வியாழன், 19 ஏப்ரல், 2018

ஊர்களின் பழைய பெயர்கள்


ஊர்களின் பழைய பெயர்கள்
ஆருக் காடு - ஆற்காடு
ஆரைக்கல் - நாமக்கல் 
ஈரோடை - ஈரோடு
உகுநீர்க்கல்-->புகைநற்கல் --> ஒகேநக்கல்
எருமையூர் --- >மகிசூர்---> மைசூர் (எருமை க்கு வடமொழியில் மகிசம்) 
ஏரிக்காடு - ஏற்காடு 
ஒத்தை கால் மண்டபம்-ஒத்தை கால் மாந்தை-உதகமண்டலம்-ஊட்டி
கசத்தியாறு - கயத்தாறு - 
கரவூர், வஞ்சி - கரூர்  
குடந்தை, குடமூக்கு - கும்பகோணம் 
குன்றூர் - குன்னூர்
குளிர் தண்டலை - குளித்தலை 
குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்) 
கோடலம் பாக்கம் - கோடம்பாக்கம் - 
கோவை - கோயமுத்தூர் -  
சின்ன தறிப் பேட்டை - சிந்தாரிப்பேட்டை - 
செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு 
செருத்தணிகை - திருத்தணி 
சேரலம் - சேலம் 
சோளிங்கர் - சோழலிங்கபுரம்
தகடூர் - தருமபுரி  
தன்செய்யூர்- தஞ்சாவூர் - தஞ்சை
தர்மபுரம் - தாம்பரம் 
தவத்துறை - லால்குடி -  
திண்டீஸ்வரம் - திண்டுக்கல் 
திருஆவினன்குடி - பழனி 
திருக்கொடி மாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு 
திருச்சீரலைவாய் - திருசெந்தூர் 
திருச்சுரம் - திரிசூலம் 

திருநல்லுர் - அருப்புக்கோட்டை
திருமறைக்காடு - வேதாரண்யம் 
திருவரங்கம் - ஸ்ரீரங்கம் 
தில்லை - சிதம்பரம் 
நாலுக்கோட்டை - சிவகெங்கை - சிவகங்கை
பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல் 
பழம் உதிர் சோலை - பழமுதிர்சோலை 
புதுகை - புதுக்கோட்டை 
புதுவை - பாண்டிச்சேரி 
புலிக்காடு - பழவேற்காடு 
புளியங்காடு - திண்டிவனம் 
பொழில் ஆட்சி - பொள்ளாட்சி 
மதிரை -மதுரை 
முதுகுன்றம் - விருதாச்சலம்(வடமொழி) 
ராஜராஜேஸ்வரம் - தாராசுரம் 
வென்க‌ல்லூர் - பெங்களூர்
வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
-அ.ரா.பானுப்பிரியா


பாவத்தின் தந்தை யார்?


பாவத்தின் தந்தை யார்?

          அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்?
அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான். பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது. யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.
          வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன. ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
          நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே! அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள். “என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
          பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார். “அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள். பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!

          “பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர். “சொல்கிறேன். ஆனால் இங்கல்ல, எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள். அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார். “என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள். பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை! “சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்.

          “வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள். “சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பைப்பாருங்கள். அதை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்.

          பண்டிதர் அவர் மார்பகங்களைப் பார்த்தார். அதில் அலங்கரிக்கும் வைர மாலை அவர் கண்களைக் கவர்ந்தது. “சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்.

          ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள். பண்டிதர் துடிதுடித்துப் போனார்.  “இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை, பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”  தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது. அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது.
கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார். சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.

          “மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார். “மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.

          “ஆஹா! பாவத்தின் தந்தை ஆசையா? பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்.  “நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.

ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்!
-கு.கங்காதேவி

உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்


உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

          ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்போது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.  அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.

           சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயிறு நிறைந்து விடும்" என்று கூறியது.  இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடிப் போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்துக் கொண்டிருந்தது.

          சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது!  குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார்.  நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

          *இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? *"தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய்*, *முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,* "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது.* இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே"* *என்று உரக்க கூறியது.* *இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது*. *"கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"*.

சு.லாவண்யா


பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்

          அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்னும் பழமொழி இன்று பிள்ளைகளின் எண்ணிக்கையோடு தொடா்புபடுத்தி உரைக்கப்பெருகிறது. ஐந்து பிள்ளைகள் உள்ள வீட்டில் மூன்று பிள்ளைகள் சரி இல்லாமல் (அதாவது இச்சமூகம் எதிர்பார்க்கும் வசதி வாய்ப்புகளுடன் இல்லாமல்) இருக்க ஏதோ இரு பிள்ளைகள் மட்டும் நல்ல வசதி வாய்ப்புடன் இருப்பதைக் குறிக்கும் விதமாக இப்பழமொழி பொருள் மாறி வழங்கப்பெறுகிறது.  ஆனால் இது  சைவசமயத்தைச் சார்ந்த சிவபெருமானோடு தொடா்புடைய பழமொழி ஆகும்.  சிவாயநம அல்லது நமசிவாய என்ற ஐந்தெழுத்து இறைநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் அதற்கு நேரம் இல்லையெனில் குறைந்தபட்சம் சிவ சிவ என்ற இரண்டெழுத்து மந்திரத்தையாவது உச்சரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காவே அஞ்சுக்கு அரண்டு பழுதில்லை என்று சுட்டப்பெறுகிறது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



சங்க புறப்பாடல்களில் அறிவித்தல்


சங்க புறப்பாடல்களில் அறிவித்தல்

          குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்துப் பிறா் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி தகவலாகும். புலவா்கள் தான் எண்ணிய  கருத்துகள் அனைத்தையும் மக்களுக்குத் தம் பாடல்களின் வழி வெளிப்படுத்தியுள்ளனா்.  இது அறிவித்தல் முறைக்குச் சான்றாக உள்ளது.

அறிவித்தல்
          மக்களின் அடிப்படைத்  தேவையாக உணவு, உடை, உறையுள் போன்றவை விளங்குகிறது.  மக்கள் நலமும் இன்பமும் பெருகப் பல்வேறு பொருள்களை நாடுகிறார்கள்.  ஒரு நாட்டின் வளமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்நிலங்களையும் அந்நிலத்தில் விளையும் விளைச்சல்களையும், வாழந்த மக்களையும் தகவலாக வெளிப்படுத்துவது அறிவித்தலாகும்.
தொல்காப்பியா்

                    “நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
                  கலந்த மயக்கம் உலகம்” (தொல்.1581)

எனும் நூற்பாவில் இவ்வுலகமானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பெரும் சக்திகளாலானது என்பா்.  இதனைப் புறநானூறு்றுப் (21-5) பாடலடிகளும் விளக்குகின்றன.
          முதலாவது குறிப்பிடுவது நிலமாகும்.  நிலம் நாம் உண்ணும் உணவிற்கும், உயிர் வாழ்வதற்கும் அடிப்படையானது.  இதனை,

                    அவற்றுள்
                 நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்
                 படுதிரை வையம் பாத்திய பண்பே (தொல்.948)

என்னும் நூற்பா விளக்கும்.  தமிழா்கள் தாம் வாழ்ந்த நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்தார்கள்.  ஆவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாம்.  நிலம் என்பது முதன்மையானது ஆகும்.


குறிஞ்சி நிலம்
          குறிஞ்சி நில மக்கள் தாம் வாழும் நிலப்பகுதியைக் கொண்டு அவா்களின் வாழ்க்கையைக் கட்டமைத்துள்ளனா்.  குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவா்கள் தினைவிளைவிக்கும் நிலத்தில் ஊடுபயிராகப் பருத்தியையும் அவரையையும் விதைப்பார்கள்.  தினைப் பயிரை உண்ண வரும் குருவி, உண்ணாமலிருக்க குறமகளிர் பரண்மீதிருந்து கவண் ஏறிவார்கள்.  மேலும் மலை மீது எறிந்தந்த மலைப் பொருள்களுடன் மூங்கில் குழாய்க்குள் செய்யப் பெற்ற தேனால் செய்த கள்ளின் தெளிவை உண்டார்கள்.  காலையில் நெல்லால் வடிக்கப்பெற்ற கள்ளை உண்ணடு களித்தனா்.  கள்ளை உண்ட பின் பலாப் பழத்தின் வெள்ளியக் கொட்டை மற்றும் கடமான் தசை, உடுமு்பின் தசை போன்றவற்றையும் மன மகிழ்ச்சியோடு உண்டார்கள் இதனை மலைபடுகடாமின் 170-185-ம் அடிகள் புலப்படுத்துகின்றன.

