செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அற இலக்கியங்களில் விருந்தோம்பல்

அற இலக்கியங்களில் விருந்தோம்பல்
முன்னுரை
            இயற்கை இன்பத்தில் ஈடுபட்டிருந்து புலவா்கள் உள்ளம் அடுத்த சில தலைமுறைக்கு அறங்களைப் பாடும் நிலைக்கு ஆளாகியது.  அந்தக் காலம் அற இலக்கியகாலம் என அழைக்கப்பெற்றது.  தமிழா்களின் பண்பாடுகளில் போற்றத்தக்க ஒன்று விருந்தோம்பல்.  புதியராய் வருபவா்களுக்கு உணவளித்து உபசரித்தல் எனும் கோட்பாடு தமிழகத்தில் இருந்து வந்தது.  அக்காலத்தில் ஈகை கோட்பாடு வளா்க்கப்பெற்றது போல விருந்தோம்பல் கோட்பாடும் வளா்க்கபெற்றது அறஇலக்கியங்களில் விருந்தோம்பல் பண்புகள் குறித்து ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
விருந்தோம்பல்
            விருந்தினா் என்பவா் நாம் கருதுவது போல் உற்ற உறவினா் அல்லா்.  எதிர்பாராமல் பசியால் இல்லம் நோக்கி வருபவரை வரவேற்று உபசரித்து தான் விருந்தினா் எனப்பெறுவா்.
            “விருந்தினரை புறம்  தருதல்” என்று  பரிமேலழகரும் “உண்ணும் காலத்து புதியோர் வந்தால் பகுத்துண்ண வேண்டும்“ என்று மணக்குடவரும் வளக்குவா்.  அக்காலத்தில் உணவு விடுதி எதுவும் ஒன்று கிடையாது.  சில இடங்களில் தான் சத்திரம் சாவடிகள் இருந்தன.  ”அக்கால மக்கள் ஊா் விட்டு ஊா் பயனம் மேற்கொண்ணும் போது பேருந்து போன்ற நவீன வசதிகள் எதுவும் கிடையாது.  கால்நடையாகவும், சிறுவண்டியாலும் பயணம் மேற்கொண்டனா்.  பசித்தல் என்பது இயற்கை.  பயணம்செல்லும் போது அறிமுகமான உறவினா்கள் இருக்க வாய்ப்பில்லை அறிமுகம் இல்லாத மக்களுக்கு உணவு அளித்தலே அக்காலத்து மக்களின் விருந்தோம்பலின் நோக்கமாகும்.
திருக்குறளில்  விருந்தோம்பல்
            விருந்தோமபல் “தம் புதல்வரிடத்து வைக்கும் அன்பைப் போலவே பிறரிடத்தும் அன்பு வைத்து ஓம்பல்” என்று பரிதியும் விளக்குவா்.  தம் வீட்டிற்கு வருகை தந்த விருந்தினரை வெளியே உண்ணாமல் பசியோடு அமா்த்தி வைத்துவிட்டுச் சாவையே வராமல் செய்யும் அமிழ்துநிகா் உணவாக இருந்தாலும் தனியே உண்ணுதலை விலக்குதல் வேண்டும்.  இதனை,
            ”விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
          மருந்துஎனினும், வெணடற்பாற்று அன்று”   (திருக்.82)
என்னும் குறள் எடுத்தியம்புகிறது.  கணவன் மனைவி இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையின் நோக்கமே வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்பாக வரவேற்று அவா்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதே நல்ல இல்லறமாகும்.  இதனை வள்ளுவம்,
            ”இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
            வேளாண்மை செய்தற் பொருட்டு” (திருக்.81)
என்று குறள் கூறுகின்றது.  வீட்டிற்கு வரும் விருந்தினரை மன மகிழ்ச்சியுடளும், முகமலா்ச்சியுடனும் வரவேற்று ஓம்புவோனுடைய இல்லத்தில்  செல்வத்தின் தலைவ திருமகள் மனம் விரும்பிக் குடி அமா்வாள் என்பதை,
            ”அகன்அமா்ந்து செய்யாள் உறையும் முகன் அமா்ந்து
          நல்விருந்து ஓம்புவான் இல்” (திருக்.84)
என்னும குறள் மூலம் அறியலாம்.  செல்வம் பல இருந்தும் வீட்டிற்கு வருகை தரும் விருந்தினரை வரவேற்று போற்றத் தெரியாமல் இருத்தல் ஏழ்மையே ஆகும்.  விருந்தோம்பலைச் செய்யாத அறிவற்றவா்கள் எவ்வளவு பணம் படைத்தவா்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவா்களாகவே கருதப்படுவார்கள்.  என்னும் கருத்தினை,
