாய். இத்தகைய மனநிலையில் உள்ள
உன்னோடு நான் எவ்வாறுகாலம் கடத்துவேன்? அது எனக்கு இயலாத தன்மையாகத் தெரிகின்றது.
(நல்-10) என்கிறார். புலமையும், வறுமையும் பிரியாதது என்பதற்கேற்ப வறுமைமிக்க ஔவை பாடிய
இப்பாடல் நம்மைக் கண்கலங்கச் செய்கிறது. வறுமையைப் பற்றிய இப்பாடலில் இருந்து சங்க
இலக்கிய ஔவையும், நீதி நூல் இயற்றிய ஔவையும் உணா்வில் ஒருவரே என்பது புலனாகின்றது.
இறைவனுக்கு உணவு
படைத்து வழிபடல்
விலங்குகளை வேட்டையாடி ஆதிகாலத்தில் உணவாக உட்கொண்ட மனிதன் நாளடைவில்
காட்டைத் திருத்திக் கழனியாக்கி உணவுப் பயிர்களை விளைவிக்கத் தொடங்கினான். முதலில்
இயற்கையைக் கடவுளாக வழிபட்ட மனிதன் நாளடைவில் உருவ வழிபாடு, அருவ வழிபாட்டை தத்தம்
குடியினருக்குரிய வழிபாடாகக் கொண்டான் தனக்கு உணவை, உடையை, உறையுளை இத்தகைய இறைவன்
தான் என எண்ணி அத்தகைய இறைவனுக்கும் தான் உண்ணும் உணவில் இனிப்புகளைக் கலந்து அதனை
இறைவனுக்குப் படைத்து வழிபட்டு தன் நன்றிக்கடனை செலுத்தி உண்ணத் தலைப்பட்டனா். ஔவை
மூதாட்டியும் தனது வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் உரைக்கும் பொழுது
”பாலுந் தெளிதேனும்
பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா” (நல்வழி -1)
என்று இறைவனுக்குப் படைக்கும்
உணவைப்பட்டியலிடுகின்றார்.
உணவுப் பொருட்களை
விளைவித்தல்
ஔவையார் நீதிநூல்களில்
பல இடங்களில் நிலத்தில் விவசாயம் செய்து தனக்குத் தேவையான உணவைத் தானே விளைவித்து உண்பதை
”உழுதுண்டு வாழ்வதற்
கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு” (நல்-12
(3-4))
எனச் சுட்டியுள்ளார் மேலும் இவை
போன்ற சில கருத்துக்களையும் வேறு சில விதங்களில் ”பூமி திருத்தியுண்” எனக் கட்டளையாகவும்
”பிறா்க்கு அடிமை செய்து உண்பதைக் காட்டிலும் தானே உழுது உண்பது இன்பம் தரும்” (கொன்
- 46) ”உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவாகும்” (கொன்-69) என்றெல்லாம் தன் நூல்களில்
விவசாயத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
உணவுப் பொருட்களைத்
தானமாகக் கொடுத்தல்
உணவைத் தானம் கொடுத்தலைப் பற்றி ஔவை “ஐயமிட்டு உண்” என்ற இதில் ஏழை எளியவர்களுக்கு உணவிட்ட பின்னரே தான் உண்ண வேண்டும் என்ற கருத்து
பொதிந்துள்ளது. மேலும் இதே கருத்தை கொன்றை வேந்தனில் ”சையொத்திருந்தால் ஐயமிட்டுண்”
(கொன்-34) என்றும், நல்வழியில் ”மழை இன்மையால் ஆறுவற்றி வறண்ட காலத்தும், தன்னிடம்
உள்ள ஊற்று நீரால் உலகத்தவரின் தாகத்தைப் போக்கும், அதுபோல நல்ல குடியில் பிறந்தவா்,
தான் வறுமையடைந்த காலத்தும் தம்மால் இயன்ற அளவு உணவு தானத்தை அளிப்பா்” (நல்-9). ”இந்நிலையில்லா
வாழ்க்கையில் இறப்பு என்பது எப்போதும் வரலாம். அதலால் இறப்பதற்குள் அறஞ்செய்து உண்டு
வாழ்தலே சிறப்பு” (நல்-10) என்றெல்லாம் சுட்டுகின்றார்.
உணவுண்ணும் முறைகள்
ஔவை நாம் உணவை உட்கொள்ள வேண்டிய முறைகளைப் பலவாறு பட்டியல் இடுகின்றார்.
