சனி, 16 டிசம்பர், 2017

தமிழாயிரம்

தமிழாயிரம்
உயிரியக்கம்

1.       கதிரியக்கம் கண்ட தமிழன் வலமே
          அதுவியங்கல் தேர்ந்தான் வியந்து.
2.       வியந்தான் இயக்கமெலாம் வீசு வளியும்
          நயந்தான் வலஞ்சுழலல் நன்கு
3.       நன்றாய்ச் சுழலை நலிநீருள் கண்டறிந்தான்
          அன்றும் வியந்தான் அறிந்து
4.       அறிந்த சுழற்சி அனலிடையும் கண்டான்
          செறிந்தான் தெளிவு மிக.
5.       மிக்குயா்ந்த விண்மீனும் திங்களும் மேலெல்லாம்
          தக்காங்கு சுற்றும் கதவு.
6.       தகவாய் இயக்கும் தனியாற்றற் கிட்டான்
          அகலா இயவுள் அது
7.       அதுதான் இயக்க  இயங்கும் புதுமை
          அதுதான் அனைத்தியக்க மாம்
8.       ஆமதனால் ஆக்கும் தமிழின் விரிவடிவம்
          நாமமைத்தல் நன்றாம் என
9.       என்ற படியே இயங்கும் உயிரெழுத்தை
          ஒன்றித்தான் வட்டம் உற
10.     உறவான மூச்சியக்கும் ஓடும் குருதித்
          திறவியக்கும் எல்லாமும் தேர்ந்து




கொள்ளு புட்டு

கொள்ளு புட்டு
தேவையான பொருட்கள்
1. கொள்ளு                          -       அரைகப்
2. தேங்காய்த் துருவல்  -       கால் கப்
3. பச்சை மிளகாய்                -       1 (நறுக்கியது)
4. பெருங்காயத்தூள்     -       தேவையான அளவு
5. கடுகு                      -       சிறிதளவு
6. எண்ணெய்               -       தேவையான அளவு
7. உப்பு                       -       தேவையான அளவு

செய்முறை
          கொள்ளுவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை  வடித்து விட்டு மிக்சியில் போட்டு புட்டு மாவு  போன்று  அரைத்துக் கொள்ள வேண்டும்.  இட்லி  தட்டில் மாவை கொட்டி வேக வைத்து உதிரியாக்கிக் கொள்ள வேண்டும்.  வானலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு பச்சை மிளகாய், பெருங்காயத்தூள்  மஞ்சள் தூள் சோ்த்து தாளிக்க வேண்டும்.  அதனை கொள்ளு மாவில் ஊற்றி கிளறி தேங்காய் துருவல் கலந்து சுவைக்காம்.

-க.கலைச்செல்வி

புதன், 15 நவம்பர், 2017

கார்த்திகை சோமவாரம்


தலையங்கம்

தி.பி.2048 (கி.பி.2017) காா்த்திகைத்  திங்கள்


தேன் - 1                                                         துளி-11
கார்த்திகை சோமவாரம்




          கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கள் கிழமை) மிகவும் சிறந்ததாகும்.  இந்நாளில் சிவ ஆலயங்களில் 108, 1008 சங்காபிடேகங்கள் நடைபெறும்.  கார்த்திகை மாதத்தில் சிவபெருமான அக்னிப்பிழம்பாக இருப்பதால் அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிடேகம் செய்யப்படுகிறது.

          ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள் சந்திரன் என்ற பொருளும் உண்டு சந்திரன் தோன்றியது கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமிதிதியில்தான் சந்திரன் தட்சனின் மருமகன் ஆவார். அவருடைய இருபத்தியொரு பெண்களையும் மணந்து கொண்டார்.  ஆனால் ரோகிணியுடன் மட்டும் அன்பாக இருந்தார்.  அதைக் கண்ட தட்சன் கோபம் கொண்டு ‘தேயக் கடவது’ என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

          நீங்கள் தட்சனிடம் சாபம் பெற்ற சந்திரன் சாபவிமோசனத்திற்காக திங்களுா் சென்று சிவபெருமானை எண்ணி  தவம்  இருந்த பொழுது முழுமையாக தேய்வதற்கு மூன்று நாட்கள் முன் சந்திரன் மீது இரக்கம் கொண்டு சிவபெருமான்  தன் தலையில் எடுத்து சூடிக் கொண்டார் சந்திரன் நவக்கிரகங்களில் ஒருவா் ஆனார்.  அன்றைய தினம் கார்த்திகை சோமவாரம் ஆகும்.  அன்று முதல்  வளா்ந்தார் சந்திரன், ஆனாலும் சாபத்தால் தேய்ந்தார்.

          சந்திரன் சிவபெருமானிடம் சோமவாரம் தோறும் பூசை செய்து விரதம் இருப்பவா்களுக்கு வேண்டியதை அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  சிவபெருமானும் அவ்வாறே அருளினார்.  எனவே பக்தர்கள் கார்த்திகை சோமவாரத்தில் விரதம் கடைப்பிடிக்கின்றார்.  அன்று சிவன் கோயில்களிலும் சிறப்பு ஆபிடேக ஆராதனை நடைபெறுகிறது.
                                                                                                                    தோழமையுடன் ,
தேமதுரம் ஆசிரியா்குழு,




ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
ந.முத்துமணி

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
தீபா 
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.

