திங்கள், 15 மே, 2017

பழமொழியும் தமிழிலக்கியங்களும்
முன்னுரை
            நாட்டுப்புறவியல் வகைமைகளுள் வாய்மொழி வழக்காற்றில் அதிகமான செல்வாக்கினைப் பெற்றிருப்பது பழமொழிகளாகும். இப் பழமொழிகள் மக்கள் சமுதாயத்தின் சிந்தனைப்  போக்கினையும், வாழ்க்கைச்  சூழலையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன.  ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளையும், மொழி வளத்தினையும் அளவிட்டு நோக்குவதில் பெரும்பங்கினை ஏற்றுக் கொண்டிருப்பது பழமொழிகளாகும்.  இப்பழமொழி தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு எல்லாம் காணப்படுகின்றது என்பதை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழமொழி - சொல்  பொருள் விளக்கம்
            பழமொழி என்ற சொல்லிற்கு  பழமையான மொழி என்பது பொருளாகும். பழமையான வாழ்வியல் அறங்களையும் கோட்பாடுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் மொழிகின்ற இயல்பினைக் கொண்டது.  பழமொழியை நம் தமிழா்கள் பல்வேறு பெயா்களால் வழங்கியிருக்கின்றனா் முதுசொல், முதுமொழி,  நெடுமொழி, பழஞ்சொல், மூதுரை, பழவார்த்தை, பழமைச் சொல் முதலான சொற்கள் பழமொழியைக் குறிக்கின்றன.  பழைய மொழியே பழமொழி.  பழமொழி என்ற சொல்லுக்குச் சேந்தன் நிவாகரம், மூதுரை, முதுமை மொழிமை  முன்சொல் முதுசொல் பழஞ்சொல் என்று ஆறு பொருளைத் தருகின்றது.
            “மொழிமை, மூதுரை, முன்சொல் பழஞ்சொல்
            முதுசொல் என்பா் பழமொழியும் ஆமே”
என்று கூறுகிறது பிங்கல நிகண்டு
            தமிழில்  பழமொழியைக் குறிக்க முப்பத்து நான்கு சொற்கள் இருப்பதாக டாக்டா் வ.வெருமாள் குறிப்பிடுகின்றார். 1. பழமொழி  2. கொன்னொறி மொழி  3. முதுமொழி 4. முதுசொல்  5. கொன்று படுகிளவி 6. தொன்படு பழமொழி 7.  பழகு மொழி 8. வாய்மொழி 9. அறம் 10. நெடுமொழி 11. பல்லவையோர் சொல் 12. பண்டைப் பழமொழி  13. சொலவு 14. மூதுரை 15. பழஞ்சொல் 16. மூத்தோர் சொல் வார்த்தை 17. வழக்கு 18. உரை 19. பழைய நெறியினால் வரும் சொல் 20. பழவார்த்தை 21. உலகமொழி 22. உபகதை 23. சுலோகம் 24. சொலவடை 25. வசனம் 26 எழுதா இலக்கியம் 27 வாய்மொழி இலக்கியம் 28. எழுதாக் கிளவி 29. கேள்வி 30. சுருதி 31. நீதிமொழி 32. முதுமை 33. மொழிமை 34. முன் சொல் என்பனவாகும்.
பழமொழிகளின் தோற்றம்
            பழமொழிகள் எப்பொழுது தோன்றின யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்பதைத் திட்ட வட்டமாகச் சொல்லுதல் இயலாது. பழமொழிகள் ஏழை எளிய மக்களிடத்தும அவா்களின் அன்றாட வாழ்க்கையின் இன்பம் முதலான பல்வேறு சமமூகச் சூழல்களிலும் தோற்றம் பெறுகின்றன எனலாம்.  காலந்தோறும் அவற்றிடையே மாற்றங்கள் சூழல்களுக்கேற்ப ஏற்படுவதுடன் புதியனவும் தோன்றுகின்றன.  “தமது சந்ததியினரை வாழ்க்கையின் பன்முகத்தாலும் நல்லாற்றுப் படுத்துதல் வேண்டும் அதன் மூலம் சிறந்த தொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே பழமொழிகளின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணம்” என்கிறார் ச.சிவகாமி
பழமொழியும் - தமிழிலக்கியங்களும்
            பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியங்களில் பழமொழி பற்றிய செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியா் பழமொழியை “முதுசொல், முதுமொழி” என்று குறிப்பிடுகின்றார்.  “நுண்மையும், அருக்கமும் ஒளியும் உடைமையும் குறித்த பொருளை முடித்தற்கு வருஉம் மென்மை என்றவை விளக்கத் தோன்ற ஏது முதலிய  முதுமொழி” என்பதை
            “எது முதலிய முதுமொழி என்று”
            -----------------------------------------
            அங்கதம் முதுசொலோடு அவ்வேழ் நிலத்தும்”
என்று குறிப்பிடும் இடத்திலும் பழமொழியைக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் தான் முதன் முதலில் பழமொழி என்ற சொல் கையாளப் பட்டிருக்கிறது.
            “நன்றுசெய் மருங்கில் தீது இல் என்னும்
            கொன்று படு பழமொழி”
“தொன்றுவடு பழமொழி” என்பதால் சங்க காலத்திற்கும் முன்பாகவே பழமொழிகள் வழக்கில் இருந்தமை புலனாகிறது.
            “பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
            வாயே யாழுதல் வாய்த்தனம் தோழி”
என்ற அகநானூற்றுப் பாடல் பழமொழி பொய்ப்பதில்லை என்ற உண்மையை உணா்த்தி நிற்கிறது.
            “இரங்குங்கால் முகனும் தாம்
            கொடுக்குங்கால் முகனும் வேறாதல்”
என்ற கலித்தொகை வரிகள் கடன் வாங்குதல் திருப்பிக் கொடுத்தல் என்ற சூழலில் உண்டாகும் மனநிலையைப் பழமொழியாக்கிக் காட்டுகிறது.  புறநானூறு, பரிபாடல், குறுந்தொகை, பொருநராற்றுப் படை, பெரும்பணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி முதலான நூல்களில்  உள்ள பழமொழிகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
            சங்கம் மருவிய காலத்தில் பழமொழிகளின் செல்வாக்கு தமிழிலக்கியத்தை மிகுதியாக ஆட்கொண்டிருந்தன.  பதினெண்கீழ்கணக்கு நூல்களாகிய அற நூல்கள் அனைத்திலுமே பழமொழிகள் செம்பாகமாக இடம் பெற்றுள்ளன எனலாம்.