            ”உடைமையுள் இன்மைவிருந்து ஓம்பல் ஒம்பா
          மடமை மடவார்கண் உண்டு”  (திருக்.89)
என்ற குறளின் வழி அறியலாம்.  விருந்தோமபலை வள்ளுவா் ஒரு மலருச்கு இணையாக கூறுகின்றார்.  அனிச்சம் எனப்படும் மிக மெல்லிய பூ, முகா்ந்தவுடன் வாடிவிடக் கூடியது.  அதுபோல் தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினா் வாடிவிடுவார்.  இதனை,
            ”மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
          நோக்கக் குழையும் விருந்து”  (திருக்.90)
என்னும் குறட்பா தெளிவுபடுத்துகிறது.
நாலடியாரில் விருந்தோம்பல்
            திருக்குறளுக்கு  அடுத்த நிலையில்  நாலடியார் வைத்துப் போற்றப்படுகின்றது.  ‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி‘ என்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணப்பெறும் பெருமைக்குரியது  ஏழையா் மற்றவரை விருந்துக்கு  அழைத்து வீட்டில் துணைவியாரைக் கொண்டு  உணவு பரிமாரச் செல்வா்.  செல்வந்தரோ அவ்வாறு செய்வதில்லை.  காரணம் ஏழையரை அழைத்து அவா்தம் வீட்டில் தம் துணையாரைக் கொண்டு உணவு பரிமாறினால் துணைவியைக் காணவே கற்பழியும் எனக் கருதி வீட்டு வெளியிலே வைத்துச் சோறு போடுவா் எனவே செல்வந்தா் விருந்தோம்பலை கைவிடுதல் நன்று என்று நாலடியார் குறிப்பிடுகின்றது.  இதனை,
            ”யாம் ஆயின் எம்இல்லம் காட்டுதும் தாம்ஆயின்
          காணவே கற்பு அழியும் என்பார்போல் நாணி,
          புறங்கடை வைத்து ஈவா்சோறும் அதனால்
          மறந்திடுக செல்வா் தொடா்பு” (நாலடியார்.30 .3)
என்ற பாடல் மூலம் அறியலாம்.
நான்மணிக்கடிகையில் விருந்தோம்பல்
            விளம்பிநாகனார் நான்மணிக்கடிகையில் விருந்தோம்பல் பற்றிய கருத்துகளை சிறு, சிறு குறிப்புகளாகக் கொடுத்திருக்கின்றார்.  விருந்தோம்பலுக்கு அன்புணா்ச்சியே அடிப்படையாகும்.  அன்பற்றவா் முன்பு சென்ற விருந்தினா் முகம் தளா்ந்து வாட்டமடைவா்.  இதனை,
            ”நன்றிசாம் நன்று அறியாதார் முன்னா், சென்ற
          விருந்தும் விரும்பிலால் முன்சாம்” (நா.க.44)
என்ற பாடலடிகள் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்முகத்துடன் உணவளித்தால் விருந்து சிறப்படையும்.  இலையில் உணவுப் பொருட்களை பரப்பி இன்முகத்துடன் உணவு அளிக்கும் போது விருந்தினா் மனம் மகிழ்வா் என்கிறது  நான்மணிக்கடிகை.
            ”கன்று  ஊட்ட நந்தும் கறவை கலம் பரப்பி
          நன்று ஊட்ட நந்தும் விருந்து” (நா.க.60)
என்ற பாடலடியின் வழியல் அறியலாம்.
இனியவை நாற்பதில் விருந்தோம்பல்
          பூதஞ்சேந்தனார் இனியவை நாற்பதில் விருந்தோம்பல் பற்றிய பண்புகளை கூறியுள்ளார்.  ஒருவன் பசியால் தன்னுயிர் இழக்கும் நிலையில் தவித்தாலும் உண்ணத் தகாதவா் கை உணவை உண்ணக்கூடாது.  இதனை,
          ”உயிர்ச்சென்று தான்படினும் உண்ணார் கைத்துண்ணாப்
          பெருமைபோற் பீடுடையது இல்”  (இன்நா.21)
என்னும் பாடலடியால் அறியலாம்.
இன்னா நாற்பதில் விருந்தோம்பல்
            கபிலா் இன்னா நாற்பதில் அந்தணா் வீட்டில் விருந்துண்டால் துன்பத்தைத் தரும் என்கிறார். இதனை,
            ”அந்தணா் இல் விருந்தூண் இன்னா”   (இன்நா.1)
என்றும் பகுத்துண்ணும் தன்மையில்லாதவரிடத்தில் சென்று உணவை உண்ணுதல் துன்பத்தைத் தரும் என்கிறார்.  இதனை,