முல்லை நிலம்

          காடும் காடு சார்ந்த நிலப்பகுதி முல்லை.   முல்லை நிலத்தில் வரகுக் கதிர் மிகுதியாக விளைந்திருக்கும்.  வரகுக் கதிரைத் திரிப்பதற்குத் திரிமரம் மற்றும் சக்கரம், கலப்பை, போன்றவை பயன்படுத்தப்பட்டன. வீடுகள் வரகுத் தாளால் வேயப்பட்டிருக்கும்.  அவா்கள் வாழும் வீட்டிற்கு விருந்தினா் வந்தால் பூளைப்பூப் போன்ற வரகுச் சோற்றையும், அவரைப் பருப்பையும் கலந்து தருவா்.  இதை மலைபடுகடாம் 186-197-ல் விளக்கும்.

மருத நிலம்

          வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியாகும் மருத நிலத்தில் வாழும் வீடுகளில் தானியங்கள் நிறைந்து காணப்படும்.  உழவா் நிலத்தைப் காளை மாடுகளைக் கொண்டு கலப்பையில் பூட்டி கொழு மழுங்குப்படி உழுவார்கள்.  பயிர்களின் நடுவேயிருக்கும் களைகளை அகற்றி நன்கு முற்றிய பின் கதிர் அறுப்பா்.  அங்கு விருந்தினா் சென்றால் நெல்லால் ஆகிய வெண்மையான சோற்றையும் பெட்டைக் கோழியையும் உணவாகத் தருவா். (பட்டினப்.8-19)


நெய்தல் நிலம்

          நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதியாகும்.  நெய்தல் நிலத்தின் ஒளி பொருந்திய முத்துக்களும் பவளங்களும் கிடைக்கும்.  அவற்றை அரத்தால் அறுத்து பலவகை அணிகலன்களைச் செய்வா்.  பரதவா்கள் கடலுக்குள் சென்று பிடித்து வந்த மீன்களைக் கொணா்ந்து காயவைத்து விற்பனை செய்வா்.  பெரிய மரக்கலன்களில் பலவகைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தனா்.  நெய்தல் நிலம் வாணிபத்தில் சிறந்து விளங்கியதை மதுரைக்காஞ்சி (315-325) எடுத்துரைக்கின்றது.

பாலைநிலம்

          முல்லை நிலமும், மருத நிலமும் மாறுபட்டு இருந்தல் பாலை நிலமாகும்.  பாலை நிலம் மிகுந்த வெப்பமுடையதாய் இருந்தது.  இந்நிலத்தில் மூங்கிலின் பசிய அடிப்பாகங்கள் மிகுதியான வெப்பத்தால் கருகின.  நெருப்பால் மூங்கிலின் கணுக்கள் உடைந்து வெடிக்கும் ஓசை அச்சத்தை ஏற்படுத்தியது.  வெடித்த மூங்கில்களின் தட்டைகள் பார்ப்பவா் கண்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது.  அருவிகளேயில்லாத பெரிய மலைகளும் அழகிழந்தன.  மரங்கள் இல்லாததால் நிழல் உருவே இல்லாமல் இருந்ததை மதுரைக்காஞ்சி (302-314) விளக்குகிறது.

க.கலைச்செல்வி

தமிழாயிரம்


தமிழாயிரம்

16. எழுச்சியுறல்

1.       கணித்தான் மொழிக்கடன் காத்தான் தமிழால்
          பிணைத்தான் நிலஎல்லைப் பேறு.
2.       பேறெல்லாம் வாய்த்திருந்தும் பேணாமல் விட்டதால்
          கூறெல்லைக் கூறு முறை.
3.       முறையை விலக்கும் குறிக்கோள் இலாமல்
          நிறைய இழந்தோம் இழப்பு.
4.       இழந்ததை மீட்கும் திறமோ இருப்ப
          திழவாமல் காத்தலோ இல்.
5.       இல்லா ஒருமை இழப்பதற் கல்லாமல்
            காக்க உதவுமோ காண்
6.       கண்டாலும் காணாமல் போகும் கயமையை
           விண்டாலும் ஆகா விடிவு.
7.       விடிநாள் வருமென்ன வீழ்வின்றிக் காத்தால்
          முடியாமல் போகாது முன்
8.       முன்னிற்கும் நோ்பகை மூண்டெரிக்கும் ஆாியம்
           பின்னிற்கும் ஆங்கிலமும் ஆம்.
9.       ஆமாம் திருவிடமோ தீரா விடமாகும்
          போமா றறிந்து புதை.
10.     புதைக்குள் விழுந்தோம் புதைமூடி மேலே
           உதைத்தெழுந் தோங்குவோம் ஓா்ந்து



புதன், 4 ஏப்ரல், 2018

மங்கையராய்ப் பிறப்பதற்கே..