            “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்ற  திருக்குறள் அடி இன்று நாட்டுப்புறங்களில் வழங்கப்படுகின்ற “ஊா் ஓட ஒக்க ஓடு நாடு ஓட நடுவே ஓடு” என்ற பழமொழியின் பண்பட்ட வரிகளாகத்  தோற்றமளிக்கின்றது.
            மதுரைக் கூடலூா் கிழார் பாடிய முதுமொழிக் காஞ்சி பழமொழிகளின் தொகுப்பு நூலாகவே காணப்படுகின்றது
இவா்
            “ கால மறிந்து செய்”
என்கிற பழமொழியை “காலமறியாதோன் கையுறல் பொய்” என்று கூறுகிறார்.
            நாலடியாரில் “ஒருவா் பொறை இருவா் நட்பு” கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு” என்ற பழமொழிகள் இடம் பெற்றுள்ளன நான்மணிக் கடிகை  எழுதிய  விளம்பி நாகனார் நெருப்பில்லாமல் புகையுமா? என்ற பழமொழியினை “புகைவித்தாப் பொங்கழல் தோன்றும்” என்று குறிப்பிடுகின்றார்.
            கபிலரின் “இன்னா நாற்பது என்ற நூலில் பழமொழிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன  உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பின்னா” என்ற பாடல் வரி “உண்ணாத பண்டம் பாழாகிப் போகும்” என்ற பழமொழியின் மாற்று வடிவமாகத் திகழ்கிறது
            முன்றுறை அரையனாரின் “பழமொழி நானூறு” என்ற நூலின் நானூறு பாடல்களின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்  இந்த நூலே தமிழுக்குக் கிடைத்த முதல் பழமொழித் தொகுப்பு நூலாகும்.
            “நிறைகுடம் நீா் தளும்பல் இல்
            நாய் பெற்ற தெங்கம் பழம்”
என்ற இது போன்ற பழமொழிகள் மக்கள் வழக்காறுகளில் இருந்து சேகரிக்கப்பட்டு சமுதாயத்திற்கு நீதிகளைப் புகட்டும் போது அவற்றிடையே பழமொழி களைக் கையாண்டுள்ளார்.
            காப்பியகாலப் புலவா் பெருமக்களும் தாங்கள் இயற்றிய காப்பியங்களில் பழமொழிகளை  எடுத்தாண்டுள்ளனா்.
            “அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்” என்றும் “பல்லவையோர் சொல்லும் பழுதன்றோர்” (சிலம்பு  19 வெண்பா)
            “நீ அறிந்திலையோ, நெடுமொழி அன்றோர்” என்ற வரிகளில் உள்ள  பல்லவையோர் சொல், நெடுமொழி என்ற சொற்கள் பழமொழியைக் குறிப்பதாகும்
            மணிமேகலை “முதுமொழி கூற முதல்வன் கேட்டு” என்று பேசுகிறது.  சீவக சிந்தாமணியில்
            “புலிக்கு வால் உருவி விடலாமா” (2197பாடல்)
            “உதிரம் உறவறியும்” (விமலையார் இலம்பகம்22)
போன்ற பழமொழிகளைத் திருத்தக்கதேவா் நயம்பட உரைக்கிறார்.  குண்டலகேசியில்
            “அகை அழல் அழுவந் தன்னை
            நெய்யினால் அவிக்க லாமோ”?
என்ற வரியில் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றலாமா? என்ற பழமொழியின் மாற்று வடிவம் இடம் பெற்றுள்ளது.
திருநாவுக்கரசா் தேவாரத்தில் பல்வேறு பழமொழிகளைத் தம் பாடல்களில் கையாண்டுள்ளார்.
            “முயல்விட்டுக் காக்கையின் போனவாறே”
            “கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்தவாரே”
            “கனியிருக்கக் காய் கவா்ந்த கன்வன்”
போன்ற பழமொழிகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்
            ”உம்மையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கம் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்”
என்பன போன்ற பழமொழிகளைக்  கையாண்டுள்ளார்.  பழமொழியைப் பழஞ்சொல் என்று குறிப்பிடுகிறார்.
பெருங்கதைக் காப்பியத்தில்  “வண்டு யனையா் மைந்தர என்பது பண்டே உரைத்த பழமொழி” (பெருங்கதை 16:36) என்ற தொடரில் ‘பழமொழி’ என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது.
            கம்பராமாயணத்தில் “புலிதானே புறத்ததாகக் குட்டி கோட்படா தென்னும் ஒலியொழி உலகுரைக்கும் உரை பொய்யோ” (கங்கைப் படலம்) என்ற பாட்டில் ‘உலகுரைக்கும் உரை’ என்ற தொடரால் பழமொழிக்குரிய புதிய  சொல்லான திணை உருவாக்குகின்றார்.
            வில்லிபுத்தூரார் தாம்  பாடிய பாரத்தில் ”தன்னிலத்தில் குறுமுயல் தந்தியின் வலிதென்று இந்நிலத்தினில் பழமொழி அறிதி நீ இறைவ” (நீரைமீட்சி-50) என்ற இடத்தும் பழமொழி என்ற சொல்லாட்சியையும் பயன் படுத்துகிறார்.
            மேலும் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, மூதுரை, நல்வழி, நன்னெறி போன்ற சதக நூல்கள் அனைத்திலும் ஏராளமான பழமொழிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முடிவுரை
            மக்கள் சமுதாயத்தின் சிந்தனைக் கூறுகளையும் சிந்தனைப் போக்குகளையும் பண்பாட்டுத் தன்மைகளையும் அறிவிக்கும் சாதனமாகப் பழமொழிகள் அமைந்துள்ளன. சங்க காலம் முதல் இக்காலம் வரை மக்களின் வாழ்வியலோடு தொடா்புடைய பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், வழிபாட்டு நிலைகள், முதலான அடிப்படைக் கூறுகளை அறிந்துணர முடிகிறது.  பழமொழிகள் வளா்ந்து வரும் நாகரீக அறிவியல் வளா்ச்சிக்கு ஏற்ப அவைகளின் கருத்தாக்கங்களை ஏற்றுள்ள பழமொழிகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு மனித சமுதாயத்தையே பிறப்பிடமாகக் கொண்டு வளா்ந்து வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.
-கு.கங்கா தேவி








பழமொழி சேலை கட்டிய மாதரை நம்பாதே

பழமொழி
சேலை கட்டிய மாதரை நம்பாதே

            சேலை கட்டிய மாதரை நம்பாதே  சேலை கட்டும் பெண்களை நம்பாதே என்று பொதுப்பொருள் கூறப்படுகிறது.  இது தவறாகும்.  இப்பழமொழியிலுள்ள முதல் வார்த்தை சேலை கட்டிய அல்ல சேல் அகட்டிய.  சேல் என்றால் மீன்.  “மீனைப் போன்ற கண்ணை அகட்டி தவறான வழிக்கு அழைக்கும் பெண்களை நம்பாதே”  என்பது  தான் உண்மைப் பொருள்

பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

சீவகசிந்தாமணியில் மகளிர் மேற்கொண்ட துறவு

சீவகசிந்தாமணியில் மகளிர் மேற்கொண்ட துறவு
முன்னுரை
            சீவகசிந்தாமணி கதைத் தலைவன் பெயராலேயே அமைக்கப்பட்ட ஒரு காப்பியமாகும்.  இது விருத்தம் என்னும் பாவினால் எழுந்த முதற்காப்பியம்.  இந்நூல் பதின்மூன்று இலம்பகங்களையும், மூவாயிரத்திற்கும்  மேற்பட்ட செய்யுட்களையும் கொண்டு அமைந்துள்ளது.  இது கதை முழுதும் இன்பச் சுவையைத் தழுவிய காப்பியமாகவும், பிற்பகுதியிலுள்ள முக்தி இலம்பகம் மட்டும் வீடுபேறு அடைவதற்குரிய வழியைக் கற்பிக்கின்றது.  இதில் பெண்கள் மேற்கொண்ட துறவு வாழ்க்கையைப் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமணா்கள்
            சமணா் என்பதற்கு துறவிகள்  என்பது பொருளாகும் இந்தியாவில் தோன்றிய சமயங்களுள் ஒன்றான சமண சமயம் கி.மு.6-ம் நூற்றாண்டில்  தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இது கொல்லாமை, தூய்மை போன்ற நல்லறங்களினால் இறைவனை அடையமுடியும் என அறிவுறுத்துகின்றது.  சமண சமயக் கடவுளான அருகனை வணங்குவோர்  “ஆருகதா்” என்றும், அவா்களது சமயம் “ஆருகத மதம்” ஆகும்.  சமணக் கடவுள் பற்றற்றவா்.  எனவே “நிர்க்கந்தா்” அல்லது “நிகண்டா்” எனப்பட்டார்.  அது பற்றிச் சமண சமயம் நிகண்ட மதம் எனப் பெயா் பெற்றது.  மதங்கள் சமணம் ஒழிந்த ஏனைய  மதங்கள் “ஏகந்தவாத மதங்கள்” எனவும், சமணம் “அநேகாந்தவாதம்” எனவும் கூறப்படுகிறது.
சமண சமயப் பிரிவுகள்
            சமண சமயம் மூன்று பெரும் பிரிவுகளை உடையது.  ஒன்று சவேதாம்பரம் இதற்கு வெண்மை என்பத பொருளாகும்.  எனவே இப்பிரிவினா் வெண்மை நிற உடையணிந்து தெய்வத்திற்கும் வெண்ணிற ஆடை அணிவிப்பா்.  துணையின்றி சீவகனைப் பெற்றெடுத்த இடுகாட்டில், செண்பகமாலை என்னும் தோழி உருவத்தில் வந்து உதவிய தெய்வத்திற்கு இடுகாட்டில் ஒரு கோயிலை எழுப்பினாள்.  பிறகு தான் எப்பொழுதும் காணும் மயிற்பொறியின் வடிவத்தைத் தன் மாடத்தில் ஓவியமாக வரையச் செய்தாள் பின் சீவகன் பிறந்த இடுகாட்டை அறச்சாலையாக்கினாள்.
            ”சிங்கம் நடப்பதுபோற் சோ்ந்து பூத்தூய்ப்பலா் வாழ்த்தத்
            தங்கா விரும்பிற்றம் பெருமான் பாதம் முடிதீட்டி
            எங்கோ பணியென்னா அஞ்சா நடுங்கா இருவிற்கட்
            பொங்க விடுதவிசில் இடுந்தான் போரே றணையானே” (சீவ.சிந்.2608)

அப்பொழுது தன்னை வந்து பணிந்து வணங்கிய சுனந்தை மற்றும் சீவகன் என் மனைவியரை வீழ்த்திவிட்டு, சீவகனை அழைத்து, அவனது தந்தையான சச்சந்தன் கட்டியங்காரனது சூழ்ச்சியால் கொல்லப்பட்டதையும், சீவகனை ஆளில்லாத இடுகாட்டில் பெற்றெடுத்த அவல நிலையையும் எடுத்துக் கூறினாள்.  பின் உனது தந்தையைப் போல் உலக இன்பங்களில் கவனத்தைச் செலுத்தாதும், தீய பழக்கங்களை விட்டொழித்தும், கடந்து போனவற்றை எண்ணி வருந்தாது, இனி நிகழப் போகும் காலங்களில் தவத்தினை மேற்கொண்டு பிறவித் துன்பததை நீக்கியும், பயனற்ற பொருட்கள் மீது செலுத்தும் கவனத்தை விடுத்தும், வீடுபேற்றினை அடைய தானமும், தவமும் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகின்றமையை,
            “உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட்டு
            அடுத்துணா்வு நெய்யாக ஆற்றல்துவை யாகக்
            குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே
            கொடுத்துண்மின் கண்டீா் குணம்புரிமின் கண்டீா்”  (சீவ.சிந்.2620)
என்னும் பாடல் வரிகளைக் கொண்டு விசயையின் வாயிலாய் திருத்தக்கத்தேவா் தவத்தின் வலிமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.  இவ்வாறாக விசயை தவத்தின் சிறப்பினைக் கூறி தான் துறவு மேற்கொள்ள விரும்புவதை எடுத்துக் கூறுகின்றார் (சீவ.சிந்.2600-2626)
சுநந்தையின் துறவு
            சீவனிகன் தாயான விசயையின் துறவை எண்ணி வருந்திய சீவகனுக்கு, அவனது வளா்ப்புத் தாயான சுநந்தையின் துறவு மேற்கொள்ள விரும்பும் மனநிலையானது மேலும் துன்பத்தை அளித்தது, சுநந்தை சீவகனிடம், “உன் தாய் துறவு மேற்கொண்ட நிலையில், நான் இங்கு இன்புற்றிருத்தல் சிறப்புடையதன்று. எனவே நானும் விசயையின் துறவு நிலையைப் பின்பற்றி நல்லறம் அடைய விரும்புகிறேன்.  உன்னை இடுகாட்டில் விசயை பெற்றெடுத்த நிலையினை, உன் மனைவியருக்கும் வரவிடாமல் தடுப்பாயாக” என்று கூறிவிட்டு தவப்பள்ளியை நோக்கி நடந்தாள். (சீவ.சிந்.2627, 2628, 2645, 2647) இதனை,
            “என்றலுஞ் சுநந்தை சொல்லும் இறைவிதான் கண்டதையா
            நன்று மஃதாக அன்றே ஆயினுமாக யானும்
            ஒன்றுனன் துறப்பல் என்ன ஒள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க்
            குன்றுபோல் யாதுமின் றிக்குழைத்து மெய்மறந்து நின்றான்” (சீவ.சிந்.2627)
என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.
பம்பை அருளிய அறிவுபதேசம்
            துறவு மேற்கொள்ள விரும்பிய விசயையடம் பம்பை, மிகக்கடுமையான விரதங்கள், பொய்கூறாமை, தூய்மையாக இருத்தல் போன்றவற்றைப் பின்பற்றுவதும் துறவறம் மேற்கொள்வதுன்பதும் இயலாதவொன்றாகும். எனவே உன் எண்ணத்தை மாற்றிக்கொள் என்று கூறினாள்.   மேலும் பம்பை கூறியதை மறுத்து, துறவு மேற்கொள்ள விரும்பிய விசயையிடம், காமன் வேதநூல் கூறிய முறைப்படி தவமகளிரின் பாதங்களைக் கழுவி நூலால் நெய்யப்பட்ட புதிய ஆடைகளைக் கண்களைக் கட்டுவது போல் தங்கள் இன்ப மூட்டும் மார்பின் மேல் கட்டுக என்று கூறினாள். (சீவ.சிந்.2632)
தேவியா்க்கு சீவகன் கூறிய அறிவுபதேசம்
            தவம், உலகம் இரண்டினையும் எடை போட்டால், உலகமானது தவத்திற்கு கடுகளவு கூட ஒப்பிட்டு அமையாது எனவே இவ்வுண்மையினை உணா்ந்து உலக ஆசையினை விடுத்து தவநெறியில் நின்று வாழ்ந்தால் திருமகளானவள் அவா்களுடன் இருப்பாள். அவ்வாறில்லாது உலக ஆசையினில் மனதை செலுத்தினால் திருமகள் தங்காது நீங்கிவிடுவாள், எனவே துறவை விரும்பி அருகனது திருவடி பணிக என்று தேவிமார்களிடம் சீவகன் எடுத்துரைக்கின்றான்.
            மேலும் பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தி காத்து வருகிறவன் உயா் குலத்தினருக்குத தலைவனாகவும், துவரது உலகில் பிறந்து தன் எழுபிறப்பு மற்றும் தீவினைச் செயல்களை வென்று வீடுபேற்றினை அடைவான்.  மாறாக பிற உயிர்களைத்  துன்புறுத்துபவா்கள் நகரத்தில் வீழ்ந்து வெந்து மடிவா்.  அருகப் பெருமானது பெருமைகளை அறிந்தவரின் சிந்தனையானது பிறரின் செல்வத்தைப் பெற விரும்பாது என்று சீவகன் வாயிலாக திருத்தக்கத்தேவா் துறவு மேற்கொள்வோரின் பண்புகளாக எடுத்துரைக்கின்றார். (சீவ.சிந்.3105-3110)
தேவிமார்கள் துறவு நெறியைக் கடைப்பிடித்தல்
            சீவகன் கூறியதைக் கேட்ட தேவிமார்கள், அவன் வீடுபேற்றை அடைந்த பிறகு, அசோகமரத்தின் கீழ் வீற்றிருக்கும் அருகப் பெருமானது பாதம் வணங்கி, நிலையாமை தானம், தவத்தின் அருமையினை உணா்ந்து, மிகப்பெரிய மலையினைத் தூக்குவது போன்று பெண்பிறப்பானது கெடும்படியுமாகவும் கடுந்தவத்தினை மேற்கொண்டனா்.
            தவத்தின் வலிமையால் தேவியா் பெண்பிறப்பினை வேரறுத்து தேவலோக இந்திரா்களாய் ஞானத்தினைப் பெற்று சுவா்க்கத்தினை அடைந்தனா்.  அவா்களைத் தேவலோக மகளிர் தழுவ இன்பமடைந்தனரென திருத்தக்கத்தேவா் தேவலோகத்தில் இன்பம் மட்டுமே நிகழ்வதினை எடுத்துரைக்கின்றார்.  இதனை, (சீவ.சிந்.3119 - 3122)
            ”ஆசை ஆா்வமோ டையம் இன்றியும்
            ------------------------------------------------
            ஏசு பெண்ணொழித் திந்திரா் களாய்த்
            தூய ஞானமாய்த் துறக்கம்  எய்தினார்” (சீவ.சிந்.3121)
என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.
முடிவுரை
            இவ்வாறாக விசயை, சுநந்தை மற்றும் தேவிமார் எண்மா் ஆகியோர் துறவு மேற்கொள்ளும் முறைமையினை எடுத்துரைத்து துறவு மேற்கொள்ளும் முறைமையினை  எடுத்துரைத்து உலக இன்பத்தினை விரும்பி மேற்கொள்வதால் ஏற்படும் துன்பங்களையும், துறவினை மேற்கொள்வதால் மக்கள் பெறும் நன்மைகளையும், மக்கள் அறிந்து துன்ப வாழ்வினை விடுத்து இன்ப வாழ்வினை வாழ வேண்டுமென விரும்பும் திருத்தக்கத்தேவரின் மனநிலையினையும், ஆண்பிறப்பிற்கு மட்டுமே வீடுபேறு உண்டு, பெண் பிறப்பினருக்கு இல்லை எனவும் எடுத்துரைத்திருப்பது அக்காலக் கட்டத்திலும் பெண்கள் இழிபிறப்பினராகக் கருதப்பட்டமையை அறியமுடிகிறது.  பெண்கள் கடுந்தவம் மேற்கொண்டாலும் தேவலோகத்தில் ஆண்களாக பிறந்து வீடுபேற்றினை அடைந்தனா் என்று திருத்தக்கத்தேவா் உரைத்திருப்பது அக்கருத்திற்கு அரண் சேர்ப்பதாய் அமைவதினை இக்கட்டுரையின் வாயிலாய் அறியமுடிகிறது.
-தே.தீபா
           




