வெள்ளி, 27 ஜனவரி, 2017

இது பொன்னான வேளை..




உறக்கத்தின் பிடியில் இருந்த
இரக்கம் அனைத்தும்
மறத்தின் வேர் பிடித்து
தருக்கம் செய்கின்ற வேளை……….

ஊடகத்தின் ஊழ்வினையால்
ஊனமாய் நின்றிருந்தோர்
உண்மையெனும் உரசலில்
விழுத்தெழுகின்ற வேளை…………

முகநூலில் முகம் புதைத்தோம்
வாட்ஸ் ஆப்பில் வாழ்விழந்தோம்
வசை பாடிய வார்ப்புகள் எல்லாம்
திசை மாறிய வேளை…….

பாசத்தின் பிம்பமெல்லாம்
பாராமுகம் காட்டிவிட்டால்
பாரதம் பிழைப்பதெங்கே? என
பாரெல்லாம் வண்ணம் பூச
பாசத் தமிழர் நாமென
 பாமாலை பாடுகின்ற வேளை……

பண்பதனைப் படித்தவனும்
பண்பாட்டில் நிலைப்பவனும்
பரவி நின்றுவிட்டான்
இனி திரும்பிய திக்கெங்கும்
இன்பத் தமிழோசை
ஈடிலா வாகை பெறும் வேளை……

ஆம்….
இது பொன்னான வேளை
                         - நெ.கிருஷ்ணவேணி

பொங்கல் விழா




பொங்கல் விழா





தமிழ்ப்பண்பாட்டுமையம் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருநாளில் அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேரா.வி.பாலச்சந்திரன் அவா்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்



சுற்றுலா





கல்விச்சுற்றுலா
        தமிழ்ப்பண்பாட்டு மையமும், வரலாற்றுத்துறையும் இணைந்து 24.12.2016 அன்று தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநா் முனைவா்.சே.செந்தமிழ்ப்பாவை அவா்களின் தலைமையில் புதுக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள  சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றோம்.
        முதலில் தமிழா்தம்  ஓவியக்கலையின் சிறப்பைக் கூறும் சித்தன்ன வாசல், கட்டடக்கலை மற்றும் இசைக்கலையின் பெருமையை அறியச் செய்யும் குடுமியான்மலை போன்றவற்றைக் கண்டு களித்தோம்.  இவ்ஓவியங்களும் சிற்பங்களும் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோரின் அறிவுத்திறத்தை நன்கு புலப்படுத்தின. இதனையடுத்துத்  திருக்கோர்ணம் அரசு அருங்காட்சியகத்தில் நம் முன்னோர் பயன்படுத்திய போர்க்கருவிகள் முதல் தீா்த்தங்கரர்கள் சிலைகள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதத்தைக் கண்டு மகிழ்ந்தோம் இதன் பின் கோட்டை கட்டி வாழ்ந்த தமிழா்தம் வாழ்வியலை விளக்கும் திருமயம் கோட்டையையும் போருக்குப் பயன்பட்ட அதன் அமைப்பு முறை, சிறப்பியல்புகள் போன்றவற்றையும் அறிந்தோம்.  ஒரே நாளில் தமிழா்களின் ஓராயிரப்பட்ட சிறப்புகளை அறிய முடிந்ததில் இக்கல்விச்சுற்றுலா பயனுள்ள சுற்றுலாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது


தேசியக்கருத்தரங்கம்





தேசியக்கருத்தரங்கம் - 2016

  
        



தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் நுண்கலைத்துறை சார்பில்தமிழ்ப்பண்பாட்டில் கலைகளின் பங்கு என்னும் தலைப்பில் 16.12.2016 அன்று தேசியக்கருத்தரங்கம் நிகழ்த்தப்பெற்றது. தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநா் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவா்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாண்பமை துணைவேந்தா் பேரா.சொ.சுப்பையா அவா்கள் தலைமையில் கலைமாமணி டி.ஆர் மகாலிங்கம் அவா்களின் புதல்வி டி.ஆர்.எம்.சாவித்ரிமகாலட்சுமி அவர்கள்இசைத்தமிழ் வாழ்வில் இனிமை தரும் தமிழ் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்க ஆய்வுக்கோவையைச் சிறப்பு விருந்தினா் வெளியிட துணைவேந்தா் பெற்றுக்கொண்டா்நுண்கலைத்துறை இயக்குநா் கலைமாமணி முனைவா் மா.சுப.சரளா அவா்கள் நன்றியுரையாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட  ஆய்வாளா்கள் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினா். இதன் பின் சப்பானைச் சார்ந்ததயெகோகுரோகவா என்பாரின் பறை இசை நிகழ்வு மின்திரையில்  வழங்கப்பெற்றது. நிறைவு விழாவில் முனைவா் கா.கணநாதன் அவா்கள் வரவேற்கபல்கலைக்கழகப் பதிவாளா் தலைமையேற்க ஆட்சிக்குழு உறுப்பினா் முனைவா் நாராயணமூர்த்தி அவா்கள் சிறப்புரை ஆற்றினார்கள். பேரா.நா.வள்ளி  (மேனாள் முதல்வா் இராமசாமி தமிழ்க் கல்லூரி) அவா்கள் கருத்தரங்க மதிப்புரை வழங்க  முனைவா் மு.சு.கனகதாரா அவா்கள்  நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

வலையில் வந்தவை..


1.    Twitter.com/ Bitz@JKASa பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்பித்துவிட்டு பின் கடவுளை கற்பியுங்கள்.  
2. twitter.com/thoatta: வளா்க்கும் நாய்கள் வீடெங்கும் சுற்றி வருகின்றன. வேலைக்காரம்மாவின் குழந்தை பின் வாசலுக்கு வெளியே உட்கார்ந்து சாப்பிடுகிறது.
3. facebook.com/Rajan Leaks: குணப்படுத்தவே முடியாத வியாதிகளுக்கு “குணங்கள்” என்று பெயா்!
4. twitter.com/Goundar Roturns: நம்பிக்கை தானே எல்லாம் - நகைக்கடை விளம்பரம் அப்புறம் கடை வாசல்ல செக்யூரிட்டி எதுக்கு
5. twitter.com/vandaraalam எந்தத் தண்ணீா்டாங்கரும் ஒழுகாமல் பார்த்தது இல்லை எந்த பெட்ரோல் டாங்கரும் ஒழுகிப் பார்த்தது இல்லை. ரெண்டும் ஒரே நாட்டுலதான்
6. twitter.com/im_sme: ஏற்றுக் கொள்ள முடியாத “மாற்றங்களே“ ஏமாற்றங்கள்
7.twitter.com/deepishtalks: ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்கள வியந்து பார்த்த நாம இப்ப நல்லா தமிழ் பேசுறவங்கள வியந்து பார்க்கற நிலைமைக்கு ஆளாகிட்டோம்
face book
1.கையிலிருந்து செலவழிக்கும்போது ”உழைப்பாகவும்” ”கடன் அட்டைகளில்“ இருந்து செலவு செய்யும் போது “நாகரிகமாகவும்“ தெரிகிறது இந்தப் “பணம்“  Heartkillersasi
2. மீத்தேன் திட்டத்தை ரத்து செய்த அரசு ஆவணத்தில் கையெழுத்திட்டது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் உள்ள இருக்கிற “மை“ நிச்சியம் நம்மாழ்வாருடையது! Iniyaraipalgirrai.com
3. குழந்தையை வைத்துக் கொண்டு ஞானத்தை தேடுபவா்களுக்கு எட்டாக்கனி “ஞானநிலை“ Arunprasanna@arunprasanna83


செம்மொழிச் சிந்தனைகள்





                   நூல்மதிப்புரை




நூலாசிரியர்


முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை

வெளியீடு
 பல்லவி பதிப்பகம்
194, கண்ணா வணிக ளாகம்,
2-வது தளம்,
மேட்டூர் சாலை, ஈரோடு – 638011.
தொலைபேசி : 0424 – 2263197, 94422 51549
                                                                                         இணையதளம் : www.pallavinetworks.in
மின்னஞ்சல் : pavaisentamizh17@gmail.com
பக்கம் : 112 விலை : ரூ. 75



    

நூலாசிரியர் சங்க இலக்கியத்தின் பதினாறு முத்துக்களைக் கோர்த்து செம்மொழிச் சிந்தனைகள் என்ற மாலையைத் தந்திருக்கிறார். இவரது நோக்கம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதனால் மட்டும் உலகம் பயன் பெறாது அவர்களுடைய ஆய்வு மற்றவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் ஆய்வுச் சிந்தனையானது பரவும் என்பதாகும் எனவே தான் தனது பதினாறு ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.