மங்கையராய்ப் பிறப்பதற்கே..
            கல்யாணம், காதுகுத்து, திருவிழா வென்றால் சிறுவயதில் ஆசையிலும், ஆா்வத்திலும் துள்ளிக்குதித்து கிளம்புகிற இராணி இப்போதெல்லாம் ஒலிபெருக்கி கட்டிய வீடுகளையும், தெருக்களையும் கடந்து செல்ல முடியாமல் சுற்றி வளைத்தே வீடு செல்கிறாள்.  தெரிந்தவா்கள் பார்த்தால் விசாரிப்புகள் என்ற பெயரில் வெந்த புண்ணில் வேலெடுத்துப் பாய்ச்சுவார்கள்.. ஊராரின்  கேள்விகளுக்கு உலா்ந்த  புன்னகையை உதிர்த்துவிட்டுக் கடப்பாள்.
            சிறுமியாயிருக்கும் போது சுற்றியிருக்கும் உறவும், ஊரும் உடையையும்  நகையையும் பார்த்தே மதிப்பு கொடுக்கும்.  குத்திக் காட்டவே கேள்விகள் கேட்கும் என்பதெல்லாம் தெரியாது.  மனசு முழுக்க மத்தாப்பு போல குதூகலமும், கொண்டாட்டமும் நிறைந்திருக்க பட்டாம்பூச்சிபோல சிறகடிப்பாள்.  ஆனால் இப்பொழுது அப்படியா?
            பெண்பிள்ளைகள் எப்பொழுதும் அப்பாக்களுக்கு இளவரசிகள்தான்.  இராணியின் அப்பா தன் மகளை இளவரசிக்கு மேலாய் நினைத்ததால் தான் ‘இராணி’ என்று பெயா் வைத்தார் போல.  வறுமையின் நிழல்படாமல் இராணிக்கு சேவகனாய் மாறி வளா்த்தார்.
            கெட்டவா்கள் நன்றாக வாழ்வதைக் கூட சகித்துக் கொள்ளலாம்.  ஆனால் நன்றாக வாழ்ந்தவா்கள் கெட்டுப்போவது தான் பெரிய வேதனை. ஏன் எப்படியென்றே தெரியாமல் அப்பா என்ற ஆலமரம் சாய்ந்தபோது முழுதாய் விழுதாய்க்கூட வளா்ந்திருக்கவில்லை இராணி.  அப்பா கட்டியெழுப்பிய இராணியின் சாம்ராஜ்யம், கனவுகள் இடிவிழுந்து, இடிந்து விழுந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பமாய் அன்றாடப் பிழைப்பிற்கே அல்லல்பட்டது இராணியின் குடும்பம். அப்பா மறைந்த போதே பாதி மரித்துப்போன அம்மா இப்போது உடல், மன நோயால் படுக்கையிலேயே முடங்கிப் போனாள்.
            தம்பி, தங்கையைப் படிக்க வைக்க, படுத்த படுக்கையாகப் போன அம்மாவைப் பிழைக்கவைக்க கிரீடத்தைக் கழற்றி வைத்து முள்முடி சூட்டிக்கொண்டாள் இராணி.
            இராணியை குழம்புச்சட்டி தூக்க வைத்ததற்காக அம்மாவிடம் சண்டைக்குப் போன அப்பா இன்று தன் மகள் கட்டிடவேலையில் சாந்து சட்டியைத் தூக்கிச் சுமப்பதைப் பார்த்தால் மறுபடியும் மரணித்திருப்பார்.
            முள்ளு தைத்ததற்கே மூன்று நாள்கள் முடங்கி முனங்கி அப்பாவைக் கதறவைத்த இராணியிடம் தான் இன்று உடல் வலிகளும், மன வேதனைகளும் ஒட்டுமொத்தமாய்க் குடியேறிக் கொண்டன.  செங்கல்லும், மணலும், சிமெண்டுக் கலவையும் தூக்கிச் சுமக்கும் போதும், வீடு வந்த பின்னும் உடம் முழுக்க பரவிநிற்கும் வலியைத் தாங்கிக் கொள்ளக் கூட பழகிக்கொண்டாள்.  ஆனால் தன் உடம்பை மேயும் சில ஆண்களின் கம்பளிப் பூச்சி பார்வைகளைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை..  தற்காத்துக் கொள்ள அவள் போட்டுக்கொண்ட அப்பாவின் சட்டைகள் தான் அவ்வப்போது கம்பளிப் பூச்சிகளை ஊரவிடாமல் தடுத்தது.
            சிலா் அவளது வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு வளமையை அனுபவிக்க ஆசை வார்த்தைக்காட்டிப் பேசினார்கள். அண்ணா, அப்பா வென்று அழைத்த பின்னும் அப்படிப் பேசும் சாக்கடைகளோடு வேலை பார்ப்பது நரகமாய்த்தான் இருந்தது.  முப்பது வயது கடந்தபின்னும் கணவன், குழந்தைகள் என்று கனவுகளைக் காண்பதற்குக் கூட அவள் தயாராயில்லை.  இரவுகளெல்லாம் கண்ணீரால்  பகல்களாய் மாறிப் போன பிறகு கனவுகள் எப்படி வரும்? அப்பாவைப்போல ஆண் மகனைப் பார்ப்பது மட்டுமில்லை.  கேட்பது கூட அரிதாகிப் போய் விட்டது.  பார்க்கும் இடங்களிலெல்லாம் ஆண் தோல் போர்த்திய அசுரா்கள் முளைத்து நின்றால் பாவையா் நிலை என்னவாகும்?
            பள்ளிக்கூடத்தில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த இராணியின் நினைவலைகளைக் கலைத்தது பள்ளிச் சிறுமியொத்தியின் ஒலிபெருக்கிக் குரல்.  ‘இன்று உலக மகளிர் தினம். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட  வேண்டுமம்மா என்றார் கவிமணி. இப்புவியில்  நாம் பெண்ணாய்ப் பிறக்க  நாம் பெரும் தவம் செய்திருக்க வேண்டும்’ என்று முழங்கிய முகம் தெரியாத அச்சிறுமியின் பேச்சு கேட்டதும் விரக்தியாய்ப் புன்னகைத்தாள் இராணி.  சாபத்தோடு வாழ்வதற்கா தவம் செய்தோம்? தலையில் சுமந்து சென்ற கல்லின் பாரம் இதயத்தை அழுத்தத் தொடங்கியது..
            நிமிர்ந்து பார்த்தாள்.. எதிரே பள்ளிச் சுவரில் கம்பீரமாய்க் கையை உயா்த்தி முழங்கிய முண்டாசுக் கவிஞன் முகம் கவிழ்த்துக் கொண்டது போல் தோணியது.  பக்கத்தில் இயேசுவின் சிலுவையில் குருதி சொட்டிக் கொண்டிருந்தது.
                                    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்         
                              யாதொன்றும் கண்பாடு அரிது. (குறள்.1049)
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்