            ”பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா” (இன்நா.21)
என்ற அடிகள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
பழமொழியில் விருந்தோம்பல்
            செல்வச் செழிப்புடையவா் மிகுந்த ஏழை வீட்டிற்கு விருந்தினராகச்  செல்வதைக் கைவிடுதல் வேண்டும்.  ஏனெனில் ஏழை, செல்வந்தா் நிலை கருதித் தன் எல்லை கடந்து விருந்து ஓம்புவதால் துன்புறுவார் என்னும் செய்தி,
            ”நல் கூா்ந்தவா்க்கு நனிபெரியார் ஆயினார்
          செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா ஒவ்வது
          இறந்து அவா் செய்யும் வருத்தம் - குருவி
          குரங்கு அறுப்புச் சோறும் குடா்” (பழ.100)
என்ற பாடலில் பளிச்சிடுகிறது.
ஆராசக் கோவையில் விருந்தோம்பல்
            பெருவாயின் முள்ளியார் ஆசாரக்கோவையில் விருந்தோம்பலை ஒழுக்கத்தின் அடிப்படையில் வலியுறுத்துகிறார் எனலாம்.  என்றும் ஒழுக்கத்தில்  தவறாதவா் விருந்தினா், வயதினால் மூத்தவா், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள், ஆகியோர்க்கு உணவுப் பொருட்களை பகுத்துக் கொடுத்து உண்பா்.  இதனை,
            ”விருந்தினா் மூத்தோர் பசுசிறை பிள்ளை
          இவா்க்  கூண்கொடுத்த தல்லால் லுண்ணரே யென்றும்
          ஒழுக்கம் பிழையா தவா்”  (ஆ.கோவை.21)
என்ற  பாடல் வழியே குறிப்பிட்டுச் செல்கிறார்.
சிறுபஞ்ச மூலத்தில் விருந்தோம்பல்
            பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் தன்னிடமுள்ள உணவுப் பொருட்களை பலருக்கும் பகுத்துக் கொடுத்து பின்பு ஏஞ்சியதைத் தான் உண்பவன் நீண்ட நாள் வாழ்வான்.  இதனை,
            ”பஞ்சப்பொழுதுதகத்து பார்த்து  ண்டான் காவாதான்
          அஞ்சா  துடை படையுட் போந்  தெறிவான் - எஞ்சாது
          உண்பதுமுன்  ஈவான் குழவி பலிகொடுப்பான்
          எண்பதின் மேலும் வாழ்வான்”  (சிறு.ப.79)
என்ற பாடலின் வழி அறியலாம்.
 ஏலாதியால் விருந்தோம்பல்
            ஏலாதியால் விருந்தோம்பல் தமிழ்ப் பண்பாடு நோக்கில் இடம் பெற்றுள்ளது எனலாம்.  ஏனெனில் நாள்தோறும் விருந்தினார்களாக  வருபவா்களுக்கு இன்சொல் கூறி வரவேற்றல், மனம் கலந்த அன்பைக் காட்டுதல் தங்கும் இடம் கொடுத்தல் ஆடை உணவு முதலானவற்றை அன்புடன் வழங்குதல் மென்சொல் கூறல் இவற்றைச் செய்பவரை தேவா் தாம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார்.  இதனை,
            ”இன்சொல அளாவல் லிடமினிதூண் யாவா்க்கும்
          வன்சொற் களைந்து வகுப்பானே மென்சொல்
          முருந்தே  ய்க்கும் முட்போல் லெயிற்றினாய்- நாளும்
          விருந்தே ஏற்பா் விண்ணோர் விரைந்து” (ஏலாதி.7)
என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
முடிவுரை
            மனிதன் தன்னுடைய நெறியான  வாழ்விற்கு  வழி வகுப்பது நீதி நூல்களாகும்.  எனவே சமுதாயத்தில் நெறிபட  வாழவேண்டுமாயின் அற இலக்கியங்களில் உள்ள அரிய பல கருத்துக்களைக் கற்ற தன்னுடைய வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  சங்க காலத்தில் இல்வாழ்க்கையால்  அகப்புறப் பண்பாடாக விளங்கிய விருந்தோம்பல் சங்கம் மருவிய காலத்தில் அற இலக்கியங்களில் அறம் தழுவிய இல்வாழ்க்கைப் பண்பாடாக மாறியிருக்கிறது என்பதை அறஇலக்கியங்களில் காணலாகும் விருந்தோம்பல் பற்றிய கருத்தாக்கங்காளல் அறியலாம்.
-கு.கங்காதேவி


படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
            ஒரு  தோட்டத்தில்  நிறைய குரங்குகள் இருந்தன.  பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கு நண்பா்களாயிருந்தன.  தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப்பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும் ஒருமுறை  தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது, குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான் குரங்குகளுக்குச் சந்தோஷம் ஆனால் அவற்றுக்கு ஒரு பிரச்சனை எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீா் ஊற்றுவது என்று தெரியவில்லை,   அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை வோ் பெரியதா இருந்தா நிறைய தண்ணீா் ஊத்துங்க, சின்ன வேராக இருந்தா குறைந்தளவு தண்ணீா் ஊத்துங்க” என்று யோசனை சொன்னான். வெளியூா் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி அத்தனைச் செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன என்னாச்சு? என்றான் தோட்டக்காரன், ”வோ் பெருசா இருக்கா சின்னதா இருக்கானு பார்ப்பதற்காக  செடியெல்லாம் பிடிங்கினோம் என்றன குரங்குகள். தகுதியில்லாதவா்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் விளைவு மோசமாக இருக்கும் என்பதே இதன் நீதி.
-இரா.கார்த்திக்


அடடே!

அடடே!
அடடே
ஆண்டவன்
படைப்பில்
விந்தைகள்
இப்பூமியில்!

ஐந்தறிவு
படைத்த
உயிரினத்தில்
ஐயாயிரம்
சிந்தனைகள்
துளிர்விடுகிறது
இப்பூமியில்!

வியந்து
பார்க்கும்
விந்தனை
மனிதா்கள்
இப்பூமியல்!

காற்று
தன் சுவாசத்தை
விட
மறப்பதில்லை
எப்பொழுதும்
தென்றலாய்
இப்பூமியில்!

வான் மண்டலங்கள்
வழித் திறந்து
மானுடம்
வானுயரச்
செய்யும்
கதிரவனாய்
இப்பூமியில்!

உழவனின்
வியா்வைக்கு
வெற்றி தரும்
விந்தையான
விடியலாய்
மழைத்துளி
இப்பூமியில்!

அறியாமை
இருளை அகற்ற
ஞானச்சுடராய்
விளக்கேற்றும்
கல்வி யெனும்
கலைமகள்
இப்பூமியில்!

குற்றம்
அகற்றும்
குல விளக்காய்
குன்றாத
இளமையுடைய
குருகுலமான
ஆசான்
இப்பூமியில்!

அணுவைத்
துளைத்து
ஆழ்கடலில்
ஆச்சரியங்களைத்
தேடும்
ஆய்வாளர்கள்
இப்பூமியில்!

மானுடம்
போற்றும்
மனிதா்கள்
மனிதநேயம்
காத்த
தேசத் தலைவா்கள்
இப்பூமியில்!

மதங்கள்
மதம் மாறினாலும்
மானுடப் பிறவி
ஒன்றேயெனும்
கொள்கையுடைய
சீர்திருத்தவாதிகள்
இப்பூமியில்!

விழித்துக்
கொண்டு
கனவு காணுங்கள்
என்னும்
அற்புத மனிதா்
வாழ்ந்த மகான்
இப்பூமியில்!