குழந்தை பாடல்கள்


குழந்தை பாடல்கள்

மணலில் வீடு கட்டுவோம்
          மீண்டும் கோட்டைக் கட்டுவோம்
தணலும் வெய்யில் போதிலும்
          தரையில் அமா்ந்து ஆடுவோம்
சும்மா பொழுதைப் போக்காமல்
          சுறு சுறுப்பாய் கூடுவோம்
அம்மா அழைத்த போதிலும்
          ஆா்வ முடனே ஆடுவோம்
கூடிய வீட்டை களைத்திடுவோம்
          கவலை மறந்து குதித்திடுவோம்
சுட்டியாய் கைகால் கழுவிடுவோம்
          சுகமாய் வீடு சென்றிடுவோம்.

-க.கலைச்செல்வி

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!


எங்கோ பிறந்தோம்! எங்கோ வளா்ந்தோம்!
அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால் சிந்தித்துக் கொண்டோம்!
முகங்களைப்பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை!
சின்ன சின்ன சண்டைகள் இடுவோம்!
சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!
உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்
நன்மைகள் வளர முயற்சிப்போம்!
நட்பால் உயா்ந்து சாதிப்போம்!
-பெ.குபேந்திரன்


முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

          ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.  அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண் மூடித்தனமான நம்பிக்கை அதனால் அது அடிக்கடி ஒர பாறை மீது அமா்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும்.
          ஒரு நாள் திடீரென்று இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா? என்று சந்தேகம் வந்தது  பின்னா் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது ஒரு நாள் அந்தக் கழுகு இன்று எனக்க உணவு கிடைக்குமா? இறைவன் தான் எல்லோருக்கும் படியளப் பவன்
          ஆயிற்றே ... என்று யோசித்தது உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமா்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று “இறைவா இன்று எனக்கு உணவு கிடைக்குமா என்று பெரிய குரலெடுத்துக் கூவியது உடனே விண்ணிலிருந்து ஒரு குரல் “உனக்கு இன்று உணவு உண்டு என்று பதில் கூறியது. மிக்க மகிழ்ச்சியுடன் “இன்று இரைதேடும் வேலை இல்லை,
          எப்படியும் உணவு கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமா்ந்திருந்தது.  நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.  ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமா்ந்திருந்தது.  மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று இரவு வந்து விட்டது.
          “நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே”  என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு. அப்போது ஒரு குரல் கேட்டது.  ‘என்ன குழந்தாய் சாப்பிட்டாயா?”   என்றதைக் கேட்டதும் கழுகுக்கு அழுகை வந்து விட்டது.
          “குழந்தாய் சற்று திரும்பிப் பார்”  உன் பின்னாலேயே உணக்கான உணவு இருக்கிறது.  கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது.   கழுகு புன்னகை புரிந்து இறைவனிடம் இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?
          இறைவன் பதிலளித்தார் ‘குழந்தாய் உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது.  நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய் திருமபிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.  ‘கடுகளவேனும் முயற்சி வேண்டும்.  ஒரு வேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது  அப்போது தான் இறைவனின் அருளையும் பெற முடியும்”  என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
          அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது.  தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்.  ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக் கூடாது முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை.  உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை..

முயற்சி திருவினையாக்கும்.


-        கு.கங்காதேவி

தமிழின் சிறப்பு

தமிழின் சிறப்பு

          அகரத்தில் ஓா் இராமாணம்.  இராமாயண கதை முழுவதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்ட்டுள்ளது.
அனந்தனே
அசுரா்களை
அழித்து
அன்பா்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்
அப்போது
அரிக்கு
அரணாக
அரசினின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்
அன்பழகன்
அன்பா்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்
அயோத்தி
அடலேறு
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான்
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே
அப்படியிருக்க
அந்தோ!
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்
அங்கேயும்
அபாயம்!
அரக்கா்களின்
அரசன்
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினா்
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரா்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனா்
அலசினா்
அனுமன்
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்
அசோகமரத்தின்
அடியில்
அரக்கிகள்
அயா்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணவின்
அடையாளமாகிய
அக்கணையாழிகை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அரக்கா்களை
அலறடித்து
அவா்களின்
அரண்களை
அகந்தைகளை
அடியோடி
அக்கினியால்
அழித்
அனுமனின்
அட்டகாசம்
அசாத்தியமான
அதிசாகசம்
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி
அதிசயமான
அனையை
அமைத்து
அக்கரையை
அடைந்தான்
அரக்கன்
அதீதசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழிந்தான்
அக்கினியில்
அயராமல்
அா்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்
அன்னையும்
அயோத்தியை
அடைந்து அரியணையில்
அமா்ந்து
அருளினான்
அண்ணல்
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
-அ.ரா.பானுப்பிரியா