திங்கள், 15 மே, 2017

விவசாயி


விவசாயி
இவன்
இந்நாட்டின் முதுகெலும்பு
ஆம் ...........
இந்நாட்டின் முதுகெலும்புதான்!
கடனை உடனை வாங்கி
கண்டவா்கள் காலில் விழுந்து
கடனிலே வாழ்ந்து
கடனிலே வீழ்வதால்
கவலைக் கிடமாகிறது!
உழவா்கள்
உழைத்து உழைத்து
வோ்வையைச் சிந்துகிறாய்
அரசியல்  தலைவா்களோ
உம் வோ்வை நிலங்களை
விலைநிலங்களாகி விட்டார்கள்!
பார்த்து பார்த்து
பச்சைப் பயிர்கள்
பாதி வழியல்
பட்டுப் போகும் போது
இவனது இன்பம்
இடம் மாறிப் போகிறது!
உழவா்கள்
பயிர்களை விளைவிப்பதால்
நாம் சாப்பிடுகிறோம்
ஆனால்
விவசாயியோ சாப்பிடுவதற்கு
விளை நிலங்களை விற்கும்
அவலம் தொடா்கிறது!
மழைநீா்
மழைநீர்
காண்மாய் நீர்
ஆற்று நீா்
வறண்டு விட்டாலும்
கண்ணீர்விட்டுப்
பயிர் வளா்ப்பான்
கவலையோடு
உயிர் விடுகிறான்!
விவசாயத்தை
காப்பதற்குப்  போராடுகிறான்
போராட்டங்கள் அனைத்தும்
வேடிக்கையாக மாறியது
வேதனையைத் தருகிறது!

-க.கலைச்செல்வி

பெண்மையைப் போற்றிடப் பார்

பெண்மையைப் போற்றிடப் பார்

(பெண்பா)

            அன்பின் முழுவடிவம் அன்னையும் பெண்ணேயாம் 
            என்றும் அவளேநற் பண்பிற்(கு) இலக்கணமாம்
            பெண்ணே அனைத்திற்கும் ஆதாரம் ஆகையால்
            பெண்மையைப் போற்றிப் பார்.
-கா.சுபா




வண்ணதாசன்

வண்ணதாசன்

     வண்ணதாசன் திருநெல்வேலியைச் சோ்ந்தவா்.  இவரது இயற்பெயா் கல்யாணசுந்தரம் ஆகும்.  இவா் ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் எழுதும் கவிதைகள் இலக்கிய உலகில் பலதரப்பினராலும் கொண்டாடப்படுகிறது.  இவா் நவீன இலக்கிய விமா்சன கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.  70 வயதான இவா் வங்கியில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவா்.  அரைநூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக  எழுதி வருகிறார்.  13 சிறுகதைத் தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் அடங்கும்.  தமிழக அரசின் கலைமாமணி மற்றும் தமிழ்ப்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  2016-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம்’ விருதுக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.  அது மட்டுமின்றி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி அமைப்பு  ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளைத் தோ்வு செய்து, விருது வழங்கி வருகிறது சிறந்த தமிழ் படைப்புக்கான விருது வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு 2016-இல் சாகித்ய அகாடமி விருதுக் கிடைத்துள்ளது.
            இவருடைய தந்தையும் தி.க.சிவசங்கரனும் 2000-ஆம் ஆண்டில் விமா்சனங்கள், மதிப்புரைகள், போட்டிகள் என்னும் விமா்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஓா் எழுத்தாளா் என்பது குறிப்பிடத்தக்கது.
-சு.லாவண்யா