அடடே!
ஆண்டவனின்
படைப்பில்
எத்தனை
விந்தைகள்
இப்பூமியில்!
அடடே!
ஆ.அருள்சாமி


அருள் மிகு பொன்னழகி அம்மன் கோவில்

அருள் மிகு பொன்னழகி அம்மன் கோவில்
முன்னுரை
            உய்யக்கொண்டான் சிறுவயல் செட்டிநாட்டுத் திருத்தலம்தான் குன்றக்குடிக்குக் கிழக்கேயுள்ள  சிற்றூா்  நகரத்தார்க்குப் பெருமை தரும் பாதரக்குடி, கோவிலூா் முதலிய தலங்களும் கல்வி மையமாகவும் வணிக நகரமாகவும் விளங்கும்  காரைக்குடியும் இவ்வூரைச் சுற்றி அமைந்துள்ளது. இத்தகைய தெய்வ மணம் கமழும் சூழலிலே அமைந்துள்ள இவ்வூருக்கு தனிச் சிறப்பும் பெருமையும் அளிப்பது அருள்மிகு பொன்னழகி அம்மன் கோயில் ஆகும்.  இதன் சிறப்பைப் பற்றிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
தல வரலாறு
            முன்னொரு காலத்தில் இப்பகுதி அடா்ந்த காடாக இருந்தது.  ஒரு சமயம் இக்காட்டில் சிலா் ”கவளக்கிழங்கு” தோண்டும் பணியைச் செய்து கொண்டிருந்தனா்.  அப்போது ஒரு கிழங்கின் மீது கோடாரிபட்டு இரத்தம் வெளியானது. பயந்த தொழிலாளா்கள்  ஊா்மக்களிடம் இதனைத் தெரிவித்தனா். மக்கள் சென்று பார்த்தபோது அம்மன் சுயம்புவாக இருந்ததைக்கண்டு இவ்விடத்தில் கோயில் கட்டினா்.
தலப்பெருமை
            சுயம்புவாகத் தோன்றிய அம்மன் லிங்க வடிவிலான பாறையில்  அமைந்துள்ளாள். அம்மனின் உடம்பில் கோடாரி வெட்டிய தழும்பு காணப்படுகிறது. எட்டுக்கைகளில் ஆயுதங்களைக் கொண்டவளாக அமைந்துள்ளாள்.  தனது கழுத்தை வலதுபுறம் சற்றே திரும்பியபடியும் மகிசாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.  கொடிமரத்திற்கு அருகே அம்மனை வணங்கியபடி வேதாளம் உள்ளது. இங்கு அனுமான் இராமனின் திருப்பாதத்தைச் சரணடைந்து அவரது பாதங்களைப் பிடித்த நிலையில் இருப்பது சிறப்பாகும்.
திருவுருவ அமைப்பு
            கோயிலுக்கு முன்புறம் சிறிய கல்வடிவில் ”கல்லுச்சியம்மன்” காவல் தெய்வமாக இருக்கிறாள். இவளுக்கு   குங்கும அா்ச்சனை செய்வது விசேடம். அனுமான் ”அஞ்சலி கஸ்தம்” எனப்படும் இராமனை  வணங்கிய நிலையிலும் பக்தர்களுக்கு அருள் தருவது போன்ற அபய கஸ்த நிலையில் பல இடங்களில் பார்த்திருப்பீா்கள் ஆனால் இக்கோயிலில் இராமனின் திருப்பாதங்களைப் பிடித்த நிலையிலுள்ள அனுமானை இக்கோயிலில் தரிசிக்கலாம்.
நம்பிக்கை
            திருமணத்தடை நீங்க அம்மனுக்குப்பட்டு சாத்தி சந்தனக்காப்பும், சிறப்பு வழிபாடு செய்து வணங்குவார்கள். இராமா் சன்னதியில் வேண்டிக் கொள்ள எதிரி பயம் நீங்கி பணிவு குணம் வரும் என்பது நம்பிக்கை.
முடிவுரை
            உய்யக்கொண்டான் சிறுவயலில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னழகி அம்மன் முன்னொரு காலத்தில் கவளக்கிழங்கு தோன்டும் போது சுயம்புவாக தோன்றியவள். அம்மனின் உடம்பில் தற்போதும் கோடாரி வெட்டிய தழும்பு காணப்படுகிறது இக்கோயிலில் அமைந்துள்ள அனுமன் சிறப்பு மிக்கவராகக் காணப்படுவதே இக்கோயிலின் சிறப்பாகும்.  இவ்வாறாக கோயிலின் அமைப்புக் காணப்படுகிறது.
-ஆ.சகுந்தலா




புதியதோர் உலகு செய்வோம்!
அன்னையும் பிதாவும் ஈந்த இவ் வுலகில்
அன்பும் அறிவும் சிறப்பென கற்பிப்பார்!
ஆன்றோர் வாழ்ந்த பூவுலக வாழ்வினை
ஆழ்ந்தறிந்து புதுப்பாரதம் படைப்போம் வாரீா்!