பால் மற்றும் பால் பொருட்களைப் பற்றிய உணவுப்
பொருட்களை மூன்று இடங்களில் சுட்டுகின்றார் நீர்ம உணவை உண்ணுவதாக இருந்தாலும் அதனையும்
உரிய நேரத்தில் அருந்த வேண்டும் என்பதைப் ”பாலோ டாயினுங் காலம றிந்துண்” (கொன்-60)
என்றும், ”தாய்ப்பால் குடித்து வளா்ந்த குழந்தை எப்பாரத்தையும் தாங்கும்” (கொன்-62)
எனக் குழந்தை உண்ண வேண்டிய அமுதமாகிய தாய்ப்பால் உணவைப் பற்றியும், ”நெய்யினால் உணவு
மாண்பு பெறும்” (நல்-24) அத்தகைய உணவை நாம் உண்ண வேண்டும் என்றும் கூறுகின்றார். இவ்வாறு நாம் உண்ணும் இத்தகைய பால் உணவுகளையே நாளடைவில்
மக்கள், இறைவன் உண்ணும் உணவென, இறைவனுக்குப் படைத்தும் வழிபட்டதனையினை ஔவையின்
”பாலுந் தெளிதேனும்
பாகும் பருப்புமிவை” (நல்-1)
என்ற பாடல் நமக்கு புலப்படுத்துகின்றது. மேலும் ”நாம் உண்ணக் கூடிய
உணவு நீர்ம உணவே யாயினும் உழைத்து உண்ணும் அவ்வுணவே சிறந்த உணவு” என்று (கொன்-69) கூறுகின்றார். அவ்வாறு வருத்தி உழைத்து உண்ணாது பிறா் உழைப்பில்
விளைந்த உணவை உண்ணும் மனிதா்களை ”வருந்தி உழைத்து பொருளைச் சேர்த்து உண்ணாத பாவிகளே,
நீங்கள் இறந்த பின் நீங்கள் சேர்த்து வைத்த பொருளை யார் அனுபவிப்பா் பிறா் உழைத்த அனைத்தும்
வீணே” என அவா்களைக் கடிந்து உரைக்கின்றார். மற்றொரு இடத்தில் ”மருந்தே யாயினும் விருந்தோ
டுண்” (கொன்-70) எனக் கூறுகின்றார். இதில் அமுதம் கிடைத்தது எனத் தனித்து உண்ணாது, விருந்தினரோடு சேர்ந்து உண் எனக்கூறி அறிவுறுத்துகின்றார்.
உணவை உண்ணக் கூடாத
முறைகள்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு எனத் தமிழ்ப் புலவா் ஒருவா்
சுட்டியுள்ளார். இதனைத் தான் ஔவையும் ”அளவுக்கு
மேல் உண்ணுவதை விரும்பாதே.” (ஆத்-90) என உணவை மிகுதியாக உண்ணக்கூடாத முறையைச் சுட்டுகின்றார். அவ்வாறு உண்ணும் உணவிலும் நோய் தரும் தின்பண்டங்களை உண்ணாதே என்பதை ”நுண்மை நுகரேல்” (ஆத்-69) ”புலால் உண்ணுதலைத் தவிர்த்துவிடு”
(கொன்-63) என்றும் சுட்டுகின்றார். மேலும்
பெண்கள் உண்ணும் முறையைச் சுட்டும்பொழுது,
”உண்டி சுருங்குதல்
பெண்டிர்க் கழகு” (கொன்-5)
எனக் கூறுகின்றார். மேலும் பிறரிடம் ஆசை வார்த்தை கூறி உணவை வாங்கித் தின்னக்கூடாது
எனபதை,
”பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை
பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்துன்கை - சீச்சீ
வயிறு வளா்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்” (நல்-14)
என உரைக்கின்றார்.
விருந்தோம்பல்
செய்வதும், விரதமும்
உணவைப் பற்றிய மிகுதியான செய்திகளைத் தன் நூல்களில் பதிவு செய்துள்ள ஔவை ஓரிடத்தில், உணவோடு
தொடர்புடைய விருந்தோம்பலைப் பற்றி, ”விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்” என்று சுட்டுகின்றார். இதிலிருந்து விருந்தோம்பல் என்னும் பண்பைச் செய்யாதவரின் இல்லறம் சிறக்காது
என்ற கருத்து புலப்படுத்தப்படுகின்றது.
விரதம்
நித்தமும்
மூன்று வேளை உணவுண்ணும் மக்கள் தாம் மரபாக வழிபடும் கடவுளர்களைத் தான் நினைத்த செயல்
சிறப்பாக நடந்தேற வேண்டும், என எண்ணி வேண்டி அதற்காக ஓா் நாளோ ஓா் வேளையோ உணவு உண்ணுதலைத்
தவிர்த்து இறைவனையே எந்நேரம் மனதில் எண்ணி வழிபட்டிருப்பா். இவ்வாறு உணவு உண்ணாது இறைவனை
வழிபடுவதால் அவ்விறைவன் தாம் நினைத்த செயலைச் சிறப்பாக நடத்தி வைக்கும் என்பது மக்களின்
தீராத நம்பிக்கை ஆகும். ஔவையாரும் அவ்விரதத்தைக்
கடைபிடிக்க வேண்டிய முறை குறித்து பொழுது,
”நல்ல கொள்கையை விடாமல் காப்பதே விரதமாகும்” (ஆத்-33)
என்றும் ”நோன்பென்பதுவே
கொன்று தின்னாமை” (கொன்-58) என்றும் சுட்டுகின்றார்
முடிவுரை
ஔவையார் மனிதா்களின் இன்றியமையாத் தேவையாகிய உணவுப் பொருட்கள்,
உணவுப் பொருளை விளைவித்து உண்ணும் முறைகள், உணவை உண்ணக்கூடிய முறைகள் உண்ணக் கூடாத
முறைகள், உணவுப் பொருட்களைத் தானம் கொடுத்தல், விரதமுறைகள், உணவின் இன்றியமையாமை, உணவின்
முக்கியத்துவம் போன்ற உணவைப் பற்றிய பல்வேறு செய்திகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
-மு.செண்பகவள்ளி
அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். நன்று. யோகா வகுப்புகளில் உணவு உண்பதை குறித்து 'ஏவா உணவு" என்ற ஒரு சொல்லாடல் பற்றி குறிப்பிட்டதால் அதைப்பற்றி என் தேடுதல் தங்கள் பதிவில் கொண்டு வந்துவிட்டது. ஏவா உணவு என்பது குறித்து அவ்வையார் உரைத்த பாடல் பற்றி மேலும் தகவல்கள் இருந்தால் பதிவிடவும். மகிழ்ச்சி. இப்படிக்கு, மது.
பதிலளிநீக்கு