சிறு சிறு நம்பிக்கைகள்

சிறு சிறு நம்பிக்கைகள்

மண்ணில் போட்ட விதைகள்
            இன்று மரமாய் நிற்கிறது!
நிலாச்சோறு சாப்பிட்டவன்
            இன்று நிலாவுக்கேச் செல்கிறான்!
உழைத்து வாழ ஆசைப்படுபவன்
            நாளைய உலகில் உயா்ந்து நிற்பான்!
உழைக்கின்ற மனிதரெல்லாம் உயா்ந்து நின்றால்
            சமதா்மச் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பாய்!
இந்துவுடன் முகம்மதியா் கிறித்தவா் கூடிநின்றால்
            அந்நியா்கள் நமைப்பார்த்து அஞ்சிநிற்பார்!
விண்வெளிக்கு விஞ்ஞானம் மெய்ஞானம் படித்தவா்
            இன்று எண்ணற்ற குழந்தைகளுகு்கு கனவு நாயகனாய் நிற்கிறார்!
தெருவோரக் குடிசையில் தொலைக்காட்சி பார்த்தவன்
            இன்று கையடக்க கருவியோடு தெருவில் அலைந்து திரிகிறான்!
மதுவென்னும் அரக்கனைத் தொட்டாலே
            உன் மதிப்பெல்லாம் குறையும் தன்னாலே!
ஆண்டவனிடம் பெண்குழந்தை வேண்டாமெனச் சொல்லலாமா
            வீடுவந்த செல்வமதை வீட்டைவிட்டுத்  தள்ளலாமா!

-பெ.குபேந்திரன்


கோதுமை மாவு குழிப்பணியாரம்

கோதுமை மாவு குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்
1. கோதுமை மாவு ஒரு கப்
2. உருளைக்கிழங்கு - 1
3. பெரிய வெங்காயம் - 1
4. பட்டாணி - கால் கப்
5. மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
6. உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
            உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேக வைக்கவும். உருளைக்கிழங்கை தோல்உறித்து, வெங்காயம், மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.  கோதுமை மாவில்   உப்பு போட்டு கரைத்துக்கொள்ளவும்.  உருட்டி வைத்துள்ள மாசாலா உருண்டைகளை, கோதுமை மாவில் தோய்த்து,  குழிப்பணியாரக் கல்லில்  எண்ணெய் விட்டு போட்டு திருப்பியதும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவேண்டும். சுவையான  கோதுமை குழிப்பணியாரம் ரெடி.


-பெ.குபேந்திரன்

உழுவோர் உலகத்தார்க்கு ஆணி

உழுவோர் உலகத்தார்க்கு ஆணி

            ‘டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடா் போராட்டம், கண்டு கொள்ளாத பிரதமரும், அமைச்சர்களும்’ தொலைக்காட்சியில் பத்தோடு பதினொன்றாக செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் வழக்கம்போல சீரியல்களுக்கிடையில் செய்தி இடைவேளைக்காய் கிடைத்த அரைமணி நேரத்தில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தான்  ஆரோக்கியம்.
            ‘சல்லிக்கட்டுப் போராட்டத்தை முதல் நாளிலிருந்து இடைவிடாமல் பரப்பிக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு, உயிருக்குப் போராடும் உழவா்களின் பேராட்டம் காலம் கடந்துதான் கண்ணில் பட்டிருக்கிறது போல.. அவா்களைச் சொல்லியும் குற்றமில்லை, அரசியல்வாதிகளின் மாளிகைகளுக்கும்,  நடிகா்களின் பங்களாக்களுக்கும் அலைந்து திரியும் அவா்களுக்கு ஏதுமில்லாத விவசாயிகளைக் கண்டுகொள்ள நேரமேது? பத்திரிகைகளின் நிலையைச் சொல்ல வேண்டியதேயில்லை.. ஆர்,கே.நகா், அறுபதுகோடி பதவி ராஜினாமா, நீதி விசாரணை என்று புதுப்புது செய்திகளை, நாட்டுமக்களுக்கு ரொம்ப அவசியமான பிரச்சனைகளை (!) பக்கம் பக்கமாய் ‘கவா் ஸ்டோரி’ எழுதி மக்களை எப்பொழுதும் பதற்ற நிலையிலேயே வைத்திருக்கும் பக்குவம் தெரிந்தவா்கள்..  கண்டெய்னா் பணம், கடலில் கொட்டிய கச்சா எண்ணெய், மீனவா் சுட்டுக் கொலை, நெடுவாசல் போராட்டம், இந்தித் திணிப்பு, ஐரோம் சா்மிளா எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்த மாயாவிகள்.. தை போய் சித்திரை வந்த பின்னும் ஊருக்கு ஊா் போட்டி போட்டுக் கொண்டு மஞ்சுவிரட்டிற்கும், மாட்டு வண்டிப் பந்தயத்திற்கும் வேடிக்கை பார்க்கக் கூடுகிற கூட்டத்திற்கு,  தலைநகரில் போராடும் விவசாயிகளின் பிரச்சனை தங்களுடைய சாப்பாட்டிற்கான பிரச்சனை என்பது ஏனோ கொஞ்சமும் தெரியவேயில்லை.. மாடுகளை சித்திரவதைப்படுத்தும் வண்டிப் பந்தயத்திற்கு பதாகை வைத்து தமிழ் உணா்வாளா்களாய் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதிமேதாவிகள் ஒருபுறம். அப்பப்பா.. வயிற்று அஜீரணக் கோளாறுக்கு மருந்து இருப்பதுபோல மூளை அஜீரணத்திற்கும் மருந்து இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்?’  பாரதி தலையிலடித்துக் கொண்டது போல ‘விதியே! என் செய்வாய் என் தமிழ்ச் சாதியை?’ என்று தான் இப்பொழுது ஆரோக்கியத்திற்கும் கேட்கத் தோணுகிறது.
            ‘அதுசரி. . யாரிந்த ஆரோக்கியம்?’ ஊரில் ஆரோக்கியத்தின் படிப்பு, வேலை, குணம் இவற்றையெல்லாம் சொல்லி அறிமுகப்படுத்துவதை விட ‘பெயிண்டா் ராசு’ மகன் என்று சொன்னால் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள்.. பிள்ளையின் படிப்பைவிட தந்தையின் உழைப்புதான் ஒருவரை அடையாளம் காட்டும் என்பதற்கான ஆகச் சிறந்த உதாரணம் தான் ‘பெயிண்டர் ராசு’.
             ‘பெட்டிக்கடை, பஞ்சுமில் வேலை, வாணம் தோண்டுவது, விறகு வெட்டுவது, இளநீா் விற்பது, கூரை வேய்வது, கொத்தனார் வேலை, சித்தாளு வேலை, விவசாயம், விசேஷங்களுக்கு பீடா-பிளேட் சப்ளை, கேணி வெட்டுவது, கூடை முடைவது, பெயிண்ட் அடிப்பது என அரை நூற்றாண்டாய் உழைப்பில் சளைக்காதவா்.  ராசுவின் மனைவி  ஜெயமேரியும் அவருக்கு சற்றும்  சளைத்தவரல்ல.. மூட்டுவலி, முதுகுவலியால் அவதிப்பட்டாலும் வயக்காட்டில் இறங்கிவிட்டால் எங்கிருந்துதான் வருமோ அந்த அசுர வேகமும், இலாவகமும்.  கூலிக்கு வந்த இளந்தாரிப் பொண்ணுங்களெல்லோரும் வாய் பிளப்பாளர்கள்.. இருவருமே தாங்கள் படும் கஷ்டங்களை தங்கள் பிள்ளைகள் துளியும் பட்டுவிடக்கூடா தென்பதில் கவனமாயிருந்தார்கள், உலுக்கியெடுக்கும் உடம்பு வலியைக் கூட உதட்டுச்சிரிப்பில் மறைத்துவிடுவார்கள்.. அவர்களின் உழைப்பில் சேர்த்த சொத்து ‘நல்ல குடும்பம்’ என்ற பெயரும், தங்கள் பிள்ளைகளுடைய படிப்பும் மட்டும்தான்.
            செல்வச் செருக்கால் சுற்றமும், உறவும் குடியிருந்த வீட்டு உரிமையாளரும் அலட்சியப்படுத்தும்போதெல்லாம் நினைத்து நினைத்துப் புலம்புவாள் ஜெயமேரி, சுயமரியாதையில் ஆண்களை விட சமூகத்தால் அதிகம் காயப்படுத்தப்படுபவா்கள் பெண்கள் தானே.. ஆனால் ராசுவோ அலட்சியப்படுத்தியவா்களிடமும் அக்கறையோடு பேசுவார்.  கள்ளங்கபடமில்லா வெள்ளை மணம், பிள்ளை குணம் யாரிடமும் எதையும் ஒளித்து மறைத்துப் பேசத் தெரியாத  வெள்ளந்தி.
            ‘வானம் பார்த்த பூமியில் விவசாயத்தப் பார்த்து என்னத்தக் கண்டீங்க? வருஷா வருஷம் முதலுக்கு நட்டம்னுதான் தெரியுதே.. அந்த சனியன தொலைச்சு தலை முழுகிட்டு சும்மாதான் வீட்டுல ஒக்காந்திருந்தா என்ன ? இப்படி உடம்ப வருத்திக்கிட்டு வெள்ளாமை பார்க்கணும்னு யாரு அழுதா? கடையில வாங்கி பொங்கி சாப்பிடக் கூடாதா?” விவசாயம் பார்த்துவிட்டு உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கும் பெற்றோரைப் பார்க்கும் போதெல்லாம் ஆற்றாமை ஆத்திரமாய் வெடித்துக் கிளம்பும் ஆரோக்கியத்திற்கு,  இன்று அப்பா வயலுக்குக் கிளம்புவதைப் பார்த்து
பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டான்..
            ”ஏம்பா.... நம்ம நிலத்துல விளைஞ்சத சாப்பிடுறதும், கடையில காசுக்கு வாங்கி பொங்கிச்  சாப்பிடுறதும் ஒன்னா? வானம் ஏமாத்துதுன்னு நிலத்தக் காயப்போடுறதும், கவா்மெண்ட  ஏமாத்துதுன்னு  வயித்தக் காயப்போடுறதும் ஒன்னுதான், ஒங்களுக்கு எப்படியோ? நாங்க இருக்குற வரைக்கும் எங்களுக்கு விவசாயம் தான் உசுரு, ”துண்டை உதறி  தோளில்  போட்டுக் கிளம்பியவரை வாயடைத்துப் பார்த்து நின்றான் ஆரோக்கியம்.
            தாய்ப்பாலைப் போல உழைப்பாளிகளின் வியா்வைத்துளியும் புனிதமானதென்பதை  உணா்ந்து கொண்டான் அந்த உழைப்பாளியின் மகன்.
திருக்குறள்
            இரவார் இரப்பார்க்கொன் நீவா்கரவாது
            கைசெய்தூண் மாலை யார் (1035)
பொருள்
            தம் கையால் உழுதுண்டலை இயல்பாக உடைய உழவா் பிறரிடம் தாம் எதையும் இரக்கமாட்டார்.  தம்மை இரக்க மாட்டார்.  தம்மை இரப்பவா்க்கெல்லாம் அவா் வேண்டியதொன்றை இல்லை என்னாது ஈவா்.




