வியாழன், 15 ஜூன், 2017

பழந்தமிழா் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு

பழந்தமிழா் வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு
            அன்றைய நாள் தமிழா்களின் வழிபாட்டில் பெருந்தெய்வம் - சிறுதெய்வம் என்ற வேறுபாட்டுணா்வுகள் தலையெடுக்கவில்லை.  சமய நோக்கு, சமநோக்கு என்ற கொள்கையுடன் சிவன், திருமால், முருகன், இந்திரன்.  வருணன் என்ற பெருந்தெய்வங்களும், இயற்கை வழிபாடு, கொற்றவை வழிபாடு, நடுகல் வீரவணக்க வழிபாடு, காவல் தெய்வ வழிபாடு முதலான சிறு தெய்வ வழிபாட்டின் மரபுக் கூறுகளும் பழந்தமிழ் மக்களின் வழிபாட்டுணா்வுகளில் கலந்திருந்தன.
            போரில் இறந்து பட்ட வீரர்களுக்கு அவா்களது நினைவாக  கல்நட்டு வழிபாடுகள் செய்தமையினை
            “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
            சீா்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று
            இரு மூன்று  மரபின் கல்லொடு புணர”
என்று தொல்காப்பியம் வெட்சித் திணைப்பாடல் வெளிப்படுத்துகிறது.  பசுக்கூட்டங்களை மீட்டு நடுகல்லாகிய முன்னோன் ஒருவனை அவன் வழி வந்த வீரா்கள் போற்றியும் பலியிட்டும் வழிபாடு இயற்றியதை,
            “நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவா்
            முனை ஆத்தந்து முரம்பின் வீழ்த்த
            வில்லோ் வாழ்க்கை விழுத்தொடை மறவா்
            வல்லான் பதுக்கைக் கடவுட் பேண்மார்
            நடுகல் பீலிசூட்டித் துடிபடுத்து
            தோப்பிக் சுற்ளோடு துரூ உப்பிலி கொடுக்கும்
            போக்கும் கவலையை புலவநாறு அரும் கரம்”
என்கிறது பெரும் வலிமை படைத்த வீரா்களுக்குக் கல்நட்டு வழிபடுவது பண்டைத் தமிழ்மரபில் காணக் கூடியதாகும் வீரக்கல்லில் வீரா்தம் பெயா்களும் அவா்தம் சிறப்புகளும் பொறிக்கப்பட்ட  நிலையில் எழுத்துடை நடுகல் இருந்ததை,
            “விழுத்தொடை மறவா் வில்லிடத் தொலைந்தோர்
             எழுத்துடை நடுகல்லென
            “பீடும் பெயரும் பொறித்து அதா்தொறும்
            பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்”
என்ற  சான்றுகளால் நடுகல் வழிபாடு என்ற முன்னோர் வழிபாட்டின் சிறு தெய்வக் கூறுகளைக் காணலாம்.  வீரா்களுக்கு அளிக்கப்பட்ட இந்நடுகல் வழிபாடே காலப்போக்கில் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கும் வழிபாடுகள் நிகழ்த்தும் குல தெய்வ வழிபாடாக வளா்ச்சி பெற்றது.
            அக்கால மக்கள் மழையில்லாவிட்டாலும், மழை அதிகமாகப் பொழிந்தாலும் அதை நிற்கும்படி  மழை தெய்வத்தை வேண்டி வழிபாடு நிகழ்த்தியதை,
            “மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய்
            மாரி ஆன்று மழைமேக்கு உயா்க  எனக்
            கடவுள் பேணிய குறவா் மாக்கள்
            பெயல்கண் மாறிய உவகையா்”
என்ற புறநானூற்றுப் பாடல் வழி உணரலாம்.
            போர் வீரா்கள் வெற்றியின் பொருட்டு பாலை நிலப்பெண் தெய்வமாகிய கொற்றவையை வழிபட்டு வந்தனா்.
            “மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
            கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
என்கிறது தொல்காப்பியம். போரில் வெற்றி பெற்றவா்கள் உடுக்கையடித்து வெற்றியைக் கொண்டாடுவதும், அவவெற்றியைத் தந்த கொற்றவையின் சிறப்பினை எடுத்துக் கூறுவதும் வழிபாட்டின் சிறப்பம்சமாகும் .  சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ‘வேட்டுவ வரி’  கொற்றவை வழிபாட்டின் சிறப்பியல்புகளையும்  வழிபாட்டு முறைகளையும் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிவிக்கின்றது.
            இந்திரவிழா காலத்தில், காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள காவல் பூதத்தைப் பெண்கள்  பூசையிட்டு வணங்கினார்கள்.  காவல் பூதத்தின்  பலி பீடத்தில் அவரை துவரை முதலிய சுண்டல்கள், எள்ளுருண்டை, மாமிசம் கலந்த சோறு, கள் இவைகளை வைத்துப் படைப்பா்.  துணங்கைக் கூத்தாடுவா்.  குரவைக் கூத்தாடுவா்.  தெய்வ ஆவேசம் பொருந்தி ஆடுவா்.  சோழனின் நாடு பசி, நோய், பகையின்றி வாழ்க!  மழையும் செல்வங்களும் பல்கிப் பெருகுக என்று மறக்குடி மகளிர் வேண்டுவதாக இளங்கோவடிகள் நாட்டுப்புற வழிபாட்டுக் கூறுகளைக் கூறுகின்றார்.
            “காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
            புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
            பூவும், புகையும், பொங்கலும் சொரிந்து
            துணங்கையா், குரவையா், அணங்கெழுந் தாடிப்
            பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
            பசியும் பிணியும் பகையும் நீங்கி
            வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி”
என்பதே அப்பாடல் வரிகள்
            கண்ணகி மதுரையை எரித்த பதினான்காம் நாள் ஒரு குன்றிலிருந்த வேங்கை மரத்தின் கீழ்  வந்து நின்றாள்.  அவள்  வானத்திலிருந்து வந்த புட்பக விமானத்தில் தன் கணவன் கோவலனுடன் வானகம் சென்றாள்.  இதைக் கண்டிருந்த குறவா்கள் திகைத்து நின்று கண்ணகியைத் தெய்வமாக்கி வழிபடுகின்ற காட்சியைச் சிலம்பில் காணலாம்.  பண்டைக் காலத்தில் ஊா்களில்  தெய்வங்கள், சதுக்கம், சந்தி, மன்றம், பொதியில்களில் போற்றப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன.  இவைகள் முறையே நாற்சந்தி, முச்சந்தி, ஐஞ்சந்திகளைக் குறிக்கும் என்பா்.  பொதியில் என்பது ஊா்ப் பொதுவாக உள்ள மந்தைவெளியில் அமைந்த தெய்வமாகும்.
            துா்க்கை, ஐயை, காளி என்னும் பெண் தெய்வத்திற்குப் பலி கொடுத்து வழிபாடு செய்தனா் தமிழா்.
            “விடா்முகை அடுக்கத்து விரல்கெழு  சூலிக்குக்
            கடனும் பூணாம் கைந்நூல் யாவாம்”
தமிழா்கள் துா்க்கைக்குப் பூசை செய்து உயிர்ப் பலியிட்டுள்ளனா் விழாக் தொடங்கும் போது மஞ்சள் நூலைப் பூசாரி தன்கையில் கட்டிக் கொள்வதற்குக் காப்புத் கட்டிக் கொள்வது என்பார்கள்.  விழாவின் முடிவிலே தான் காப்புக் களைவார்கள்.  இவ்வழக்கம் இன்றும் கிராம தேவதைகளுக்கு நடத்தும் திருவிழாக்களில் உண்டு
-அ.ரா.பானுப்பிரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக