வியாழன், 15 ஜூன், 2017

ஏலாதியின் உவமை

ஏலாதியின் உவமை
            தொல்காப்பியா் கூறும் உவமையின் வகைப்பாடுகளாகிய வினை, பயன், மெய், உரு எனும் வகைகள் ஏலாதியின் இடம் பெற்றுள்ள தன்மையைக்  கீழே  காணலாம்.
பயனுவமை
கண்போலும் நண்பா்கள்
            கண் போன்ற நண்பா்கள் தவறு செய்யும் போது அவா் மேல் கோபப்படாமை வேண்டும்   எனக் கூறுமிடத்து ஏலாதி
            “கண் போல்வார்க் காயாமை”  (ஏலா.45)
எனக் குறிப்பிடுகிறது.  உடபிற்கு கண் இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது போல் நண்பா்களும் நமக்கு இன்றியமையாதவா்கள் என்ற அடிப்படையில் கண்ணை நண்பா்களுக்கு உவமை கூறியதால் இது பயனுவமை ஆகும்.
பண் போல் கிளவி
             பெண்ணின் மொழியை இசைக்கு உவமையாகக் கூறுகிறது ஏலாதி
            “பண் போல் கிளவியார்” (ஏலா. 5-2)
            “பண் போலும் சொல்லார்” (ஏலா. 15-30)
என பெண்ணின் மொழி இசை கேட்பது போன்ற இனிமையாகிய பயனைத் தருதலால் இது பயனுவமையாயிற்று.  மேலும்
            “பால் போலுஞ் சொல்லினாய்” (ஏலா.21)
என்பதில் பால் போன்ற இனிமை தரக்கூடிய கொற்களைப் பேசுபவள் என உவமை கூறியமையால் இதுவும் பயன் உவமையாயிற்று.
மேலும்,
            “உறுப்பறுத் தன்ன கொடையுவப் பான்” (ஏலா.20 : 3)
என்பதில் தன் உறுப்பையே அறுத்துக் கொடுத்து சிபி மன்னனின் கொடையைப் போல் மகிழ்ந்து கொடையளிப்பான் எனக் கூறியமையால் இது பயன் உவமையாகும்.
வடிவ உவமை
            கொண்றை மலா் போன்ற அணிகளை அணியும் பெண்கள் என்று ஏலாதி குறிப்பிடுகிறது
            “............................புனக்கொன்றை
            போலு மிழையார்“ (ஏலா.5)
இதில் கொன்றை மலா் போன்ற வடிவத்தில் உடைய அணிகலன்களை அணிந்த பெண்கள் எனப் பொருள் கொள்ள இடமிருப்பதால் இது வடிவ உவமையாகும். மேலும், தோளுக்கு மூங்கிலை உவமைப்படுத்துவதை,
            “வேயன்ன தோள்” (ஏலா6:3)
என்பதன் மூலமும், கூரிய பற்களுக்கு மயிற்பீலியின் அடியை உவமைப்படுது்துவதை
            “முந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய்” (ஏலா. 7:3)
என்பதன் மூலமும், கண்களுக்கு கயல் மீனை உவமைப் படுத்துவதை,
            “கயலியலுண் கண்ணாய்” (ஏலாதி.14:3)
என்பதன் மூலமும், மேலும் கண்களுக்கு வேலை உவமைப்படுத்துவதை,
            “வேற் கண்ணினாய்” (ஏலா.76:1)
என்பதன் மூலமும் இடைக்கு மின்னலை உவமைப்படுத்துவதை
            “மின்னே ரிடையாற் சொற்  றேறான்” (ஏலா.20:1)
என்பதன் மூலமும்
பெண்ணின் சாயலுக்கு மயிலை உவமைப் படுத்துவதை,
            “மயிலன்ன சாயலே” (ஏலா.28:1)
            “மூத்த மயிலன்ன சாயலாய்” (ஏலா.31:1)
என்பதன் மூலமும்,
பெண்ணின் கூந்தலுக்கு மயில் தோகையை உவமைப்படுத்தியமையை
            “கூந்தல் மயிலன்னாய்” (ஏலா.33:3)
என்பதன் மூலமும் அறியலாம்.
இவை யாவும் வடிவ உவமையாக ஏலாதியில் இடம்பெற்றுள்ளவை ஆகும்.
உருஉவமை
            சிவந்த வாய்க்கு கொவ்வைப் பழத்தை உவமையாகக் கூறுவதை
            “கொவ்வைபோல் செவ்வாய்” (ஏலா.34:3)
என ஏலாதி குறிப்பிடுகிறது.  இதில் கொவ்வை பழத்தின் சிவந்த நிறம் சிவந்த வாய்க்கு உவமையாகக் கூறப்படுவதால் இது உரு உவமையாகும்.
            ஏலாதியில் பயன், மெய், உரு ஆகிய மூன்று வகையான உவமைகள் இடம் பெற்றுள்ளன.
            வினை உவமை ஏலாதியில் இடம் பெறவில்லை
-சு.லாவண்யா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக