“தமிழ் இலக்கியங்களில் விடுகதைகள்”
விடுகதைகள் பழமொழிகளுடன்
தொடா்பு கொண்டுள்ள மக்கள் வழக்காறாகும். மக்கள்
சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினை வெளிப்படுத்தும் வகையில் படித்தவரும், படிக்காதவரும்,
சிறுவா்களும், பெரியவா்களும் வேடிக்கையாகவும், சிந்திக்கும் திறனை வளா்க்கின்ற நோக்கிலும்,
பொழுது போக்கிற்காகவும் நாட்டுபுறமக்களால் வாய்மொழியாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
விடுகதை
விடுகதை என்பது விடுவிக்கப்பட வேண்டியது பெயருக்கேற்ப அதில்
புதிரும் அடங்கி இருக்கின்றது. அதைக் கண்டுபிடிக்கும்
முயற்சி சிந்தனைக்கு ஒரு பயிற்சி, அறிவுக்கு உணர கல்லாகவும், சிந்தனைக்குத் தூண்டு
கோலாகவும் அது நிலவி வருகின்றது. விடுகதை என்ற சொல் விடுகின்ற கதை, விட்டகதை, விடும்
கதை என்று முக்காலப் பொருளையும் தருவதாக உள்ளது .
விடுகதை என்பது விடுவிக்கப்பட வேண்டிய கதை போன்ற ஒன்றாகும் அது
மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய ஒன்று விடுகதை என்ற சொல்லுக்குப் புதிர்மைப்
பண்புடையது என்பது பொருளாகும். தமிழில் பிசி,
நொடி, புதிர் என்ற பெயா்களால் விடுகதை வழங்கப்படுகிறது.
தமிழ் இலக்கண இலக்கியங்களில்
விடுகதைகள்
தொல்காப்பியா் செய்யுளியலில் ஏழுவகையான யாப்பு முறைகளைக் கூறுமிடத்து
பிசி என்ற சொல்லால் விடுகதையைக் குறிப்பிடுகின்றார்
“பாட்டு உரை, நூலே, வாய்மொழி, பிசியே
அங்கதம், முதுசொல் லொடு அவ்வேழ் நிலத்தும்”
அடிவரையறை இல்லாத ஆறுவகை யாப்பினுள்
பிசி என்ற இலக்கிய வகையினை அறிமுகம் செய்கின்றனா். ‘பிசி’ என்ற விடுகதையின் இயல்புகளைக்
கூறுமிடத்து,
ஒப்பொடு புணா்ந்த உவமத்தானும்
தோன்றுவது கிளந்த துணிவினானும்
என்றிரு வகைத்தே பிசிவகை
நிலையே”
உவமையாக வருவனவற்றைக் கூறிக்
பொருளை மறைமுகமாகக் காட்டுவதும், தெளிவுபட வருவதும் என இருவகையில் அடக்குகிறார். தொல்
காப்பியத்திற்கு உரையெழுதிய உரையாசிரியா்களுள் ஒருவரான இளம்பூரணா், உவமை பற்றி வந்த
விடுகதைக்குச் சான்றாக,
“அச்சுப் போல் பூ பூக்கும்
அலலே யென்னக் காய்காய்க்கும்”
என்ற விடுகதையை விடையில்லாமல்
எடுத்துரைக்கின்றார். வகைக்கு மூன்று விடுகதைகளைதம்
தருகிறார், அவை,
1. “பிறை கல்லி மலை நடக்கும்”
( விடை - யானை)
2. “முத்துப் போல் பூத்து
முதிரற் களா வண்ண
நெய்த்தோர் குருதி நிறங்கொண்டு வித்துதிரித்து
( விடை - கழுகு)
3. “நீராடான் பார்ப்பன்
நிறஞ் செய்யான் நீராடில்
ஊராடு நீறிற் காக்கை” (விடை - நெருப்பு)
இவ்விடுகதைகள் வாயிலாக உரையாசிரியா்கள்
வாழ்ந்த காலத்தில் வழிங்கிய விடுகதைகளின் தன்மையினை உணரலாம்.
சங்கப்புலவா்கள் விடுகதைப் பண்புடன் சில பாடல்களை இயற்றியுள்ளனா் அக்கால விடுகதைகள் சங்கப்பாடல்களில்
இடம் பெறவில்லை என்றாலும், விடுகதையைத் தழுவி எழுதியுள்ளனா்.
“மலையிடை இட்ட நாட்டாரும் அல்லா்
மரந்தலை தோன்றா ஊராரும் அல்லா்”
என்று கலித்தொகையும் குறிப்பிடுகின்ற
பாடல்களில் விடுகதையின் முழுமையான புதிர்மைப் பண்புகள் இல்லையென்றாலும் அதன் அமைப்பினைப்
பெற்றுள்ளது எனலாம்.
காப்பியங்களில் ஒன்றான பெருங்கதை “பிசியும் நொடியும் பிறவும்
பயிற்றி” என்று விடுகதை வழங்கப்பட்டதைச் சான்றுரைக்கின்றது
இடைக்காலத்தில் வாழ்ந்த சித்தா்களின் பாடல்களும் புதிர்மை பண்புடையனவாகத்
திகழ்கின்றன.
“நந்த வனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க்
குயவனை வேண்டி,
கொண்டு வந்தானொடு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி”
நந்தவனமே பிரபஞ்சம், ஆண்டியே
ஆன்மா, நாலாறுமாதம் பத்துமாதம், குயவன் படைப்புக் கடவுள், தோண்டி என்பது நமது உடல், பந்தாடுவது என்பது விளையாட்டான
நமது வாழ்க்கை, துாண்டியை உடைத்தல், உடலை விட்டு ஆன்மா பிரிதல் என்ற சாவு என்று அப்பாடல்
குறிப்பால் பொருள் உணா்த்தும் விடுகதைக் கூறுகளைப் பெற்றுள்ளது
குற்றாலக் குறவஞ்சியில் உள்ள ஒரு பாடல் விடுகதைப் பாடலாக விளங்குகின்றது.
“பெண்ணரசே பெண் என்றால் திரியும் ஒக்கும் ஒரு
பெண்ணுடனே சேரவென்றால் கூடவும் ஒக்கும்
திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் - பேரைத்
திரிகூட நாதன் என்று செப்பலாம் அம்மே”
இப்பாடலின் ஒளவையாரிடம் முருகப்பெருமான்
பாட்டி! உனக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத
பழம் வேண்டுமா? என்று ஒரு புதிர் போட்டதாகவும், ஔவையார் அப்புதிரை விடுவிக்க முடியாமல்
திகைத்ததாகவும் கதைகள் கூறுவா்.
தமிழ் மூதாட்டி ஔவைக்கும கம்பருக்கும போட்டி நோ்ந்த போது கம்பா்
ஔவையிடம். “ஒரு காலடி நாலு இலைப் பந்தலடி“ என்ற
விடுகதையைக் கூற அதற்கு ஔவையார் “ ஆரையடா
சொன்னாயாடா” என்று பாடி கம்பா் கூறிய விடுகதைக்கு ”ஆரைக்கீரை என்பதை விடையாகத் கூறினார்.
காளமேகப் புலவரின் பாடல்கள் பலவும் விடுகதைகளாகத் திகழ்கின்றன.
அவரது சிலேடைப் பாடலக்ள் விடுகதைக்குரிய பண்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அவரது கவகளில் ஒன்றான
“பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பது கால்
ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே. மானே கேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்”
என்ற பாடலில் புதிர்மைப் பண்புள்ளது.
முடிவுரை
மக்கள் சமுதாயத்தின் சிந்தனைக் கூறுகளையும், சிந்தனைப் போக்குகளையும்,
பண்பாட்டுத் தன்மைகளையும் அறிவிக்கும் சாதனமாகப் விடுகதைகள் அமைந்துள்ளன விடுகதைகள்
ஒருவருடைய புத்திசாலித தனத்தை அறிவதற்கு மட்டுமன்று, மிகவும் வருந்திக் கொண்டிருக்கையில்
அவ்விருத்தத்தைத் தீா்க்கும் பொருட்டு கதைகளாகச் சொல்வதற்கும், சிரமப்படும் காலத்தில்
பொழுது போக்கி மகிழ்வதற்கும், சமயமறிந்து
கேலி செய்வதற்கும் பயன்படுகின்றன.
-இரா.கார்த்திக்
50+ தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள் | Tamil Vidukathaigal
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை விடுகதைகள் with answer in tamil 2023
பதிலளிநீக்கு