     ஆநிரை மேய்க்கும் தன் தந்தையின் பசு ஒன்று பயிரை மேய்ந்ததால், அவரின் கண்ணைப் பிடுங்கித் தண்டனை கொடுத்த கோசரை, அன்னிமிஞிலி என்ற பெண் உணவு உண்ணாமல், தூய உடை உடுத்தாமல் மன்னனாக இருந்த போதிலும் வஞ்சினம் கூறி முடிக்கிறாள். பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும், பெண்கள் தன் உரிமைக்காக வெகுண்டெழுவார்கள் என்பதையும், சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள் என்ற கட்டுரை விளக்குகிறது. அன்னிமிஞிலியை திரௌபதியின் முன்னோடி என்று சொல்வதில் ஐயமில்லை.
     தன் மகள் சூடிக் கொள்வதற்காகப் பூத்தொடுத்துக் கொடுத்த தந்தை, தன் மகளைப் பெண் கேட்டு வந்தவன் மன்னனாக இருந்த போதும் நலம் குன்றியிருப்பதால் அவனுக்கு கொடுக்க மறுக்கும் தந்தை என தந்தை-மகள் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தமையை, சங்கப்பாடல்களில் செவிலியே தலைவியிடம் மிகவும் அன்பு கொண்டவள் என்ற நிலையையும் தாண்டி நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். தொல்காப்பியர் சுட்டாத விடுபேறு கோட்பாடு சுவர்க்கம் என்றும், “புத்தேள் நாடுஎன்றும் சங்க இலக்கியத்தில் தோற்றம் பெற்றுள்ளது.   வீடுபேற்றை உடம்போடு அடைவது ஒரு நிலை, உடம்பினை விடுத்து அடைவது மற்றொரு நிலை. தவம்செய்தால் உடம்போடு வீடுபேறு அடையலாம் போன்ற செய்திகளை புத்தேள் நாடு என்ற கட்டுரை விளக்குகிறது.
     சங்க அகப்பாடல்களில் காணப்படும் அரிய கூற்றான சேட்படை என்பது தலைவியை அடைவது எளிது என்று நினைத்து வந்த தலைவனது நினைவை அது அத்துனை எளிதன்று என்று தோன்றும்படி தோழி கூறுவது ஆகும். இது தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை. நற்றிணை, ஐங்குநுறூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளமையை சேட்படை கட்டுரை பதிவு செய்துள்ளது. தொல்காப்பியத்தினையும், சங்க இலக்கியத்தினையும் நன்கு உள்வாங்கியவர்கள் மட்டுமே இம்முடிவினைக் கொடுக்க முடியும்.
     பொதுவாக உயிரைவிட மானம் பெரியது என்பதற்கு உதாரணமாக ஒருமயிர் உதிர்ந்து போனாலும் உயிரைவிடும் உயிரினம் கவா்மான் என்று உதாரணம் கூறுவார்கள். இதனை ஆசிரியர் கவரி என்பது மானா? என்னும் கட்டுரையில் கவரி என்பது இமயமலையில் பனி சூழ்ந்த இடங்களில் வாழும் ஓர்விலங்கு, இது மானின் ஒரு வகை அல்ல. குளிர்பகுதியில் வாழும் அவ்விலங்குமயிர் நீப்பின் உயிர்வாழ இயலாது என்பது கருதியே திருவள்ளுவர் இவ்வாறுகூறுகிறார் என்று சான்றுடன் விளக்கியுள்ளார்.

     இந்நூலாசிரியர் சங்க இலக்கியத்தில் அரிய தகவல்கள் அடங்கியகட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூல் போன்றபடைப்புகள் இன்னும் வெளிவரவேண்டும்.இந்நூலின் சிறப்புக் கருதி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்நூலை ஒருபாடமாக வைத்துள்ளது பாராட்டுக்குரியது.



                                                                                                      - .முத்துமணி