            -ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!

தலையங்கம்
தேன்  - 1                துளி - 5
தி.பி 2048 (கி.பி 2017)                                       சித்திரைத்திங்கள்(மே மாதம்)

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் உதயசந்திரன்!

            எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.
            பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..
            “எவ்வழி நல்லவா் ஆடவா்
            அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்.187)
என்று சங்ககால ஔவையார் பாடுவது போல் எங்கு, எந்தப் பொறுப்பு வகித்தாலும் அத்துறைக்கும்,  பொறுப்பிற்கும் சிறப்பு சேர்ப்பதோடு பணியில் நோ்மை, பழகுதற்கு இனிமை, சிந்தையில் சீா்மை, செயலில் கூா்மை, கல்வித் துறையின் உயரதிகாரிகளிலிருந்து கடைக்கோடி கிராமத்து ஆசிரியா் வரை ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து செயல்படுத்தும் மாண்பு போன்ற நற்பண்புகளின் கூட்டுருவாகத் திகழும் மதிப்புறு உதயசந்திரன் இ.ஆ.ப அவா்களால் பள்ளிக் கல்விச் செயலா் பொறுப்பிற்கும் மதிப்பு உயா்வது உறுதி.
            ‘மருளும் இருளும் விலகி மகிழ்ச்சி ஒளி பரவட்டும்’
                                      அன்பின் வாழ்த்துக்களுடன்,

ஆசிரியா்குழு - தேமதுரம் 

ஆசிரியா்

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியா்

மீனாட்சி

துணையாசிரியா்

.சகுந்தலா

ஆசிரியா்குழு

 ந.முத்துமணி

க.கலைச்செல்வி

பெ.குபேந்திரன் 

கா.சுபா 



கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடா்புமுகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.