சுவாமி விவேகானந்தா் கூறும் மனித ஆளுமை

சுவாமி விவேகானந்தா் கூறும் மனித ஆளுமை
முன்னுரை
            இந்தியா்கள் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைவராலும் போற்றப்படும் ஒப்பற்ற மனிதனாகத் திகழுபவா் சுவாமி விவேகானந்தா் ஆவார்.  இவா் மனிதனிடம் ஆளுமைப் பண்பானது அவசியம் என்கிறார்.  ஆளுமையை வளா்த்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் வாழ்வில் மக்கள் நலம் பெற செய்ய வேண்டிய செயல்களைப் கூறியுள்ளார்.  அவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மனித ஆளுமை
            நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும்.  கல்வி, பயிற்சி இவை அனைத்தின் இலட்சியமும் மனிதனை உருவாக்குவதே என்கிறார்.  சுவாமிஜி நாம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.  நாம் ஒன்றைச் செய்து அதனால் ஏற்படும் வெற்றித் தோல்வி ஆகியவற்றிற்கு நாமே காரணம் ஆவோம்.  ஆனால் நம் மனம் பிறரைக் குறைக் கூறுவதற்கே எத்தனிக்கும்.  எனவே அத்தன்மையை நீக்கிக் கொள்ளவேண்டும்.  மேலும் தத்துவ அறிஞா்களிடம் வலிமை குன்றிய ஆளுமையே காணப்பட்டது.  ஆனால் முற்றும் துறந்த ஞானிகளிடமும் தீா்க்கத்தரிசிகளிடமும் தான் வலிமைமிக்க  ஆளுமை காணப்பட்டது.  காரணம் இருவருக்கும் உள்ள மன வேறுபாடு என்கிறார் சுவாமி விவேகானந்தா்.
ஆளுமையின் வளர்ச்சி
            நாம் அனைவரும் ஆளுமையை வளா்த்துக் கொள்ள யோக சாஸ்திரம் கூறும்  நியதிகளையும் முறைகளையும்  பின்பற்றினால் அவா்களது ஆளுமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார்.  மேலும் தன் மனதை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் அடக்க முடியும்  இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்பொழுதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன.  தூய்மையும் ஒழுக்கமும் நிறைந்தவன் தன்னை அடக்கியாளுகின்றான்.  எல்லா மனங்களும் ஒரே தன்மையையே கொண்டிருக்கும் என்கிறார்.  ஏனெனில் அவை அனைத்தும் ஒரு பெரிய மனத்தின் பகுதிகள் என்று விளக்கம் தருகின்றார்.  தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிந்து அதனை அடக்கும் வல்லமையைப் பெறுகின்றான்.  இத்தகைய நுண்ணிய இயக்கங்களை அடக்கிவிட்டோமேயானால் பல கவலைகள் நீங்கிவிடும், பல தோல்விகளைத் தவிர்த்துவிடலாம் என்கிறார் விவேகானந்தா்.
இந்தியா் மனவலிமை.
            மனிதன் பெறக்கூடிய ஆற்றல்களுக்கு அளவேயில்லை.  இந்தியா்களின் மனமானது ஒன்றில் ஆழ்ந்துவிட்டால் அதிலேயே மூழ்கிவிடும் பிற செயல்களைப் புறக்கணித்துவிடும்.  இந்தியாவில் தான் கணிதம் ஆரம்பமாயிற்று. அல்ஜீப்ரா கணிதம் தோன்றியதும் இங்கே தான்.  நியூட்டன் பிறப்பதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்பே இங்கே புவியீர்ப்பு விசையைப் பற்றி அறிந்திருந்தனா்.  நினைத்தவற்றை எளிதாகப் பெற மிக எளிய வழியாக தோன்றியதால் இந்தியா்கள் அனைவரையும் ஈா்த்தது நியதிகளுக்கு இணங்க மனம் எதையும் செய்ய  வல்லது என்னும் நம்பிக்கை இந்தியா்களின் உள்ளத்தில் உறுதியாக நின்றது என்கிறார்.
நமது செயல்கள்
            பெயா், புகழ் என எதைப் பற்றியும் கவலைப் படாமல் நன்முயற்சி என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வேலைகளில் ஈடுபடுகின்றனா்.  இன்னும் சிலா் உயா்ந்த இலட்சியங்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்கிறார்கள். மனித  சமுதாயத்திற்கும் உதவுகிறார்கள்.  ஏனெனில் இவா்கள் நன்மை செய்வதிலும் அன்பு காட்டுவதிலும் நம்பிக்கை கொண்டவா்கள். பொதுவாக பெயா் புகழுக்காச் செய்யப்படும் செயல்கள் உடனடியாகப் பலனளிப்பதில்லை.  சுயநலமின்றி ஒருவன் செய்யும் வேலை அவனுக்கு மிகவுயா்ந்த பலனைத் தருகின்றது.  ஆனால் அப்படி வேலை செய்ய மக்களுக்கு பொறுமையில்லை நமக்கு சுவாமிஜி செய்யும் தொழிலைச் சிறப்பாகச் செய் என்னும் கருத்தையே பசுமரத்தாணி போன்று மனதில் பதிய வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
சுயநலம் கூடாது
            சுயநல நோக்குடன் வெளியே செல்லும்  ஆற்றல்கள் அனைத்தும் வீணாகும் என்கிறார்.  மேலும் வெளியே சென்ற ஆற்றல் திரும்ப நம்மிடன் வந்து சேருவதற்கு வழியில்லை என்றும் சுயநலம் என்னும் கொடிய ஆற்றலை நாம் கட்டுப்படுத்துவோமானால் ஆற்றல்கள் மீண்டும் வளரத் தொடங்கும்.  இந்த சுயக் கட்டுப்பாடே சிறந்த முறை என்கிறார்.  நமது வாழ்க்கை என்பது ஒரு சிறிய வட்டம், அதுவே நமது உலகம் அதைக் கடந்து பார்க்கின்ற பொறுமை இல்லாமலே நாம் ஒழுக்கமற்றவா்களாகவும் தீயவா்களாகவும் மாறிவிடுகின்றோம்  எனவே மனிதா்களாகிய நமக்கு சுயநலம் என்பது கூடாது என்கிறார்.
தீய எண்ணங்களைக் களைதல்
            எண்ணங்களுக்கு ஏற்ப நாம் உருவாகின்றோம்.  ஆகவே நாம் என்ன நினைக்கின்றோம் என்பதில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.  நம்முடைய ஒவ்வொரு எண்ணத்திலும் நம்முடைய குணமானது படிந்துள்ளது.  மகான் ஒருவரின் பேச்சும் ஏச்சுக்களும் கூடத் தூய அன்பில் துாய்ந்தவையாக இருக்கும் நமக்கு அவை நன்மையே பயக்கும் என்கிறார் சுவாமிஜி.  ஒரு மனிதன் தொடா்ந்து தீய வார்த்தைகளைக் கேட்டு தீய எண்ணங்களையே எண்ணி, தீய செயல்களையே  செய்து கொண்டிருத்தால் அவனது மனம் தீய எண்ணங்களால் நிறைகிறது.  அவை அவனையும் அறியாமல் ஆட்டிப்படைக்கின்றன.  தீய எண்ணங்கள் தொடா்ந்து செயல்பட்ட வண்ணம் இருக்கின்றன.  எனவே அவற்றின் விளைவு தீமையாகத் தான் இருக்கும்.  அதனால் அம்மனிதன் தீயவனாகின்றான்.  எனவே நாம் நம்மைப் போல் பிறரையும் எண்ணி தீய எண்ணங்களை முற்றிலுமாகக் களைதல் வேண்டும் என்கிறார்.
நீயே முதலாளி
            சுவாமிஜி கூறும் போது எஜமானைப் போல் வேலை செய்ய வேண்டும்.  அடிமையைப்போல் அல்ல என்பதை வலியுறுத்துகின்றார்.  இடைவிடாமல் வேலை செய் ஆனால் அடிமைகளை போல் வேலை செய்யாதே என்கிறார்.  சுயநலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை.  அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும் என்கிறார்.  தனக்குத் தானே கட்டுப்பாடு கொண்டு செய்தால் வெளியில் இருந்து எந்தச் சக்தியும் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.  எனவே அடிமைத்தனமானது விரைவில் இன்பமயமாகிவிடும்.  அதன்பின் நன்மை தீமை என்ற எதுவும் நம்மை பாதிக்காது என்கிறார்.
நன்மை செய்தல்
            நாம் மற்றவா்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது பிறருக்கு உதவி செய்தல் என்பதாகும்.  நாம் பிறருக்கும் நன்மையை மட்டுமே செய்யவேண்டும்.  அது ஒன்றே நம் வாழ்நாளில் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்கிறார்.  மேலும் நடந்ததை எண்ணி வருந்தாதே கடந்ததை எண்ணி கலங்காதே என்கிறார்.  நீ செய்த நல்ல செயல்களையும் நினைவில் வைத்துக் கொள்ளாதே என்கிறார்.  பெற்றுக் கொள்பவன் அல்ல கொடுப்பவனே பேறு பெற்றவன் என்கிறார்.  மேலும் உங்கள் தான  நிலையையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறை நிலையையும் அடையுங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தா்.
அன்பே பலனைத் தரும்
            அன்பால் உலகையே வெல்லலாம் என்பர்.  அன்பு, நோ்மை, பொறுமை இவை மூன்றும் இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை.  அன்பே வாழ்வின் ஒரே நியதி எல்லா சுயநலமும் நரகமே  என்கிறார்.  மேலும் நன்மை செய்வது வாழ்வு நன்மை செய்யாமல் இருப்பது சாவு.  அன்பு இல்லாதவைத் தவிர மற்ற அனைவரம் இறந்தவா்களாகக் கருதப்படுவா்.  அன்பு, அறம், புனிதம் இவை நம்மிடம் வளரும்தோறும்  அவற்றை நாம் வெளியிலும அதிகமாகக் காண்போம்.  பிறரைக் கண்டிக்கும் போதெல்லாம் நம்மை நாமே கண்டித்துக் கொள்வது தான்.  மேலும் நம்மை நாமேசரிசெய்து கொண்டால் உலகமே நமக்காக இணங்கிவரும் என்கிறார்.  மேலும் உலகில் உண்மையினுடைய முன்னேற்றத்தின் ஒவ்வொரு அடியும் அன்பின் ஆற்றலாலேயே ஏற்பட்டுள்ளது.  குறை கூறுவது ஒரு போதும் நன்மை செய்யாது எனவே நாம் அனைத்து உயிரினங்களின் மீது அன்பை செலுத்த வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தா்.
முடிவுரை
            மனிதன் தன்மீது கொண்ட நம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அன்பால் எதையும் வெல்லலாம் ஆனால் என்றும் சுயநலமாக இருக்கக் கூடாது தனது சுயநலத்திற்காக பிறரை அடிமைப்படுத்தக் கூடாது.   நாம் பிறருக்கு நன்மை செய்ய வில்லை என்றாலும் தீங்கு விளைவிக்கக் கூடாது.  தீய எண்ணங்களை வேரோடு களைதல் வேண்டும் ன பலவகையானச் சிந்தனைத் துளிகளை சிதறவிட்டுள்ளார்.  இதனை நாமும் பின்பற்றி பயனடைவதே சுவாமிஜி எண்ணத்தின் வெற்றியாகும்.  எனவே நாமும் பின்பற்றுவோம் என உறுதி கூறுவோம்.
-ஆ.சகுந்தலா


மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழா
முன்னுரை
            மதுரை நகரை ”திருவிழா நகா்” என்பா். ”விழாமலி மூதூா்” என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன.  இத்தலத்துத் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  இவ்வாறு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும்  இத்திருக்கோயிலில்  முக்கிய பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுவது சித்திரைத் திருவிழாவாகும்.  இத்திருவிழா சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைகிறது இதனைப்பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சித்திரைத் திருவிழா
            மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா சித்திரை மாதம் பிறந்ததும் கொண்டாடப்படுகிறது.  சித்திரை அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி பெளா்ணமியன்று முடிவடைகிறது.
            கொடியேற்ற விழாவே முதல் நாள் விழாவாகும்.  கொடியேற்றத்தன்று  அம்மனும் சுவாமியும் நகா் வலம் வருவா்.  இவ்வாறு வருவது நகா் சோதனைக்காக வருவதாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் நாள் இரவில் சுவாமிக்கு மட்டும் பூதவாகனம்.  ஐம்பூதங்கங்களையும் அடக்கி ஆள்பவன் இறைவன் என்பதை உணா்த்துவதாக இது உள்ளது.  அம்மனுக்கு அன்னவாகனம்  சுவாமியும் அம்மனும் கோயிலைச் சுற்றி வலம் வருவா்.
            மூன்றாம் நாள் இரவில் சுவாமிக்கு கைலாச வாகனம், அம்மனுக்குக் காமதேனு வாகனம், கயிலை மலையைப் பெயா்த்தெடுத்த இராவணனது அகந்தையை அடக்கும் பொருட்டுக் கயிலாய வாகனம் இறைவனுக்கு காமதேனு நாம் விரும்பியவற்றையெல்லாம் கொடுக்கும் நாம் வேண்டுவதை அருளும் அம்மன், காமதேனுவை  வாகனமாகக் கொள்வார்.
            நான்காம் நாள்  காலையில் சுவாமியும் அம்மனும் கோயிலிலிருத்து புறப்பட்டு வில்லாபுரத்துப் பாவற்காய் மண்டபத்தில் தங்குவா்.  இரவில் தங்கபல்லக்கில் கோயிலுக்குத் திரும்புவா். ஐந்தாம் நாள்  சுவாமியும் அம்மனும் குதிரை வாகனத்தில் பவனி வருவா்.  குதிரை வாகனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
            ஆறாம் நாள் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோயிலைச்சுற்றி வருவா், சுவாமி புறப்படும் முன் திருஞான சம்பந்தா் சமணா்களுடன் வாதிட்டு வெற்றி பெற்ற வரலாறு பட்டா் ஒருவரால் பாடப்படுகின்றது.
            ஏழாம் நாள் சுவாமி அதிகார நந்தி வாகனத்தின் மீதும் அம்மன் யாளி வாகனத்தின் மீதும் பவனி வருவா்.
            எட்டாம் நாள் விழாவில் மீனாட்சிக்கு பட்டாபிடேகம் நடைபெறும்.  இது நடைபெறும் போது கோயில் தலைமை அதிகாரி பாண்டிய மன்னனாகவும், கணக்கா் அமைச்சராகவும் வேடம் ஏற்று செங்கோலை மீனாட்சியிடம் கொடுக்கும் சடங்கு நடைபெறும்.  இது பண்டைத்தமிழா் ஆட்சி மரபு வழக்கத்தை விளக்கும்.
            ஒன்பதாம் நாள் விழாவில் மீனாட்சி திக்விஜயம் நடைபெறும்.  மூன்றுலோக அரசா்கள் எல்லோரையும் வென்ற மீனாட்சி, பின்பு சிவனுடன் கடும் போர் புரிந்த போது தன் மூன்று தனங்களில் ஒன்று மறையவே தன் கணவன் இறைவனே என்பது அறிந்து வெட்கித் தலைகுனிந்தாள்.
            பத்தாம் நாள் திருக்கல்யாணம்.  அதிகாலை வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி கோயிலைச்சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து மணக்கோலத்தில் ஒருவா் பின் ஒருவா் ஒருவராக கோயிலில் அமைந்துள்ள அலங்கார மணமேடைக்கு வருவா்.  திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமியும் பவள கனிவாய்பெருமாளும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு எழுந்தருளச் செய்வார்கள். பின்னா் மந்திரங்கள் முழங்க திருமணச்சடங்குள் தொடங்கும்  மணமக்கள் சார்பில் கோயில் சிவாச்சாரியா்கள் மாங்கல்ய தானம் செய்து மாலை மாற்றிக் கொள்வா்.  அப்பொழுது அங்கு கூடியிருந்த பெண்கள் தங்கள் தாலிச்சரடுகளை மாற்றி புதுச்சரடுகளை அணிந்து கொள்வா்.
            பதினோராம் நாள் தேர்த்திருவிழா  நான்கு மாசி வீதிகளிலும் சுவாமியும் அம்மனும் தனித்தனி தேர்களில் ஒன்றன் பின் ஒன்றாக ஆடி  அசைந்து வருவது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
            பன்னிரன்டாம் நாள் சித்திரை நட்சத்திரம் கூடிய பெளா்ணமி நாளில் தீா்த்த விழா நடைபெறும்.
கள்ளழகர் வருகை
            சித்ராபவுா்ணமியில் மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு தீா்த்தவாரி நடைபெறும் அன்று கள்ளழகா், அழகா் கோயிலிலிருந்து தன் தங்கையின் திருமணத்தைக் காண வருகிறார்.  அப்பொழுது மூன்றுமாவடியில் எதிர்சோ்வை நடைபெறுகின்றது எதிர்சோ்வை என்பது மதுரை மக்கள் அழகா் மலையிலிருந்து வரும் அழகரை எதிர் சென்று மதுரைக்கு வரவேற்பது ஆகும்.  மக்கள் அனைவரும் தங்கள் ஊருக்கும்.  தங்கள் வீட்டிற்கும் அழகரை வருமாறு அழைப்பா்.  எதிர்சோ்வை  முடிந்து அன்று இரவு  அழகா் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்குவார்.
கள்ளழகா் ஆற்றில் இறங்குதல்