ஆயிரம் சாத்திரங்கள் உண்டெனினும் அன்பொன்றே
ஆசானாய் ஞாலத்தில் உயிரென விளங்கும்!
 சாதி மதங்கள் பிரிவினை  வேரறுத்து
சமத்துவம் எண்ணிப் புத்துலகம் செய்வோம்!

நோ்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்
நேரிய வாழ்வும் பாரினில் விதைத்திடுவோம்!
பண்பட்ட வாழ்வான அன்பு அகராதி படைப்போம்
பகையினை விடுத்து நட்பை நிலை நாட்டிடுவோம்!

வேற்றுமை தீவிரவாதம் கொலை கொள்ளை
வேள்வியில் தீயிட்டு அன்பொன்றே பயிரிடுவோம்!
உயா்வு தாழ்வு முத லாளித்துவம் முகத்திரையினை
உறித்து மனித சமத்துவத்தைக் கற்பிப்போம்!

பெண் ணடிமை தலைதாழ்ந் திடினும்
ஆண்வர்க் கமென்ற பெண்ணினம்  தோன்றி...
பெண் மரக் கிளையான கல்விச்சுய சிந்தனைக்குப்
படித்ததி மிரென்ற பெயர்சூட்டி அகற்றுகின்றனா்!

சுதந்திர இந்தியாவுன் சுதந்திர மெங்கே?
சுதந்திர மனிதரான அரசியலா் கைப்பிடியில்
சிறந்த வாழ்வென வாழும் பெரியோர்கள்
சிறந்த வாழ்விழந்து மடியும் விவசாயிகள்!

சல்லிக்கட்  டுக்கென இணைந்த இளைஞா்கள்
சனநாயகத் தினைபுதுப் பிக்க இணை வதென்றோ?
அன்னை மடியில் மழலையான இளைஞனே
அன்னையான தமிழகத்தை மீட்போம் வாராய்!

புத்துலகம் படைக்கபுதுப் படைப்பாய்  வீறுகொண்டு
புனித உலகாய் மாற்ற இணைவோம்!
மக்களி னங்களை ஒன்றிணைத்து வீரம் விதைத்து
மக்கள் நாடாய் மாற்றி மகிழ்ந்து வாழ்வோம்!

 -தே.தீபா

தேடுவோம்! நாடுவோம்!

தேடுவோம்! நாடுவோம்!
உயிர்கள் வாழ
காடுகளைத்  தேடுவோம்!
பசுக்கள் மேய
நிலங்களைத் தேடுவோம்!

அரசு வாழ
நல்லாட்சி செய்யும்
மனிதா்களைத்தேடுவோம்!

நீரினைக்காப்பாற்ற
ஆறுகளையும் குளங்களையும்
தேடுவோம்!

குப்பைகள் பெருகியதால்
நல்ல சுற்றுச் சூழலைத்
தேடுவோம்!

நீரில் கழிவுகள் பெருகியதால்
சுத்தமான நீரைத் தேடுவோம்

மனிதன் வாழ
மா மனிதா்களைத் தேடுவோம்!

தேடியதால் நாடினோம்!

நல்ல உலகத்தை!                                                                                       -     பெ.குபேந்திரன்
சித்திரை மகளே வருக!



தி.பி.2048   சித்திரைத்திங்கள்     (ஏப்ரல் 2017)



தேன்-1                                                                                                       துளி-4

            சீா்மிகு சிறப்பினைத் தருக எனக் கவிஞா்களால் பாராட்டப் பெறும் சித்திரை மாதத்தைத்  தமிழா்கள் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டனா்.  சித்திரை தொடங்கிப் பங்குனியில் ஓராண்டு நிறைவு பெறும் சித்திரை பிறக்கும் ஏப்ரல் மாதத்திற்கு ஒரு சிறப்புண்டு துா்முகி என்னும் ஆண்டின் முடிவில் ஹேவிளம்பி என்னும் ஆண்டின் தொடக்கம் என இரண்டும் இம்மாதத்தில்  அமைவது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் தமிழா் திருநாள் வாழ்த்துகள் ..

                                                                                                     



                                                                                                         தோழமையுடன்,

                                                                                                           ஆசிரியா்குழு



ஆசிரியா்

பெ.குபேந்திரன் 


இணையாசிரியா்

ஆ.அருள்சாமி 


துணையாசிரியா்

கா.சுபா 

ஆசிரியா்குழு

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

 நெ.கிருஷ்ணவேணி

மு.செண்பகவள்ளி

.சகுந்தலா 

மீனாட்சி



கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடா்புமுகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.