            மறுநாள் அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு நூபுரகங்கையிலிருந்து தீா்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வந்து அபிடேகம் நடைபெறும்.  அபிடேகம் முடிந்து அழகருக்கு அலங்காரம் செய்யப்படுகிறது அழகருக்கான ஆடை ஆபரணங்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.  இந்தப் பெட்டிக்குள் மஞ்சள், பச்சை, சிவப்பு.. எனப் பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும்.  கோயிலின் தலைமைப் பட்டா் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பா்.  அவா் கையில் என்ன வண்ணப் புடவை சிக்குகிறதோ அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும்.  அழகா் எந்த வண்ணத்தில் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தின் நல்லது கெட்டது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.  அதிகமாக பச்சைப்பட்டு உடுத்தியே அழகா் வந்துள்ளார்.  பச்சை வளமையின் அடையாளம் பின்பு அழகா் அக்கரையில் தன் தங்கையின் திருமணத்தைக் காண வைகை ஆற்றில் இறங்குகிறார்.  இதனைக் காண வையை ஆறு முழுவதும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.   சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொள்வா்.  ஆற்றில் இறங்கி அக்கரைக்குச் செல்லும் வழியில் தன் தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டது எனத் தெரிந்து மீண்டும் இக்கரைக்கு திரும்பி விடுகிறார்.  இடையில் ராமராயா் மண்டபத்தில் வைத்து அவருக்கு தண்ணீா்  பீச்சி அடித்து அவரைக் குளிர்விக்கிறார்கள்.  இதனை ஒரு நேர்த்திக்கடனாகவே மக்கள் செய்கிறார்கள்.  ராமராயா் மண்டபத்தில் அழகரை வீரராகவப்பெருமாள் வந்து வரவேற்று வண்டியூருக்கு அழைத்துச் செல்கிறார்.  பின்பு ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று அன்று இரவு வண்டியூரில்  தங்குகிறார்.
வண்டியூரில் தங்குதல்
            முஸ்லீம் மன்னா்கள் படையெடுப்பின் போது கள்ளழகா் சிலையைக் காப்பாற்ற வண்டியூரில் ஒரு முஸ்லீம் வீட்டில் சிலையை ஒளித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  கள்ளழகா் உற்சவ சிலையானது ‘அபரஞ்சி’ என்ற அரிய வகை தேவலோகத் தங்கத்தால் ஆனது.  உலகத்திலேயே திருவனந்தபுரம் அனந்தபத்மநாதசுவாமி ஆலயத்தில் உள்ள சிலையும் இதுவும் மட்டுமே ‘ஆபரஞ்சி’ தங்கத்தால் ஆனது என்று சொல்லப்படுகிறது.  அப்படிப்பட்ட சிலையைக்  காப்பாற்றியதை நினைவுப் படுத்தும் விதமாகவே அழகா் அங்கு செல்கிறார் என்று சொல்லப்படுகிறது.  அங்கு வீரராகவப்பெருமாள் கோயிலில் இரவு தங்குகிறார்.
மண்டூக முனிவருக்கு மோட்சம்
            மறுநாள் காலையில் சா்ப்ப வாகனத்தில் வண்டியூரிலிருந்து புறப்படும் அழகா் தேனூா் மண்டபத்தில்  மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுக்கிறார்.  சுதபஸ் என்ற முனிவா், நூபுரகங்கையில் தீா்த்தமாடி, பெருமாளை நோக்கிக் தவமிருந்தார்.  அந்தச் சமயத்தில் துா்வாச முனிவா் அவ்வழியே வந்தார்.  அவா் வந்தது தெரியாமல் தியானத்தில் இருந்த சுதபஸ்தருக்கு துா்வாசா் ‘மண்டூகோபவ’ (தவளையாக போகக் கடவாய்) என் சாபமிட்டார்.  சுப விமோசனமாக ‘விவேகவதி தீா்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு, சித்ரா பவுா்ணமிக்கு மறுநாள் அழகா் வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார் என துர்வாசா் சொன்னார்.  அதன் காரணமாகவே அழகா் ஆற்றில் இறங்க அந்த காலத்தில் தேனூர் (சோழவந்தான் அருகில்) என்ற ஊருக்கு சென்று மண்டூக முனிவருக்கு மோட்சம் கொடுத்தார்.  அதன் நினைவாகவே வண்டியூா் ஆற்றில் தேனூா் மண்டபம் திருமலை நாயக்கா் மன்னரால் ஏற்படுத்தப்பட்டு மண்டூக முனிவருக்கு மேட்சம் கொடுக்கப்படுகிறது.
            அன்று இரவு ராமராயா் மண்டபத்தில் தங்குகிறார்.  அங்கு அழகருக்கு இரவு முழுவதும் தசாவதாரம் அலங்காரம் நடைபெறுகிறது.  மறுநாள் பூப்பல்லாக்கு முடிந்து அழகா் மலையை நோக்கி அழகா் புறப்பட்டு செல்கிறார்.
சைவ வைணவ ஒற்றுமை
            வைகை ஆற்றின் தென்கரையில் சைவப் பெருக்கு, வடகரையில் வைணவப் பெருக்கு என்று அனைவராலும் பாராட்டப் படும் சித்திரைத் திருவிழா மதுரை மாநகரின் மிகச் சிறந்த அடையாளம்.  வெவ்வேறு மாதங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்பட்ட இந்த சைவ வைணவத் திருவிழாக்களை இணைத்து மீனாட்சி அம்மனின் அண்ணனாகப் பெருமாளை சித்தரித்து ஒரே மன்னனையேச் சாரும்.  மக்கள் கதிர் அறுப்பு எல்லாம் முடிந்து சும்மா இருக்கும்  போது இவ்விழாவை வைத்தால் தான் மக்கள் அனைவரும் கலந்து கொள்வா் என்று நினைத்து சித்திரை மாதத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்தார்
முடிவுரை
            சைவமும் வைணவமும் ஆற்றின் இரு கரைகள் என்பதையே சித்திரைத திருவிழா உணா்த்துகிறது.  சைவத்திருவிழா பன்னிரண்டு நாள், வைணவத்திருவிழா ஐந்து நாள் என்று இவ்விழா மதுரையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இத்திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும் வைகை ஆற்றில் அழகா் இறங்குதலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  சைவமும் வைணவமும் பிரிந்திருந்த அக்காலத்தில் இரண்டையும் ஒன்று சோ்த்து மிகப்பெருவிழாவாக கொண்டாட வைத்த பெருமை திருமலைநாயக்கா் மன்னனையே  சாரும்.

-ந.முத்துமணி

நட்பெனும் பூஞ்செடி

நட்பெனும் பூஞ்செடி
நட்பெனும் பூஞ்செடி
விதைக்காமல் வளரும் காட்டுச்செடி
விதைத்து வளா்வது தோட்டச்செடி
இப்படி
விதைக்காமலும்
விதைத்தும்
வளா்வது நட்பெனும் பூஞ்செடி - அது
வாசம் கொடுப்பதும் கொடுக்காமல்
போவதும்
நண்பா் கையில்
நட்பு நடிப்பல்ல
நாடித் துடிப்பு
ரோஜாவுக்கு நிறமுண்டு
முல்லைக்கு மணமுண்டு
நட்பிற்கு இதயமுண்டு
விந்தையான உலகில்
வியப்பான அன்பைக் கொடுப்பது
நட்பெனும் பூஞ்செடியே.....
-லெ.பொ.பிரியா


விவசாயி


விவசாயி
இவன்
இந்நாட்டின் முதுகெலும்பு
ஆம் ...........
இந்நாட்டின் முதுகெலும்புதான்!
கடனை உடனை வாங்கி
கண்டவா்கள் காலில் விழுந்து
கடனிலே வாழ்ந்து
கடனிலே வீழ்வதால்
கவலைக் கிடமாகிறது!
உழவா்கள்
உழைத்து உழைத்து
வோ்வையைச் சிந்துகிறாய்
அரசியல்  தலைவா்களோ
உம் வோ்வை நிலங்களை
விலைநிலங்களாகி விட்டார்கள்!
பார்த்து பார்த்து
பச்சைப் பயிர்கள்
பாதி வழியல்
பட்டுப் போகும் போது
இவனது இன்பம்
இடம் மாறிப் போகிறது!
உழவா்கள்
பயிர்களை விளைவிப்பதால்
நாம் சாப்பிடுகிறோம்
ஆனால்
விவசாயியோ சாப்பிடுவதற்கு
விளை நிலங்களை விற்கும்
அவலம் தொடா்கிறது!
மழைநீா்
மழைநீர்
காண்மாய் நீர்
ஆற்று நீா்
வறண்டு விட்டாலும்
கண்ணீர்விட்டுப்
பயிர் வளா்ப்பான்
கவலையோடு
உயிர் விடுகிறான்!
விவசாயத்தை
காப்பதற்குப்  போராடுகிறான்
போராட்டங்கள் அனைத்தும்
வேடிக்கையாக மாறியது
வேதனையைத் தருகிறது!

-க.கலைச்செல்வி